Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சிற்றம்பலம் படமாளிகை
அனுராதபுரத்தில் எரிந்த எச்சங்கள், இன்றும் !

பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் இருந்த சிற்றம்பலம் படமாளிகைக்குள் புகுந்த வன்முறைக் கும்பலொன்று அதற்குத் தீ வைத்தது. ஊழியர்கள் அனைவரும் தங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக ஓடித்தப்பினர்.

20.09.2018  |  
அனுராதபுரம் மாவட்டம்
siththampalam

மணி அடித்தது. வெளிச்சங்ககள் எரியத் தொடங்கின. சுமனாவும் அவளுடைய தோழிகளும் படமாளிகையைவிட்டு வெளியேறி உண்மையான உலகினுள் மீண்டும் பிரவேசித்தனர். ஆனால் அவர்கள் வெளியில் வந்தபோது வெள்ளித் திரையிலிருந்து இறங்கி வந்தவர் போன்றொரு அழகான இளைஞனைக் கண்டார்கள். பதினைந்து வரையான வேலையாட்களின் மேலதிகாரியும் படமாளிகை உரிமையாளரின் மகனுமாகிய மாநிறமும் வனப்பான உடலமைப்பையுங் கொண்ட அந்த இளைஞன் இறுமாப்பு ஏதுமின்றிப் புன்னகை புரிந்தான். பதிலுக்கு அவ்விளம் பெண்களும் புன்னகை புரிந்தனர்.

“படம் நன்றாயிருந்ததா? நீங்கள் கூட்டுறவு நிலையத்;தில் வேலை பார்ப்பவர்கள் அல்லவா?” என அந்த இளைஞன் கேட்டான்
“உங்களுக்கு எப்படித் தெரியும்?” ஒரு பெண் கேட்டாள்.
“இந்த வழியால் நீங்கள் ஒவ்வொரு நாளும் போவதை நாங்கள் பார்ப்போம்” எனப் பதில் வந்தது. இப் பேச்சுப் பரிவர்த்தனைக்காக மற்றொரு பெண் அவளைக் கேலிசெய்தாள்.
“அடுத்த வாரம் புதுப் படமொன்று வருகிறது. நீங்கள் வரவிரும்பினால் நேரத்துடன் சொல்லுங்கள். நான் ஆசனங்கள் ஒதுக்கி வைக்கிறேன்”.

இது நடந்தது 1978ல். இது சிற்றம்பலம் படமாளிகையில் பிரவேசச் சீட்டு விற்குமிடத்தில் இருவருக்கிடையில்; நடந்த பேச்சன்றி அங்கு ஓடிக்கொண்டிருந்த படத்தின் வசனமல்ல.

ஜெயராம்

முந்திய நாட்களில் இருந்த படமாளிகையில் சிற்றம்பலம் மிகவும் பிரபலமான ஒன்றாய் இருந்தது. இப் படமாளிகைக்குள் மூன்று வேறு வேறு சமூகங்களின் இளசுகளின் சிரிப்பொலி நிறைந்திருப்பதுடன் சாதாரண பொது மக்கள்கூட அரச அதிகாரிகளுடன் கலந்து உறவாடினர். இப் படமாளிகையின் முகாமையாளராயிருந்தவர் மிகவும் பிரபலமான செல்வராஜா ஜெயராம் என்பவராகும். சுமணா சுரஜீவா என்பவள் அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பெண்ணாவாள்.

படமாளிகைக்குரிய முழு நிறைவான இடம்.

வடமத்திய மாகாணத்தில் நிரந்தரமான கட்டடம் ஒன்றில் தேவையான சகல தளபாடங்களுடன் கூடிய ஒன்றாகச் சிற்றம்பலம் படமாளிகை இருந்தது. சிற்றம்பலத்தின் வரலாறு 1830ம் (1930) ஆண்டில் ஆரம்பமாகிறது. அப்பொழுது அது அனுராதபுரம் பழைய நகரத்தில் இருந்தது. அனுராதபுரம் புதிய நகரத் திட்டம் 1958ல் அறிமுகமான பொழுது அரசாங்கம் பழைய நகரத்தில் இருந்த வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்தி அவைகளுக்குப் புதிய நகரில் காணி கொடுத்தது.

படமாளிகையின் உரிமையாளர் எஸ்.என்.சிற்றம்பலத்திற்குப் புதிய நகரமும் பழைய நகரமும் சந்திக்கும் இடத்தில் ஒரு அமைதியான சூழலில் காணி கிடைத்தது.
சிற்றம்பலத்தின் தமையனார் தொழில் ரீதியாக ஒரு பொறியியலாளராய் இருந்ததுடன் அனுராதபுர மாநகர சபை நகரபிதாவாகவும் இருந்தார். இன்றைக்கு இருப்பதுபோல காணிகளுக்கு உரிமைகோரிச் சண்டையிடும் வழக்கம் அப்போது இருக்கவில்லை. அனுராதபுரம் மரபுரிபை பாதுகாப்புச் சபைத் தலைவராயிருந்த நிசங்கா விஜெரட்ண நேரிலே சென்று ஒரு ஏக்கர் 53 பேர்ச் பரப்பளவு கொண்ட காணியைக் காண்பித்தார். அத்துடன் சிற்றம்பலம் தனது வர்த்தகத்தை மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் சிலோன் தியேட்டர்ஸ் கம்பனியிடமிருந்து பெற்ற படங்கள் அங்கே காண்பிக்கப்பட்டன. பின்னர் படக் கூட்டுத்தாபனத்தின் படங்கள் திரையிடப்பட்டன.

“அது ஒரு அழகான காலம். மக்கள் ஒற்றுமையாய் இருந்தனர். இந்த நகரத்தில் தமிழருக்கும் சிங்களவர் களுக்கும் வேற்றுமை இருக்கவில்லை.” நினைவு கூருகிறார் சிற்றம்பலத்தின் வளர்ப்பு மகன் ஜெயராம்.
“திருமணம் சம்பந்தமாக எங்கள் குடும்பங்களுக்கிடையில் பிரச்சனைகள் அதிகமாக எதுவும் இருக்கவில்லை. ஆனால் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் எங்களுக்குக் குழப்பங்களைக் கொடுத்தன.” என்று நிiவு கூரும் ஜெயராம், சிற்றம்பலம் சிறந்த குணாதிசயங்களைக் கொண்ட ஒரு மனிதரெனவும் அவருக்குப் பெரும் எண்ணிக்கையான சிங்கள நண்பர்கள் இருந்தனரென்பதையும் கோவில்களுக்கு உதவியளித்தவரெனவும் நினைவுபடுத்தினார்.
தனது வளர்ப்புத் தந்தை படக் கூட்டுத்தாபனத்திடமிருந்து படங்களை இனாமாகப் பெற்று அவற்றைத் தனது சொந்தச் செலவில் தனது படமாளிகையில் காண்பித்துக் கிடைத்த பணத்தைக் கோவில்களுக்கு வழங்கிப் புத்த குருமாருக்கு உதவி செய்தாரென்பதையும் ஜெயராம் ஞாபகப் படுத்தினார்.

நிலைமைகள் மாற்றமடைந்தபோது

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு 1983ல் மோசமடைந்து குழப்பங்கள் ஏற்பட்ட போது அனுராதபுரத்திலிருந்த தமிழ் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர். பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் இருந்த சிற்றம்பலம் படமாளிகைக்குள் புகுந்த வன்முறைக் கும்பலொன்று அதற்குத் தீ வைத்தது. ஊழியர்கள் அனைவரும் தங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக ஓடித்தப்பினர். வெள்ளித் திரை, கதிரை வரிசைககள், கூரை மற்றும் அழகான உட்புற அமைப்பு முழுவதிலும் பற்றி எரிந்த தீச்சுவாலைகளை அணைப்பதற்கு வேண்டிய வசதிகள் அப்பொழுது இருக்கவில்லை.

சிற்றம்பலத்தின் மறைவிற்குப் பின்னர் படமாளிகை ஜெயராமிடம் பொறுப்பளிக்கப்பட்டது. இப்பொழுது 76 வயதாகியிருக்கும் ஜெயராம் படமாளிகைக்கு அருகில் ஒரு வீட்டில் வசிப்பதுடன் விவசாயம் செய்வதன் மூலமே தனது வாழ்வாதாரத்தைப் பெறுகிறார்.

அங்கு நடந்த மனிதாபிமானனற்ற செயலின் அடையாளச் சின்னமாக எரிந்துபோன சிற்றம்பலம் படமாளிகையின் எச்சங்களான சுவர்கள் 33 வருடங்களாக அந்த நகரத்தில் நிற்கின்றன. அவைகள்மீது வளர்ந்திருக்கும் ஒட்டுண்ணி மரங்கள் தாவரங்களால் அவைகள் உடைந்து விழவில்லை. வெள்ளித் திரையரங்கு இருந்த இடத்தில் பெரும் மரங்கள் வளர்ந்துள்ளன. மாடி இருக்கைகள் ஒரு சோகக் கதைபோலக் காட்சி தருகின்றன. விசேட இருக்கைகள் (Box seats) ) பகுதியில் வெளவால்கள் குடிகொண்டுள்ளன. மண்டபத்தின் உட்பகுதியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. அந்தக் காணியின் பாகமொன்றை கைப்பற்றிக்கொண்ட சிலர் தங்களுக்கான உரிமையை உறுதிப்படுத்த முயற்சி செய்கின்றனர். அந்தக் கட்டடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோதமான கட்டடங்களின் கவலையளிக்கும் காட்சியைக் காணக்கூடியதாகவுள்ளது.

ஜெயராமின் மனைவி மதசார்பான புத்தகங்களை வாசிப்பதிலே தனது பொழுதைக் கழிக்கிறார். தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மாத்திரமே நகர் புறத்திற்குச் செல்கிறார்.

“நாங்கள் பழையனவற்றைத் திரும்பிப் பார்ப்பதற்கு விரும்புவதில்லை. கடந்த காலத்தை நினைக்கும் பொழுது துன்பமாகத்தான் இருக்கிறது” என யெஜராம் கூறினார். வருடங்கள் 33 கடந்த போதும் அந்த இடத்தைக் திரும்பப் பெறுவதற்கு தனக்கு உதவி எதுவும் கிடைக்கவிலலையென வேதனைப்படுகிறார்.

அந்த சினிமா இயங்கிக் கொண்டிருந்தபொழுது அங்கு பணிபுரிந்த று.யு.ஜெயசேனா என்பவர் அந்தக் கட்டடத்தின் எஞ்சியுள்ள பகுதியைக் கவனித்து வருகிறார். தனது சிறு பராயத்தில் அந்தப் படமாளிகையில் சேர்ந்து கொண்ட அவருக்கு இப்பொழுது 65 வயது. குருணாகலில் உள்ள தனது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் செல்லாதவரும் பிரமச்சாரியுமான அவர் அந்த இடத்தில் படங்கள் காண்பிக்கபடும் வரை ஒரு சிறிய குடிசையில் காத்திருக்கிறார்.

அந்த நாட்களில் படங்களின் பெயர்கள் எல்லாம் எப்பொழுதும் ஆங்கிலத்திலேயே விளம்பரப் பலகைகளில் எழுதப்பட்டன. சிற்றம்பலம் படமாளிகைமட்டுமே விளம்பரப் பலகைகளில் சிங்கள எழுத்துகளில் பெயர்களை எழுதியது. அந்தப் படமாளிகை ஒரு காடுபோலக் காட்சியளித்தாலும் அவற்றினூடாக அந்த எழுத்துகள் இப்பொழுதும் காட்சியளிக்கின்றன.

தாங்கள் காதல் வசப்பட்ட இடமான அந்த சினிமா என்றோ ஒரு நாள் தங்களுக்கு மீண்டும் கிடைக்கு மென்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஜெயராமும் சுமணாவும் அந்த எழுத்துகளைப் பார்க்கிறார்கள்.