Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நல்லிணக்கமா…?
வடக்கில் இராணுவ ஆட்சி!?

அரசியல் யாப்பே நல்லிணக்கத்துக்கு பாதிப்புதான்.! நாடாளுமன்றமே நல்லிணக்கத்துக்கு பாதிப்புதான்.! கறுப்பு நிறத்தை காட்டி அதனை வெள்ளை எனக் கூறச்சொன்னால் அதனை ஏற்றுக்கொண்டு கையுயர்த்தும் ஜனநாயக மரபே அங்கு காணப்படுகின்றது.

12.07.2018  |  
வவுனியா மாவட்டம்
Marimthu Sathivel

“அரசியல் ரீதியாக தமிழ் மக்களை அடக்கியாள முற்படும் பேரினவாத அரசு முஸ்லிம் மக்களை பொருளாதார ரீதியாக முடக்கியாள எத்தனிக்கிறது” என தெரிவிக்கும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல், ‘நாட்டில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் களையப்பட்டு நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் அரசியல் யாப்பின் ஊடாக மாற்றம் ஏற்படுத்த வேண்டுமெனவும்’ வலியுறுத்தினார்.
கட்டுமரன் இணையதளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

கட்டுமரன் :நல்லிணக்கம் என நீங்கள் எதனை வரையறுக்கிறீர்கள்?

அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்: நல்லிணக்கம் என்பது அரசியல், பொருளாதாரம், மற்றும் கலாசார ரீதியானது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய பதுகாப்பு சார்ந்த, எதிர்கால உறுதிப்பாடே நல்லிணக்கம். அது அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.

கட்டுமரன் : நல்லிணக்க அடி மூலம் எது? அது எங்கிருந்து ஏற்பட வேண்டும்.?

அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்: நல்லிணக்கம் என்பது அரசியல் சார்ந்தது என நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். எனினும் இலங்கையை பொறுத்தவரை தற்போது ஒரு இனவாத, மதவாத அரசியலே முன்னெடுக்கப்படுகின்றது. பொருளாதாரம்கூட மத, இனவாதத்தைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பான்மை இனம் நன்மையடைய ஏனைய


இலங்கையை பொறுத்தவரை தற்போது ஒரு இனவாத, மதவாத அரசியலே முன்னெடுக்கப்படுகின்றது. பொருளாதாரம் கூட மத, இனவாதத்தைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது.

இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழர்களை, தமிழ் பேசும் மக்களை நீண்டகாலமாக புறக்கணிக்கும் ஒரு தன்மை காணப்படுகின்றது. கட்டமைக்கப்பட்ட புறக்கணிப்பில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் அரசிலேயே மாற்றம் ஏற்பட வேண்டும். அது யாப்பு ரீதியானதாக அமைய வேண்டும். ஆகவே நல்லிணக்கத்தின் அடிநாதம் அரசியல் யாப்பு மாற்றமே.

கட்டுமரன் : யாப்பு ரீதியிலான மாற்றம் என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள்?

அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்: 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யாப்பில் தமிழ் மக்களை அடக்கியாளும் வகையில் சரத்துகள் சேர்க்கப்பட்டன, குறிப்பாக பௌத்த மதம் அரச மாதமாக மாற்றப்பட்டமை. அதைவிட 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்காக அல்ல அது முழு நாட்டுக்குமானது. ஆகவே யாப்பு ரீதியிலான மாற்றம் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும்.

கட்டுமரன் : நல்லிணக்கம் மக்களிடையே இருந்து உருவாக வேண்டும்மென பலரும் கூறுகின்றார்களே?

அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்: உண்மையில் நாட்டில் பௌத்த மத ஆதிக்கம் அதிகம், வடக்கில் தேவையற்ற இடங்களில் விகாரைகள் அமைக்கப்படுகின்றன. தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள். இவைகள் நிறுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம், மலையகம் மலையக தமிழர் வாழும் பிரதேசம், ஏனைய பிரதேசங்களில் பெரும்பான்மையின மக்கள் வாழும் பிரதேசம் என்பதை அரசு புரிந்துகொள்ளும்போது மக்கள் தாமாக மாற்றத்தை உள்வாங்கிக்கொள்வார்கள். முதலில் ஆதிக்கம் குறைய வேண்டும். அதனை அரசு தான் செய்ய வேண்டும். எனவே அங்கிருந்துதான் நல்லிணக்கத்திற்கான அடித்தளங்கள் இடப்படவேண்டும்

கட்டுமரன் : ஆனாலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கில், அரசாங்கம் மீள்குடியேற்றம் உள்ளிட்டவற்றில் சில முன்னேற்றகரமான விடயங்களை நடைமுறைப்படுத்துகிறது. ஆனாலும் அரசாங்கத்தின் மீதான கடுமையான விமர்சனங்கள் தொடர்கின்றனவே.?

அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்: நல்லிணக்கமா…?! எங்க…?! வடக்கு கிழக்கு என்பது இராணுவமயமாக்கப்பட்டதாகவே காணப்படுகின்றது. இராணுவமே சிவில் நிர்வாகத்தை நடத்துகின்றது. ஆகவே அது ஒரு இராணுவ ஆட்சி. அரசாங்கத்தின் தீர்மானங்களைக்கூட இராணுவத்தின் ஆலோசனையுடனேயே எடுக்க வேண்டியிருக்கின்றது. இராணுவத்தை அகற்றி முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தாமல் அங்கு நல்லிணக்கத்தைப் பற்றி பேசுவதில் பிரயோசனமில்லை.

கட்டுமரன் : வடக்கு கிழக்கில் இராணுவம் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையெனின், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் எவையென நீங்கள் கருதுகிறீர்கள்?

அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்: அரசியல் யாப்பே நல்லிணக்கத்துக்கு பாதிப்புதான்.! நாடாளுமன்றமே நல்லிணக்கத்துக்கு பாதிப்புதான்.! கறுப்பு நிறத்தை காட்டி அதனை வெள்ளை எனக் கூறச்சொன்னால் அதனை ஏற்றுக்கொண்டு கையுயர்த்தும் ஜனநாயக மரபே அங்கு காணப்படுகின்றது. நீதிமன்றங்களின், நீதியமைச்சின் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்படுகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் சிங்கள மக்களிடையே மாத்திரமல்ல ஏனைய இனங்களுக்கும் நீதித்துறையின் பக்கச்சார்பான போக்கு நல்லிணத்தை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடுகளுக்கு வழி வகுக்கின்றது. வழக்கு விசாரணைகளில் பாராபட்சம் காணப்படுகின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கூட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு தடையே.

கட்டுமரன் : காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கு நிரந்தர அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டு அதுத் தொடர்பிலான விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்ற சூழலை எப்படி பார்க்கிறீர்கள்?

அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் :அந்த அலுவலகத்தின் பெயரிலேயே பிரச்சினை இருக்கிறது, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான’ அலுவலகமே எமது கோரிக்கை. ஆனால், இந்த அலுவலகம் ‘காணாமல்போனவர்களையே’ தேடுகிறது. இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி எவ்வாறு நிலைநாட்டப்படும். எந்தவொரு இராணுவத்தையும் சட்டத்தின் முன் நிறுத்த தயாரில்லை என ஜனாதிபதி கூறுகின்றார். எனினும் காணாமற் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இராணுவம் சம்பந்தப்பட்டுள்ளதாக சர்வதேசமே கூறுகிறது. எனது நிலைப்பாடும் அதுதான். ஆகவே இந்த அலுவலகம் எதற்கு என்ற கேள்வி எழுகின்றது. இதுவொரு கண்துடைப்பு. அரசியல் காரணங்களுக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு, நீதியை எவ்வாறு இங்கு எதிர்பார்க்க முடியும்.?

கட்டுமரன் : நாட்டில் இன, மத வன்முறைகள் ஒழிந்தபாடில்லை. இவைகளுக்கு ஒரு முடிவு வருமென நீங்கள் கருதுகின்றீர்களா?

அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்: இலங்கையைப் பொறுத்தவரையில் ஆட்சியாளர்களுக்கு ஒரு எதிரி தேவை. இனவாதிகளுக்கு ஒரு எதிரி தேவை. 2009ஆம் ஆண்டுடன் தமிழர்களின் அரசியல் பொருளாதாரம் என்பவற்றை ஒழித்துவிட்டதாகவே தென்னிலங்கை கருதுகின்றது. ஆகவே அடுத்த கட்டமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. தமிழர்களுக்கு எதிரான வன்முறை அரசியல் ரீதியானது. எனினும் முஸ்லிம்களுக்கு எதிராக பொருளாதார ரீதியானது. அந்த வன்முறைகளே தொடர்கின்றன. அது தீவிரமடையலாம். அதேவேளை சிவசேனா அமைப்பும், பொதுபலசேன அமைப்பும் அண்மையில் சந்திப்பை நிகழ்த்தியு;ளளன. இந்த மத தீவிரவாத அமைப்புகள் இணைந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த நாட்டில் பிரச்சினைகளுக்கு காரணம் கிறிஸ்தவர்களே என பொதுபல சேனா ஏற்கனவே கூறிவிட்டது. சிவசேனா அமைப்பு இந்த நாடு பௌத்தர்களுக்கும், இந்துக்களுக்கும் மாத்திரமே சொந்தமென பிரசாரம் செய்கிறது. இவற்றை எந்த சட்டமும், அரசும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில் இவற்றை எவ்வாறு ஒழித்துக்கட்டுவது?

கட்டுமரன்: முஸ்லிம்களுக்கு எதிரான பொருளாதார வன்முறை என்று எதனை குறிப்பிடுகிறீர்கள்?

அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்: தலை நகர் உள்ளிட்ட பல பிரதேசங்களில் முஸ்லிம்கள் வியாபாரத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்கள் ஆகவே அவர்களை வீழ்த்துவது பொதுபலசேனா உள்ளிட்ட அமைப்புகளின் நோக்கம். சில பிரபலமான ஆடை விற்பனை நிலையங்களை கடந்த காலங்களில் தாக்கப்பட்டன. இப்படி பல உதாரணங்கள்.

கட்டுமரன் : இதே வேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலன நல்லிணக்க செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது தொடர்பில் உங்கள் கருத்து அல்லது மதிப்பீடு என்ன?

அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்: இதுவொரு நீண்டகால செயற்பாடு அல்ல ஒரு செயற்றிட்டம் அவ்வளவுதான். இந்த செயற்றிட்டத்துக்கு பின்னால் பாரிய முடுதலீடுகள் காணப்படுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பணம் இதற்கு உதவுகிறது. உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்கான அடித்தளம் இதுவரை போடப்படவேயில்லை. முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அவருக்கு ஒரு வேலை வழங்கப்பட்டுள்ளது அவ்வளவுதான். இதானல் நல்லிணக்கம் உருவாகமாட்டாது.

கட்டுமரன் : அரசியல் கைதிகள் விடயத்தில் முன்னின்று செயற்படும் உங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஆரோக்கியமானதாக இல்லையே…விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்துகிறார்களே?

அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்: இலங்கையில் சிங்களவர்களுக்கு சார்பாக செயற்படுபவர்களை தேசப்பற்றாளர்களாகவும், தமிழர்களுக்கு சார்பாக செயற்படுகின்றவர்களை தேசத்துரோகிகளாகவும் பார்ப்பதன் வெளிப்பாடே அது. அரசியல் கைதிகள் விடயம் என்பது தமிழர்களின் அரசியல், உரிமை சார்ந்தது ஆகவே அதுத் தொடர்பில் பேசும்போது அவர்களை என்னை ஈழவாதியாக பார்க்கின்றார்கள். எனினும் எனது கோரிக்கை அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யபட வேண்டுமென்பதே. அதில் சிங்களவர்கள், மலையகத் தமிழர்களும் காணப்படுகின்றனர். ஆனால் வடக்கு கிழக்குத் தமிழர்கள் அதிகம் அவ்வளவுதான். ஆகவே உண்மையை புரிந்துகொண்டால் விமர்சனங்களுக்கு வாய்ப்பில்லை.