Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

காதல் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது எனின்....
காதல், பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது தானே !?

இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 என்பது பாலியல் உறவுமுறைகளை வரையறுக்கும் சட்ட பிரிவு ஆகும். இது பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு. அதை (377ஐ) நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வருட நடுப்பகுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இது குற்றமற்றது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் இலங்கை மக்கள், அதிலும் கொஞ்சம் படித்தவர்கள்ளின் மனநிலை பற்றி கட்டுமரன் அறிய முனைந்தது. மாற்றுபாலினத்தாரையும்(3rd Gender)  தன்பாலீர்ப்பினரையும்(samesex) இணைத்து பால்புதுமையினர் […]

17.09.2018  |  
திருகோணமலை மாவட்டம்

இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 என்பது பாலியல் உறவுமுறைகளை வரையறுக்கும் சட்ட பிரிவு ஆகும். இது பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு. அதை (377ஐ) நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வருட நடுப்பகுதியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் இது குற்றமற்றது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் இலங்கை மக்கள், அதிலும் கொஞ்சம் படித்தவர்கள்ளின் மனநிலை பற்றி கட்டுமரன் அறிய முனைந்தது.

மாற்றுபாலினத்தாரையும்(3rd Gender)  தன்பாலீர்ப்பினரையும்(samesex) இணைத்து பால்புதுமையினர் என வழங்கலாம்.(LGBT). இவர்கள் மீது இந்தச் சமூகம் பார்க்கும் பார்வை மதிப்பிற்குரியதுதானா? ஒரு உயர்கல்வி நிறுவனத்துக்குள் பால்புதுமையினர் பற்றிய பார்வை எப்படியிருக்கிறது? கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் சில இளம் விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பார்வையில் பால்புதுமையினர்…….

“தன்பாலீர்ப்பானது இயற்கைக்கு மாறானது. அது எங்களுடைய சமயத்துக்கும் கலாசாரத்திற்கும் எதிரானது. மனுதர்ம சாஸ்திரம் தன்பாலீர்ப்பை எதிர்க்கிறது. இப்ப தன்பாலீர்ப்பு என்பது ஒரு ரென்ட் ஆக போய்விட்டது. இதனை காமம் சார்ந்ததாகவே பார்க்கத் தோன்றுகின்றது. இது கலாசார சீரழிவு. தன்பாலீர்ப்பாளர்கள் நினைத்தால் இதனை கட்டுப்படுத்தலாம்” என்கிறார் ஒரு ஆண் விரிவுரையாளர்
அவர் மேலும் கூறுகையில் “மாற்றுப்பாலினரை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஹோர்மோன்களின் மாற்றங்களினால் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ மாற்றுப்பலினராக இருக்கிறார்கள். ஊடகங்களில் மாற்றுப்பாலினரை கேலிப்பொருளாகப்பார்ப்பதை முதலில் நிப்பாட்டவேண்டும்.” என்று கடுமையாகக் கூறுகிறார்.


சுதந்திரமாக வாழ்வதற்கும் பொறுப்புக்களைப் புறந்தள்ளுவதற்கும் பலர் தன்பாலீர்ப்பாளர்களாக இருக்கிறார்கள்.

“இது எமது கலாசாரத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் பொருத்தமற்ற விடயம். பௌத்த ஜாதகக் கதைகளில் தன்பாலீர்ப்புத் தொடர்பாகக் கூறப்பட்டிருக்கிறது. பௌத்தம் இதனை எதிர்க்கிறது” என்கிறார் ஒரு ஆண் சிங்கள விரிவுரையாளர்.
“பைபிள் இதனை எதிர்க்கிறது. கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்ததன் நோக்கம் எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதே. தன்பாலீர்பினரால உருவாக்கப்படும் திருமணங்களால் எதிர்கால சந்ததியை உருவாக்கமுடியாது. தன்பாலீர்ப்பு இயற்கைக்கு மாறானது. இது உணர்வின் அடிப்படையானது என்பதால் மாற்றப்படக்கூடியது. சுதந்திரமாக வாழ்வதற்கும் பொறுப்புக்களைப் புறந்தள்ளுவதற்கும் பலர் தன்பாலீர்ப்பாளர்களாக இருக்கிறார்கள். இதனைச் சட்டரீதியாக்கும் போது மற்றவர்களும் தன்பாலீர்ப்பினராவதற்கான வாய்ப்பை அது ஏற்படுத்துகிறது. பூமியில் டைனோசர் போன்ற பல இனங்கள் அழிந்து போனதைப்போல மனித இனமும் அழிந்து போவதற்கு தன்பாலீர்பு காரணமாகிவிடும் என்கிறார்” உதவி விரவுரையாளரான செபராஜ். அதேவேளை “நான் மாற்றுபாலினரை ஏற்றுக்கொள்கிறேன். மாற்றுப்பாலினர் சமூகத்தில் தனிமைப்படுத்தப்படக்கூடாது அவர்களை மதிப்பதுடன் அவர்களுக்கு சம உரிமை வழங்கப்படவேண்டும்” எனவும் குறிப்பிடுகிறார்.

“தன்பாலீர்ப்பு என்பது என்னைப் பொறுத்தவரை சமுதாயத்தில் ஒழிக்கப்படவேண்டிய பிரச்சினை. இதனால் பாலியல் நோய்கள் பரவ வாய்பபுகள் உண்டு. இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளவர்கள் குர்ஆன் மற்றும் அல்கதீசைப் பின்பற்றுகின்றவர்கள். இஸ்லாத்தில் தன்பாலீர்ப்பு தவிர்க்கப்படவேண்டும் எனவும் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதை நாங்கள் பாலியல் தொழிலாகத்தான் பார்கிறோம் என்கிறார் அபுஅமர். அதேநேரம் மாற்றுப்பாலினரை நம்மிலிருந்து வேறுபாடகப் நான் பார்க்கவில்லை” எனவும் குறிப்பிடுகிறார்.
“ ‘பல்கிப்பெருகி பூமியை நிரப்புங்கள்’ என்று பைபிளில் கூறப்படுகிறது. கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகத் தான் படைத்தார். தன்பாலீர்ப்பினால் உருவாக்கப்படும் திருமணங்கள் எதிர்கால சந்ததியை உருவாக்காது. எனவே இவ் விடயம் இலங்கையில் சட்டபூர்வமாக்கப்படக்கூடாது. இளம்பராயத்தில் அவர்கள் வளர்க்கப்பட்ட சூழலும் அனுபவங்களுமே இவர்களது பாலினத்தன்மைக்கு காரணம். எனவே அதை மாற்றமுடியம்” என பெண் விரிவுரையாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
இங்கே இந்த விடயம் தொடர்பாக தங்கள் சொந்தப் பெயரில் கதைப்பதற்கே இவர்கள் தாயரில்லை. ஊகிக்கப்பட்ட பல சித்தாந்தங்களையே பாலினப்புதுமையினர் பற்றி இந்த சமூகம் கொண்டிருக்கின்றது. உயர் கல்வி கற்றவர்களிடமும் அவ்வாறுதான் வேரூன்றியுள்ளது. பெரும்பாலும் மக்களின் பாலியல் நோக்குநிலையை அவர்கள் சார்ந்த சமூகம், கலாசாரம் மற்றும் மதம் சார்ந்து தீர்மானிப்பதை அவதானிக்கமுடிகிறது.

இன்னும் சிலர் இவற்றை இப்படிப்பார்க்கிறார்கள்.

பொதுவாக ஹோர்மோன்களின் மாற்றங்கள் தான் பால்புதுமையினருக்கு காரணம். தன்பாலீர்ப்பு என்பது சாதாரணமான விடயம். இதுவும் இயற்கையான, அவர்களால் மாற்றமுடியாத விடயம். காதலிக்கும் உரிமை அனைவருக்கும் சமமானது. அது மட்டும் அல்லாமல் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் நாங்கள் எமது கலாசாரத்தை பின்பற்றுபவர்களாகவும், எமது கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருக்கின்றோம். எனவே கலாசாரத்தைப் பற்றியும் சிந்திக்கவேண்டும்;” என்கிறார் உதவி விரிவுரையாளரான திலினி ராஜகுரு. அதேநேரம் “மாற்றுப்பாலினருடைய பிரச்சினைகளை புரிந்துகொள்ள வேண்டும். இந்த சமூகத்தின் மோசமான தூண்டுதல்களினால் மாற்றுப்பாலினர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதுடன் தற்கொலைக்கு முயல்கிறார்கள். மாற்றுப்பாலினரை அனைவரும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
“ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள உறவை நாம் ஏற்றுக்கொள்ளும் போது தன்பாலீர்பினரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் மாற்றுப்பாலினருடைய பிரச்சினைகளையும் சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். பால்புதுமையினருக்கு சமஉரிமை வழங்கப்படுவதுடன் அவர்களுக்கான உரிமைகள் சட்டபூர்வமாக்கப்படவேண்டும்” என்கிறார் விரிவுரையாளரான ரா.ஆர்த்திகா.
“காதல் இனம், மதம், மொழி, கலாசாரம் என்பவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டது எனின் பால் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது தானே. தனிநபருடைய உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். யாரும் யாருக்கும் இரக்கப்படத்தேவையில்லை. அவர்களுடைய தனிமனித சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்தால் சரி” என்கிறார் பல்கலைகழக மாணவியான அசந்தி;.
பெரும்பாலானவர்களுக்கு மாற்றுப்பாலினர் என்றால் யார்? தன்பாலீர்பினர் என்றால் யார்? என்ற புரிதல் இல்லை.; “ அவனா நீ! அவளா நீ! என்ற கேலிகள் ” மற்றும் இது போன்றதான எண்ணப் போக்கை சமூகப்பொறுப்பற்ற ஊடகங்கள் வழங்கியிருக்கின்றன. பெரும்பாலான ஊடகங்களில் எவ்வாறு பால்புதுமையினர் கேலிக்குரியவர்களாக இழிவுபடுத்திச் சித்திரிக்கப்படுகிறார்களோ அந்த விம்பத்தை ஊடகக் கற்பிதங்களை உண்மை என நம்புகின்றவர்களாக பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.
தன்பாலீர்பினரை எதிர்பவர்களில் பெரும்பாலானவர்கள் மாற்றுப்பாலிரை (மூன்றாம் பாலினர்) தாம் ஏற்றுக்கொள்வாதாகக் குறிப்பிடுகின்றனர். மாற்றுப்பாலினருக்கு சம உரிமை வழங்கப்படவேண்டும் எனவும் அவர்களை வேறுபாடாப் பார்க்கவில்லை எனவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர். பல்கலைக்கழகத்தில் சில பாடத்திட்டங்களுக்குள் பால்புதுமையினர் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
உலகில் கனடா, சுவிடன், டென்மார்க், நெதர்லாந்து போன்ற பல நாடுகள் தன்பாலீர்ப்பினைச் சட்டபூர்வமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அண்ணளவாக 7 வீதமான பாலினப்புதுமையினர் இருப்பதாக ஈகுவல் கிரவுண்ட் தெரிவிக்கின்றது. இலங்கையில் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான ஆவணங்களில் ஆண், பெண் என்பதற்கு மேலான எந்த பாலினருக்குமான இடம் வழங்கப்படுவதில்லை.