Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

தற்கொலை
சிக்கலான பிரச்சினை!இனங்காண்பது எப்படி?

‘தற்கொலை செய்து மரணம் சம்பவிப்பவர்களின் எண்ணிக்கையில் ஆண்களே அதிகளவினராக உள்ளனர். ஆனால் தற்கொலை முயற்சியில் பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர்.

18.07.2018  |  
கொழும்பு மாவட்டம்
நன்றி : https://www.wikihow.com
'சொல்லித் தந்ததோ கற்றுக் கொண்டதோ போல இல்லை
வாழ்க்கை - அது
குழந்தைக் கதையில் மந்திரவாதி எங்கோ ஒளித்து வைத்த
உயிர்'
                                    -சுகுமாரன்

”ஒரு இளம்பெண். கண்களும் முகமும் இறுகிப்போய் சோர்ந்தவளாக தன்னுடைய குழந்தையை கைகளில் ஏந்திக்கொண்டு வந்து நிற்கின்றாள். அவள் அந்தக் குழந்தையைக் கொன்றுவிடப்போவதாகச் சொல்கின்றாள். அதைக்கேட்ட அவளுடைய தாயின் வயதுடைய அந்த முதிர்ந்த பெண். அவளுடைய குழந்தையை வாங்கி தன்னுடைய மடியில் வளர்த்திக்கொண்டு. அந்த இளம் பெண்ணன் கதையைக்கேட்கத் தொடங்குகின்றாள்.”

கடந்த நாற்பது ஆண்டுகளாக இலங்கை மக்களின் மனங்களின் குரல்களை இப்படி கேட்டுக்கொண்டிருக்கின்றனர் ஒரு குழுவினர்.

“நாங்கள் நம்பிக்கையீனமும், துன்பமும், மன அழுத்தமும் உந்தித்தள்ள வாழ்வின் விளிம்பை அடைந்துவிட்டதாக உணரும் நபர்களுக்கு அவர்களின் கதைகளைக் கேட்பதன் ஊடாகவும் அவர்களுடன் உரையாடுவதன் ஊடாகவும் அவர்களுடைய நம்பிக்கையுணர்வை அவர்கள் கண்டுபிடிக்க உதவுகிறோம்.” என்று கூறுகிறார் சுமித்ரயோ பணியாளர்களில் ஒருவர்.(பெயர் குறிப்பிடல் தவிர்க்கப்பட்டுள்ளது)

//

பொதுவில் இலங்கை மக்களின் மனநிலையில் ஒருவர் மனக்குழப்பத்துக்கு வைத்தியரையோ அல்லது உளவியலாளரையோ தேடிச்செல்லும் போது அல்லது யாரும் குறித்த நபர்களை அழைத்துச்செல்லும் போது அவர்களுக்கு “விசர்” “பைத்தியம்” என்று கடுமையான மொழியும் மனத்தை நறுக்கி மேலும் உடையச் செய்யத்தக்க மானோபாவத்தையும் வெளிப்படுத்தும் மோசமான மனோபாவம் இன்னும் உள்ளது. இந்த சமூக மனோபாவத்திற்கு அருவருத்தே பலரும் மனத்தை திறந்து யாருடமும் உரையாடவோ தங்களைச் சொல்லவோ முனைவதில்லை. இந்த பிறழ்வு நிலையில் மக்கள் எப்படி சுமித்ரயோவை நோக்கி வருகின்றனர் என்று கேட்டோம்.

“சுமத்திரயோ நாற்பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியத்தைக்கொண்டது, அது ஒரு பெரிய குடும்பமாக மாறிவிட்டது, இங்கே வந்து எங்களுடன் உரையாடிச்சென்றவர்கள், நண்பர்களானவர்கள், சகோதர சகோதரிகளானவர்கள், இன்றைக்கு நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்கின்றவர்கள் இந்த குடும்பத்தின் உரையாடும் கேட்கும் பண்பாட்டினை இலங்கை முழுவதும் விரித்துச்சென்றுள்ளனர். தொடர்ச்சியாக நம்பிக்கையீனத்தில் விழுபவர்கள் சுமித்ரியோவை நாடுவதற்கு அதனுடைய பாரம்பரியமானதும் குடும்பம் போன்றதுமான இயங்கும் முறை ஆரோக்கியமான வாய்ப்பளிக்கின்றது.”


தற்கொலை முடிவினை திடீரென எடுப்பவர்கள் நூற்றுக்கு 1 சதவீதமானவர்களே. ஏனையவர்கள் நீண்ட கால மன அழுத்ததின் காரணமாகவே தற்கொலைக்குத் தூண்டப்படுவார்கள்.

எம்மை நாடி வருபவர்களுக்கு அறிவுரை கூறுபவர்களோ சிகிச்சையளிப்பவர்களோ அல்ல நாங்கள். அவர்களின் கதைகளைக்கேட்பவர்கள், அவர்களுடன் சினேகமாக உரையாடுபவர்கள்” என்கின்றார், சுமித்ரியோவில் பணியாளர்களில் இன்னொருவர்.

தற்கொலை என்பது ஒரு சிக்கலான பிரச்சனையாகும், அதில் உயிரியல், மரபியல், உளவியல், சமூக, பண்பாடு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் சிக்கலான தொடர்புகளிலிருந்து இது உருவாகிறது. அது இன அல்லது வர்க்க வேறுபாடுகளை கொண்டிருக்கவில்லை. வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க இயலாமை தற்கொலை முன்னணி காரணங்கள் ஒன்றாகும், அங்கு தனிமை, மன அழுத்தம், பதட்டம், நம்பிக்கையற்ற தன்மை மற்றும் இதர எதிர்மறை உணர்ச்சிகளின் பால் அவர்களைக்கொண்டு செல்கின்றது. சுமத்திரயோ அவர்களுடன் உரையாடுவதன் மூலம் அவர்களை அதிலிருந்து நம்பிக்கைக்கு எடுத்து வருவதுடன், அவர்கள் சுமத்திரயோவில் இருந்து புறப்பட்டுச்சென்று உறுதியான நம்பிக்கையான வாழ்வை பற்றிப்பிடிக்கும்வரையும் அதன்பிறகும் சுமித்திரயோ அவர்களுடனான நட்பார்ந்த தொடர்பினைப்பேணுகின்றது. கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன பெண் இன்றைக்கு தன்னுடைய குழந்தைகளுடன் தன்னுடைய இல்வாழ்வை மகிழ்வாக மேற்கொள்கின்றாள். ஆண்கள் மீதிருந்த அவளுடைய பயமும், தன்மீதிருந்த நம்பிக்கையீனத்தையும் அவள் விடுவித்துக்கொண்டிருந்தாள், அதன் பொருட்டு தன்னுடைய மகளொருத்தியின் மகிழ்வான வாழ்வுக்கு உதவி செய்ததற்குரிய மனநிறையை சுமித்ரயோவின் வயதான அந்தப்பெண்மணி அடைந்துள்ளதாக கண்களில் உணர்வும் நிறைவும் நிறையச்சொல்கின்றார்.

  •  சுமத்ரயோ’ என்பது நண்பர்கள். இந்த குழுநிலை உறவின் ஊடாக தற்கொலை மனநிலையில் உள்ளவரை அந்த மனநிலையில் நின்று விடுவிப்பதற்கான உளவள துணை சிகிச்சை வழங்குதல் இங்கு முக்கியமானது.இனங்காணப் பட்டவர்களுடன் கதையாடல் ஊடாக அவர்களின் தொடர்ப்பைப் பேணுதலும்அதனூடாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தலும். அதிகம் தொலைபேசி தொடர்பாடல் மூலம் தான்,செயற்பட்டு வருகின்றோம் .

சில கிராமங்களிலும் நகரங்களிலும் தற்கொலைகள் கூடுதலாக நடக்கின்றன. எடுத்ததற்கெல்லாம் உயிரை மாய்க்கின்ற நிலை. தொற்றத் தொடங்கியுள்ளது. இது ஒரு மக்கள் பிரச்சனை .இது குடும்பம்  நண்பர்கள் என்று பலரையும் பாதிக்க செய்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகள் காதல் தோல்வி, பாலியல் பலாத்காரங்கள், வேலையில்லாப் பிரச்சினை, படிப்புக்கு ஏற்ப தொழில் கிடைக்காமை  உட்பட பல சமூகக் காரணங்களும் இதில் அடங்கும். இதை விடவும் முதியவர்கள் பலர் தினமும் தற்கொலை செய்கின்றனர். இதற்கு உடல் ஆரோக்கியமின்மை, தனிமையில் இருத்தல், போதிய பராமரிப்பின்மை  காரணங்களாகின்றன. ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளும், அங்க அசைவுகளும் உயிரைப் போக்க முயல்கிறா ரென்பதைத் தெளிவுபடுத்தும். அதனை இனங்கண்டு அவர்களுக்கு உளவள ஆலோசனை வழங்கினால் தற்கொலை முயற்சியிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முடியும்.

தகட்டுமரன் : தற்கொலை முயற்சியாளரை எப்படி இனங்கான 
முடியும் ?

எதிர்பார்ப்பு இல்லாத உணர்வுகள், கதைகள்  ஊடாக இனி தனக்கு வாழ்க்கையே இல்லை என்ற முடிவாக கதைப்பார்கள் ,நினைப்பார்கள். மனப் போராடத்தில் இருப்பார்கள். தோல்வி மனநிலையில் கல்வி, வியாபாரம்,  காதல் மனப் போராட்டத்தில் இருப்பார். தனிமையான மனநிலை உடையவராக இருப்பார் அல்லது மற்றவர்களால் தனிமையாக்கப்பட்டு புறக்கணிக்கப் பட்ட மனநிலையில் இருப்பார் . இவர்கள், தாம் இருப்பதை விட சாவது மேல் என்றும்  அல்லது மற்றவர்களை கொலை செய்வேன் என்றும் கூறும் அதே வேளை எப்படி தற்கொலை செய்யலாம் என்ற வழி வகைகளையும் தேடுவர் .அதற்கு இப்போது இணையங்கள், திரைப்படங்கள் வழிகாட்டிகளாகவும் உள்ளன.தற்கொலை முயற்சியாளர் தமக்குரிய மனச்சுமை குறித்து வெளிப்படுத்துவார் அல்லது வெளிப்படுத்தாமலும் விடுவார் .அதிகம் மதுசாரம், போதை ஆகியவற்றை பயன்படுத்துவார்.அதிகமாக ஏதாவது அலட்டிக் கொண்டு இருப்பார்கள் அல்லது பேசாமல் விடுவார்கள். பழிதீர்க்கும் மனநிலையில் இருப்பார் அல்லது அமைதியாக இருப்பார். எதிலும் விருப்பம் ஆர்வம் அற்று விரக்தியாளராக இருப்பார்.

சில குடும்பங்களில் தாற்கொலை மரணம் நிகழ்ந்திருப்பின் தாமும் செய்யும் மனநிலைக்கு செல்ல முயற்சிப்பார். சிலர் உடல் ரீதியாக பொறுக்க முடியாத வலி வேதனைகளுடன் வாழும் நிலையில் இருந்து நிரந்தர விடுதலையாக தற்கொலையை தெரிவு செய்வர். அது தான் தீர்வு என்றும் சிந்திப்பர். நெருங்கிய உறவுகளின் இழப்பும் அவர்களின் மனசை பாதிக்க செய்து தற்கொலை மனசை தீர்மானிக்கும். (காதல் தோல்வி , காதலன் காதலி மரணங்கள் )

அத்துடன் பாலியல் வன்முறை, பலாத்காரம், சிறுவயது துஸ்பிரயோகம், வலிகளுடனான நினைவுகள், புறக்கணிப்புக்கள் போன்றன ஆண் பெண் வேறுபாடின்றி தற்கொலை முயற்சி செய்யத் தூண்டுகின்றன .

தகட்டுமரன் : குறித்த நபர்கள் எவ்வாறு சுமத்திரையோ 
நிறுவனத்தை தொடர்பு கொள்கின்றனர் ?

தற்கொலை மனநிலையை தடை செய்யும் வகையில் விழிப்புணர்வுகளை செய்து வருகின்றோம் இ பாடசாலைகள் கிராமங்களில் அவை நிகழ்கின்றன. தேடி வரும் நிலைக்கு பலர் வந்துள்ளனர். அல்லது அவர்களின் குடும்ப உறவுகள் நண்பர்கள் ஊடாக அழைத்து வரப்படுகின்றனர் .அவர்கள் அடையாளம் காணப்பட்டதும் தொடர்ந்தும் கண்காணிப்பில் வைத்திருப்போம் .தொலைபேசி இலக்கத்தினை பெற்றுக் கொண்டு தொடர்ந்தும் அவர்களுடனான தொடர்பாடலில் இருப்போம். அவர்களின் வரலாறு, பின்புலம், வாழ்க்கை என்று நன்மை தீமை பலவற்றை கதைப்போம் . மெல்ல மெல்ல மனநிலையில் மாற்றங்கள் வருவதை உணர்ந்து பழைய நிலைக்கு மீட்டெடுப்போம். அதற்கென பயிற்சியாளர்களை வைத்துள்ளோம். அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களை செயற்படவைப்போம்.

தகட்டுமரன் : இந்த நிறுவனத்தின் ஊடாக தற்கொலையை தடுத்தல் 
தொடர்பில் எவ்வாறான உதவிகளை வழங்கி வருகின்றீர்கள்?

சுமத்ரயோ : தற்கொலையால் இறப்போரின் எண்ணிக்கை குறைந்த  ஏனையோரால் பாரபட்ச மாக மதிக்கப்படும் நிலையற்றதும் இதயக்கமினிறி தமது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதுமான சமூகத்தை உடைய ஏனையோரின் உணர்வுகளை மதித்து ஏற்றுக் கொள்ளும் மக்களை உடைய சமூகத்தினை உருவாக்க பாடுபடுவதே எமது நோக்கம்.

ஆனால் எம்மிடம் வருபவர்கள் செவிமடுப்பதற்கு நிறமுள்ள அறிமுறை வழங்காது உங்களை புரிந்து கொள்ளும் உங்களை விமர்சனமோ மதிப்பீடோ செய்யாமல் உங்கள் சூழ்நிலையை அவ்வாறே ஏற்றுக்கொண்டு அதிலிருந்து நீங்கள் முன்னே செல்ல உதவி செய்வோம் .

தற்கொலை முயற்சியாளர்களுக்கு தமக்கென்று வலுவான காரணத்தை வைத்திருப்பார்கள். அது அவர்களுக்கு பெரிய அளவிலானதாக இருக்கும். அதனை இலகுவில் சொல்ல மாட்டார்கள். மறைமுகமாக சுற்றிச் சுற்றிச் சொல்வார்கள்இ இதனை நாம் தான் கண்டு பிடிக்க வேணும்.

தற்போது வாழும் வாழ்க்கை அவர்களுக்கு மனநிறைவானது என்ற மனநிலையின்றி  இயலாமையின் முடிவாக தற்கொலை மனநிலைக்கு செல்வார் அதனைக் கண்டு பிடித்து அடுத்த கட்டம் நகர்த்தும் போது தான் முன்னேற்றம் காண முடியும்.

இதனை தடுப்பதற்கு சில கதைகள். கதைகள் ஊடாக வெளியெடுத்தல் ஊடாக தடுக்க முடியும். அவர்களுக்கு அது பெரிய விடயமாகவும் எமக்கு சிறிய விடயமாகவும் இருக்கும் .ஆயினும் அவர்களின் மனநிலையில் இருந்து நாம் சிந்திக்க வேண்டும். இப்படியானவர்களை கதை ஊடாக வெளிப்படுத்த வைக்க வேண்டும் .அல்லது குறித்த நிறுவனத்திற்கு அழைத்து வர வைக்கப் படல் வேண்டும்.

“தற்கொலை முடிவினை திடீரென எடுப்பவர்கள் நூற்றுக்கு 1 சதவீதமானவர்களே. ஏனையவர்கள் நீண்ட கால மன அழுத்ததின் காரணமாகவே தற்கொலைக்குத் தூண்டப்படுவார்கள்”என்று கூறும் இவர்கள் ‘தற்கொலைக்கான முயற்சிகளை மேற்கொள்பவர்களின் வரிசையில் இருந்து இலங்கை இன்னமும் பின்வாங்கவில்லை. ஆனாலும், கடந்த ஐந்து வருடங்களுடன் ஒப்பிடுகையில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையானது, குறிப்பிட்டளவில் குறைவடைந்த வண்ணம் செல்வதுடன் தற்கொலை முயற்சிக்கான சதவீதம் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.’ என்கின்றனர்.

அதேநேரம் உலகில் வருடாந்தம் ஒரு மில்லியன் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பதும், உலகில் அதிக உயிர்களைக் காவுகொள்ளவது தற்கொலைதான் என்பதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த 45 வருடங்களில் உலகில் தற்கொலை வீதமானது 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. (science nature page FB.com) என்ற முகநூல் ஆய்வும் இதனையே சொல்கின்றது.
‘தற்கொலை செய்து மரணம் சம்பவிப்பவர்களின் எண்ணிக்கையில் ஆண்களே அதிகளவினராக உள்ளனர். ஆனால் தற்கொலை முயற்சியில் பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். ஆண்கள் தற்கொலை செய்வதற்கான காரணம் அதிகம் உணர்ச்சி வசப்பட்டே செய்கின்றனர். பெண்கள் பெரும்பாலும் கவனத்தை தம்பால் தக்க வைத்துக்கொள்வதற்காகவும் நம்மவரை பயமுறுத்தவுமே மேற்கொள்கின்றனர். இன்னும் சிலர் உள்ளனர். தான் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் போது அடுத்தவர் அதனை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதை அந்த பதகளிப்பினைப் பார்த்து மகிழ்ச்சியடைபவர்கள்’ என இலங்கையின் தற்கொலை நிலை பற்றி சுமித்ரயோ அங்கத்தவர்கள் மேலும் விளக்கினர்.

போர்க்காலத்தின் பிறகு வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள, சமூக, பொருளாதார, பண்பாட்டு பின்னணி கொண்ட மனநெருக்கடிகளும் சரி, நகரச்சூழலில் ஏற்பட்டுள்ள மன அழுத்தச்சூழலுக்கான முத்தாய்ப்புக்களும் சரி, சமூக வலைத்தளங்கள் முதலான நவீன மான மனிதர்கள் நடமாடும் புதிய பண்பாடுகளின் பின்னணியிலும் சரி ஏற்பட்டுவிடும் மனச்சிதைவுகள், நம்பிக்கையீனங்கள், தனிமையுணர்வுகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மக்களை கவனிக்கவும் அவர்களுக்கு பணியாற்றவும் சுமித்ரயோவின் பணியாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

“நாட்டில் யுத்தம் நிலவிய காலத்தில் மக்களின் தேவையானது வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவே அமைந்தது. அடுத்த வேளை உண்பது எவ்வாறு, உயிரைக் காப்பது எப்படி, கடத்தல், வறுமை போன்ற பிரச்சினைகள் செல்வாக்குச் செலுத்தின. ஆனால் இன்று நம்மவர் மத்தியில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் அவை சார்ந்த பிரச்சினைகளுமே அதிகமாக உள்ளன. எங்கு மற்றைய இனத்தவர்களால் நாம் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ அல்லது மற்றயைவர்களின் வெறுப்பபைச் சம்பாதித்துக் கொள்வோமோ,தனிமைப்படுத்தப்படுதல், ஓடங்கட்டபட்டப்படல் என்ற எண்ணமே மேலிட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு எமது நாட்டில் யுத்ததிற்கான அடித்தளம் நாட்டப்பட்டது. அந்த ஆண்டிற்கானதும் அதனை அடுத்தடுத்தண்டுக்கானதுமான சந்தியினரே இன்றைய நாட்டின் முதுகெலும்புகளாக உள்ளனர். அதேநேரம் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற எண்ணவோட்டங்கள் அதிகரித்துச் செல்கின்றமை, வடக்குத் தெற்கு என்ற பிரிவினை வாதம் போன்ற விடயங்களும் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.’ என ஒரு தனிமனிதனில் அரசியல் நிலைமைகளால் ஏற்படுத்தப்படும் உள நெருக்குதல்கள் பற்றியும் சுமமித்ரயோ குழுவினர் தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றனர்.

வைத்திய சாலைகளில் இருக்கின்ற உளவளத்துணை அறையிலிருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ளவே சுமத்திரயோ விரும்புகின்றது. “we are not counselors we are just listeners” என்ற குரலே அவர்களின் கண்களிலும் ஒலிக்கின்றது.

பிரதீப் குணரட்ணம்.
கே. பாநூ
யாழ்.தர்மினி பத்மநாதன்.