Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பெற்றோர்கள்
சரியான நேரத்தில் சரியான இடத்தில் என்னை விட்டனர்! அதனால்தான்…..

ஒரு தையல் மெசினோடுதான் இந்தக் கடையை நான் ஆரம்பித்தேன். இன்று கடையில் 4 மெசின் அளவில் உள்ளது. அத்தோடு 3 பேர் என்னோடு வேலைசெய்கிறார்கள்.
அப்போதுதான் தெரிந்தது, இவரது கடையில் வேலை செய்பவர்களில் இரண்டு பேர் அவரைப் போன்று….

11.06.2018  |  
அம்பாறை மாவட்டம்
எஸ்.எம்.எம். ஜெஸீல்.

“கை இங்க வரணும்..உடம்பு சரி…இந்த பட்டன் வேணாம்…கொலர் இப்பிடி இருக்கணும்…” ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கிறார், கேட்பவர் தலையை தலையை ஆட்டுவதும் பேப்பரில் எழுதுவதுமாக இருக்கிறார். இடையில் சைகையால் பேசுகிறார். ரெடிமேட் ஆடை சந்தைக்கு வந்து தையல் கடைகளுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அட்டாளைச்சேனையில் தையல் கடை நடத்துபவர்தான் எஸ்.எம்.எம். ஜெஸீல்.

இந்த நோன்புக் காலத்தில் மும்மரமாக இயங்கிக்கொண்டிருந்த அவரிடம் பேச்சுக்கொடுத்தோம். அப்போது அவர் கையில் இருந்த பேப்பரில் எழுதி எமக்கு விடையளித்தார். அப்போதுதான் தெரிந்தது அவர் விசேட தேவைக்குரியவர் என்று.

40 வயதையுடைய ஜெஸீல் பிறப்பால் வாய்பேச முடியாத ஒருவர். தையல் கடை நடத்தி வருகிறார். அங்கே மூன்று பேர் வேலைசெய்கின்றனர். மும்மரமாக விரைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவரிடம்  கதைப்பதற்கு சைகைப் பாசை தெரிந்த ஒருவரை உதவிக்கு அழைத்தோம். அவர் சிரித்துக்கொண்டே “ உங்கள் பாசையில் உங்களுடன் என்னால் உரையாட முடியம்” என எழுத்தில் உரையாடத் தொடங்கினார்.

“எனக்கு பிறப்பிலிருந்தே காதும் கேட்காது வாய் பேசவும் முடியாது. இதனால் பெற்றோர்கள் என்னை சின்ன வயதில் திஹாரிய முஸ்லிம் அங்கவீனர் நிலையத்தில் சேர்த்து கல்விகற்க வைத்தனர். அங்கு 1986-1997 வரை கல்வி கற்றேன்.” என்று மறக்காமல் திகதியோடு எங்களுக்குக் கூறினார்.

/

“ இளமையில் எனது இந்த நிலையைப்பார்த்து சமூகம் பரிதாபப்பட்டாலும், எனது குடும்பம் என்னை முயற்சியாளனாக்கியது. என்னை சரியான இடத்தில் கொண்டுபோய் படிக்கவைத்ததே அவர்கள் செய்த பெரும் உதவி.” என்று கூறும் ஜெஸீல் தான் கல்வி கற்றதைப்பற்றிக் கூறுகிறார்.
அந்த நிலையத்தில் சைகை, மற்றும் எழுத்துக் கல்வியையும், தையல் பயிற்சியையும் பெற்றுக் கொண்டேன். முதலில் 9 வருடங்கள் எழுத்து மற்றும் வாழ்க்கைக் கல்வியையே எமக்குக் கற்பித்தனர். பின்னர் இரண்டு வருடங்கள் தொழில் பயிற்சியை எமக்கு தந்தனர். அதில் நான் தையல் பயிற்சியை விரும்பிக் கற்றுக் கொண்டேன் என்று அவர் கூறியபோது அவரிடம் தையல் தொழிலில் அலாதியான ஆர்வம் இருப்பது தெரிந்தது.

திஹாரியில் கல்விகற்றதன் பின்னர் என்ன செய்தீர்கள்?

“நான் திஹாரியில் தையல் பயிற்சி பெற்றதை வைத்து கொழும்பிலுள்ள ஆடை தைக்கும் நிலையமொன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது எனக்கு மாதம் 7 ஆயிரம் ரூபா சம்பளமாக தந்தார்கள். ஆனால் எதுவுமே எனக்கு மிஞ்சவில்லை. அந்த சம்பளம் கொழும்பில் செலவுக்கே போதுமாக இருந்தது. அதனால் இரண்டு வருடம் வேலை செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்துவிட்டேன்.”

எஸ்.எம்.எம். ஜெஸீல்.மற்றும் வேலை செய்வோர்
ஊருக்கு வந்தவுடன் இந்தக் கடையை செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா?

இல்லை, நான்கு வருடங்களாக சும்மாதான் இருந்தேன். சின்ன சின்ன வேலைகள் ஏதும் இருந்தால் போய் செய்து கொடுப்பேன். இடைக்கிடை கூலி வேலை செய்துக்கிட்டிருந்தேன். வாப்பா வேளான்மை செய்ததால் அங்கு போய் உதவிக்கு நானும் நிற்பேன். இப்படியே காலம் போய்கிட்டிருந்தது. வாப்பாதான் ஒரு நாள் நீ இப்படி திரியிறத்தை விட டெய்லர் கடையொன்றைப் போடு என்று அவர் கொஞ்சம் பணத்தையும் என்னிடம் தந்தார். அதற்கு தையல் இயந்திரம் ஒன்றையும் மீதிக்கு சில தளபாடங்களையும் வாங்கித்தான் இந்தக் கடையை ஆரம்பித்தேன்” என்று கூறினார். இன்று அவரது வாப்பா உயிருடன் இல்லை. அன்புடன் அவரை நினைவு கூர்ந்தார்.

 

இப்பொழுது உங்களது தொழிலில் எப்படி உள்ளது?

ஒரு தையல் மெசினோடுதான் இந்தக் கடையை நான் ஆரம்பித்தேன். இன்று கடையில் 4 மெசின் அளவில் உள்ளது. அத்தோடு 3 பேர் என்னோடு வேலைசெய்கிறார்கள்.
அப்போதுதான் தெரிந்தது, இவரது கடையில் வேலை செய்பவர்களில் இரண்டு பேர் அவரைப் போன்று வாய்பேச முடியாதவர்கள் என்று. விசேட தேவையுள்ளவர்களுக்கு தொழில் பயிற்சியையும் தொழில்வாய்ப்பையும் வழங்கும் ஒரு நிலையமாகவும் அவரது தையல் கடை செயற்படுவதாக எமக்கு வழிகாட்டுவதற்காக வந்த அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தின் விசேட தேவையுடையவர்களை கவனிக்கும் சமூகசேவைப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரீ. கபீர் தெரிவித்தார்.

இப்பிரதேச செயலகத்தில் சுமார் 600 பேர் அளவில் வெவ்வேறு விசேட தேவையுடையவர்கள் இருப்பதாகவும் இவர்களையெல்லாம் இணைத்து ஒரு சங்கமாக வழிநடத்துவதாகவும் இதன்மூலம் அவர்கள் தங்களுக்குள் இருக்கும் வளங்களை பரிமாறிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஜெஸீலின்  கடையில் இருந்து அளவளாவுவதற்காக அவரது நண்பர்களும் வருகை தந்திருந்தனர். இவர்கள் ஒவ்வொருநாளும் ஜெஸீலின் கடையை  தாம் சந்திக்கும் இடமாகவும் ஒன்று கூடிக்கொள்ளும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
மீண்டும் நாம் ஜெஸீலோடு எமது உரையாடலைத் தொடர்ந்தோம்.

எவ்வாறான ஆடைகள் தைக்கின்றீர்கள்?

நாங்கள் சேர்ட், காற்சட்டை, ஜுப்பா(இஸ்லாமிய கலாசார ஆடை) மற்றும் பாடசாலை சீருடை என்பவற்றை தைத்துக் கொடுக்கின்றோம். ரெடிமேட் ஆடைகள் தற்போது கடைகளில் இருந்தாலும் எங்களுக்கென்று நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எங்களிடம் தான் ஆடை தைக்க வருவார்கள். பாடசாலை ஆரம்ப காலம், நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் காலங்களில் நிறைய ஓடர்கள் வரும். அப்ப கதைக்க நேரம் இருக்காது. இரவு பகலாக வேலை செய்து குறித்த நேரத்துக்குள்ள உடுப்புகளை தைத்துக் கொடுத்திடுவம். இல்லையென்றால் தைக்கத் தந்தவர்கள் கோபித்துக் கொள்வார்கள். இவ்வாறு அதிக ஓடர்கள் வரும் நேரங்களில் பொத்தான் கட்டுதல், அயன் பண்ணுதல் போன்ற சின்ன சின்ன வேலைகளுக்கெல்லாம் இங்கிருந்து கதைக்க வரும் நண்பர்கள் உதவி செய்து தருவார்கள்.
ஜெஸீலின் கடையை தாம் கதைக்க வரும் இடமாகக் கொள்ளும் நண்பர்களும் அப்பப்ப உதவிகளைச் செய்து தருவதை நன்றியுடன் கூறினார் ஜெஸீல்.

ஜெஸீல், தன் வாழ்க்கைத்துணையையும் தன்னைப்போன்ற விசேட தேவைக்குரியவராகத் தேர்ந்தெடுத்துள்ளார். அவரைப் போல உள்ள ஒருவரை திருமணம் செய்தால் வாழ்க்கை நல்லா இருக்கும் எனக்கூறி அவரது வாப்பாவே பெண்பார்த்து தனக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறும் ஜெஸீலுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். 7ம் தரத்திலும் 5ம் தரத்திலும் கல்வி கற்கும் அவர்கள் நன்றாக படிக்கிறார்கள் என்று கூறி சந்தோசப்பட்டார் ஜெஸீல்.

தற்போது தனது குடும்ப செலவுகள் அனைத்தையும் இந்தக் கடையால் தான் கவனித்து வருகிறார். தன்னைப்போன்றவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கி அவர்களையும் வாழவைத்துக்கொண்டிருக்கிறார். இவர்களுக்கு எந்த சத்தமும் கேட்பதில்லை….யாருடனும் கதைப்பதுமில்லை….தங்கள் வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து விதவிதமாக தைத்து கொடுக்கிறார்கள். தைத்த ஆடைகள் அதிகம் வந்துவிட்டாலும் இவர்களது கச்சிதமான தையலுக்காகவும் குறித்த திகதியிலேயே வேலையை முடித்துக் கொடுப்பதனாலும், இவர்களிடம் வாடிக்கையாளர்களும் அதிகம் வந்து போகிறார்கள்.

விசேட தேவைக்குரியவர்களை பரிதாபத்துக்குரியவர்களாக்கி பிச்சை எடுக்க வைக்காது, அவர்களையும் முயற்சியாளராக்குவது பெற்றோரின் கடமை. விசேட தேவைக்குரியவர்களளை சரியான வழிகாட்டலில் பயிற்றுவிப்பதற்கு குடும்ப உறுப்பினர்களும் சமூகமும் முன்வரவேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஜெஸீலுக்கு தனது கடையை இன்னும் பெரிதாக்க வேண்டும் என்ற ஆர்வம் பெரிதும் உள்ளது.

“இந்தக் கடையை கொஞ்சம் பெரிதாக்கி வருமானத்தை கூட்ட வேண்டிய தேவை இருக்கிறதுடன் என்னுடைய நண்பர்கள் இன்னும் சிலருக்கு தொழிலைப் பெற்றுக் கொடுக்க நான் பெரிதும் முயற்சித்து வருகிறேன் “ என்கிறார் ஜெஸீல்.

ஏ.முஹம்மத் பாயிஸ்
இஸட். ஏ. ரஹ்மான்