Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

தமிழர் திருமணம்
மனங்கள் ஒன்றிணைந்தால் போதும் என்று யார் சொன்னது?

“நான் கல்வி கற்றது ஒரு கலவன் பாடசாலை அங்கே என்னுடன் கல்வி கற்ற பிள்ளை அவர். முதலில் என் காதலை ஏற்க மறுத்தவர்பின்னர், என் தீராக் காதலை ஏற்று அவரும் என்னை காதலித்தார். உயர்தரம் முடித்த பின்னர் நான் பல்கலைக்கழத்தில் கற்றேன்…

21.10.2018  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

“பாடசாலைக்காலத்தில் இருந்து வருடக்கணக்காக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை. மிகுந்த வேதனையுடன் அம்மா அப்பா பேசிக்கொண்டுவந்த வேறொரு பெண்ணைத் திருமணம் செய்தேன்.” என்று கூறுகிறார் பெயர் குறிப்பிடவரும்பாத 50 வயது மதிக்கத்தக்க ஒருவர். யாழ்பாணத்தில் வசிக்கும் இவர் தனது நெகிழ்வான தருணங்களை விபரித்தார்.

“நான் கல்வி கற்றது ஒரு கலவன் பாடசாலை அங்கே என்னுடன் கல்வி கற்ற பிள்ளை அவர். முதலில் என் காதலை ஏற்க மறுத்தவர்பின்னர், என் தீராக் காதலை ஏற்று அவரும் என்னை காதலித்தார். உயர்தரம் முடித்த பின்னர் நான் பல்கலைக்கழத்தில் கற்றேன். அவர் ஆசியர் கல்லூரியில் பயிற்சியில் இணைந்துகொண்டார். அப்போதும் எந்த தடையும் இல்லாமல் எம் காதல் இனிமையாகத் தொடர்ந்தது.

எமது கல்வி முடிந்த நிலையில் எமது காதலை வீட்டாரிடம் சொன்ன போது எனது வீட்டார் காதலை ஏற்றுக்கொண்டு நான் காதலித்த பெண் தொடர்பில் விசாரித்தார்கள். அப்பொழுந்து அந்தப் பெண் யாழ்.நகரில் உள்ள பிரபல பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவரின் தந்தை அரச திணைக்களம் ஒன்றில் அதிகாரியாக இருப்பவர். அதானல் அவர்கள் குடும்பம் பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் எமக்குத் தகுதியாகவே இருந்தனர். ஆனால் நன்கு விசாரித்தபின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்க வில்லை. அதற்கு அவர்கள் கூறிய காரணம், அவர்கள் எம்மைவிட சாதியில் குறைவானவர்கள் என்பதே. அப்போது நான் அதை எதிர்த்து காதலித்த பெண்ணை திருமணம் செய்ய ஆயத்தமானேன். ஆனால் வீட்டார் எனக்கு முன்னால் வைத்த விடயம் எனது இரண்டு தங்கைகளின் வாழ்க்கை. தங்கைகளுக்கு திருமண பேச்சுக்கள் நடக்கும் போது அவர்களின் அண்ணன் சாதி குறைந்த பெண்ணை திருமணம் செய்தார் என காரணம் காட்டி தங்கையின் திருமணங்கள் குழம்பும் அதனால் தங்கைகளுக்கு திருமணமே நடக்காது என பயமுறுத்தினர். ஆதனால் நான் எனது 8 வருட காதலை தியாகம் செய்துவிட்டு வீட்டார் பார்த்த பெண்ணை திருமணம் முடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன்” என்றார். இவ்வாறு பல்வேறு காரணங்களால் பொதுவாக யாழ்ப்பாணத்து தமிழர், காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்வதில்லை. திருமணத்தின் போது மனம் ஒத்து போக வேண்டும் என்பதைவிட இரு வீட்டு நிலைகளும் சமதரத்தில் உள்ளதா என பார்க்கிறார்கள். பெரும்பாலும் பெற்றோரே தமது பிள்ளைகளின் வாழ்க்கையை தீர்மானித்து தமது பிள்ளை ,யாருடன் வாழ வேண்டும் என்பதனையும் தீர்மானிக்கிறார்கள். எதற்காக இவர்கள் பேச்சு திருமணங்களை விரும்புகின்றனர்?

 

மருதபிள்ளை மகேந்திராஜா

“அந்த காலத்தில் இருந்து இப்படித்தான் நடக்க வேண்டும் என வகுத்து வைத்துள்ளார்கள். அதனை நாங்கள் மாற்றாமல் பின் பற்றி வருகின்றோம். குடும்பத்தின் அந்தஸ்துக்களை விட்டுக்கொடுக்கும் மன நிலையில் இல்லை. தமது பிள்ளை காதலித்தவர் ஒரே இனம் , ஒரே சாதி , ஒரே மதம் என இருந்தாலும் பெற்றோர் அவர்களை திருமணம் செய்ய விடுவதில்லை. ஏனெனில் சில வேளைகளில் அவர்கள் பொருளாதார ரீதியில் ஏற்ற தாழ்வு உடையவர்களாக இருப்பார்கள். அதனால் தமது குடும்ப அந்தஸ்து குறைந்து விடும் என அவர்கள் அந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். அப்படியான ஏற்றத்தாழ்வு கௌரவக் குறைவானது என எண்ணகின்றனர். சாதி, மாதம், இனம்,பதவி, வர்க்கம் என எல்லாவற்றிலும் சமமானவர்களாக இருக்கவேண்டும் என பார்ப்பர்.” என்கிறார் சித்தங்கேணி பகுதியில் வசிக்கும் பெரியவரான மருதபிள்ளை மகேந்திராஜா(வயது 65).


‘மணமகன் மணமகள் தேவை’யில் தமது சாதி, பதவிகளை வெளிப்படையாக முன்வைத்தே வரண் தேடுகின்றனர்.

ஆம் இன்றும் பத்திரிகைகளில் ‘மணமகன் மணமகள் தேவை’யில் தமது சாதி, பதவிகளை வெளிப்படையாக முன்வைத்தே வரண் தேடுகின்றனர். அவ்வாறு பெற்றோருக்கு எதிராக காதலித்து மணம் முடித்தால் வீட்டில் இருந்தே அவர்களை தள்ளிவைத்துவிடுகின்றனர். வீட்டில் எந்த வித நன்மை தீமை நடந்தாலும் அவர்களை அழைப்பதேயில்லை. அவ்வளவு வைராக்கியமாக கௌரவம் பார்ப்பவர்கள் பலர் உள்ளனர்.

இது மட்டுமல்லாமல் சாதி, மதம், இனம், பதவி, பொருளாதாரம் எல்லாம் சமதரத்;தில் இருந்தாலும் பேச்சுத் திருமணத்தில் சோதிடப் பொருத்தம் முக்கியமாகப்பார்க்கப்படுகிறது.

“திருமணத்தின் போது ஜாதக பொருத்தம் பார்ப்பது மிக முக்கியம். குறிப்பாக மணமக்களின் ஜாதகத்தில் மிக முக்கியமாக ஐந்து பொருத்தங்களை பார்ப்போம். இந்த திருமண பொருத்தங்கள் பார்க்கப்படுவது திருமணத்தின் பின்னர் மணமக்கள் மனம் ஒத்து வாழ வேண்டும் என்பதற்காக. பொருத்தங்கள் சரியாக அமையாவிடின் திருமண வாழ்கை நல்லதாக அமையாது எனும் நம்பிக்கை உண்டு. ஜாதகத்தில் செவ்வாய்க் குற்றம் நிச்சயம் பார்ப்பார்கள். செவ்வாய்க்குற்றம் உள்ளவர் செவ்வாய்குற்றம் உள்ளவரை தான் திருமணம் முடிக்க வேண்டும். அப்படி செவ்வாய்க் குற்றம் உள்ள இருவரைத் தேடிப்பிடித்து திருமணம் முடித்துவைப்பது பெரும் வேலைதான். சில வேளைகளில் பொருத்தம் பார்க்காமல் பிறந்த எண்களை பார்த்தும் திருமணம் செய்வார்கள்.” என்கிறார் திருமணத் தரகர்.

இந்தத் திருமணங்களில் சாத்திரிமார்களுக்கும் பெரும் பங்குண்டு. “செவ்வாய் குற்றம் உள்ள ஒருவரை செவ்வாய் குற்றமற்ற ஒருவரக்கு திருமணம் முடித்து வைத்தால் அவரின் உயிருக்கே ஆபத்து என நம்புகிறோம். ஆதனால் இந்த விடயத்தில் மிகவும் கவனமாக உள்ளோம். ஜாதகத்தில் உள்ள குற்றம் குறைகளுக்கு ஏற்றவாறு தாலி கட்டிகொள்வர்கள். தாலிகளில் பிள்ளையார் தாலி , அம்மன் தாலி , லட்சுமி தாலி, சந்தானகோபாலர் தாலி என உண்டு. அதில் பொருத்தங்கள் சரியாக இருந்தால் பிள்ளையார் தாலி கட்டுவார்கள். குற்றம் குறை இருந்தால் அதற்கு ஏற்ற மற்றைய தாலிகளை கட்டுவார்கள்.” என்கிறார் சாத்திரி சிற்றம்பலம். இவர்கள் தான் திருமணத்தை எந்த மாதத்தில் எந்த திகதியில் எந்த நேரத்தில் நடத்த வேண்டு;ம் என குறித்துக்கொடுக்கிறார்கள். மனம் ஒத்து இணையாத பேச்சுத்திருமணத்தில் இருவரும் மனமொத்து வாழவேண்டுமானால் ஜாதகப்பொருத்தம் தேவை என நம்புகின்றனர்.

இந்த பேச்சு திருமணத்தின் போது சீதன முறை அதிக செல்வாக்கைச்செலுத்துகிறது. ஒரு ஆணுக்கு அவரின் படிப்பு வேலைக்கு ஏற்ப பெண்வீட்டார் கொடுக்கும் சொத்துக்கள் சீதனம் எனப்படுகிறது. பெண் எவ்வளவுதான் படித்திருந்தாலும் ஆணுக்கு சீதனம் கொடுத்தேயாக வேண்டும். படிப்பு பதவிக்கு ஏற்ப வீடு, காணி, வாகனம், பணம் என சீதனம் வாங்கப்படுகிறது.

முன்னைய காலத்தில் சீதன முறை ஏன் வந்தது எனில் , திருமணம் முடித்து தமது பிள்ளைகள் புது வாழ்க்கை வாழ போகும் போது தமது பிள்ளையின் நலன் கருதி வீட்டில் உள்ள சில பொருள் , பண்டங்களை (தளபாடங்கள் , பாத்திரங்கள்) கொடுத்து அனுப்புவோம். அந்த காலத்தில் இவ்வளவு தர வேண்டும் என்றெல்லாம் கேட்க மாட்டர்கள் எங்கள் வசதிக்கு ஏற்ப கொடுப்போம். அந்த நடைமுறை தற்போது மாற்றம் பெற்று தற்போது பணம் வாங்குவதில் குறியாக உள்ளார்கள். இவ்வளவு தா கேட்டு வாங்குகின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் தான் இந்த நிலைமை மிக மோசமாக உள்ளது. இந்த சீதன பிரச்சனையால் பலர் திருமணம் முடிக்காமல் இருக்கிறார்கள். சீதனம் கொடுப்பதற்கு முடியாது பல பெண்கள் திருமணம் முடிக்காமல் இருந்தாலும் அதே போல தாம் கேட்ட சீதனத்துடன் பெண் கிடைக்க வில்லை என காத்திருக்கும் ஆண்களும் அதிகம் உண்டு.

பல ஆண்கள் தமக்கு பெண் சகோதரிகள் இருந்தால் பெண்ணை பிடிக்குதோ பிடிக்கலையோ சீதனம் வாங்குவதற்காக திருமணம் முடிக்கின்றார்கள். அதேபோல பெண்களும் தமக்கு பெண் சகோதரிகள் இருந்தால் அவர்களுக்காக குறைந்த சீதனம் கேட்கும் ஆணை விரும்பியோ விரும்பாமலோ திருமணம் முடிக்கின்றார்கள்.
இவ்வாறு இருமனங்கள் ஒன்றிணைந்து நடப்பதல்ல திருமணம், இரு குடும்பங்கள் ஒன்றிணைகின்ற சம்பவங்களாகவே திருமணம் பார்க்கப்படுகிறது. இரு குடும்பத்திற்கும் ஒத்துப்போனால்தான் திருமணம் நடைபெறும்.