Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பிரியதர்சினி வாகீசன்
இன்னும் நாங்கள் கற்கவில்லை

நான் திருமதி பிரியதர்சினி வாகீசன். நான் ஒரு ஏழுவயதில நடனத்தை முறையாகக் கற்கத்தொடங்கினன் எனது ஆரம்ப குரு வினோதினி பரதன். இவரிடம் ஆறுமாதம் தான் நடனத்தைப் பயின்றேன் சிறிதுகாலம் என்றே சொல்லலாம். அதற்குப் பிறகு ஒன்பது வயதில் எனது குரு சாந்தினி சிவனேசன் இன்றுவரையும் எனக்கு மானசீகமான குரு அவர்கள் தான். இன்றைக்கும் நாட்டிய நாடகத்தில் பதினொன்றுக்கு மேல தேசிய ரீதியில் வெற்றியீட்டியிருக்கின்றேன் என்று சொன்னால் அது சாந்தினி சிவனேசன் மிஸ் போட்ட அடித்தளம் என்றே சொல்லலாம். […]

21.02.2018  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

நான் திருமதி பிரியதர்சினி வாகீசன். நான் ஒரு ஏழுவயதில நடனத்தை முறையாகக் கற்கத்தொடங்கினன் எனது ஆரம்ப குரு வினோதினி பரதன். இவரிடம் ஆறுமாதம் தான் நடனத்தைப் பயின்றேன் சிறிதுகாலம் என்றே சொல்லலாம். அதற்குப் பிறகு ஒன்பது வயதில் எனது குரு சாந்தினி சிவனேசன் இன்றுவரையும் எனக்கு மானசீகமான குரு அவர்கள் தான். இன்றைக்கும் நாட்டிய நாடகத்தில் பதினொன்றுக்கு மேல தேசிய ரீதியில் வெற்றியீட்டியிருக்கின்றேன் என்று சொன்னால் அது சாந்தினி சிவனேசன் மிஸ் போட்ட அடித்தளம் என்றே சொல்லலாம். சின்ன வயதிலிருந்தே மிஸ் செய்கின்ற நாட்டிய நாடகங்களில் பங்குபற்றியது மட்டுமல்ல அவருடைய நாட்டிய நாடகங்கள் அனைத்தையும் தவறாமல் பார்த்து இருக்கின்றேன். மிஸ் நாட்டியநாடகத்தை உருவாக்கம் செய்யும் போது இருந்து பார்ப்பேன். ஒவ்வொரு பாத்திரத்தையும் தனிய தனிய தான் உருவமைப்புப் பண்ணுவா. ஓவ்வொரு பாத்திரத்தையும் உருவாக்கும் போது நான் அந்தப் பாத்திரம் இல்லாட்டியும் அந்தப் பாத்திரம் எப்பிடி உருவாகின்றது என்றிருந்து பார்ப்பேன். அப்பியெல்லாம் பார்த்த அந்த அனுபவம் தான் இன்றைக்கு இந்தப் பெறுபேறு கிடைக்கிறதுக்கு காரணம் என்று உண்மையை நான் சொல்கின்றேன்.
நடனம் என்பது என்னுடைய முழுமையான துறை இல்லை. பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை. அதன் பிறகு நான் எம்.ஏ படிக்கும் போதுதான் நடனத்தை முழுமையாகக் கற்றுக்கொண்டேன். அதுக்குமே எனக்கு குருவாக இருந்தது சாந்தினி சிவணேசன் மிஸ் தான். அது எனக்கு பாக்கியம் என்றே சொல்லலாம். நான் வேறு ஒருவரின் கைக்குப் போய்ச் சேராமல் சின்ன வயசில மிஸ்ஸிட்ட படிச்ச போலவே மீண்டும் அவரிடம் படித்தேன். அதேநேரம் மேற்படிப்பும் மிஸ் மூலமே எனக்கு கிடைச்சிது. அதால உண்மையாக இவ்வளவு தூரம் நான் வளர்ந்திருக்கின்றேன் என்று சொன்னால் ஒருவரின் கைப்பட நான் வளர்ந்தது தான் காரணம்.

எனது குடும்பத்திற்கும் கலைக்கும் எந்த ஒரு தொடர்புமில்லை. இருந்தாலும் சின்னவயதிலேயே எனது தாயும், தந்தையாரும் எங்கட ஆர்வத்தில அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள் என்றே சொல்லலாம் எங்களுக்கு என்ன துறையில் நாங்கள் ஆர்வம் செலுத்துகின்றோமோ அதையே அவர்களும் விரும்பினார்கள். என்னுடைய அப்பா ஒரு வைத்தியர், அம்மா ஒரு வைத்தியமருந்தாளர் அவர்கள் அப்படியான ஒரு துறையில் இருந்ததாலையோ தெரியாது, ‘நோயாளிக்கு என்ன தேவை என்றது வைத்தியருக்கு தெரியும் தானே’ அப்படி தெரிஞ்சதாலையோ என்டது எனக்குத் தெரியேல. எங்களுக்கு என்ன ஆர்வம் இருந்ததோ அந்த ஆர்வத்தை இனங்கண்டு சிறுவயதிலேயே அதாவது நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே அப்பாவின் ஆலோசனையோட அம்மா என்னைக் கொண்டு போய் நடனத்தில சேர்த்திட்டார். நடனத்தை நான் பாடசாலைக் காலங்களில் செய்யிறதுக்கும் சரி மேற்படிப்பிற்கு என்று பல்கலைக்கழகத்திலையும் அதோட இன்று வரையும் நடனத்தில் நான் சிறந்து விளங்கிறதுக்கு வீட்டில என்னுடைய அம்மாவும், அப்பாவும் ஒரு ஏணியாக இருந்திருக்கிறார்கள்.
நான் ஆரம்பக் கல்வியை யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையிலும் தொடர்ந்து யாழ் இந்து மகளிர் கல்லூரியிலுமே எனது கல்வியைப் பெற்றுக் கொண்டேன். பாடசாலைக்கு முதல் நான் வரும் போது சிவாஜினி மிஸ், வசந்தி மிஸ் இருந்தவர்கள். அதுக்குப்பிறகு ஞானசக்தி கணேசநாதன் இன்று வரையும் என்னைத் தன் சொந்தப் பிள்ளையாக நான் கலையில் வளர வேண்டுமென்று குருவிற்கு அப்பால் ஒருபடி நல்லதொரு மேல் ஸ்தானத்தில இருக்கிறா. எப்பவுமே எங்கட கலைப்படைப்புக்களைப் பார்த்து ஊக்கிவிக்கிறதும், நாங்கள் முன்னுக்கு வரோனும் என்று விரும்புறதில அவாவும் ஒருவர்.

நான் இன்னும் நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் சிறந்த ஆசிரியராக வருவதற்கு எனக்கு நிறையக் காலம் இருக்கிறது. என்ட குருவை இன்றைக்கு பார்க்கேக்கையும் அன்றைக்கு கடைசியா நாங்களும் ஒரு ஆசிரியரா வருவம் என்று நினைக்கேல அப்பிடி நினைச்சிருந்தால் என்ட குருவை நான் பார்க்கேக்க கூட நான் அப்பிடி நினைக்கேல. என் குருவோட பார்க்கேக்க எவ்வளவோ இருக்கு இன்னும் நாங்கள் கற்கவில்லை இன்னுமே சிறந்த என்ற நிலைக்கு வரேல. நான் நினைக்கிறன் இப்பதான் ஒரு படியை வைச்சுக்கொண்டு இருக்கிறம். அப்பிடி அனுபவம் என்று பார்க்கேக்க ஆரம்பத்தில நடனத்தை நான் கற்ற அனுபவம் என்று சொன்னால் முதல் கற்கும் போது சாந்தினி மிஸ்ஸின் தங்கச்சி குமுதினி மிஸ் தான் எனக்கு ஆரம்பம் என்று சொல்லலாம். நான் கலாபவணத்தில காலடி வைச்சோன வந்தவா குமுதினி மிஸ். அவரின் உருவம், மென்மையான பேச்சு அதே எனக்கு நடனத்தைக் கற்க ஆர்வத்தைத் தூண்டியது. அது தான் எனது முதலாவது அனுபவம். ‘தாரமும் குருவும் தலைவிதிப்படி’ என்று சொல்லுவார்கள்; அதுபோல கலையைப் பிடிக்க வேண்டுமென்றால் முதலில் குருவைப் பிடிச்சாத்தான் கலையைக் கற்க வேண்டுமென்ற ஆர்வம் வரும். மிஸ்ஸின்ட மென்மையான பேச்சு, எல்லாரையும் ஒருசேர பார்க்கிற அந்த தன்மை அது நிறைய அனுபவத்தைத் தூண்டியது. இன்றைக்கு நான் கற்பிக்கேக்க கூட எனக்கு அந்த விசயம் துணை செய்யுது. எல்லாப்பிள்ளையையும் ஒரே கண்கூடாகப் பார்க்க வேண்டும் என்ற விடயம் தான் எனக்கு முதலாவது அனுபவமாக வந்தது. குற்பித்தலுக்கு நான் முதல் வரேக்க முதல் அனுபவம் குமுதினி மிஸ் தான். பிறகு மிஸ் நடந்து கொள்ளுற விதங்களைப் பார்த்து அதற்கூடாகக் கற்பிக்கின்ற திறன் அதாவது மிஸ் வந்து ஒரு பாடத்தைக் கற்பிக்கின்ற போது மிகவும் ஆறுதலாகவும், அவசரப்படாமலும் கற்றுக் கொடுப்பார். எங்களுக்கு வந்து எக்சாம் என்றத விட பிள்ளைக்கு அந்தப் பாடம் எவ்வளவு தூரம் உட்செலுத்தப்படுகிறது அதுதான் முக்கியம் என்றதே மிஸ் எங்களுக்கு முதல் படிப்பிச்ச பாடம். அதாவது ஒரு பிள்ளைக்கு முழுமையாக விளங்க வேண்டும். ஒரு வகுப்பில நாற்பது பிள்ளைகள் நின்றால் நாற்பதாவது பிள்ளைக்கும் அந்தப் பாடம் போய்ச் சேர்ந்தாப் பிறகு தான் மிஸ் அடுத்த பாடம் தொடங்குவார். அதையே நானும் பின்பற்றி இன்றைக்கும் அப்பிடியே பிள்ளைகளுக்குப் படிப்பிக்கிறன். அதோட ஒரு காலமும் கலாபவணத்தில பிள்ளைகளை ஏசுறது இல்லை. ஆனால் தற்போது கொஞ்சம் அது மாறியிருக்கிறது. பிள்ளைகளைக் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வாறம் ஆனால் ஏசுறது என்று இல்லை. நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு அந்த அனுபவங்கள் தான் காரணம். பாடத்தை முழுமையாக விளங்க வைக்கின்ற தன்மையோட அதை பிள்ளைகளுக்கு உட்செலுத்தின தன்மை அதாவது ஜதிகளாக இருந்தாலும் சரி, இன்றைக்கு கொஞ்சம் ஆட முடியவில்லை ஏதாவது சிறிய நோய் அப்படியான பிரச்சனைகள் இருந்தாலும் உடனே மிஸ் சொல்லுவா வந்திருந்து மற்றவர்கள் ஆடுறத பாருங்கோ அதோட மிஸ் சொல்லுற அந்த ஜதிப்பிரமாணங்களை நாங்கள் சொல்லுவம் மிஸ் சொல்லுங்கோ சொல்லுங்கோ என்று சொல்லுவா. இன்றைக்கு அந்த ஜதிப்பிரமாணங்களை நாங்கள் தாளத்தோட வடிவாச்சொல்லுறம். சின்ன வயசிலேயே தாளத்தைப் போட்டு ஜதிப்பிரமாணங்களைச் சொல்லுங்கோ ஆடத்தேவையில்லை என்று சொல்லுவார். அந்த வயசில அப்பிடியெல்லாம் அனுபவத்தோட சொன்னது தான் இன்றைக்கும் சொல்ல இலகுவாக இருக்குது. அன்றிலிருந்து இப்பவரையும் அந்த ஜதிகளை நாங்கள் பிரயோகித்துக் கொண்டு தான் இருக்கிறம். உண்மையிலேயே கலாபவணத்தில கிடைச்ச அனுபவம் எங்கையுமே, யாருக்குமே கிடைக்காது.
நான் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முதல் நாடகத்திற்குள் என்னைக் கொண்டு வந்தது ‘எச்சிலீலை’ என்ற நாடகம். இத ஜெயரஞ்சினி மிஸ் செய்திருந்தவா. எனக்கு இது தான் முதலாவது நாடகம். நாடகத்தில எனக்கு ஆர்வத்தைக் கொண்டுவந்ததும் இந்த நாடகம் தான். நான் நினைக்கின்றேன் 1997ம் ஆண்டு உயர்தரம் எடுத்த பிற்பாடு பல்கலைக்கழகத்தின் ஆற்றகைக்காக அத நாங்கள் செய்தனாங்கள். அதச் செய்யும் போதுதான் நாடகத்திற்குள் நடனத்தின் வடிவம் எப்படி உட்புகுந்தது என்று பார்த்தனாங்கள். இத செய்யும் போது தான் நான் முதன்முதலில் குழந்தை ம.சண்முகலிங்கம் சேர சந்திக்க சந்தர்ப்பம் கிடைச்சது. அவரின் ஆலோசனையில் தான் அந்த நாடகம் நடக்குது சேர் எங்கட பாட்டில இயங்க விட்டார். நிச்சயமாக நடனத்தில அப்பிடி இயங்க மாட்டோம் அது ஒரு வரையறையுடன் ஒரு குருவின் கீழ்தான் நாங்கள் இயங்குவம். சேர் சொன்னார் உங்கட பாட்டில உங்களுக்கு என்ன வருகுதோ அதச்செய்யுங்கோ என்று சொல்லும் போது தனியாக ஒவ்வொருவரிடமும் உள்ள ஆளுமைகள் வெளிப்பட்டுது. இப்ப எங்களுக்கு துள்ளுறது தான் ஆளுமை என்றால் துள்ளினம், சும்மா சும்மா கத்தினம், சும்மா ஆடினம், ஓடிப்பிடிச்சு விளையாடினம். நடனத்தில் அப்பிடி எல்லாம் செய்ய முடியாது. இப்படியாக எச்சிலீலை நாடகத்தில நிறைய அனுபவங்கள் எனக்கு கிடைச்சிது. நாடகத்தை நடனத்துக்குள்ள எப்பிடிப் புகுத்தலாம் என்று அன்டைக்கு நான் யோசிச்சன்.
அதுக்குப்பிறகு 1999ம் ஆண்டு அடுத்த குரு தேவானந்த் சேர். சேரின்ட ‘அக்கினிப்பெருமூச்சு’ பெரியதொரு நாட்டியநாடகம். நான் நினைக்கின்றேன் இந்த நாடகத்தை 1999ம் ஆண்டு தொடங்கி 2004ம் ஆண்டு வரை மேடையேற்றம் செய்து கொண்டே இருந்தார். அதில கிடைச்ச அனுபவம் அளப்பரியது. நான் அக்கினிப்பெருமூச்சு நாடகத்தில ஆமி (இராணுவம்) பாத்திரமேற்று நடிச்சனான். உயிர்த்துடிப்புள்ள ஒரு உயிர் அதாவது உடம்பில்லாத உயில் பிரேதப் பெட்டிக்குள் இருந்து எழும்புற பாத்திரம். தேவா சேர் சொல்லுவார் இது தான் உங்களுடைய நாடகத்தின் கரு நாடகத்திற்கு வாற நடனத்தைக் கூட எங்களையே உருவாக்கச்சொல்லுவார். நீங்களே யோசிச்சு உங்களுக்கு வாறதச் செய்யுங்கோ என்றே சொல்லுவார். அதோட இந்த நாடகத்தில மக்களை யதார்த்தமாகக் காட்டிய முறைகள் எல்லாம் சிறப்பானவை. இன்றைக்கும் என்னுடைய நாட்டியநாடகத்தில அந்த யதார்த்தம் நிச்சயமாக இருக்கும். ஏதாவது ஒரு நாட்டிய நாடகம் செய்தாலும் யதார்த்தத்தைக் கொண்டு வாறத்துக்கக் காரணம் தேவானந்த் சேரிடம் நான் கற்றுக்கொண்ட பாடம்.
நான் முதன்முதலில் 2004ம் ஆண்டு பாடசாலை மட்ட போட்டிக்காக நாட்டியநாடகமொன்றை உருவாக்கினான். அதுக்காகப் போய் சண்முகலிங்கம் சேரிட்ட கேட்டன் ‘சேர் எனக்கொரு நாட்டியநாடகம் எழுதித்தாங்கோ’ என்று கேட்க உடனே, சேர் பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’ புத்தகத்தைக் கொண்டு வா,வாசி, இதில உனக்கு எது பொருத்தமோ அத எழுது, உனக்கு நடனத்துக்கு எத அமைக்க முடியுமோ அதையே எழுது என்றார். அப்பதான் நான் முதலாவது முறையாக எழுத்துரு அமைக்கிற முறையைக் கற்றுக்கொண்டேன்.
நான் நடனத்தைக் கற்றத விட நாடகத்திற்கு கற்கும் போது நிறைய அனுபவங்களைப் பெற்றுக்கொண்டன். அதாவது இயல்பாக ஒன்றைப் புகுத்துற அனுபவம். மற்றது யதார்த்தத்தை நடனத்துக்குள்ள கொண்டு வாற அனுபவம். ஒரு கதையைக் கொண்டுவாற அனுபவம் ஒரு இலக்கியமோ அல்லது புராணத்தையோ கொண்டு வாறன் என்று சொன்னால் அதுக்குள்ள எவ்வாறு யதார்த்தம் இருக்குமென்று நான் எச்சிலீலை நாடகத்தில் பார்த்தேன்.
எச்சிலீலை நாடகம் பெண்களின் துயரத்தைக் காட்டினாலும் அங்க சேர் புராணக் கதையான ராமர், சீதையின் கதையைக் கொண்டு வந்தார். அப்போது தான் நான் பார்த்தேன் குழந்தை ம.சண்முகலிங்கம் சேர் யதார்த்தத்திற்குள்ளே இலக்கியத்தைக் கொண்டு வாறார். இங்க தேவா சேர் நிஜமாகவே நடக்கின்ற விடயத்தை யதார்த்தமாகக் கொண்டு வாந்தார். இரண்டிற்குமிடையிலான வேறுபாட்டினை உணர்ந்து கொண்டேன். சொல்லப்போனால், நாட்டியநாடகத்துறையில் வளர்வதற்கு நாடக அனுபவம் அதோட நாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நடனப்பாடசாலை ‘நர்த்தனசேஸ்திரா’ இது தான் காரணம்.
பாடசாலையைத் தவிர்த்து வெளி இடத்தில நடனசெயற்பாடுகள் என்று சொல்லப்போனால், எங்களுடைய தனியார்பாடசாலை ‘நர்த்தனசேஸ்திரா’ இது யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அமைந்திருக்கு. இதன் ஸ்தாபகர் ஸ்ரீகண்ணன். தலைமையாசிரியராக நான் இருக்கிறன். ஒவ்வொரு வருடமும் அரசநாடக விழாவில் போட்டி ஒன்று நடக்கும். அதில மூன்று விதமாக நாட்டியநாடகங்கள் நடைபெறும் ‘வளர்ந்தோருக்கான நெடுந்தொடர்’, ‘வளர்ந்தோருக்கான குநற்தொடர்’, ‘சிறுவர்களுக்கான குறுந்தொடர்’ என்று மூன்றுவிதமாக நாட்டியநாடகப் Nபுhட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகளில் தொடர்ச்சியாக 2014,2015,2016 ஆண்டுகளில் வெற்றியீட்டிக் கொண்டு வாறம். அங்க இருக்கிற எல்லோருமே துறை வேறுபட்டவர்கள் ஸ்தாபகர் ஸ்ரீகண்ணன் யாழ் பல்கலைக்கழக கலைத்துறையைச் சேர்ந்தவர். நடனமும், நாடகமும் கற்றவர். நான் சமூகவியல் துறை. நடனம் கற்றுள்ளேன். மகேந்திரன் மாஸ்டருன்ட மகன் தபேந்திரன் என்று அவர் விஞ்ஞானபீடப் பட்டதாரி. நடனம் கற்றுக்கொண்டவர். தேவா சேர்ட ‘அக்கினிப்பெருமூச்சு’ நாடகத்தில் எங்களோட சேர்ந்து அவரும் நடிச்சவர். எல்லாருடைய துறைகள் வேறுபட்டாலும், இருந்தாலும் கலைத்துறையை வளர்க்க வேண்டுமென்ற அனுபவம் தான் இன்று நாங்கள் இந்தத் துறையில் இருப்பதற்குக் காரணம். நான் தனித்துவமாக நடனத்துறையைக் கற்று எம்.ஏ செய்து இன்றைக்கு நடனத்திற்குரிய ஒரு ஆசிரியராக இருக்கின்றேன் ஆனால், எங்களுக்குரிய துறை அதுவாக இருக்கவில்லை.

நாட்டிய நாடகம் என்றால் நான் நினைக்கின்றேன் நடனம் அரைவாசி, நாடகம் அரைவாசியாக இரண்டும் சம பங்கிற்கு அரைப்பங்கு கொண்டு செல்வாக்குச் செலுத்த வேண்டுமென்று நினைக்கிறேன். ஏனென்றால் சிலபேர் சொல்லுவினம் நாட்டியநாடகத்தில கூட நாடகம் நிற்குது, நாடகத்தன்மையைக் காணேல இப்பிடியெல்லாம் சொல்லுவார்கள். இதுக்கு நல்ல உதாரணம் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் எழுத்துருவில், சாந்தினி மிஸ்ஸிட நெறியாள்கையிலும் அறுபத்து மூன்று கலைஞர்கள் சேர்ந்து ‘ஆர்கலோ சதுரர்’ என்ற நாட்டியநாடகம் செய்தனாங்கள். சண்முகலிங்கம் சேரும், சிவயோகன் சேரும் இதுக்கு வழிகாட்டினார்கள். நாடகமும் நாட்டியமும் எப்படி ஒரு நாட்டிய நாடகத்தில் பிரதிபலிக்க வேண்;டும் என்று அதவிட உதாரணம் வேற ஒரு நாட்டியநாடகத்திலையும் வராது. அதிலையும் நான் செய்தனான். நடனம் தனியாக, நாடகம் தனியாகவும், நாட்டியநாடகம் ஒரு பெரும்படைப்பும் செய்திருக்கிறன். அதெல்லாம் எனக்கு கலாபவணத்தில குரு தந்த பிச்சை என்றே சொல்லலாம்.
நாட்டிய நாடகத்தில் பதினொறு தடவைகளுக்கு மேல் தேசிய ரீதியில் வெற்றி பெறுவது என்பது சாதாரணமான விடயமல்ல. எங்களைப் பொறுத்தவரை கோட்டமட்டத்திலேயே போட்டி பலமானதாகத் தான் இருக்கும். எல்லா ஆசிரியருமே ஒரு தயாரிப்பைச் செய்கின்றார் என்றால் அவருடைய மனதில் தாங்கள் வெற்றி பெற வேண்டுமென்ற தேசியத்தை நோக்கிய குறிக்கோள் இருக்கும். என்னைப் பொறுத்தவரை முதலாவது மட்டமே நான் தயாரிப்படுத்தியிருவன். அதுக்குப் பிறகு திருத்தங்கள் செய்வனே தவிர அங்க இருந்து இங்க என்று கூட்டிக்கொண்டு போக மாட்டேன். எல்லாப்பாடசாலை ஆசிரியர்களும் தேசியமட்டத்தை நோக்கிய குறிக்கோளுடன் தயார்ப்படுத்துவது நல்லதொரு விடயம். டிசம்பர் மாதம் போட்டி பற்றிய விடயங்கள் அறிவிக்கப்படும் ஏப்ரல் மாதமளவில் முதல்மட்ட போட்டிகள் நடைபெறும். அந்த நான்குமாத காலமும் எங்களுக்கு பெரும்போராட்ட காலமாக இருக்கும். போட்டிக்காக எழுத்துருவை எப்படி உருவாக்கப்போகின்றோம், யாருக்காகக் கையாளப் போகிறோம் அந்த எழுத்துரு எல்லாரையும் பார்க்க எப்படி இருக்கும் என்பதே முதல் போராட்டமாக இருக்கும். அதுக்குப் பிறகு பாத்திரங்களைத் தெரிவு செய்வது, ஒரு பாத்திரத்தை தெரிவுசெய்தால், அந்தப் பாத்திரத்தை கடைசி வரைக்கும் நிப்பாட்டமாட்டம். குறித்த பாத்திரத்தை எடுத்துப்பழக்க தொடங்கிவிட்டால் கடைசிவரைக்கும் அந்தப் பிள்ளையை வரவேற்க வேண்டும் விலத்தவே கூடாது என்று சொல்லுவா மிஸ். ஒரு உருவ அமைப்பை நாங்கள் எடுப்பம் ஆனால் உணர்வுபூர்வமானதாக அந்தப் பாத்திரத்தைக் கொண்டுவர நிறையப் போராடுவம். காட்சியமைப்பாகக் காட்டுவம், அந்தப் பாத்திரம் பற்றிய நிறைய விடயங்களைச் சொல்லுவம், பிள்ளை உணர்வுபூர்வமாக மாறக்கூடிய அனுபவத்தை ஏற்படுத்துவம். போட்டிகளுக்கு செல்லும் போது மட்டுப்படுத்தப்பட்ட பாத்திரங்கள் தான் எல்லாப் பாத்திரங்களையும் ஒரேபோல பார்ப்பம். அனேகமான சந்தர்ப்பங்களில் பன்னிரண்டு அல்லது ஒன்பது பாத்திரங்கள் தான் காணப்படும் ஆனால் கதைக்கரு நீண்டதாகக் காணப்படும். பன்னிரண்டு பிள்ளையும் வேறவேற பாத்திர வகிபங்கை ஏற்கவேண்டிய நிலைமை கூட ஏற்படும். ஒரு பிள்ளை நான்கு பாத்திரங்களை ஏற்கின்றது என்றால் முதலில் குரு அந்த நான்கு பாத்திரங்களையும் ஏற்கவேண்டும் குருவிற்கு அந்தப் பாத்திரத்தின் தன்மை தெரிந்தால்தான் பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் காணப்படுகின்ற தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ராமயணத்தில் ராமர் என்றால், சீதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றதைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க முடியும். அப்பிடிப் பிள்ளையை பாத்திரமாக மாற்றுவது பெரியதொரு போராட்டமாக இருக்கும்.
இந்த வருடமெல்லாம் தாடகை பாத்திரத்தைக் காட்டுவதற்கு ‘இடியை இடித்து வெஞ்சி..’ இப்பிடியெல்லாம் மலைகளை எல்லாம் பெயர்த்துக் கொண்டு பதினாறடி உயரத்தில இருந்து நடந்து வாறாள் என்றால், அந்த உருவத்தைக் கற்பனை பண்ணிப் பார்ப்பம் அத எப்பிடி நடனத்தக்குள்ள கொண்டு வரலாம் என்று யோசிக்கிறம். தாடகை என்றால் பார்த்தோன ஆ. ஆ… தாடகை என்று பார்த்தோன தெரியோணும். பிணம் தின்னும் அரக்கி தாடகையை பன்னிரண்டு அடியில் நடனத்தில் கொண்டு வாறன். அப்ப அதுக்கு எவ்வளவு போராடியிருக்க வேணும் நானும், என் பிள்ளைகளும். இந்த வருடம் கோட்ட மட்டத்திலேயே இந்த உருவத்தை உருவாக்கிச் செய்தம் இதுக்கு பாடசாலைச் சமூகத்திலிருந்து ஒவ்வொருவரும் பிரியா இப்படியிருக்கும் இப்படியிருந்தால் நல்லா இருக்கும் என்று அவர்களுடைய கற்பனையைச் சொல்லும் போது மேலும் மேலும் யோசிக்கிறதுக்கான அடித்தளத்தை பாடசாலைச் சமூகமே இட்டுக்கொண்டிருந்தது. அதற்கேற்ற மாதிரிப் பாடல் இசையாசிரியர் நாட்டிய நாடக வெற்றிக்கு தருகின்ற அனுபவம் எனலாம். ‘அஞ்சி எமனோடு மூச்சினை விடுத்து’ என்று ராகத்தைப் பாடேக்க நான் யோசிப்பன் அஞ்சி எமன் ஓடும் அளவிற்கு மூச்சு வருகுதென்றால் அந்த மூச்சை நடனத்தில கொண்டுவர வேண்டும்.

அத்தோடு வடக்கிலிருந்து தேசியமட்ட போட்டிகளுக்காக தெற்கு நோக்கிய பயணங்களில் அங்கிருக்கும் மாணவ ஆசிரியர்களுக்கிடையிலும் எமது மாணவர்களுக்கிடையிலான உறவு நிலையை நோக்குகின்ற போது உண்மையிலேயே தெற்கிலிருக்கும் மாணவர்களுக்கு நெகிழ்ச்சித்தன்மை, பொருளாதார நிலைமை எல்லாம் எங்கட வடக்குப் பிள்ளைகளுக்கு இல்லை. அப்பிடிப் பார்க்கும் போது எங்கட பிள்ளைகள் வெற்றியீட்டிக் கொண்டு போகேக்க அவர்களுக்கு ஆச்சரியம். எங்கட பிள்ளைகள் வறுமையிலும் செம்மையாகத்தான் இருப்பினம் ஆனால் எங்கட படைப்பு மட்டுமே விசாலமாக இருக்கும். தெற்கு மாணவர்கள் மாதிரியில்லை எங்கட பிள்ளைகள் போராலும், வறுமையாலும் நொந்து போய் இருக்கிற வலியெல்லாம் அவர்களின் படைப்பில் தெரியும். அங்கிருக்கும் பார்வையாளர்களையும் சரி, தீர்ப்பாளர்களையும் சரி அது அப்பிடியே ஈர்த்துக் கொண்டு போகுது. இது நான் கண்கூடாகப் பார்த்த விடயம். போட்டிகளில தீர்ப்பு வழங்க இருக்கும் போது அவர்களே எட இந்தப் பிள்ளைகள் இவ்வளவு பாவத்தை கொட்டுதுகள் என்று யோசிக்க வைக்கிற அளவுக்கு ஆற்றுகை அமைந்திருக்கும்.
தமிழ் மொழித்தினம் என்று போட்டிகள் நடைபெறுகின்ற போது தமிழ் மாணவர்களுக்கிடையில் தான் போட்டிகள் நடக்கும். போட்டிகளுக்குச் செல்லும் போது கூடுதலாக தெற்கு, தென்மேற்குப் பிரதேச மாணவர்கள் போட்டிக்கு அப்பால் நல்ல உறவைப் பேணக்கூடியவர்களாக உள்ளனர். அந்த மாணவர்கள் மிகவும் சந்தோசமாக மிஸ் உங்கட பிள்ளைகள் கெட்டிக்காரர், உங்கட நடனத்தை பார்த்தனாங்கள் என்று எல்லாம் தாங்களாகவே வந்து வாழ்த்துவார்கள்.
‘முயற்சி தான் திருவினையாக்கும்’ என்றது போல தேசியமட்ட போட்டிக்கு போறத்துக்கு முதல் கட்டத்திலேயே அதாவது ஆரம்ப போட்டிகளிலேயே முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவம். எல்லாரும் சேர்ந்து அயராது உழைப்பம். அதோட ஒவ்வொரு கட்டத்திலேயும் விட்ட பிழைகளை தீர்ப்பாளர்கள் மூலம் கேட்டறிந்து மிக நுணுக்கமாகத் திருத்திக் கொள்ளுவம். இதுக்கெல்லாம் காரணம் பிள்ளைகளும், பெற்றோரும், பாடசாலைச் சமூகமும், தமிழ்துறை சார்ந்தவர்களின் ஒத்துழைப்பும் என்றே சொல்லலாம். இரவு ஒன்பது மணி வரைக் கூட ஒத்திகைகளுக்கு நிப்பார்கள். அதோட வெளி உறவுகளின் ஒத்துழைப்பும் எமது வெற்றிக்கு காரணம். உண்மையைச் சொல்லப் போனால், இந்தியத் துணைத்தூதரக தலைவர் பிள்ளைகளை நன்றாக ஊக்குவிப்பார். பிள்ளைகளுக்கு பாடசாலை மீது இருக்கின்ற பற்று அவர்களை மேலும் வெற்றிபெறச் செய்ய உந்துதலாக அமையுது. இப்படியாக அனைவரது ஒத்துழைப்புடனான ஊக்குவிப்புக்களே வெற்றி பெற வேண்டுமென்ற மன உறுதியை ஏற்படுத்துகின்றது எனலாம்.
உண்மையிலேயே யாழ்ப்பாணத்திலுள்ள கலைஞர்கள் மிகவும் திறமையானவர்கள் இலங்கையில் எந்தப்பிரதேசமாக இருந்தாலும் அங்க நடக்கிற நிகழ்வுகளில் இவர்களின் பங்களிப்பு காணப்படும். இதுக்கு உதாரணமாக அண்மையில் கொழும்பிலிருந்து சிங்கப்பூரிற்கு நாட்டிய நாடகமொன்று சென்றது. அதுக்கு இசையமைப்புச் செய்த பெருமை யாழ்ப்பாண இசைக்கலைஞர்களையே சாரும்.
பாடசாலைகளில் தமிழ்த்தினப் போட்டிகள் நடத்தப்படுவது கலைத்துறை மாணவர்களுக்கு ஒரு வரம் இதன் மூலம் மாணவர்களை பாடசாலைச் சமூகம் ஊக்கிவிக்கின்றது. இதைவிட பாடசாலை தவிர்ந்து வெளியிடங்களில் செய்யும் போது நிச்சயமாக நிதிப்பிரச்சனை இருக்கின்றது. அது ஒருபுறம் இருந்தாலும் கலைநிகழ்வினைச் செய்கின்ற போது வலயக்கல்வி நிறுவனங்கள், கலாசார நிறுவனங்கள் என்றாலும் சரி ஊக்குவிப்புச் செய்ய வேண்டும். கலைஞர்களைப் பாராட்டி அவர்களின் திறமைகளை இன்னும் வெயியுலகிற்குக் காட்டிற தன்மை மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இதுக்கு காரணம் அவர்களுக்கு இருக்கும் பொருளாதார சிக்கலோ எனக்குத் தெரியவில்லை ஆனால் இதற்கான ஒதுக்கீடுகளை ஆழமாக அரசாங்கத்திடம் கேட்டவில்லையோ தெரியவில்லை. அப்பிடியான விடயங்களைச் செய்து கலைஞர்களை ஊக்குவிப்புச் செய்வார்களேயானால் எதிர்காலத்தில் கலையை வளர்க்க உந்துதலாக இருக்கும்.

நாட்டிய நாடகத்தில் நிச்சயமாக சமூக விழிப்புணர்வை வெளிப்படுத்துவதே எங்கட நோக்கம். சொல்லப் போனால் இப்பத்தக் காலத்தில என்ன தேவையோ அதத்தான் நாட்டியநாடகத்தில வெளிப்படுத்திறனாங்கள். இப்ப எல்லாம் தொலைத்தொடர்புசாதனங்களின் மோகம், போதைவஸ்து பாவனை எல்லாம் கூடி மாணவர்கள் கலையில் ஆர்வம் காட்டுவதைவிட இவற்றில் தான் கூடுதலாக ஆர்வம் காட்டுகின்றார்கள். கலை தொடர்பான விடயங்களில் மாணவர்களை நாட வைப்பதற்கு நாட்டிய நாடகத்திறகூடாக நிறைய கருத்துக்களை வெளிய கொண்டு வாறம். கருத்துக்கள் என்றத விட கலைநிகழ்வுகளைப் பார்த்தாலே போதும் அதிலேயே பிள்ளைகளுக்கு ஆன்மீகத்தன்மை வந்திரும். ஆன்மீகத் தன்மை வந்திட்டுது என்றால் வேறு எந்த உணர்வையும் தக்க வைக்கத் தேவையில்ல. அது தன்பாட்டிலேயே வந்திரும் அதுக்கான ஊடகமாகக் கலையைப் பயன்படுத்தலாம் அதுக்காக இந்த விசயத்தை தான் கட்டாயம் சொல்ல வேண்டுமென்றில்லை. நாடகத்தைப் பொறுத்த வரையில் ஒரு விசயம் சொல்லலாம் போதைவஸ்திலிருந்து விடுபடவேண்டுமென்றால், தெருக்கூத்தே அல்லது நாடக வழியோ சொல்லலாம். ஆனால் நாட்டியநாடகத்தில் நடனத்தைப் பொறுத்தவரையில் ஒரு உணர்வு. அதில வாற பாடல்களின் உணர்வோ அல்லது பக்கவாத்தியங்களின் உணர்வோ செவிவழி போய்ச்சேரேக்க பிள்ளை உணர்வுபூர்வமானதாக்கப்படுகின்றது. ஒரு பத்து பதினைந்து நிமிடம் ஒரு நாட்டிய நாடகத்தை உணர்வுபூர்வமாகப் பார்க்கிதென்றால் அதிலிருந்து விடுபட குறைஞ்சது இரண்டு நாட்கள் தேவை. அந்த இரண்டு நாட்களுக்கும் பிள்ளையை ஆற்றுப்படுத்த முடியும். கலைநிகழ்ச்சியைப் பார்க்க வரும் போதே செம்மைப்படுத்தலுக்குள்ளே கொண்டு வரலாம் இன்றைய காலத்தில்.

கலைகளில் ஆர்வமுள்ளவர்கள் தொடர்ச்சியாக அந்த துறையிலேயே ஈடுபடுகின்றார்கள். ஒரு பிள்ளை தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரை கலையை கற்குமாக இருந்தால் நிச்சயம் அதிலிருந்து விடுபட்டது குறைவாகவே இருக்கின்றது. கலைசார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் அவர்களின் ஈடுபாட்டினைப் பார்க்கும் போது உண்மையிலேயே சந்தோசமாக இருக்கின்றது. பல்கலைக்கழகங்களில் கூட துறைகள் வேறுபட்டதாக இருந்தாலும் அங்க நடக்கின்ற ஆண்டு போட்டிகளிலே பங்குபற்றுகிறார்கள். அவர்கள் எங்களைக் காணும் போது மிஸ் கலையில் வாழுகின்ற காலம் ஒரு பொற்காலம் என்று சொல்லுவார்கள். எப்படியோ எங்கையோ அவர்களின் வாழ்வில் கலை வாழ்ந்து கொண்டே இருக்கின்றது. கலைத்துறைக்குப் பாகுபாடு இல்லை எந்தத்துறைக்குப் போனாலும் அங்க கலை இருக்குது. இருக்கும். இதுகல எல்லாம் ஒரு இடத்தில நின்று பார்க்காம ஓடித்திரிஞ்சு பார்த்தால் நிறையத் தெரியும்.
கலைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்தே இருக்கின்றது. அதாவது நாட்டியநாடகம் ஒன்றை மேடையேற்றம் செய்ய வேண்டுமென்றால் நெறியாள்கைக்கு கட்டாயம் நடன ஆசிரியர் தேவை. நாடகத்துறையைச் சார்ந்தவர் இவர் இல்லையென்றால் நடனத்தைக் கொண்டு செல்வது கடினம் அடுத்தது வேடஉடை அலங்கரிப்பாளர், மேடை அமைப்பாளர், ஒப்பனையாளர், இசையமைப்பாளர், எழுத்துரு வடிமைப்பாளர், ஒலிஒளி அமைப்பாளர் இவர்கள் அனைவரது பங்களிப்பும் தேவை. இவர்களின் கூட்டு முயற்சிதான் நாட்டிய நாடகமொன்றைப் பெரும் படைப்பாக கொண்டு வருகின்றது. தனியாக ஒருவரே எல்லாத்தையும் செய்தால் அங்க ஒரு முழுமையான அமைப்பைக் காண முடியாது.
செயல் திறன் அரங்க இயக்கத்திற்கும் எனக்குமிடையிலான உறவு நிலை தான் நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்க காரணம். தேவானந்த் சேரின்ட அக்கினிப் பெருமூச்சு நாடகத்தை நான் செய்யாட்டி எனக்கு நாட்டியநாடகத்தில யதார்த்தத்தை பூட்டத் தெரியாது. அன்றைக்கு அவர் போட்ட வித்துத்தான் என்ட நாட்டிய நாடகத்தில நடனத்துக்கு அப்பால் சின்னதொரு புதுவிதத்தன்மை இருக்குதென்றால் அதுக்கு காரணம். அதுமட்டுமல்ல இந்தியாவில இருந்து யாரை வரவழைத்தாலும் சின்னதாகவொரு அறிவித்தல் தருவார் நானும் அனுப்புவன் அதிலயிருந்து வாற தன்மைகளையும் கற்றுக் கொள்ளுவன். நான் நினைக்கின்றேன் சென்ற ஆண்டு இந்தியாவிலிருந்து வந்த கிராமியக் கலைஞர் வேணு பயிற்றுவித்த பறை, கும்மி, சிலம்பாட்டம் போன்றவற்றிலிருந்து சிலம்பாட்டத்தை இப்ப நான் நர்த்தனசேஸ்திரவில் நடந்த மார்கழிமா பண்பாட்டு நிகழ்சியில் புகுத்திட்டன். எப்போதுமே செயல் திறன் அரங்கு நேரடியாக இல்லாட்டியும் மறைமுகமாக எனக்கு பக்கபலமாக இருக்கின்றது.
ஒரு கதைப்படைப்பில் யதார்த்தத்தின் முக்கியத்துவத்தை அக்கினிப்பெருமூச்சு நாடகத்தில அவர் சொன்னது ‘ம்ம்ம்…ம்ம்ம்ம…. ம்ம்மம்.. என்று மக்கள் வரும் போது வரும் ஒலி, மக்கள் நடந்து வந்த விதம், கேளிக்கையான மக்கள் இவற்றை யதார்த்தமாக காட்டினது அதுக்கு அவர் காட்டிய கோமாளித்தனம். ஏன் அப்பிடிப் பாவிச்சவர் அத எப்பிடி நாட்டியநாடகத்துக்குள்ள கொண்டுவரலாம் என்று யோசிப்பன். அந்த நாடகத்தில ‘நமக்கென்னையா? ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன? நாம நம்மபாட்டில இருப்பம்’ அந்த வசனம் நான் எந்தவொரு நாட்டிய நாடகம் உருவாக்கேக்கையும் அத அடிப்படையாக யோசிப்பன் அத எப்பிடி இதுக்குள்ள பாவிக்கலாம் என்று.
2014ம் ஆண்டு தான் முதன்முதலாக தேசியமட்ட போட்டிக்காக யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இருந்து போய் வெற்றியீட்டினம். 2015 அரசநாடக விழா, தொடர்ச்சியாக 2016 ம் ஆண்டும் நாட்டியநாடகத்தில தேசிய ரீதியில் வெற்றியீட்டிக் கொண்டு வாறம். 2004ம் ஆண்டு நான் தேசியமட்ட போட்டிக்கு கொண்டு போன நாட்டியநாடகத்திற்கும் 2016ம் ஆண்டு கொண்டு போன நாட்டியநாடகத்திற்குமிடையில் நிறைய இடைவெளி இருக்கிறது. வித்தியாசம் இருக்குது. அப்ப இருந்த பிள்ளைகளுக்கும் இப்ப இருக்கிற பிள்ளைகளிலையும் கூட வித்தியாசம் இருக்குது பிள்ளைகள் முயற்சி செய்கின்ற தன்மை வெளிப்படுகின்றது. பிள்ளைகளின் ஒத்துழைப்பு வெளிப்படுகின்றது.

நான் 2014 தொடக்கம் 2016 தொடர்ச்சியாக சிறந்த நெறியாளர் விருது, சிறந்த நடிகர், ஒப்பனையாளர், பத்மா சுப்பிரமணியத்தால இலங்கையின் சிறந்த நெறியாளர் விருது (2013) எனப்பல விருதுகளைப் பெற்றுள்ளேன். நெறியாள்கைத்துறை அனுபவத்தைப் பொறுத்தமட்டில் 2004ல் இருந்து இப்ப வரை உள்ளது.

நான் வளர்ந்து வரும் சமூகத்திற்காக கலையை என்ன சொல்ல விரும்புகின்றேன் என்றால், எந்தவொரு மாணவனும் சிறந்த ஆற்றுகையாளனாக இருந்தால் தானாகவே கலை வளரும். சிறந்த குருவின் கைக்குப் போய்ச் சேருவதும் அர்ப்பணிப்பும், உழைப்பும் அவனிடத்தில் இருக்கவே வேண்டும். ஆற்றுகையாளன் இவ்வளவையும் செய்வானேயானால், கலை தன்பாட்டில வளரும் என்பதே எனது ஆதிக்கம். செயல் திறன் அரங்க இயக்கம் எனக்கு காட்டிய வழிகாட்டலும், ஊக்குவிப்புமே நான் இந்த நிலைக்கு இருக்க காரணம். செயல் திறன் அரங்க இயக்கத்தால் வெளிவரும் கூத்தரங்கம் சஞ்சிகை வாழ்க்கைக்கு தேவையான நிறை விடயங்களை நிறையப் பேருன்ட கூட்டு முயற்சியாக வெளிய கொண்டு வாரது வரவேற்கத்தக்க ஒரு விடயம் எனலாம்.