Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு..
சுமந்திரன் அரசியலமைப்பு வரும் என்கிறார். ஆனால் வராது !

சுய நிர்ணய உரிமைப் பற்றி நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை வெறுமனே தமிழ் மக்களை எங்கள் பக்கம் வென்றெடுக்க முயலும் சில்லறை உபாயமல்ல. மாறாக ஒடுக்குமுறைக்குட்பட்டுள்ள இனத்திற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள உள்ள அடிப்படை உரிமையை அங்கீகரிக்கும் செயல்.

02.10.2018  |  
கொழும்பு மாவட்டம்

“தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ் மக்களே தீர்க்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினையை சிங்கள மக்களால் எப்படி தீர்க்க முடியும்? இதனால் தான் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமையை நாங்கள் அங்கீகரிக்கின்றோம் ” என்று ஐக்கிய சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய கூறினார்.

இனப்பிரச்சினை காரணமாக நாடு பெரும் வீழ்ச்சி நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் இலங்கைக்கு எதிர்காலம் என்பதே இல்லை என்றும், இது ஒரு பேராபத்து நிலை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.


சுமந்திரன் அரசியலமைப்பு வரும் என்று கூறியிருக்கின்றார். ஆனால் புதிய அரசியல் அமைப்பு ஒன்று வரப் போவதில்லை. அது வரும் என்பது பொய்க் கதை.

இலங்கையின் சிரேஷ்ட இடதுசாரி தலைவரும் ஐக்கிய சோசலிச கட்சியின் பொதுச் செயலாளருமான சிறிதுங்க ஜயசூரிய இனப்பிரச்சினை தொடர்பிலும் நாட்டின் இன்றைய அரசியற் சூழ்நிலைகள் குறித்தும் கட்டுமரத்துடனான நேர்காணலின் போது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். இடதுசாரிகள் என்ற ரீதியில் இனங்கள் எங்களுக்கு முக்கியமல்ல. எந்த இனமாக இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களாக நாங்கள் குரல் கொடுப்போம். இதனால் தான் யுத்தக் காலத்திலும் மூர்க்கத் தன்மை வாய்ந்த சிங்கள இனவாதத்தினை எதிர்த்து நின்றோம் என்று குறிப்பிட்ட அவர், சுய நிர்ணய உரிமைப் பற்றி நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை வெறுமனே தமிழ் மக்களை எங்கள் பக்கம் வென்றெடுக்க முயலும் சில்லறை உபாயமல்ல. மாறாக ஒடுக்குமுறைக்குட்பட்டுள்ள இனத்திற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள உள்ள அடிப்படை உரிமையை அங்கீகரிக்கும் செயல் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அவருடனான நேர்காணல் பின்வருமாறு:

த கட்டுமரன்: 
நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும் குறித்து 
உங்கள் பார்வை என்ன?

பதில்: தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் எந்தவிதமான திட்டங்களும் மைத்திரி- ரணில் அரசாங்கத்திற்கு இல்லை. அதேவேளை தேசிய பிரச்சினையை தீர்த்துக் கொள்வது பற்றி தெளிவான திட்டங்களை தமிழ்க் கூட்டமைப்பு முன்வைக்க தவறியுள்ளமையினால் தமிழ் மக்கள் மிகவும் அதிருப்தியான மனநிலையில் உள்ளனர். இந்த பின்புலத்தில் தான் விக்கினேஸ்வரனும், தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்களும் மோதி வருகின்றனர். விக்கினேஸ்வரனிடமும் இனப்பிரச்சினை தொடர்பான தெளிவான பார்வைகள் இல்லை என்பதே எனது கருத்து. கொழும்பில் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த போது இது பற்றி நான் விக்கினேஸ்வரனிடம் கேட்டேன். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உங்கள் வேலைத்திட்டம் என்ன என்று கேட்டபோது இது பற்றி நாங்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது என்றார். சுமந்திரன் அரசியலமைப்பு வரும் என்று கூறியிருக்கின்றார். ஆனால் புதிய அரசியல் அமைப்பு ஒன்று வரப் போவதில்லை. அது வரும் என்பது பொய்க் கதை. அரசியல் யாப்பு வரைவுப் பிரதியை முன்வைக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. சரியான பேச்சுவார்த்தை மட்டத்தில் கூட அது இல்லை. எனவே இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தாக ஏமாற்றப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

த கட்டுமரன்: 
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்கள் நிலை குறித்து விமர்சனங்கள் 
உள்ள போதிலும் அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து 
உங்களால் திருப்தி அடைய முடிகின்றதா?

பதில்: கடந்த ராஜபக்சவை ஆட்சியை விட நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதில் இந்த அரசாங்கத்திற்கு பெரும் அக்கறை இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபாலவை எடுத்துக் கொண்டால் அவரிடம் அரசியல் கொள்கை என்ற ஒன்று இல்லை. அரசாங்கத்தில் இருந்து கொண்டே அங்கு என்ன நடைபெறுகின்றது என்று தெரியாமல் இருக்கின்றார். அவரும் ரணிலும் இந்த அரசாங்கத்தில் வேடிக்கை மனிதர்களாகவே உள்ளனர். அதனால் இன்று நல்லிணக்க செயற்பாடுகள் பின்னோக்கி செல்லக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையில் மக்கள் பிளவுப்பட்டுள்ளனர். சிறந்த வாழ்க்கைக்காகவும், சமூகப் பொருளாதார விடயங்களுக்காகவும் அவர்கள் பிளவுப்படவில்லை. மாறாக சிங்கள பௌத்தம் தான் இந்த பிளவின் அடிப்படை இயல்பாக இருக்கின்றது. விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர் என்று ரணில் விக்கிரமசிங்க சிங்கள மத்தியில் முத்திரைக் குத்தப்பட்டு விட்டார். ஆனால் அது முற்று முழுதான பொய். ரணில் அவ்வாறானவரும்


ரணில் எவ்வளவு தான் தேசப்பற்றுள்ளவராக தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றாலும் சிங்கள பௌத்தம் என்ற விடயத்தில் மகிந்தவின் விம்பத்தை இவரால் தகர்க்க முடியாது

அல்ல. அவர் சிங்கள பௌத்த வாக்குகளையே குறி வைத்துக் கொண்டிருக்கின்றார். ரணில் உறுதியான நிலைப்பாட்டிலிருந்து ஜனாதிபதியையும் எதிர்த்து நல்லிணக்க வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருக்க முடியும். இன்று வரை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு அல்லது தீர்வுக்கான ஆவணத்தினையோ முன் வைக்க முடியாமல் அவர் தடுமாற்றத்துடன் உள்ளார். எப்படி சிங்கள பௌத்த வாக்குகளைக் கவர்வது என்பதிலேயே அவர் குறியாக உள்ளார். ஆனால் பௌத்த தேரர்களை சந்தித்தும், விகாரைகளுக்கு சென்றும் மகிந்தவைப் போன்று அவரால் சிங்கள பௌத்த வாக்குகளைக் கவர முடியாது என்பதே உண்மை நிலையாகும். ரணில் எவ்வளவு தான் தேசப்பற்றுள்ளவராக தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றாலும் சிங்கள பௌத்தம் என்ற விடயத்தில் மகிந்தவின் விம்பத்தை இவரால் தகர்க்க முடியாது. இதனால் ரணில் தரப்பு பெரும் ஏமாற்ற நிலையில் உள்ளது. ஆனால் தற்போதும் காலத்தைக் கடத்தாமல் தேசியப் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வினை முன்வைத்து செயற்பட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவர் முயற்சிப்பாராயின் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள். ஆனால் சிங்கள பௌத்த வாக்குகள் அவருக்கு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.

த கட்டுமரன்: 
சிரேஷ்ட இடதுசாரி தலைவரான நீங்கள் இலங்கை அரசியலை 
தீர்மானிக்கின்ற சக்தியாக சிங்கள பௌத்த இனவாதத்தின் 
வளர்ச்சியினை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: எமது நாட்டில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறான சிங்கள பௌத்த ஆதிக்க நிலை காணப்படவில்லை. ஆனால் இனவாதம் எந்நாளும் இருந்த போதிலும் அது நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கவில்லை. இப்பொழுது இலங்கை அரசியலை கட்டுப்படுத்தும் சக்தியாக சிங்கள பௌத்த பேரினவாதம் மாறியுள்ளது. தென்னிலங்கை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளை எதிர்த்து போராடும் சக்தியற்ற நிலையில் இந்த அரசாங்கம் உள்ளது. இந்த அரசாங்கம் பலவீனமடைய இது பிரதான காரணமாகும். சிங்கள பௌத்த இனவாத சக்திகளுக்கு அடிபணிந்து ரணில் செயற்படுவதனால் தமிழ் மக்களின் ஆதரவினை அவர் இழந்து நிற்கின்றார். இனப்பிரச்சினைக்கு தீர்வினை முன்வைப்பதிலிருந்து எந்தவொரு முக்கியமான அரசியல் தீர்மானங்களையும் எடுக்க முடியாத அளவுக்கு இனவாதம் தீவிர வளர்ச்சியினை இலங்கையில் அடைந்துள்ளது. இந்த தீவிர வளர்ச்சி நிலை வன்முறை என்ற வடிவத்தினை எடுத்துள்ளது பெரும் ஆபத்து நிலையாகும்.
அதுமட்டுமன்றி இந்த பேரினவாதம் மகிந்த போன்ற இனவாதிகளின் எழுச்சிக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. இன்று அரசாங்கத்திற்கு எதிரான சக்தியாக மகிந்த தரப்பினர் எழுச்சிப் பெற்று அடுத்த ஜனாதிபதி பதவியைப் பெற துடித்துக் கொண்டிருக்கின்றனர். இது பேராபத்து நிலை என்றே நாங்கள் கருதுகின்றோம்.
உலகில் முன்னேறியுள்ள நாடுகளைச் சேர்ந்த தலைவர்களைப் பாருங்கள். அவர்கள் எந்த சக்திகளுக்கும் அடிபணியாமல் உறுதியான நிலைப்பாட்டுடன் தீர்க்கமான முடிவுகளை எடுத்து செயற்பட்டவர்களாகவே உள்ளனர். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள தலைவர்கள் எதற்கும் தலை சாய்க்காமல் உறுதியாக இருந்து அந்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துள்ளனர். ஆனால் எமது நாட்டு தலைவர்களுக்கு சிங்கள பௌத்த இனவாத சக்திகளை எதிர்க்கும் திராணி இல்லை. இதனால் தான் நாடு பெரும் நெருக்கடியினை சந்திக்கப் போகின்றது என்று கூறுகின்றேன்.


தேசியப் பிரச்சினையில் உறுதியாக இருக்க முடியாதவர்கள் மாக்ஸ்வாதிகள் அல்லர். ஜே.வி.பி தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை.

த கட்டுமரன்: 
சிங்கள பௌத்த மேலாதிக்க நிலையினால் நாடு எதிர்கொள்ளப் 
போகும் பாதிப்புகளை இடதுசாரிகளாகிய நீங்கள் எவ்வாறு 
எதிர்கொள்ளப் போகின்றீர்கள்? அதற்கான திட்டங்கள் உண்டா?

பதில்: இன்று நாடு மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. பொருளாதார நிலையைப் பாருங்கள். மக்களால் தலைத்தூக்க முடியவில்லை. நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரித்து செல்கின்றது. ஆனால் தற்போதைய அரசாங்கம் இவற்றையெல்லாம் மறந்துவிட்டு பதவியில் தொடர்ச்சியாக இருப்பதற்கான பிரயத்தனங்களில் ஈடுபடுகின்றது. மறுபுறம் மகிந்த ராஜபக்ச தரப்பு பதவிக்கு வர போராடுகின்றது. ஆனால் நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு எந்தவிதமான தீர்வுகளும் தென்படவில்லை. மக்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். வடக்கு கிழக்கு மக்கள் பெரிதும் அதிருப்தியுடன் உள்ளனர். இதனால் எதிர்வரும் 5 ஆண்டுகளில் பெரும் மக்கள் எழுச்சி ஒன்று ஏற்படப் போகின்றது. இது ஜே.வி.பி செய்த கிளர்ச்சி போன்றதல்ல. மக்கள் வீதிக்கு இறங்கி போராடப் போகின்றார்கள். பதவியில் இருப்பவர்களை விரட்டியடிக்கவும் மோசடி அரசியலைக் கவிழ்க்கவும் அவர்கள் வீதியில் இறங்க முன்வருவார்கள். இடதுசாரிகளான எமது நோக்கமும் அது தான். அவ்வாறான மாற்றத்தினை தான் நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்த முதலாளித்துவ ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். அரேபிய மக்களின் எழுச்சிப் போன்ற ஓர் நிலை இங்கு ஏற்படும். ஏனெனில் மக்கள் முட்டாள்கள் போன்று தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் இவற்றையெல்லாம் நன்கு அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள். தக்க சமயத்தில் அவர்கள் அநீதிகளுக்கு எதிராக எழுச்சிப் பெறுவார்கள். ஏனெனில் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க முடியாது. அரசியல்வாதிகளினால் நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதற்கெதிராக மக்கள் அணி திரண்டு போராடுவர். மக்களின் இந்த போராட்டங்களுக்கு நாங்கள் நிச்சயம் ஒத்துழைப்பினை வழங்குவோம்.

த கட்டுமரன்: 
இலங்கையில் மக்கள் மத்தியில் இவ்வாறான எழுச்சி
வாய்ப்புகள் உள்ளன என்று எந்த அடிப்படையில் கருதுகின்றீர்கள்?

பதில்: கடந்த காலங்களில் ஏற்பட்ட புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களைக் குறிப்பிடலாம். இந்த போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அது போன்று நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் ஆங்காங்கே மக்களின் எழுச்சி காணப்படுகின்றது. ஆனால் அந்த மக்கள் எழுச்சி ஓரிடத்தில் அணி திரளாமையே பெரும் குறைபாடாக உள்ளது. அதனால் தான் மக்கள் எழுச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று நான் குறிப்பிடுகின்றேன். காணாமற்போனவர்களின் அன்னையர்கள் வவுனியாவில், மன்னாரில் கிளிநொச்சியில், யாழ்;ப்பாணத்தில் அனைத்து இடங்களிலும் இருந்து போராடுகின்றனர். அரசாங்கத்தின் மீதான தமது அதிருப்தி நிலையினையே மக்கள் இவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். வடக்கு கிழக்கில் காணி மீட்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. தெற்கில் மாணவர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் மக்களின் இந்த போராட்டங்களை ஒன்றுப்படுத்துகின்ற சக்தியோ அல்லது தலைமைத்துவமோ தென்படவில்லை. ஆனால் இடதுசாரிகளான நாம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். இந்நாட்டில் மக்கள் புரட்சி ஒன்று நிகழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 1971 ஜே.வி.பி கிளர்ச்சி போன்றோ, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கிளர்ச்சி போன்றோ இந்த புரட்சி இருக்கப் போவதில்லை. இங்கு இடதுசாரிகளான நாம் புரட்சி செய்யப் போவதில்லை. மக்கள் தான் செய்யப் போகின்றார்கள். துப்பாக்கிகளை ஏந்தியவுடன் புரட்சி செய்யலாம் என்று விஜேவீரவும், பிரபாகரனும் கருதினர். அதுவல்ல புரட்சி. மக்கள் தன் விருப்பத்துடன் அரசியல்வாதிகளுக்கு எதிராக வீதியில் இறங்க வேண்டும். மக்கள் வீடுகளில் இருக்கின்ற போது நாம் காடுகளில் இருந்து கொண்டு ஆயுதங்களை ஏந்தி போடுவது புரட்சி அல்ல. முன்னொரு காலத்தில் அதாவது சேகுவேரா காலத்தில் அப்படியொரு புரட்சி இருந்தது தான். ஆனால் இப்பொழுது நவீன உலகில் அவ்வாறு புரட்சி செய்து அதிகாரத்தைப் பெற முடியாது.

த கட்டுமரன்: 
சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தும் இடதுசாரி தத்துவத்தை 
ஏற்று இலங்கையில் அரசியல் செய்கின்ற ஜே.வி.பி போன்ற 
கட்சிகளின் இனவாத அரசியல் அணுகுமுறைகள் காரணமாக 
உண்மையான இடதுசாரி அரசியல் செய்யும் உங்களைப் போன்ற 
இடதுசாரி தலைவர்களால் தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவுப் பெற 
முடியவில்லை என்று ஓர் அபிப்பிராயம் உள்ளது. இது பற்றி உங்கள் 
கருத்து என்ன?

பதில்: நாட்டைக் காத்தவர்கள், தேசப்பற்றாளர்கள் என்ற வார்த்தைகளை 2005ல் மகிந்தவுக்கு ஜே.வி.பி தான் கற்றுக் கொடுத்தது. ஜே.வி.பியினர் போலி இடதுசாரிகள். அவர்கள் முதலில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தினை எடுத்துக் கொண்டு மகாநாயக்க தேரர்களை சந்திக்க செல்கின்றனர். மகாநாயக்க தேரர்கள் யார்? அவர்களிடம் ஏன் இவர்கள் செல்ல வேண்டும்?; நான் முன்னர் கூறியது போன்று சிங்கள பௌத்த பேரினவாதம் தான் இதற்கு காரணம். இலங்கையின் இன்றைய அரசியல் நெருக்கடிகளுக்கு ஜே.வி.பியினரும் ஒரு காரணம்.


சுமந்திரன் அரசியலமைப்பு வரும் என்று கூறியிருக்கின்றார். ஆனால் புதிய அரசியல் அமைப்பு ஒன்று வரப் போவதில்லை. அது வரும் என்பது பொய்க் கதை.

ஜே.வி.பியின் வரலாறு இனவாத வரலாறு. விஜேவீர 1971ல் கிளர்ச்சி செய்தார். அது ஒரு சிங்களக் கிளர்ச்சி. 88- 89 காலப்பகுதியிலும் அவர்கள் கிளர்ச்சி செய்தனர். தென்னிலங்கையில் சோசலிச மாற்றத்திற்காக அதனை அவர்கள் செய்யவில்லை. தென்னிலங்கையின் அதிகாரத்தைப் பெறுவதற்காகவே அவர்கள் கிளர்ச்சி செய்தனர். இது ஒரு நாடு. மலையகம், வடக்கு, கிழக்கு அனைத்தும் சேர்ந்தது தான் இலங்கை. அவர்கள் இலங்கையின் முழு அதிகாரத்தைப் பெற முயற்சிக்கவில்லை. தமிழ் மக்கள் அதனுடன் தொடர்புறவில்லை. மலையக மக்களும், கிழக்கு மக்களும் தொடர்புபடவில்லை. இதிலிருந்து அவர்களின் இடதுசாரித்துவத்தைப் பற்றி நன்கு விளங்கிக் கொள்ள முடியும். நன்னடத்தை அரசாங்கம் என்று சந்திரிகாவுடன் இணக்க அரசியல் செய்தனர். பின்பு ஐக்கிய தேசியக் கட்சியின் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தனர். இப்பொழுது மைத்திரிபாலவுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பாவத்திலிருந்து அவர்களால் விடுபட முடியுமா? அவர்கள் தானே இந்த அரசாங்கம் பதவிக்கு வர உதவினர். இப்பொழுது அவர்களே எதிர்த்து பேசுகின்றனர். மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்று அவர்கள் மேடையேறி பிரசாரம் செய்தனர். சமசமாஜ கட்சி கம்யூனிஸ்ட் கட்சி செய்ததை விட இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிக் கொடுத்து விட்டு இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாகி விட்டனர். அவர்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியே வரப் போவதில்லை. அவர்களுக்கு புரட்சியும் தேவையில்லை. சோசலிசமும் தேவையில்லை. ஆனால் சோசலிசவாதிகள் என்று காட்டிக் கொள்ள மே தினத்திற்கு பெரிய சிவப்பு கொடிகளை காட்சிப்படுத்துகின்றனர். இதனை எந்த நாளும் செய்ய முடியாது. இதனை சிங்கள மக்களும் உணர ஆரம்பித்துள்ளனர்.

தங்கத்தின் தூய்மையை உரசிப் பார்ப்பதற்கு உரைக் கல் ஒன்று இருப்பது போன்று மாக்ஸ்வாதிகளை பரீட்சிக்கும் உரைக் கல் தான் ஒரு நாட்டின் இனப்பிரச்சினை என்று லெனின் குறிப்பிட்டுள்ளார். தேசியப் பிரச்சினையில் உறுதியாக இருக்க முடியாதவர்கள் மாக்ஸ்வாதிகள் அல்லர். ஜே.வி.பி தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை.
தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனால் எங்களுக்கு தமிழ் மக்கள் வாக்குப் போடுவார்கள் என்று நாம் கருதவில்லை. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் நாங்கள் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்ற மனநிலையே காணப்படுகின்றது. இதற்காக நாங்கள் எங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுத்து பின்வாங்கவும் போவதில்லை.
எமது நாட்டில் 1950 மற்றும் 60களில் இடதுசாரி இயக்கங்களுக்கு வடபகுதி மக்கள் ஆதரவு வழங்கினர். கந்தையா பருத்தித்துறையில் உறுப்பினரானார். அதன் பின்பு காரளசிங்கம் வட்டுக்கோட்டை ஆசனத்தில் இரண்டவதாக வந்தார். லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின்; வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற செய்தனர். சமஷ்டி கட்சியினை விட இடதுசாரிகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்தனர். எனினும் சமசமாஜக் கட்சி தலைவர்கள் படிப்படியாக சிறிமா அரசாங்கத்துடன் கூட்டரசாங்கத்தை அமைத்து இணக்க அரசியலை மேற்கொண்டமையினால் வடக்கில் மட்டுமன்றி தெற்கில் இருந்த இடதுசாரிகளின் பெரும் பலம் மெல்ல மெல்ல வீழ்ச்சியடைந்தது. இன்று அது கோஷங்களுக்குள் மட்டுப்பட்டு விட்டது.
நாம் சி;ல்லறைத் தனமான நன்மைகளுக்காக எமது கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இனவாத சக்திகள் எம்மை படுகொலை செய்தாலும் நாம் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை.

த கட்டுமரன்: 
ஐக்கிய சோசலிச கட்சி இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்வைக்கும் 
திட்டங்கள் என்ன?

பதில்: இனப் பிரச்சினையை தீர்;க்கப் போவது நாம் இல்லை. தமிழ் மக்கள் தான் தீர்க்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினையை சிங்கள மக்களால் எப்படி தீர்க்க முடியும்? நாங்கள் அதற்காக தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முடியும். தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தினை அவர்களே தீர்மானிப்பதற்கான உரிமை அவர்களுக்கு இருக்க வேண்டும். ஒரே நாட்டில் வாழப் போகின்றீர்களா? நாட்டின் ஒரு பகுதியில் வாழப் போகின்றீர்களா? அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு ஒரே நாட்டில் வாழப் போகின்றீர்களா? என்பதனை நாம் அல்ல நீங்கள் அதாவது தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
இதனால் ஐக்கிய சோசலிச கட்சியினரான நாம் அதிகாரத்திற்கு வந்தால் தமிழ் மக்களுக்கு அவர்களின் அரசியலை தீர்மானிப்பதற்கான வாய்ப்பினை வழங்குவோம். இங்கு நான் ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இலங்கையினால் ஒரு துளியளவேனும் முன்னோக்கி நகர முடியாது.
இனப்பிரச்சினை வரலாற்றினை எடுத்துப் பார்த்தால் கடந்த 70 ஆண்டுகளை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்க முடியும். முதலாவது 30 ஆண்டுகள் செல்வநாயகத்திலிருந்து அமிர்தநாயகம் வரையில் தென்னிலங்கையில் சிங்கள தலைவர்களுடன் தேசியப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அவர்களைப் பின்தொடர்;ந்த காலப்பகுதியாகும். இரண்டாவது 30 ஆண்டுகள் காலப்பகுதி வடக்கில் யுத்தம் நிகழ்ந்த காலப்பகுதியாகும். மூன்றாவதாக யுத்தத்தின் பின்னரான 10 ஆண்டுகள். செல்வநாயகம் காலம் தொடக்கம் பிரபாகரன் வரை எங்களது பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்ற சிந்தனையை தான் தமிழ் மக்களில் அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். தற்போது சம்பந்தன் முதல் விக்கினேஸ்வரன் வரை அவ்வாறு தான் கூறி வருகின்றனர். விக்கினேஸ்வரன் முதலமைச்சர் பதவியை ஏற்றவுடன் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இனப் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு அவர் கேட்டிருந்தார். ஜெயலலிதா வந்தாரா? இலங்கை இனப்பிரச்சினையை ஜெயலலிதாவினால் தீர்க்க தான் முடியுமா?
தமிழ் மக்களிடமும் தமிழ்த் தலைமைகளிடமும் தவறான நோக்கு காணப்படுகின்றது. மேற்கத்தேய நாடுகள், நோர்வே, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தான் எமது மீட்பர்கள் என்று அவர்கள் கருதுகின்றனர். சிங்கள இனவாதி அரசாங்கம் எங்களை தாக்கும் போது இவர்கள் தான் எங்களை பாதுகாப்பார்கள் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அவர்கள் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு தருவார்கள் என்றும் நம்புகின்றார்கள். இது முற்றிலும் தவறான கருத்தாகும். 70 ஆண்டுகள் கடந்த பின்பும் இந்த தமிழ் தலைவர்கள் ஒரு விடயத்தினைப் புரிந்து கொள்கின்றார்கள் இல்லை. அதாவது இனப்பிரச்சினையை தென்னிலங்கை முற்போக்கு இடதுசாரி சக்திகளுடன் இணைந்த இயக்கம் ஒன்றினூடாகவே தீர்க்க முடியும். இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையேல் தென்னிலங்கையில் உள்ள மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்களுக்கும் எதிர்காலம் என்ற ஒன்று இல்லை. வடக்கைப் போன்று நாமும் நாளுக்கு நாள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். வடக்கின் உண்மையான முற்போக்கு சக்திகளும் தெற்கின் முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து இந்நாட்டில் உண்மையான சோசலிச மாற்றத்தினை ஏற்படுத்தினால் மட்டுமே எமக்கும் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கும். இதனை தனித்து எவரின் ஒத்துழைப்பின்றி மேற்கொள்ள முடியாது.