Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

ரயில் சினேகிதம்
35 வருடங்களுக்கு மேலாக குடும்பமாக தொடர்கிறது!

அண்மையில், என்னுடன் ரயிலில் பயணிக்கும் சக நண்பரின் மகனின் திருமண வைபவத்தில் கலந்துகொண்டேன். இதில் என்ன புதுமையென்றால் அந்த நண்பரின் திருமணத்திற்கும் நான் சென்றிருக்கிறேன். சென்றது மட்டுமல்லாமல், மாப்பிள்ளைத் தோழனாகவும் நான்தான் சென்றிருந்தேன்”

31.10.2018  |  
புத்தளம் மாவட்டம்
புகையிரதத்தில்...

காலை 8.30. தேனீக்கூட்டில் கல்லெறிந்தால் இரைந்துகொண்டு வருகின்ற தேனீக் கூட்டம் போல் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். அன்றாடம் இதே காட்சிதான். இவர்கள் அனைவரும் வேலைக்காக கொழும்பை நோக்கி வருபவர்கள். இதே காட்சியை மாலை 4.30க்கும் காணலாம்.
“ சுமார் 35 வருசங்களாக இந்த ‘பங்கே’ ரையின்ல போய் வாறன். நான் படிக்க கிளாஸ் போனதும் இந்த ரையின்லாதான இப்ப வேலைக்கு போறதும் இந்த ரையின்லதான். இந்த ரயில் மட்டுமில்ல…இந்தப் பெட்டியில தான் 35 வருசமா போய்வாறன்.” ஏன்று பெருமிதத்துடன் கூறுகிறார் நஸ்ரின் மரிக்கார். இதனால் பல காதல் திருமணங்களும் நடந்தேறியுள்ளன.

நாட்டில ஜெவிபி கலவர நடந்த காலத்திலையும் போயிருக்கன். யுத்தம் நிலவிய காலத்திலையும் போயிருக்கன், இதே ரெயினிலதான். அது ஒரு கொடுமையான அனுபவம்தான். சிலவேளைகளில இடைநடுவில் ரெயின் நிறுத்தப்படும். அப்போ மற்றைய நண்பர்களையும் சேர்த்துக் கூட்டிக்கொண்டு பல கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று பஸ்ஸில பயணம் செய்திருக்கின்றோம். எல்லாம் நண்பர்களுடன் சேர்ந்தே அனுபவித்த துன்பங்களும் இன்பங்களும்.” என்கிறார் ஏ. ஏக்கநாயக்க.

பிறந்தநாள் கொண்டாட்டம்.

‘நாம்’ என்ற பொதுப்பாற் சொல்லானது ஒற்றுமையைக் குறிப்பதற்கு பதிலாக பாகுபாட்டைச் சித்தரிப்பதையே முனைப்பாகக் கொண்டுள்ளது. ‘நாம் தமிழர்’, ‘நாம் சிங்களவர்’, ‘நாம் முஸ்லிம்கள்’ என்று இனரீதியாகப் பாகுபடுத்திக் கொள்கின்றோமே ஒழிய எல்லோரும் ஒற்றுமையாக ‘நாம் இலங்கையர்’ என்று சொல்வதற்கு தயங்குகின்றோம். எமது நாடு பல்லினத்துவ கலாச்சராத்தைக் கொண்டதொரு நாடு. இங்கு பலரும் பலவிதமான கலாச்சாரங்களைப் பின்பற்றி வருகின்றனர். இதில் சிலர் இனரீதியாக தங்களது கலாச்சாரத்தையும் மொழியையும் மேன்மையையும் தக்கவைத்துக்கொள்வதற்காக எதையும் செய்யலாம் என்ற சூழல் வந்துவிட்டது. ஆனாலும் அதையும் தாண்டிய ஒரு கலாச்சாரம் ஒன்று இன்றும் புகையிரதப் பயணிகளிடையே காணப்படுகின்றது. ‘புகையிரதப் பயணிகள்’ என்ற ரீதியில் எல்லோரும் ஒன்றாகவே பயணிக்கிறார்கள். ரயில் சினேகிதர்களாக வருடக்ககணக்காக தங்கள் நட்புறவைப் பாராட்டிவருகிறார்கள்.

சீட்டு விளையாட்டு

என்ன தகவல்கள் என்றாலும் பரிமாறிக்கொள்கிறார்கள். “அண்மையில் நடைபெற்ற புகையிரத சேவையாளர் ஆர்ப்பாட்டத்தின் போதும் சில ரயில்கள் சேவையில் இருக்கவில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாங்கள் பல இடங்களில் ரயில்வேத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தமையால் பல தகவல்களை நான் அறிந்துகொண்டதுடன் என்னுடைய சகநண்பர்களுக்கும் முற்கூட்டியே அறிவித்து மாற்று வழிகளை நாடுவதற்கு வழியேற்படுத்தினேன்.” என்கிறர் டபிள்யு.ஈ.ஏக்கநாயக்க. இவ்வாறு தகவல்களைப் பரிமாறுவதற்கு மட்டுமல்ல அதையும் தாண்டி ஒரு நட்பை அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

“நாங்கள் அனைவரும் இரத்தத்தாலும் சதையாலும் மனித உணர்வுகளாலும் இணைக்கப்பட்ட சதைப் பிண்டங்கள் தான். நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பயணிக்கும் பயணிகள் நாம் அடிக்கடி சந்தித்துக்கொள்வதனால் நண்பர்கள் ஆசுவாசமாக நடந்துகொள்வதாலும் எமது தொழில் ரீதியான அழுத்தங்களையும், குடும்ப ரீதியான அழுத்தங்களையும் இறக்கிவைக்கின்ற ஒரு தளமாக இந்த ரயில் பெட்டியுள்ளது.” என்கிறார் ஏ.என். சாமந்தி.
புயணத்தின் போது பல்வேறுகதைகளில் இவர்கள் ஈடுபட்டாலும் சில விளையாட்டுக்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.


நண்பரின் மகனின் திருமண வைபவத்தில் கலந்துகொண்டேன். இதில் என்ன புதுமையென்றால் அந்த நண்பரின் திருமணத்திற்கும் நான் சென்றிருக்கிறேன்.

“நாங்கள் இந்த மூன்று மணிநேரப் பயணித்தில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களைக் கைவசம் வைத்துள்ளோம். புத்தகம் வாசித்தல், பாட்டுக்கேட்டல், புதிய சினிமாப்படங்களை பரிமாரிக்கொள்ளல், சீட்டு விளையாடுதல், கல்வித்துறைசார்ந்த ரீதியிலான அனுபவப் பகிர்வுகள், சில அன்றாட அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான விடயங்களை பரிமாறுதல் எனப் பொழுதினைப் போக்குகின்றோம்.” ஏன்கிறர் சனுன் மரிக்கார்.
இவர்கள் அனைவரும் ஒரே மதத்தையோ ஒரே இனத்தையோ ,ஒரே சூழலில் வளர்ந்தவர்களோ அல்ல. எங்கயோ பிறந்து எங்கயோ வளர்ந்து ஒரு பொதுவான தேவையொன்றினை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டுக் செல்லும் வழித்தடத்தில் கிடைக்கப்பெற்றவர்கள். இங்கே பயணிக்கும் அனைவரது நோக்கங்களும் ஒன்றல்ல. வேறுபட்ட எண்ணங்கள,; வேறுபட்ட சிந்தனைகள், வேறுபட்ட எண்ணக்கருக்களைக் கொண்டவர்கள். ரயில் பயணித்தினை அன்றாடம் மேற்கொள்கின்றவோது இந்த ரயில் பெட்டி நண்பர்களாக பல கருத்து முரண்பாடுகளைக் கடந்து பயணிக்கிறார்கள்.

அப்பப்போ பாண்பார்டி, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பண்டிகைகள் என இந்த ரயில் பெட்டி உணவுப் பொருட்களால் களைகட்டுகிறது. பல்லின கலாசாரங்களுடன் தொடர்புபட்ட பலகார வகைகள், உணவுவகைகள் பரிமாறப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், சில காலங்களில் அதிகமாக கிடைக்கக் கூடிய ஈரப்பிலாக்காய், பலாக்காய், போன்ற உணவுகளை சமைத்துக்கொண்டுவந்து பரிமாறுகிறார்கள். தமது தோட்டங்களில் சில பருவங்களில் மாத்திரம் கிடைக்கின்ற காய்கனிகளை கொண்டுவந்து நண்பர்களிடம் பங்கிடுவது போன்ற நட்பின் அடிப்படையிலான கொடுக்கல்வாங்கலும் நடைபெறுகின்றன. இவை வெறும் ரயில் சினேகிதம் மட்டுமல்ல. குடும்ப உறவாகவும் மாறிப்போகும் நிகழ்வுகளுகளும் உள்ளன.

ரயில் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து ஒன்றிணைந்து பயணித்த 25 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

“அண்மையில், என்னுடன் ரயிலில் பயணிக்கும் சக நண்பரின் மகனின் திருமண வைபவத்தில் கலந்துகொண்டேன். இதில் என்ன புதுமையென்றால் அந்த நண்பரின் திருமணத்திற்கும் நான் சென்றிருக்கிறேன். சென்றது மட்டுமல்லாமல், மாப்பிள்ளைத் தோழனாகவும் நான்தான் சென்றிருந்தேன்” கண்கள் விரிய எம்முடன் விபரிக்கிறார் ரயில் தோழர் ஒருவர்.

இதுபோல் நண்பர்களின் மரணவீடு, சடங்குவீடு, ரயிலில் பயணிக்கும் சகநண்பர்களின் சுகதுக்கங்கள் என அனைத்திலும் பங்குகொள்ளும் அளவுக்கு வீடுவரை இந்த ரயில் சினேகிதம் இறுக்கமாக மாறியுள்ளது. ரயில் சினேகிதம் என்றால் அப்பப்போ காண்வதும் கதைப்பதும் போய்விடுவதுமாக இருக்கும். ஆனால் இங்கே ஒரு இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும் அளவிற்கு ரயில் சினேகிதம் தொடர்ந்துகொண்டேயுள்ளது. இதன் ஒரு வெளிப்பாடாக
அண்மையில் ரயில் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து தாம் ஒன்றிணைந்து பயணித்த 25 ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுமுகமாக வென்னப்புவயில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றில் விருந்துபசாரம் நடத்தியுள்ளனர். இதில் உள்ள சிறப்பை அவர்களே விபரித்தனர்.

“ ஹோட்டல் வசதி உட்பட உணவு, புகைப்படப்பிடிப்பு, பாடகர்கள், பரிசுகள் என நாம் 140 பேர் மகிழ்ச்சில் திழைத்தோம். அதன்போது ஏற்பட்ட செலவுகள் அனைத்தும் இலவசமாக கிடைத்தமைதான் இதன் சிறப்பு. ரயிலில் பயணித்த நண்பர்கள் அனைவரும் தாம் தாம் சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்த சேவைகளை எமக்க இலவசமாகவே பெற்றுக்கொடுத்தனர். மிகவும் சந்தோசமாக இருந்தது.” என்கின்றனர். தமது நட்பு வட்டாரத்தை இன்னும் விரிவடைய வைக்கவேண்டும் என இவர்கள் விரும்புகின்னறனர்.

“ஆனால் இன்று கடுகதி ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எமது பயணநேரத்தை குறைத்துள்ளது. நன்மைதான். ஆனாலும் கவலையாக உள்ளது. எம் நண்பர்கள் பலர் பிரிந்து அந்த ரயிலில் பயணிக்கின்றனர். சிலவேளைகளில் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் ஆனால் அவர்களை தினமும் பார்க்கக் கிடைப்பதில்லை என்ற கவலையும் எனக்குண்டு” என்று கூறுகிறார் பி.பானுமதி.