Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இராணுவநிலைகளும் நடவடிக்கைகளும்.
மரபு வாழ்வில் சொருகப்பட்ட கறள் கத்தி.

போரின் பின்னர் இராணுவம் அரச மரங்களுக்கு கீழ் வடக்கு மக்களுக்கு ஒவ்வாத புத்தர் சிலைகளை ஓர் அடக்குமுறை வடிவங்களாக நிறுவுகின்றனர் , ஏ9 வீதி தொடக்கம் வடக்கிலும் கிழக்கிலும் ஏராளமான புத்த படிமங்கள் முட்களைப்போல் மக்களிடையே முளைத்துள்ளன.

25.08.2018  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

நேரடியான போரும் அழிப்பும் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு நிகரானது சனநாயக சூழல் என்று சொல்லிக்கொண்டு மறைமுகமாக நிகழ்த்தப்படும் அடையாள அழிப்பு. அல்லது புறக்கணிப்பு. தொடர்ச்சியாக இலங்கை தேசிய இனங்களில் ஒன்றான தமிழர் அடையாளங்கள் போரின் பின்னர் நேரடியாக அழிக்கப்படவோ புறக்கணிக்கப்படவோ செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மரபுரிமைகள் , வாழ்வியல் அடையாளங்கள் என்பன மெல்ல மெல்ல தமிழர் வாழ்வு நிலையில் இருந்து தூரத்துக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. எப்படி போர்க்காலத்தில் காவலரண்கள்களும் போர் எல்லைகளும் , மக்களை சொந்த நிலத்தில் அகதிகளாக்கி சொந்த நிலத்திற்கு தூரமாக வைத்தனனோ அவ்வாறே மரபடையாளங்களும் தற்பொழுது தூரமாக கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ அல்லது உருமாற்றம் அல்லது கருத்து நிலை மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்தகாலத்தின் இருப்பு நிலையின் வரலாற்றை வாசிப்பதற்குரிய தொன்மங்களும் பண்டங்களும் அழிக்கப்படுவது மட்டுமல்ல இன்று அவை இராணுவ வலயங்களுக்குள் முடக்கப்பட்டுள்ளன.

இராணுவ வலயங்களுக்குள் உள்ள புராதன இடங்களில் சில..

இதுபற்றி யாரும் கதைக்கவில்லையா? கதைக்கிறார்கள். வடக்கு கிழக்கில் பிரதான அரசியல் கோரிக்கைகளின் பொருட்டு உப்புக்குச்சப்பாக இராணுவ பிரசன்னத்தை மக்கள் வாழ்விடங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று முன்வைக்கின்றது. ஆனால் அதற்கான அறிவார்ந்த அசலான ஆதாரங்களையோ காரணங்களையோ பிரதான அரசியல் போராட்டகாரர்களால் முன் வைக்க முடியவில்லை , அல்லது அவர்களுக்கோ ஊடகங்களுக்கோ, புத்திஜீவிகளுக்கோ அக்கறையில்லை. மரபடையாளங்கள் இராணுவநிலைக்குள் உட்பட்டு இருக்கின்றன என்பது தொடர்பான அக்கறையும் விழிப்பு நிலையும் சொந்த நிலத்தின் மக்களுக்கு இன்னும் அருட்டப்படவேயில்லை.


இராணுவ மனநிலை அல்லது ஆயுத மனநிலை என்பது மக்களின் வாழ்வியலை பற்றியோ அல்லது மரபடையாளங்களைப்பற்றியோ இயல்பாகவே அலட்டிக்கொள்ளாதது . அது அதிகாரத்தை நிலை நிறுத்தும் பண்டங்களாகவே அவற்றைப்பார்க்கும்.

பொதுவாக காலம்காலமாகவே இராணுவத்திற்கோ அல்லது ஆயுத வன்முறையில் இடும் குழுவிற்கோ ஒரு மனநிலை இருக்கும் , அது என்னவென்றால் அவை கடல் , காடு , நிலம் எதிலும் பெரும் சுவர்களும் , பெரும் கட்டடங்களும் , கோபுரங்களும் கொண்ட அரண்களையும் கோட்டை கொத்தளங்களையும் அடைவது. அங்கே தமது இருப்பினை ஏற்படுத்திக்கொண்டு அதிகார புலமாக அதனை மாற்றுவது. மரபடையாளங்கள் , தொல்லியல் பண்டங்கள் , இயற்கை மரபுரிமைகள் மீது அதிகார மனநிலைக்கும் இருக்கும் பேராசை என்பதை பற்றி வரலாற்றில் ஏராளம் உதாரணங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டை கைப்பற்றிய மஹமதியர்கள் நேராக நுழைந்த இடம் தமிழ்நாட்டின் பெருங்கோயில்கள்தான், இலங்கையை அக்கிரமித்த போர்த்துக்கேயர்கள் கோட்டை கட்டியது கோயில்களையும் , மரபுச்சின்னங்களையும் இடித்துதான், ஹிட்லரின் படைகள் ஐரோப்ப முழுவதும் உள்ள மியூசியங்களைச்சூறையாடின, செங்கிஸ்கான் போன்ற மன்னர்கள் பலநாடுகளின் தொல்லியல் பொக்கிசங்களை அள்ளிவருவதை பொழுது போக்காவே செய்தனர். இது போல ஏராளம் ஆதாரங்கள் உள்ளன. இராணுவ மனநிலை அல்லது ஆயுத மனநிலை என்பது மக்களின் வாழ்வியலை பற்றியோ அல்லது மரபடையாளங்களைப்பற்றியோ இயல்பாகவே அலட்டிக்கொள்ளாதது . அது அதிகாரத்தை நிலை நிறுத்தும் பண்டங்களாகவே அவற்றைப்பார்க்கும். அதுவும் ஒரு பேரின வாத அரசினால் வழிநடத்தப்படும் இராணுவம் என்பது சொல்லவே வேண்டாம்.
வடக்கில் இருக்கும் இராணுவ பிரசன்னம் என்பது தொடர்ச்சியாக மரபடையாளங்களையும் தொல்லியல் இருப்பையும் அழித்துக்கொண்டும் அவற்றின் இயக்கத்தை தடுத்தும் வருகின்றன.
அவற்றில் பிரதானமாக
மரபார்ந்த நிலங்கள் மீதான இராணுவப்பிரசன்னமும் இருப்பும்.
இராணுவம் உருவாக்கும், புதிய நிலத்துக்கு ஒவ்வாத அடையாளங்கள்.
இராணுவ நிலைகளாக உள்ள தொல்லியல் மரபு இடங்கள்.
இராணுவ நிலைகளுக்குள் அல்லது வலையத்துக்குள் இருக்கும் சமய அடையாளங்கள் , மரபுகள்.
இயற்கை மரபுவாழிடங்களில் இராணுவ பிரசன்னம்.
யழ்ப்பாணத்தில் மரபுரிமை சின்னங்கள் , வலையங்கள் மீது இராணுவ பிரசன்னம் பரவலாகவுள்ளது. யாழ்ப்பாணம் கோட்டையில் இராணுவ பிரசன்னம் இருப்பதை குறித்து அண்மையில் பரவலான விவாதங்கள் பல்வேறு தரப்பிடையே நிகழ்ந்தது. வடக்கில் ஊர்காவற்றுறை ஹமைன்ஹீல் கடற்கோட்டை தற்பொழுது வரை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கிருக்கும் கல்வெட்டுகளையோ , தொல்லியல் சான்றுகளையோ அடைவதற்கும் அகழ்வாய்வு , மேலாய்வு செய்வதற்கும் இயலாமல் தொல்லியல் , வரலாற்றாய்வாளர்கள் கைவிரிக்கின்றனர். அதைப்போல பூனகரி ஒல்லாந்தர் கோட்டையிலும் இதே நிலைமை. காங்கேசன் துறையை அண்டிய இராணுவம் இன்னும் விடுவிக்காமலிருக்கும் நிலங்களில் உள்ள கோயில்கள் உட்பட்ட மரபுச்சின்னங்கள் இன்னும் அழிவடைந்த வண்ணமே இருக்கின்றன. பருத்துறை வெளிச்சவீடு மீள் புனரமைப்பு இன்றி இராணுவ முகாமினுள் இருக்கின்றது. இவ்வாறு தேசிய ,பிரதேச மரபுரிமை இடங்களாகவுள்ள பல இடங்கள் பராமரிப்போ மக்கள் புழக்கமோ இன்றிக் காணப்படுகின்றன.

மரபார்ந்த நிலத்தில் இராணுவ நிலைகளின் இருப்பு பற்றிய பிரச்சினை நீண்டகாலமாகவே மக்களுடன் முரண்பட்டபடியுள்ளன, சமீபத்தில் புலக்குடியிருப்பு , புதுக்குடியிருப்பு , பரவிப்பாஞ்சான் போன்ற இடங்களில் உள்ள காணிகளை விடுவிக்க மக்கள் போராடி கணிசமான காணிகளை பெற்றுக்கொண்டு வாழ்வு நிலைக்குத்திரும்பதொடங்கியுள்ளனர். எனினும் இன்னும் விடுவிக்கப்பட்டாத ஏராளமான காணிகள் காணப்படுகின்றன. மக்கள் தொடர்ச்சியாக போராடவேண்டியிருக்கின்றது.

இவைதவிர போரின் பின்னர் இராணுவம் அரச மரங்களுக்கு கீழ் வடக்கு மக்களுக்கு ஒவ்வாத புத்தர் சிலைகளை ஓர் அடக்குமுறை வடிவங்களாக நிறுவுகின்றனர் , ஏ9 வீதி தொடக்கம் வடக்கிலும் கிழக்கிலும் ஏராளமான புத்த படிமங்கள் முட்களைப்போல் மக்களிடையே முளைத்துள்ளன. புதிய ஒவ்வாத ஆக்கிரமிப்பு அடையாளமாக புத்தர் மாறிப்போயுள்ளார் , நயினாதீவை நாகதீப வாக மாற்றி பெரும் புத்தர் சிலையொன்றை கடலில் நிறுவும் வேலைகளும் நடக்கின்றன. இதற்கு பெரும் பக்க பலமாக இராணுவமே இருக்கின்றது. தேசத்தின் எல்லா இனங்களுக்கும் பொதுவானது என்று சொல்லப்படும் இராணுவம் குறித்த மத , இன அடையாளங்களை இன்னோர் நிலத்தில் புகுத்துவது மிகப்பெரும் வன்முறையாகும். இவற்றோடு புதிய விகாரைகளும் கொக்குதொடுவாய் போன்ற இடங்களில் முளைக்கின்றதோடு நிலங்களில் அக்கிரமிப்பு குடியேற்றங்கள் அமைக்கப்படுதலும் இராணுவத்தின் பெரும் துணையோடு நிகழ்த்தப்பட்ம் மரபு இருப்பிற்கு எதிரான வன்முறையே ஆகும்.


பல்கலைககழகத்தில் இருக்கும் வரலாற்று , தொல்லியல் துறைகள் கூட இராணுவமில்லாத பிரச்சினையில்லா இடத்தை கிண்டி வரலாற்றை எழுதினால் போதும் என்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.

இவைதவிர வலி மேற்கு பிரதேசம் போன்ற இராணுவ நிலைகளாக உள்ள பிரதேசங்களில் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதோடு சமயம் சார்ந்த கோயில்கள் , மடங்கள் என்பனவும் அழிக்கப்பட்டுள்ளன. அல்லது இராணுவ வலயத்துக்குள் இருந்து அழிவை நோக்கி நகர்ந்தவண்ணம் உள்ளன. குறித்த பிரதேசத்தின் வரலாற்றை வாசிப்பதற்கான மூலங்கள் தொலைந்து போய்கொண்டேயிருக்கின்றன.

இயற்கை மரபுரிமைகளான காடுகள் , மலைகள் , கடற்கரைகள் ,குளங்கள் என்பவற்றில் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் இராணுவங்கள் நிலைகொண்டு உள்ளன. இதனால் அவற்றின் மீதான வாழ்வியல் இருப்பு அழிக்கப்படுவதுடன் , சுற்றுலாதலமாக அவை தொடர்ச்சியாக பேணவும் , இயற்கை மரபுரிமைகளாகப்பேணவும் முடியாதுள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டகுளங்கள் , காடுகளில் இரானுவம் நிலைகொண்டுள்ளது , அதைப்போல் மட்டக்களப்பில் உள்ள மலைகளில் இராணுவ நிலைகள் தொடர்ச்சியாக உள்ளன.

எந்தக்காலத்திலும் எந்த இன ,மக்களுக்கும் மத்தியில் இராணுவமோ ஆயுதக்குழுவோ இருத்தல் என்பது அவர்களின் வாழ்வை இயல்பிலேயே சிதைத்து விடும். அதுவும் வடக்கு கிழக்கில் போர் முடிந்து சிவில் நிர்வாகம் அமுலுக்கு வந்த பின்னரும் இராணுவம் நிலை கொண்டிருப்பது பெரும் வன்முறையாகவே சமூகத்தில் தாக்கத்தினை தருகின்றது. அதுவும் மரபுகள் மீதான இராணுவத்தில் நிலைப்பாடு என்பது நிலத்தின் சொந்த மக்களின் இருப்பை குழப்பி விடுகின்றது.

இதற்கு எதிராக குரல் கொடுக்கவும் அவழுத்தம் கொடுக்கவும் வேண்டிய அரசியல் வாதிகளும் , புத்திஜீவிகளும் தொடர்ந்தும் சுயலாப அரசியல் தளத்தில் நின்று பிரதான அரசியல் கோசம் என்ற ஒன்றை கத்திக்கொண்டிருக்கின்றார்கள் , இவ்வாறான உப பிரச்சினைகள் ஏற்படுத்தும் பார தூரமே பிரதான அரசியல் கோரிக்கையை சிதைப்பதை அவர்கள் உணரவில்லை .
இவைதவிர பல்கலைக்கழக மட்டத்திலும் ,சொந்த நிலத்தின் அடையாளங்கள் , மரபுரிமைகள் பற்றிய , வாழ்நிலங்கள் பற்றிய எந்த கரிசனையோ முயற்சியோ அதிகாரமும் குரலும் இருந்தும் தமிழ் பிரதேச பல்கலைக்கழகங்களால் எழுப்பப்படவில்லை. ஒரு சிலரின் குரல் அங்கு எடுபடுவதேயில்லை.
பல்கலைககழகத்தில் இருக்கும் வரலாற்று , தொல்லியல் துறைகள் கூட இராணுவமில்லாத பிரச்சினையில்லா இடத்தை கிண்டி வரலாற்றை எழுதினால் போதும் என்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளன போலும்.

இந்த விடயத்தில் ஊடகங்களும் தம்பங்கை ஆற்றத் தவறியுள்ளன. மக்களை அறிவூட்டவும் விழிப்புணர்வூட்டவும் வேண்டிய ஊடகங்களும்சரி இலக்கிய வாதிகளும் சரி சினிமா விமர்சங்களையும் காதல் கவிதைகளையும் எழுதுவதோடு சுருங்கிப்போய் விடுகின்றனர் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

இவ்வாறு இருக்க தொடர்ச்சியாக மக்களின் இருப்பு கேள்விகுள்ளாக்கப்பட்டபடியே இருக்கின்றது ஆயினும் மக்களிடம் “சண்டை முடிஞ்சா பிறகு இஞ்ச ஆமி என்னத்துக்கு ?” என்ற அடிப்படையான கேள்வியும் விசனமும் இருந்தாலும் , அவர்களின் குரலை ஒன்று திரட்டக்கூடிய அரசியலோ , ஊடகமோ , செயற்பாடோ இங்கே குதிரைக்கொம்பாகவே இருக்கின்றது. தொடர்ச்சியாக மக்களின் மரபார்ந்த இருப்பின் மீதும் வாழ்வின் மீதும் இத்தகைய அழிக்கும் கறள்கத்திகள் துருத்திக்கொண்டே இருக்கின்றன.

-பிரதீப் குணரட்ணம்