Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சமூக நல்லிணக்கத்திற்கு
நடுத்ததர மக்களின் பங்கு முக்கியமாகும்!

இனம், மதம் என்பவையெல்லாம் ஒரு உணர்வு ரிதியான விடயங்கள். இதை வைத்து எவரும் சுயலாபம் தேடிக் கொள்ள முடியும். அதுதான் அண்மைக் காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. இவற்றை வைத்து பிரித்தாள்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

05.07.2018  |  
அம்பாறை மாவட்டம்
Dr. Ramees Abubakar, Head of the Department of Sociology at Southeast University

அம்பாறை மாவட்டம் பல்லினமக்கள் செறிந்து வாழும் ஒரு இடமாகும். எப்போதும் ஒரு முறுகல் நிலை இருந்து கொள்டே இருக்கிறது. இது பற்றி சமூகவியல் ஆய்வாளர் கலாநிதி றமீஸ் அபூவக்கர்  கருத்துத் தெரிவித்தார்.
கலாநிதி றமீஸ் அபூவக்கர் ,தென்கிழக்குப் பழ்கலைக் கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் அப்பீடத்தின் சமூகவியல்  தலைவருமாவார்

கேள்வி: அம்பாறை பல்லின மக்கள் செறிந்து வாழும் ஒரு இடம். 
இனங்களுக்கிடையேயான உறவு எந்த நிலையில் உள்ளது ?

பதில்: அம்பாறை மாவட்டத்தில் சிறு பெரும்பான்மையாக 43.58 வீதம் முஸ்லிம்களும் அடுத்ததாக சிங்கள மக்கள் 38.75 வீதமாகவும் தமிழ் மக்கள் 17.39 வீதமாகவும் வாழ்கின்றனர். அத்தோடு ஏனைய பறங்கியர் போன்ற சிறு இனக் குழுக்களும் வாழ்கின்றன.
அதன் பிற்பாடு தென்னிலங்கையிலிருந்த திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அம்பாறை மாவட்டத்தினுடைய எல்லை தெஹியத்த கண்டி வரையும் கொண்டு செல்லப்பட்டது. இதனால் இனவிகிசாரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அத்தோடு தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் செறிவாக வாழ்ந்தாலும் சிங்கள மக்களின் கையில் தான் பெரும்பான்மை நிலங்கள் உள்ளன. இவ்வாறாக இப் பிரதேசத்தில் ஒவ்வொரு இனத்தவரும் தனித்தனி பிரிவுகளாக பிரிந்துதான் வாழ்ந்தார்கள்.
ஆனாலும் அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் பொருளாதார அரசியல் விடயங்களில் மக்கள் ஒன்றுபட்டு சௌஜன்யமாக வாழ்ந்திருக்கிறார்கள். தமிழ் முஸ்லீம் கலாசாரத்தில் கூட இதன் தாக்கம் உள்ளது. உதாரணமாக பள்ளிவாசல்களில் மரைக்காயர் சபை (நிர்வாகிகள்) தெரிவு செய்வதற்கு குடி வழிமுறை பார்ப்பார்கள். இது தமிழ் மக்கள் கோயில்களில் தமது தர்மகத்தாக்களை தெரிவு செய்வதற்கு பயன்படுத்தும் முறையாகும். முஸ்லிம்கள் மத்தியில் கிட்டத்தட்ட 44 குடிவழிகள் காணப்படுகின்றன. அதேபோன்று சீதன நடைமுறை, பெண்பார்த்தல், பூப்பெய்யும் நீராட்டும் விழா, திருமண தாலிகட்டும் சம்பிரதாயங்கள் பொன்றவைகளை எடுத்துக் கொண்டாலும் தமிழ் மக்களின் பண்பாட்டுக் கூறுகள் தான் இங்குள்ள முஸ்லிம்லிம்களின் சில பண்பாட்டுக் கூறுகளில் காணப்படுகின்றன.
மதத்தால் வேறுபட்ட, மொழியால் ஒன்றுபட்ட இரண்டு சமூகங்களும் ஒன்றுபட்டு வாழ்ந்ததால் தான் இவ்வாறான பண்பாட்டுக் கலப்புகள் முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்றன. அதேபோன்று முஸ்லிம்கள் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு ஒன்றுசேர்ந்து வாழ்ந்த மக்களிடத்தில் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கியதன் விளைவாக அதன் வடுக்களை தற்போது காண முடிகிறது. யுத்தத்தின் பின்னர் இரண்டு சமூகங்களிடத்திலும் ஒற்றுமை மற்றும் தொடர்புகள் நிலவினாலும் முரண்பாடுகள் எழுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் வாழும் சிங்கள மக்களும் தமிழ், முஸ்லிம் ஆகிய இரு இன மக்களோடும் யுத்தத்திற்கு முன்னர் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் இடமங்களில் பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
யுத்தத்திலிருந்து இனங்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் சமூகங்களை பிரித்து தனித்து வாழ்வதற்கு வழிவகுத்தன. யுத்தம் முடிவடைந்த பிறகும் தற்போதும் அவ்வாறே தனித்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தென்கிழக்குப் பழ்கலைக் கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் அப்பீடத்தின் சமூகவியல் தலைவருமான கலாநிதி றமீஸ்
கேள்வி: யுத்தம் முடிவடைந்த பின்னரும் 
இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் 
எழுவதுடன் அவர்கள் தொடர்ந்தும் 
தனித்தே வாழ்கின்றனர் என்கிறீர்கள் 
இதற்கான காரணம் என்ன என்று 
எண்ணுகிறீர்கள்?

பதில்: இப் பிராந்தியத்தில் அரசியல் ரீதியாக ஒவ்வொரு இனமும் தமக்கு இன ரீதியான கட்சிகளை உருவாக்கி செயற்படுகிறார்கள். அதேபோன்று பொருளாதார ரீதியாகவும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு மக்கள் தூண்டப் படுகின்றனர்.
அண்மையில் அம்பாறை நகரத்தில் சாப்பாட்டுக்கடையில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டதாக பிரச்சினை உருவாக்கப்பட்டு முஸ்லிம்களின் கடைகள் உடைக்கப்பட்டு பள்ளிவாசலும் தாக்கப்பட்டன. இது சிங்கள – முஸ்லிம் மக்களிடத்தில் ஏற்பட்ட முரண்பாடாகும். அதேபோன்று அக்கரைப்பற்றில் முஸ்லிம் – தமிழ் மக்களிடத்தில் காணிரீதியான பிரச்சினை தோன்றியது. அத்தோடு மாணிக்கமடு பகுதியில் புத்தர் சிலைவைப்புப் பிரச்சினை என மூவினங்களுக்குள்ளம் இதுபோன்ற பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு பிளவுகள் ஏற்படுத்தப்படுகின்றன.


மூவின மக்களும் ஒற்றுமையுடன் சமாதானமாக வாழக்கூடிய சாத்தியங்கள் ஏராளம் இருந்தும்…

யுத்தத்திற்குப் பின்னர் மூவின மக்களும் ஒற்றுமையுடன் சமாதானமாக வாழக்கூடிய சாத்தியங்கள் ஏராளம் இருந்தும் அம்மக்களை பிளவுகளுக்குட்படுத்தி அரசியல் இலாபம் பெற சுயநலம் கொண்ட அரசியல் சக்திகள் பின்னணியில் இருப்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த மக்கள் சகவாழ்வுடன் வாழத் தடையாக இருப்பது அரசியல் பின்னணியாகும். இவ்வாறான அரசியல் இல்லாவிட்டால் சகவாழ்வுடன் வாழக் கூடியதாக இருக்கும்.

கேள்வி: தனியாக அரசியலைச் மட்டும் 
சொல்ல முடியாது, இன மத ரீதியான 
கட்டுப்பாட்டுகளும் மக்களைப்பிரித்து வைக்கிறது. 
இதை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்: மதம் என்பது ஒவ்வொருவரின் தனிச் சுதந்திரத்தின் அடிப்படையில் தன் வாழ்க்கையில் பின்பற்றும் ஒரு அடிப்படை அம்சம். அதேபோன்று இனம் என்பது மதத்தை அல்லது மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு குழுமத்தின் அடையாளம். இவற்றை வைத்தக் கொண்டு நாங்கள் யாரும் குரோதத்தின் அடிப்படையில் பிரிந்து வாழமுடியாது.
ஆனால், இனம், மதம் என்பவையெல்லாம் ஒரு உணர்வு ரிதியான விடயங்கள். இதை வைத்து எவரும் சுயலாபம் தேடிக் கொள்ள முடியும். அதுதான் அண்மைக் காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. இவற்றை வைத்து பிரித்தாள்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. மனிதர்கள் என்பது இனம், மதம் கடந்த பொதுத் தன்மை. ஏல்லோரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவரவருடைய மதம், கலாச்சாரங்களைப் பின்பற்றி சகவாழ்வுடன் வாழமுடியும்.

 
கேள்வி: சமூகவியலாளார் என்ற ரீதியில். அனைத்து மக்களும் 
இனக்குழுக்களாக பிரிந்து வாழும் மனநிலை எவ்வாறு 
ஏற்பட்டது என எண்ணுகிறீர்கள்?

பதில்: அம்பாறை மாவட்ட மக்கள் இயல்பாக பிரிந்து வாழ்வதற்கு யுத்தத்தின் வடுக்கள் பிரதானமான காரணியாக இருக்கிறது. யுத்தம் காரணமாக மக்களிடத்தில் பய உணர்வு ஒன்று ஆழமாக பதிந்திருக்கின்றது. அத்தோடு சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற இன உணர்வும், இனக் குரோதப் போக்கும், காழ்ப்புணர்வுகளும் இங்கு வாழும் சமூக மக்களிடத்தில் ஆழமாக காணப்படுகின்றன. இதற்கு பிரதான காரணம் யுத்தமும் அரசியல் ரீதியான பிரசாரங்களும் தான்.
ஆனாலும் இங்கு அடிமட்ட மக்கள் நாளாந்த தொழில் நடவடிக்கைகளுக்காக எல்லா சமூகங்களுக்குள்ளும் சென்று வாழ்வாதார செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். உயர்தர மட்ட மக்கள் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் ஏனைய உயர்தர நிர்வாக மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் எல்லா இனங்களுடனும் தொடர்புபடுகிறார்கள். உறவுகளை பேணி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்திய தர மக்களை அரச ஊழியர்கள், மாதாந்தம் சம்பளம் பெறும் உத்தியோகத்தர்கள் சமூக இணக்கப்பாடான செயற்பாடுகளில் ஈடுபடுவது குறைவு. ஏனென்றால் இந்த தரப்பினர் ஏனைய மக்கயோடு நாளாந்த நடவடிக்கையில் ஈடுபடுவது மிகக் குறைவாகும். இதனால் அவர்கள் ஒரு விதமாக தனித்தே வாழ்கிறார்கள். இவ்வறானவர்களிடையே ஒரு வகையான பிளவு மனப்பான்மையும் காணப்படுகின்றது. இவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது மிக முக்கியமாகும். உண்மையில் சமூக நல்லிணக்கத்திற்கு இவர்களின் பங்கு முக்கியமாகும். அதற்கு இவர்களினுடைய போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

கேள்வி: எவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

பதில்: ஒவ்வொரு சமூகமும் பிரிநிது தனித்திருப்பதால் அவர்களுக்குள் பல்வேறு எண்ணப்பாடுகள் மனப்பாங்குகள் காணப்படுகின்றன. இந்த வரையறைக்குள் இருந்து ஒவ்வொரு சமூகமும் வெளியில் வர வேண்டும். பயம், பிழையான எண்ணப்பாடுகள் என்பவற்றிலிருந்து மன்னித்து, மறந்து ஒரு புதிய நிலைப்பாட்டுக்கு ஒவ்வொரு சமூகமும் வர வெண்டும். இந்த மனோநிலையோடு தொடர்ந்தும் ஒவ்வொரு சமூகமும் இருக்குமானால் நீடித்து நிலைக்கக் கூடிய சமாதானம் என்பது ஒரு கனவாக மாத்திரமே இருக்கும்.

ஜேர்மனியில் ஹிட்லரின் காலத்தில் யூதர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை வெளிக்காட்டும் நூதனசாலையொன்றை இன்னும் வைத்திருக்கிறார்கள். இது நிலைமாறுகால நீதி விடயத்துக்கு மிக முக்கியமானதாகும். ஏனென்றால் இவ்வாறான கோர விளைவுகள் இன்னும் ஏற்படக் கூடாது என்பதற்காகும். அவற்றை நினைத்து பழி தீர்ப்பதற்காக அதற்கான உணர்வுகளை வளர்த்துக் கொள்வதற்காக இவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
இந்த நாட்டில் அபிவிருத்திக்கு சமூக நல்லிணக்கம் என்பது முக்கியமாகும். இல்லையென்றால் மனித வளங்கள், பௌதீக வளங்கள் பயன்படுத்தப்படாமல் பயன்பாடற்றுப் போய் நாடு பின்தங்கிய நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுவிடும். எனவே சமூகங்களிடையே மனப்பாங்கிலும் நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டு கலந்துரையாடலை ஊக்குவித்து வன்முறைகளை தவிர்த்து வாழ வேண்டும். இதனூடாக சகவாழ்வுக்கு வித்திடப்பட வேண்டும்.

ஏ.முஹம்மத் பாயிஸ்
சஜாஸ் ஏ. மஜீட்