Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சொல்கிறார்கள்!
கருத்துச் சுதந்திரம் என்பது…?

“நல்லாட்சி என கூறும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிப்பார்களா என யாரும் இதுவரை கேள்வி எழுப்பவில்லை. ஆனால்,இனவழிப்பை நியாயப்படுத்திய படத்தை திரையிடவில்லை என்றதும் எங்கே கருத்து சுதந்திரம் என கேள்வி எழுப்பப்படுகின்றது…”

08.10.2018  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
மயூரப்பிரியன் – பிரியதர்ஷினி சிவராஜா   

யாழ்ப்பாணத்தில் ,சர்வதேச திரைப்படவிழாவில் (3-8 ஒக்டோபர் 2018) இலங்கையில் தயாரிக்கபப்ட்ட திரைப்படம் ஒன்று திரையிடபடுவதாக நிகழ்ச்சி நிரலில் இணைத்துக் கொள்ளபட்ட பின்னர் நிகழ்வுக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் அந்த திரைப்படம் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டது.

குறித்த திரைப்படமானது இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் விதமாகவும் , விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குற்றசாட்டுக்கள் எழுந்தன.  

குறித்த திரைப்படமானது ஒரு பக்கம் நின்று பார்ப்பதனால் அவை யாழில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என ஏற்பாட்டு குழுவினால் அந்த திரைப்படம் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த திரைப்படம் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டமை ஆனது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனும் கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் கருத்துச்சுதந்திரம் பற்றி, பொதுத்தளங்களில் கருத்துக்களை முன்வைப்போர் பேசுகின்றனர்.

/

“என்னை பொறுத்த வரையில் இந்த திரைப்படத்தை காட்சிபடுத்துவதாக நிகழ்ச்சி நிரலில் சேர்த்து விட்டு, பின்னர் நீக்கியது தான் பிழை. அதற்காக கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு உள்ளது என்பதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த திரைப்படத்தில் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நியாயப்படுத்தும் விதமான கருத்துக்கள் உண்டு என கூறப்படுகின்றது. அதனால் அதனை கருத்து சுதந்திரத்தின் பெயரால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை கலை எனவும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உதாரணமாக ஐரோப்பியாவில் பெரும்பாலான நாடுகளில் யூதர்கள் படுகொலை செய்யப்படவில்லை என கூறினால் அது அங்கு தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

எனவே கலை என கூறினாலும் அதனுள்ளும் அரசியல் உண்டு. என்னுடைய அரசியல் விஞ்ஞான ஆசிரியர் சொல்வார் எந்த கூப்பன் கடையில் அரிசி வாங்குவது என்பதில் கூட அரசியல் உண்டு என. அவர் அரசியலை “அரிசியில் ” என்றே கூறுவார். எப்பவும் பெரும்பான்மையினர் தாங்கள் அறத்தின் பால் நிற்கின்றோம். நாம் பிற்போக்குவாதிகள் இல்லை என்பதனை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் , சிறுபான்மையினத்தவர்களுக்கு அதனை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளது.

நல்லாட்சி என கூறும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிப்பார்களா என யாரும் இதுவரை கேள்வி எழுப்பவில்லை. ஆனால்,இனவழிப்பை நியாயப்படுத்திய படத்தை திரையிடவில்லை என்றதும் எங்கே கருத்து சுதந்திரம் என கேள்வி எழுப்பப்படுகின்றது. அரசாங்கத்திடம் கருத்து சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்பாதவன் , ஒடுக்கப்பட்ட மக்களிடம் கருத்து சுதந்திரம் எங்கே என கேட்கின்றான்.” என்கிறார் குமாரவடிவேல் குருபரன் சட்டத்துறை தலைவர் யாழ்.பல்கலைகழகம்.


வடக்கில் தமிழ் மக்கள் ஓர் கலந்துரையாடலைக் கட்டியெழுப்ப வாய்ப்பளித்திருக்க வேண்டும்.

“என்னைப் பொறுத்தவரையில் இந்த திரைப்படம் குறித்து வடக்கில் தமிழ் மக்கள் ஓர் கலந்துரையாடலைக் கட்டியெழுப்ப வாய்ப்பளித்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பு இத்திரைப்பட த்தினை  திரையிடுவதனூடாக யாழ் மக்களுக்கு கிட்டியிருக்கும். ஆனால் இன்றோ யாழ் மக்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இத் திரைப்படத்தினை பார்ப்பதற்கு அந்த மக்களுக்குள்ள உரிமையை நாங்கள் மதிக்க வேண்டும். ஆனால் அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ள போதிலும் அந்த விமர்சனங்களை முன்வைக்கின்ற உரிமைகளை வடக்கு மக்களுக்கு நாம் வழங்கியிருக்க வேண்டும். உண்மையில் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.” என்கிறார் லக்மாலி ஹேமச்சந்திர, மனித உரிமை செயற்பாட்டாளர்.

“ஒரு மனிதனால் வெளிப்படுத்தப்படும் கருத்து என்பது இன்னோர் மனிதனை உடல் உள ரீதியாக பாதிக்க கூடாது. சுமூகமாக இயங்கிக்கொண்டு இருக்கும் ஒரு கட்டமைப்பை குழப்புவதாக கருத்து சுதந்திரம் இருக்க கூடாது. கருத்து சுதந்திரம் என எதனை வேண்டுமானாலும் , எங்கு வேண்டுமானாலும் பேசலாம் என இருக்க கூடாது. ஆதாரமற்ற விடயங்களை கருத்து சுதந்திரம் எனும் பெயரில் பேச முடியாது. அது ஆரோக்கியமற்ற விடயமாகும்.”என்கிறார் கி.கிருஷ்ணமேனன்,   யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர்.

/

“எந்தவொரு படைப்பும் தடை செய்யப்படுவதிலும் தடுக்கப்படுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதேவேளை இயக்குனரிடம் கேள்வி கேட்டகவும் படைப்பை நிராகரிக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமையிருக்கிறது. அபத்தமான திட்டமிட்ட அரசியல் நோக்கோடு படைப்பின் பெயரால் நிகழ்த்தப்படும் கலைப்பிரச்சாரத்தை எதிர்க்கவும் சகலருக்கும் உரிமை உண்டு. என்னைப் பொறுத்தவரையிலும் கூட நிகழ்ச்சி நிரலில் படம் அச்சிடப்பட்ட பிறகு அந்தப் படத்தை தடைசெய்திருக்க கூடாது. ஆனால் படத்தை தேர்வு செய்யும் உரிமை திரைபட விழாக் குழுவுக்கு இருக்கிறது. அவர்கள் விழாவுக்கான படத்தை அவர்கள் முன்னமே தேர்வு செய்திருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது. இந்த நிலையில்தான் தமிழ்த் தரப்பில் கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.


எதற்கு குரல் கொடுக்க வேண்டும் எதற்கு குரல் கொடுக்க கூடாது என்பதன் அரசியல்தான் எனக்கு வியப்பூட்டுகிறது.

கருத்துரிமைக்காக யார் குரல் கொடுத்தாலும் மகிழ்ச்சியே. ஆனால், எதற்கு குரல் கொடுக்க வேண்டும் எதற்கு குரல் கொடுக்க கூடாது என்பதன் அரசியல்தான் எனக்கு வியப்பூட்டுகிறது.

போர் முடிந்து அடுத்த சில வருடங்களில் ஒரு முறை கேரள திரைப்பட விழாவில் இலங்கை அரசு அனுசரணையாளராகச் செயற்பட்டது. அந்த வருடம் 5 இலங்கைப் படங்கள் திரையிடப்பட்டன. அவை ஒருவகையில் அரசு அல்லது சிங்கள தரப்பு சொல்ல நினைத்த அரசியலை சொன்ன படங்கள். பிரசன்ன விதானகேயின் படங்களில் இருக்கும் தமிழர்கள் குறித்த குறைந்த பட்ச அரசியல் புரிதல்கூட இல்லாத முற்றுமுழுதான சிங்களத் தரப்பின் பார்வையை மட்டும் கொண்ட படங்கள் அவை.

இப்போதும் அசோக கந்தகமவின் இனிஅவன் உட்பட ராணுவம், போர் குறித்த கதைக் களத்தை கொண்ட படங்களை எடுப்பதற்க்கு இருக்கும் அனுமதியும் வாய்ப்பும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒருவருக்கோ அல்லது வெளியே இருந்து செல்லும் தமிழருக்கோ இருக்குமா என்பது ஐயமே. ஆனாலும் தமிழர்கள் தரப்பு அரசியலையும் மக்களின் கதைகளையும் திரைப்படங்கள் ஊடாக முதலில் சிங்கள சகோதரர்களுடனும் பின்னர் உலகுடனும் பரிமாற வேண்டிய தேவை தமிழருக்கு இருக்கிறது.

மிக நெருக்கடியான காலங்களில் என்னுடைய ஆவணப் படங்களைத் திரையிடுவதற்க்கு சிங்கள நண்பர்கள் முயன்றிருக்கிறார்கள். என் படங்கள் அரசுகளைக் கேள்வி கேட்கும் இனவாதத்தை கேள்விக்கு உட்படுத்தும் படங்களாக இருந்த போதும் அதைத் திரையிட முயற்சித்திருக்கிறார்கள். அந்த முயற்சி கடந்த ஆண்டில்தான் நிறைவேறியது. அந்த படத்தின் வலி நிறைந்த உண்மைகள் அங்கிருந்தவர்களுக்கு புதிய சேதிகள்தான். பயங்கரவாதப் போர் என்று அவர்கள் அறிந்து வைத்திருந்த போர் பற்றியும் அதன் இழப்புகளையும் அதன் அரசியல் பின்னணியை அவர்கள் அறிந்து கொள்ள எம் படைப்புகள் உதவிடும்.

ஆனால் என் எல்லாப் படங்களையும் திரையிட்டு பேசக்கூடிய சுந்திரத்தை யாரவது உறுதிப்படுத்த முடியாமா என்பது இன்றளவு கேள்வியாகவே இருகிறது. நாங்கள் எல்லோருமே போருக்கு எதிரானவர்கள்தான். இன்று உலகம் போருக்கு எதிரான கலைவடிவங்களையே ஆதரிக்கிறது என்று சொல்லப்படுகிறது. இன்றைய புதிய ஒழுங்கு போருக்கு எதிரான படங்களை விடவும் அரசுகளை எதிர்த்து நிறுக்கும் போராளிக்குழுகளின் போருக்கு எதிரான படங்களையே அதிகம் வேண்டி நிற்கிறது.

எனது முல்லைத்தீவு சாகா திரைப்படம் கேரள அரச திரைப்படவிழாவில் கேரள முதலமைச்சரிடம் இருந்து ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றுக் கொண்டது பல திரைப்பட விழாகளிலும் திரையிடப்பட்டது. அந்த படத்திற்கு புலி முத்திரை குத்தப்பட்டு கேரளா மாத்துருபூமியிலும் பின்னர் சிங்களப் பத்திரிகை ஒன்றிலும் கூட எழுதப்பட்டது. அதுவும் போருக்கு எதிரான படம்தான். மனிதாபிமான நடவடிக்கையால் நிகழ்ந்த போரில் அகப்பட்ட மக்களின் கதைதான் அந்தப்படம். அதுவும் கலைப்படைப்புத்தான்.  

முல்லைத்தீவில் போருக்கு முன்னர் நிகழ்ந்த கண்ணகி கூத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அதற்க்கு பல தடைகள் வந்த போது இப்போது குரல் கொடுக்கும் எந்தவொரு கருத்துச் சுதந்திரவாதிகளும் குரல் கொடுக்கவில்லை.

மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப்பிரிவில் தேர்வான எனது படம் பின்னர் ஜூரிகளால் விரும்பப்பட்ட போதும் விருதுக்குத் தேர்வாக முடியவில்லை. ஆகவே திரைப்பட விழாக் குழுவினால் ஒரு படம் திரையிட மறுக்கப்படுகிற போது அந்த படத்தை மாற்றுத் திரையிடல் செய்யலாம் அதை விட்டு கருத்துரிமை கொட்டிக்கிடக்கும் எமது தேசத்தில் யாழ் திரைப்படவிழாவில் மட்டும் கருத்துரிமை செத்துவிட்டது என கூச்சல் போடுவதும். அதுவும் தமிழர் தரப்பில் நடந்த சில தவறுகளைச் சொல்லும் படங்களாகவோ எழுத்துகளாகவோ இருந்தால் தலைகீழாக் குதித்துக் குதித்துக் கருத்துரிமைக் கூக்குரல் இடுவதும் எந்த வகை சனநாயகம்.?” என்கிறார் சோமீதரன், இயக்குனர் .

என்னைப் பொறுத்தவரையில் திரைப்பட விழாவில் திரைப்படத்தினை தெரிவு செய்து விட்டு பின்பு அத் திரைப்படத்தினை அகற்றியது இயக்குனருக்கு இழைக்கப்பட்ட அநீதி தான். அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இந்த திரைப்படத்தினை யாழ் திரைப்பட விழாவில் மட்டுமே திரையிட மறுத்துள்ளார்கள். முழுமையாக இலங்கையில் தணிக்கை செய்யப்படவில்லை என்ற விடயத்தினைக் கருத்திற் கொள்வது அவசியமாகும். திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒரு திரைப்படத்தினை திரையிடுவதற்கும், திரையிட மறுப்பதற்கும் உரிமை உண்டு.

அத்துடன் என்னைப் பொறுத்தவரையில் யுத்தத்தின் ஆறாத காயங்களையும், இரத்தக் கறைகளையும் கொண்டிருக்கின்ற யாழ்ப்பாண மக்கள் மத்தியில் இவ்வாறான திரைப்படங்களை திரையிடுவதானது அந்த காயங்களை மேலும் மோசமாக்கும் என்றே நான் கருதுகின்றேன். இத்திரைப்படத்தில் யுத்தம் தான் அனைத்துக்கும் தீர்வு என்ற வகையில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இது மக்கள் மீது யுத்தம் தான் சரியான தீர்வு என்ற  சிந்தனையை திணிக்கின்ற செயலாகவே இருக்கும். இதனால் இவ்வாறான திரைப்படங்களை தவிர்ப்பது நல்லது என்பதே எனது அபிப்பிராயமாகும்.” என்கிறார் ஸ்ரீநாத் பெரேரா,   உயர் நீதிமன்ற சட்டத்தரணி

“ஓவியம் திரைப்படம் இசை எழுத்து என பலதரப்பட்ட கலைகளில் வெளிப்பாட்டுக்கு கருத்துச் சுதந்திரம்தான் அட்டித்தளமாக உள்ளது. யோன் மில்டன் உண்மைய அறிய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியம் என்ற நோக்கில பல வாதங்களை முன்வைக்கிறார். பல்வேறு பார்வைகளில் ஒன்று அலசப்பட்டே, உண்மையை நோக்கிய தேடல் அமைகிறது. அனைத்து தகவல்கள்ளும் முன்வைக்கப்படும்போது, ஒரு திறந்த போயிட்டில் உண்மை பொய்மை வெற்றி கொள்ளும் என்கிறார். ஒரு தேசத்தின் ஒற்றுமை பல வேறுபாடுகள் உடைய தனிமனிதர்களை கலப்பதன் மூலமே சாத்தியம். இது மேலிருந்து ஒற்றைப்படையாக அமுலாக வல்ல ஒரு அம்சம் அல்ல.

அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு தகவலையும் எண்ணக்கருக்களையும் தேட அறிய கற்பிக்க உரிமை உண்டு எழுத்து கலை ஊடகம் என எந்த வடிவம் ஊடாகவாயினும் இந்த உரிமை உண்டு.  

அதேநேரம் பிறரின் உரிமைகளை மதிப்பை கவனத்தில் கொண்டு,  தேசிய பாதுகாப்பு ,ஒழுக்கம், நலம், அறம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனும் வரையறையும் உண்டு.” என்கிறார் தமிழ் நிலா,சமூக செயற்பாட்டாளர்.  

 

“கருத்து சுதந்திரம் பற்றி பேசப்படும் போது இங்கு கருத்து சுதந்திரம் எவ்வளவு தூரத்திற்கு உள்ளது எனும் கேள்வி எமக்குள் எழுந்துள்ளது. விடுதலைபுலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் சமாதன ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட கால பகுதியில் , ஒரு இடைவெளி கிடைத்தது. அதனை பலரும் சுதந்திரமாக கருதி தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

அப்போது கூறப்பட்ட விடயம் “கைகள் தான் கட்டப்பட்டு உள்ளன, கண்கள் அல்ல” என , அதேபோன்று ஒப்பந்தம் முறிவடைந்து மீளவும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது , பலர் காணாமல் ஆக்கப்பட்டனர் , பலர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த அனுபவத்தில் இருந்து வந்ததாலையே என் பெயரை குறிப்பிட்டு கருத்து கூற என்னால் முடியவில்லை. அப்படியான ஓர் நிலைமை காணப்படும் இடத்தில் இருந்தே நாம் கருத்து சுதந்திரம் பற்றி கதைக்கின்றோம்.

அதன் போது ஓர் கேள்வி எழும்புகின்றது. கருத்து சுதந்திரம் என்றால் புலி எதிர்ப்புகருத்தாகவும், அரசாங்கத்திற்கு ஆதரவான கருத்தாகவும் இருக்க வேண்டும். அதற்காகவே குரல் கொடுக்கப்படும். புலி ஆதரவு கருத்தாகவும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்தாகவும் இருந்தால் அங்கே கருத்து சுதந்திரம் பற்றி எதுவும் கதைக்கப்படாது. அது நசுக்கப்படும்.

யுத்தத்தில் இரு தரப்புக்களும் மோதிக்கொண்டன. இரு தரப்பினாலும் மக்கள் இழப்புக்களை சந்தித்தார்கள். அவ்வாறு இருக்க புலிகள் தரப்பினால் இழப்புகளை சந்தித்தவர்களின் கருத்துக்களை வரவேற்போர் , அங்கு கருத்து சுதந்திரத்தை வலியுறுத்துபவர்கள், அரசாங்கத்தினால் அல்லது இராணுவ தரப்பால் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை ஏற்க தயாராக இல்லை. அங்கே கருத்து சுதந்திரம் பற்றி கதைக்கவும் தயாரில்லை.

யாழில் நடைபெறும் திரைப்பட விழாவில் திரையிடப்படும் திரைப்படம் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரத்தை கூட தெற்கில் உள்ளவர்கள் மறுக்கின்றார்கள்.”என்கிறார்   பெயர் குறிப்பிடவிரும்பாத சமுகச் செயற்பாட்டாளர்.

/

“கலை ஊடாக கருத்து சுதந்திரத்தை பற்றி கதைக்க முன்னர் தனிப்பட்ட ரீதியாக தனிமனிதர்களுக்கு கருத்து சொல்ல சுதந்திரமுண்டா என்பதே கேள்வியாக உள்ளது. கருத்து சுதந்திரம் ஜனநாயகம் என்றால் , அது அனைவருக்கும் இருக்க வேண்டும். அது தான் ஜனநாயகம்.

தங்களின் கருத்து சுதந்திரம் பற்றி கதைப்பவர்கள் , தங்களுக்கு கருத்து சுதந்திரம் வேண்டும் என சொல்பவர்கள். மற்றவர்களுக்கும் கருத்து சுதந்திரமுண்டு என்பதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பக்க கருத்துக்களை கூறும் சுதந்திரம் அவர்களுக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். “என்கிறார் அனுஷா சிவலிங்கம்,ஊடகத்துறை.

“உதாரணமா இந்தியாவில ஆதிக்க சாதி சங்கங்கள் அதிகமாகவே உருவாக்கப்பட்டிருக்கு. அதனூடக எளிய மக்களை ஒடுக்கிறாங்க. அதனால அத தடை செய்யச்சொல்லி கேக்கிறம். அதேநேரம் ஒடுக்குதலுக்கு உள்ளாகிற மக்களும் சாதிசங்கங்களை உருவாக்கிறாங்க. இப்ப சாதி சங்கங்கள தடை செய்யச் சொன்னா இரண்டையுமே தடை செய்யணும் என்று சொல்லுவாங்க. உண்மையில எளிய மக்கள் சாதி சங்கங்கள உருவாக்கிறது ஆதிக்கம் செலுத்துறவர்களை எதிர்க்கிறதுக்காக. எனவே ஆதிக்க சாதி சங்கங்களைத்தான் தடைசெய்யணும். இதேபோல கருத்துரிமை பற்றி கதைக்கும் போது நாம என்னத்த பாக்கணும்? மற்றவரை ஒடுக்குவதற்காக பேசுறவனின் உரிமையையா? ஒடுக்குதலில் இருந்து தமமைத் தாமே பாதுகாக்க பேசுறவனின் உரிமையையா? இப்பிடித்தான் நாம பாக்கணும்.” என்கிறார் தவமுதல்வன் ,இயக்குநர், திரைப்படத்துறை.

கலைகளை “கருத்துச்சுதந்திரம்” எனும் விடயத்தாலும் கட்டமைக்கலாம். எனினும் நாம் வாழுகின்ற சூழல், பண்பாடு, கலாசாரம், பாரம்பரியம், வரலாறு ஆகிய விடயங்கள் இந்த கருத்துச் சுதந்திரம் என்கின்ற விடயத்தில் கண்டிப்பாய் தாக்கம் செலுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. ‘எதைவேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் பேசலாம்’ என்பதல்லவே கருத்துச் சுதந்திரம். எதை எங்கு எப்படி பேசவேண்டும் என்பதை அறிந்திருத்தலே அதன் பலம்.

அதாகப்பட்டது ஒரு எதிர்மறையான கருத்தை, அந்தக் கருத்துக்கு புறம்பானதொரு சமூகக்கட்டமைப்பில் விதைப்பதானால் அதற்குமுன் அந்தச் சமூகத்திற்கான கருத்து வெளிப்பாட்டிற்கான வெளிகளும் அங்கு ஏற்கனவே திறந்துவிடப்பட்டிருக்கவேண்டும்.


கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக்  குரல் எழுப்புபவர்கள் அந்த திரைப்படத்தின் உள்ளடக்கம் பற்றியும்  யோசிக்க வேண்டும்.

மாறாக, வெளிபற்றிய பேச்சுக்களை பேசிவிட்டு யாரும் ஒரு வெளியை திறக்காதவிடத்தும் பயனில்லை எனினும் இரு தரப்பு விடயங்களையும் பேசுவதற்கான ஒரு பொதுவெளி ஏற்படாதவிடத்து எதுவும் சாத்தியமில்லைத்தான். ஆக, கருத்துச்சுதந்திரம் என்பது ஒன்றில் இருதரப்பிற்கும் வாய்ப்புக்களை வழங்குவதாயிருத்தல் வேண்டும் இல்லையேல் சூழலுக்கு இயைபாகவே கட்டமைக்கப்படவேண்டும். எது எப்படியிருந்தாலும் கருத்துச் சுதந்திரம் பற்றிய விவாதங்கள் எழும்போது பல நடுநிலையாளர்களெனப்படுவோரின் முகத்திரை கிழியத்தொடங்குவதே கருத்துச்சுதந்திரமெனக்கொள்க.” என்கிறார் பிறைநிலா கிருஷ்ணராஜா,ஊடகக் கற்கைகள்,யாழ். பல்கலைக்கழகம்.

இங்கு கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக்  குரல் எழுப்புபவர்கள் அந்த திரைப்படத்தின் உள்ளடக்கம் பற்றியும்  யோசிக்க வேண்டும். வெறுமனே கருத்து சுதந்திரம் மீறப்பட்டுள்ளது என்று கூறிக் கொண்டு கோஷமிடுவது அர்த்தமற்றது.  

ஒரு திரைப்படத்தினை திரையிட முன்பு அந்த படத்தின் தாக்கங்கள் பற்றி நாம் சிந்திப்பது அவசியமாகும். இதனால் திரைப்பட விழா இடம்பெறுகின்ற  இடம் இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒருவேளை இத்திரைப்படத்தினை திரையிடுவதால் அங்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளையும் இங்கு நாங்கள் கருத்திற் கொள்ள வேண்டும். அதேவேளை திரைப்பட விழாக்களை நாங்கள் மீண்டும்  நடத்த முடியும். ஆனால் ஒரு திரைப்படத்தினை திரையிட்டு அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களையும், பாதிப்புகளையும் எளிதில் மறக்க முடியுமா?

தென்னிலங்கையில் இந்த திரைப்படத்தினை ஏற்கனவே பல இடங்களில் வெளியிட்ட நிலையில் ஏன் யாழ்ப்பாணத்தில் இந்த திரைப்படத்தினை முன்பே திரையிட முயற்சிக்கவில்லை என்ற ஓர் கேள்வி கேட்கப்படவேண்டியது.”என்கிறார்  டபிள்யூ. கே. ஜனரஞ்சன,சிரேஷ்ட ஊடகவியலாளர்