Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

அரசியலில் 25வீத ஒதுக்கீடு தேவையில்லை…

ஒரு மாகாண சபை உறுப்பினர் என்ற அடிப்படையில் அந்த சலுகைகள், வசதிகள், அந்தஸ்து திருப்திகரமாக இருக்கின்றது. ஆனால் …..

06.08.2018  |  
கம்பகா மாவட்டம்
நிரோஷா அத்துகோறாள மேல் மாகாணசபை உறுப்பினர்.

‘இலங்கையில் பெண்கள் சனத்தொகை 50 சதவீத்தினைக் கடந்திருக்கின்ற நிலையில் அரசியலில் பெண்களுக்கு தனியே ஒரு கோட்டா முறை எதற்கு?” என்ற கேட்கிறார் நிரோஷா அத்துகோறாள. மேல் மாகாணசபை உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் இவர் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு 39 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர்.
‘எனக்கு எந்தவிதமான அரசியல் குடும்ப பின்னணியும் இல்லாதநிலையில் நான் விரும்பித்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். மேல் மாகாண சபையில் உள்ள ஐந்து பெண் உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறேன்” என்று கூறும் இவர் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் பிரதி தலைவராகவும், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஐவரில் ஒருவராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களை புதிய தேர்தல் முறையில் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் அரசியற் கட்சிகள் மத்தியில் சர்ச்சைகள் உருவாகியுள்ள நிலையில், பெண்களின் 25 சதவீத அரசியல் பிரதிநிதித்துவத்தினை எவ்வாறு எதிர்வரும் தேர்தல்களில் தக்க வைத்து கொள்வது என்பது குறித்து தற்போது பெண்கள் அமைப்புகளும், இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமும் காத்திரமான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில் மாகாண சபை தேர்தல்களில் பெண்களுக்கான அரசியல் ஒதுக்கீடு குறித்தும் மாகாண சபை பெண் உறுப்பினர் என்ற வகையில் அவரது அரசியல் அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக கந்தானையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திற்கு சென்றபோது, பெண்களினால் நிறைந்திருந்த கட்சி அலுவலகத்தில் பரபரப்பாக பெண்கள் இயங்கிக் கொண்டிருந்தனர்.

த கட்டுமரன்: பெண்களுக்கென பிரத்தியேகமாக ஒரு அரசியல் 
ஒதுக்கீடு(கோட்டா) தேவையில்லை என்று ஏன் கூறுகின்றீர்கள்?

பதில்: கடந்த உள்ளுராட்சி சபை தேர்தல்களில் பெண்களுக்கு 25 வீத ஒதுக்கீட்டுமுறை வழங்கப்பட்டது. அந்த ஒதுக்கீட்டின் மூலம் களத்தில் நின்று பெண்களுக்காக வேலை செய்த எத்தனை பெண்கள், உள்ளுராட்சி மன்றங்களில் தெரிவானார்கள்? வெகு குறைவு என்று தான் சொல்ல வேண்டும். விகிதாசார முறைப் பட்டியல் மூலம் பெண்களைத் தெரிவு செய்யும் போது சரியான நெறிமுறைகள் கையாளப்படாமையினால் களத்தில் நின்று பெண்களுக்காக தோள்கொடுத்து உதவும் பெண்களில் பலர் புறக்கணிக்கப்பட்டனர். இந்த ஒதுக்கீட்டை பயன்படுத்தி அரசியல்வாதிகளுக்கு சார்பானவர்களும், கட்சித் தலைவர்களுக்கு ஆதரவானவர்களும், கட்சி அமைப்பாளர்களுக்கும் அவர்களின் உறவுகளுக்கும் ஆதரவானவர்கள் தான் பல உள்ளுராட்சி சபைகளில் தெரிவாகியுள்ளனர். இவர்களுக்கு பெண்கள் பிரச்சினைகள் என்றால் என்ன? அவர்கள் எதிர்கொள்ளும் பாரட்சங்கள் என்ன என்று தெரியுமா?
மேலும் பல குறைபாடுகளை சுட்டிக் காட்ட முடியும். கடந்த உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகளின் படி உள்ளுராட்சி சபைகள் இரண்டில், அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனைப்பற்று உள்ளுராட்சி சபை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா நகர சபை ஆகியவவை குறைந்தது ஒரு பெண் பிரதிநிதியைக் கூட தெரிவு செய்திருக்கவில்லை. 16 உள்ளுராட்சி சபைகளில் 25 சதவீத பெண்களுக்கான ஒதுக்கீட்டினைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. தொகுதிவாரியாகப் போட்டியிட்ட 5,092 அபேட்சகர்கள் மத்தியில் தெரிவானோர் 535 மட்டுமே. விகிதாசார முறையில் தெரிவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 1384. இப்படிப் பல குறைபாடுகள் இந்த கோட்டா முறையில் உள்ளன. இதனால் தான் அனைத்து கட்சிகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு அரசியலுக்கு வர வாய்ப்புகள் வழங்க வேண்டும். ஆண்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் போன்று பெண்களுக்கும் வழங்கப்பட வேண்;டும். கோட்டா இன்றி பெண்களுக்கு தேர்தலில் 50க்கு 50 என்ற ரீதியில் போட்டியிட பகிரங்கமாக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று கூறுகின்றேன்.

த கட்டுமரன்: 25வீத கோட்டா முறையை வழங்கியும், பெண்கள் 
கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் சுய விருப்பத்துடன் 
போட்டியிட முன்வரவில்லை. இந்நிலையில் 50க்கு 50இன் 
சாத்தியம் பற்றி?

பதில்: எதிர்பார்த்த இலக்கினை கோட்டா முறையினால் அடைய முடியவில்லை. இது அனைவரும் உணர்ந்த விடயம். அதில் பல குறைகள் உள்ளன. என்னைப் பொறுத்தவரையில் பெண்கள் அரசியலுக்கு வந்தால் மட்டும் போதாது. தீர்மானங்கள் எடுக்கும் நிலைகளுக்கு வர வேண்டும். அரசியல் என்பது அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தி. அரசியற் கட்சிகளில் முக்கியமான பொறுப்புகளை ஆண்களே வகிக்கின்றனர். தீர்மானிக்கும் சக்தியாக அவர்களே அனைத்து இடங்களிலும் உள்ளனர். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 59 அரசியற் கட்சிகளில் 602 பேர் நிர்வாகக் கட்டமைப்பில் உள்ளனர். இதில் 46 பேர் மட்டுமே பெண்கள். அதாவது 8 சதவீதம் மட்டுமே. இந்த நிலையில் கோட்டா முறையில் பெண்கள் அரசியலுக்கு வந்து சரியான முறையில் பணியாற்ற முடியுமா?2015ம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவம் செய்த 14 அரசியற் கட்சிகளில் 5 கட்சிகளில் முடிவுகளை மேற்கொள்ளும் கட்டமைப்பில் ஒரு பெண்ணின் பங்களிப்பு கூட இருந்திருக்கவில்லை. எனவே தான் கோட்டா முறை தேவையில்லை. பகிரங்கமாக 50க்கு 50 என்ற ரீதியில் பெண்களுக்கு அரசியலில் வாய்ப்பளியுங்கள். அப்பொழுது களத்தில் நின்று பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் அநீதிகளுக்காகவும் குரல்கொடுத்துவரும் அதற்காக பாடுபடும் பெண்கள் தயக்கம் இன்றி அரசியலுக்குள் நுழைவார்கள்.

த கட்டுமரன்: அரசியலில் பெண்களின் ஒதுக்கீட்டினைப் பெறவே 
பல தசாப்தங்களாக இலங்கைப் பெண்கள் போராட வேண்டியிருந்தது.
இதில் பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவத்தினை 50க்கு 50க்கு 
என்ற ரீதியில் பெறுவது கடுமையான சவால் என்று நீங்கள் 
கருதவில்லையா?
நிரோஷா அத்துகோறாள மேல் மாகாணசபை உறுப்பினர்.

பதில்: இலகுவான விடயல்ல. கடுமையான சவால் தான். ஆனால் சாத்தியம் உண்டு. நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் இந்த இலக்கினை அடைய முடியும். முடியாது என்று கூற முடியாது. ஆனால் அந்த இலக்கினை அடைந்து தான் ஆக வேண்டும். இல்லாவிடின் கோட்டா முறையின் குறைபாடுகளை எடுத்துக் கொண்டு நாம் பயனற்ற வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து செல்லப் போகின்றோமா? கடந்த பெப்ரவரி 10ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக அமையும் படியாக உறுதி செய்யப்படல் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட போதிலும் 22 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்தினையே உறுதி செய்ய முடிந்துள்ளது. இதனால் உள்ளுராட்சி மன்றங்களில் 2026 ஆக இருக்க வேண்டிய பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1919 ஆக உள்ளது. இதிலும் களத்தில் பெண்களின் பிரச்சினைகளை உணர்ந்து பணியாற்றக் கூடியவர்கள் எத்தனைப் பேர்? இவ்வாறு பல குறைகள் கோட்டா முறையில் உள்ளன. அதனால் இந்த குறைகளை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்றும் அதனூடாக எப்படி எதிர்கால தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க முடியும் என்பது குறித்து யோசனைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம். அரசாங்கத்தினால் அவை பரிசீலிக்கப்படுமாயின் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஆனால் இது ஒரு கடும் போராட்டம். பெண்களுக்கான கோட்டாவை அரைவாசியாகக் குறைப்பது தொடர்பான கலந்துரையாடல்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்வமும் கடும் போக்கினையும் வெளிப்படுத்துவதாக இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினரான அனோமா கமகே கவலைத் தெரிவித்திருந்தார். அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தைக் கட்டாயமாக்குதல் என்பது அரசியல் கட்சிகளுக்கு சவாலானதாகவும் தொந்தரவு தரும் விடயமாகவுமே பார்க்கப்படுகின்றது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே சுட்டிக் காட்டியிருந்தார். எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பெண்களுக்கான விசேட கோட்டா முறை ஒன்று தேவையில்லை என்றும், உள்ளுராட்சி மன்றங்களில் முதலில் அனுபவங்களை அவர்கள் பெறட்டும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறான தடைகளை தாண்டித்தான் நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது.

த கட்டுமரன்: மாகாண சபைகளினால் மக்களுக்கு சேவையாற்ற 
முடிகின்றதா? உங்கள் அனுபவம் என்ன?

பதில்: என்னைப் பொறுத்தவரை நான் வெளிப்படையாக ஒரு விடயத்தினை இங்கு கூற விரும்புகின்றேன. மேல் மாகாண சபை உறுப்பினரான நான் மாதத்திற்கு இரண்டு தடவைகள் சபை அமர்வுகளில் கலந்து கொள்கின்றேன். அதற்காக ஊதியம் கிடைக்கின்றது. வாகனங்களுக்கு எரிப்பொருள் சலுகைகளும் கிடைக்கின்றன. ஒரு மாகாண சபை உறுப்பினர் என்ற அடிப்படையில் அந்த சலுகைகள், வசதிகள், அந்தஸ்து திருப்திகரமாக இருக்கின்றது. ஆனால் அதற்கு அப்பால் மக்கள் சேவை என்று வரும் போது எமது பெண்களுக்கு இனம் மத மொழி வேறுபாடுகள் இன்றி சேவையாற்ற விரும்புகின்றேன். ஆனால் பெண்களுக்கு மட்டுமன்றி மக்களுக்காக செய்வதற்கு எத்தனையோ வேலைகள் இருக்கின்ற போதிலும் எதனையும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். ஆனாலும் என்னால் இயன்றளவு வேலைத்திட்டங்கள் சிலவற்றை பெண்களுக்காக மேற்கொண்டு வருகின்றேன். நான் “அபிமானி” என்ற பெண்கள் அமைப்பினை உருவாக்கி நடத்தி வருகின்றேன். அதில் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடு இன்றி கம்பகா மாவட்டத்தினைச் சேர்ந்த பெண்களுக்கு நான் சேவையாற்றி வருகின்றேன். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சங்கங்கள் இந்த அமைப்பின் கீழ் இயங்குகின்றன.

த கட்டுமரன்: நீங்கள் பெண் என்றவகையில் இன மத பேதமின்றி 
பணியாற்றிவருகின்றபோதும், உங்கள் கட்சியான ‘ஜாதிககெல 
உறுமய’ ஒரு இனவாதக் கட்சி என்ற கருத்தே தமிழ்மக்கள் 
மத்தியில் உண்டு. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ஆம், ஜாதிககெல உறுமய குறித்து இவ்வாறான அபிப்பிராயம் உள்ளது. ஆனால், இந்த நாட்டின் பிரஜைகள் என்று தமிழர்களுக்கும் சமஉரிமைகள் தேவை என்ற நிலைப்பாட்டையே நாம் கொண்டிருக்கிறோம்.ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும். புதிய அரசியலமைப்பு அந்த விடயத்தினை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். பிரிவினைவாதத்தினை நாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. நாம் தமிழ் முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாட்டுடன் எந்தவொரு பணிகளையும் முன்னெடுப்பதில்லை. இதனால் எம்மை இனவாதிகள் என்று கருதுவதில் நியாயம் இல்லை.

த கட்டுமரன்: மாகாண சபையில் நீங்கள் சமர்ப்பித்;த பெண்கள் 
சார்ந்த பிரேரணைகள் ஏதேனும் உண்டா? அதுபற்றிக் கூற முடியுமா?

பதில்: ஆம். குறிப்பாக அண்மையில் சமர்ப்பித்த ஒரு பிரேரணை பற்றி குறிப்பிட விரும்புகின்றேன். அதில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பெண் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட ஒரு பொலிஸ் நிலையம் ஒன்றினை ஸ்தாபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். பெண் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரும் இங்கு உள்ளடங்கியிருக்க வேண்டும். அந்த பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபருடன் நேரடி தொடர்பினைக் கொண்டவராக இருக்க வேண்டும். இந்தியாவில் இந்த முறை உள்ளது. இவ்வாறு அமையும் பட்சத்தில் பெண்கள் அச்சம் இன்றி தயக்கம் இன்றி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டை செய்ய முடியும். பிரச்சினைகளை எடுத்துக் கூறவும் முடியும். பொலிஸ் நிலையங்களில் பெண்கள் பாரபட்சத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக வீட்டு வன்முறைகள் பற்றிய முறைப்பாடுகளை பொலிசார் கவனத்தில் கொள்வதே இல்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் முதற்கட்ட வழிமுறையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண் பொலிஸ் நிலையத்தினை அமைக்க வேண்டும் என்று நான் இந்த பிரேரணையை சமர்ப்பித்திருந்தேன்.
ஆனால் துரதிருஷ்டவசமாக மாகாண சபையில் இருந்த எந்த பெண் உறுப்பினரும் இந்த பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. நான் தனிப்பட்ட ரீதியிலும் பெண் உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பிரேரணைக்கு ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்ற அன்று எவரும் சமூகம் அளித்திருக்கவும் இல்லை. ஆண் உறுப்பினர்கள் மட்டும் தான் பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டனர். பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் பெண்களுக்கு நன்மை தரும் எந்தவொரு பிரேரணையையும் பெண் உறுப்பினர்கள் இதுநாள் வரை முன்வைக்கவில்லை என்றே வேதனையுடன் கூறவேண்டியுள்ளது.
பியர் விலையை அதிகரிக்குமாறு ஒரு பிரேரணையை எதிர்வரும் சபை அமர்வுகளில் முன்வைக்கவுள்ளேன். பியர் விலை குறைவு காரணமாக ஆண்களில் அதிகமானோர் குடிபோதைக்கு அடிமையாகும் நிலையும், அதனால் பெண்கள் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகின்றது. மாகாண சபையில் பெண்கள் பிரச்சினை தொடர்பில் குரல் எழுப்பலாம். பெண் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்பும் போது அது பெரும் அழுத்தத்தினை ஏற்படுத்தும். ஏனெனில் பாராளுமன்றத்திற்கு அடுத்தபடியாக மாகாண சபையே அதிகாரம் பொருந்திய இடமாக உள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் நான் சமூகத்தில் வாழும் சகல மட்டத்து பெண்களுடன் பணியாற்றி வருகின்றேன். இதனால் அவர்களின் பிரச்சினைகளை நான் உணர்ந்திருக்கின்றேன். ஆனால் இவ்வாறு களத்தில் வேலை செய்யாதவர்கள், பெண்களின் பிரச்சினைகளை உணராதவர்கள் அவர்கள் பெண்களாயினும் சொகுசாக அரசியலுக்கு வந்து பதவிகளை அலங்கரிப்பதனால் என்ன பயன்?

எஸ்.பிரியதர்ஷினி.