Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

மருதோடைக் கிராமத்தில் இருந்து....
எங்கள் நிலத்தைக் காணவில்லை!

“ இங்க வந்தா எங்கட காணியில தோட்டம் செய்து பிழைக்கலாம் எண்டு நினைச்சம். இப்ப காணியே இல்லை. எங்கள் வீட்டில நாங்க நட்டிருந்த மரம், வெட்டின கிணறு, கட்டின மலசலகூடம் எண்டு அடையாளங்கள தேடினம். அதுவே கஸ்ரமாதான் இருந்துது. பிறகு ஒருமாதிரி கண்டுபிடிச்சிற்றம். ஆனா அது எங்களுக்கு இல்லையாம். அது அரசுக்கு சொந்தமான காடாம்.”

13.11.2018  |  
வவுனியா மாவட்டம்
ஜெரா
சுயாதீன பத்திரிகையாளர்

“ நாங்க 83 ஆம் வருசத்தில இங்க இருந்து திடீரென வெளிக்கிட்டம். எல்லா பக்கமும் வெடிச்சத்தம். அம்மா, அப்பாவோட 3 சகோதரிகளுடன் எல்லாரும் ஓடினோம். எல்லாத்தையும் அப்பிடியே விட்டுட்டு ஓடிப்போனம். நெடுங்கேணி பள்ளிக்கூடம், வவுனியா, மெனிக் பாம், எண்டு இருந்து பிறகு அப்பிடியே மன்னார் வழியா ராமேஸ்வரம் போயிட்டம். அங்க இருந்து 35 வருசத்துக்கு அப்புறமா இப்ப ஊருக்கு வந்திருக்கிறன். இப்ப நான் மட்டும் என்ரை குடும்பத்தோட தனியா. அம்மா அப்பா ஒரு சகோதரினு எல்லாரும் இந்தியாவில இறந்திற்றாங்க. இன்னும் ரெண்டு சகோதரிகள் இந்தியாவில முகாம்லயே இருக்கிறாங்க. இங்க வந்தா எங்க வீடும் இல்ல நிலமும் இல்லை என்கிறார் திருமதி வேலாயுதம்.

நிலம் இல்லையா?

/

ஆம் மருதோடை என்ற சிறிய கிராமம். இலங்கையின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது.
யாரும் இலகுவில் சென்றடைந்துவிடமுடியாதளவு தொலைவிலும் பயணிக்கமுடியாத ஒற்றையடிப்பாதைகளையும் கொண்டிருக்கிறது. இந்த மாதிரியான கிராமங்கள் அங்கு வாழ்பவர்களைத் தவிர வேறு மக்களின் கண்களில் படுவதே இல்லை. அதனால் அதிகளவில் ஊடக வெளிச்சமும் கிடைப்பதில்லை. நெடுங்கேணி சந்தியில் இருந்து முச்சக்கரவண்டியில் புறப்பட்டால் 1000 ரூபாவுக்கு குறையாத தொகையும், காலை மற்றும் மாலை என மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் பேரூந்தில் பயணித்தால் 90 ரூபாய்க்கு குறையாத தொகையும் கொண்ட தூரத்தில் இந்தக்கிராமம் உள்ளது.

மருதோடை. இங்கு எப்போதிலிருந்து தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதற்கான வரலாற்றுப் பதிவுகள் எவையும் தேடிப்பெறுவதற்கில்லை. ஆனால் வவுனியா மாவட்டத்தில் மிகத் தொன்மையான காலத்திலிருந்து இந்தக் கிராமத்தில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதும், வன்னி பெருநிலப்பரப்பு முழுவதும் பிரபலமான பரிகாரி மரபொன்று இங்கிருந்ததென்பதும் விசாரித்து அறியக்கூடிய வரலாறாக இருக்கின்றது. 1980 ஆம் ஆண்டுகளில் இந்தக் கிராமத்துக்கு அருகில் உருவாக்கப்பட்ட டொலர் பாம், ஹென்பாம், சிலோன் தியேட்டர், தனிக்கல்லு முதலான பெரும் பண்ணைகள் பொருளாதார வலுவையும், விவசாய செழிப்பையும் அங்கு மேலோங்கச் செய்திருக்கின்றன.

1983 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட பதவியா சிங்கள மக்கள் குடியேற்றத்தின் விளைவாக வவுனியா வடக்கின் எல்லைக்கிராமங்கள் தொடக்கம் முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று எல்லைக்கிராமங்கள் வரைக்கும் வன்முறைகள் இடம்பெற்றன. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட போர் நிலமைகள் காரணமாக மக்கள் இப்பகுதிகளை விட்டு நிரந்தரமாகவே வெளியேறிவிட்டனர்.அப்படி வெளியேறியவர்களில் ஒருவர்தான் இந்த திருமதி.வேலாயுதம்.

திருமதி வேலாயுதம் குடும்பத்தினருடன் தற்காலிக கொட்டகையில்

2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வரும் வரைக்கும் இந்தப் பகுதிகள் சூனியப் பிரதேசமாகவே இருந்தன. 2011 ஆம் ஆண்டிலேயே – 25 வருடங்களுக்குப் பின்னர் மக்களில் சிலர் ஊர் திரும்பினர். 2011 பலர் மீளத்திரும்பவில்லை. போரில் இறந்தவர்கள், காணாமல்போனவர்கள், இந்தியாவுக்கு சென்றவர்கள், நாட்டின் ஏனைய மாவட்டங்களில் நிரந்தரமாக குடியேறியவர்கள் போக எஞ்சிய மிகச் சொற்பமான குடும்பங்களே அப்போது ஊர் திரும்பினர்.

அவ்வாறு ஊர் திரும்பியவர்கள் மருதோடை கிராமத்தின் ஆரம்ப்பகுதிக்குரியவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் காணிகளை திருத்தி, வீட்டுத்திட்டங்களைப் பெற்று, விவசாயத்தில் ஒரளவு செழிப்புற்று வாழ்ந்து வருகின்றனர். இப்போது இந்தியாவிலிருந்தும், நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் தம் சொந்த கிராமத்துக்கு திரும்பியிருக்கும் கந்தன் சோமு போன்றோர் தங்கள் நிலங்களைத் தேடிவருகின்றனர். இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 37 குடும்பங்கள் இவ்வாறு தங்கள் செந்த நிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு வந்திருப்பவர்களில் அனேகரிடம் அவர்களின் காணிகள் தொடர்பான ஆவணங்கள் எவையும் இல்லை. போரிலும், இடப்பெயர்விலும் அனைத்தும் தவறிப்போனதாக கூறுகிறார்கள்.

அத்துடன் 35 வருசம் என்பது இரண்டாவது சந்ததிக்கான காலம். இடம்பெயர்ந்து போகும்போது குழந்தைகளாக சென்றவர்கள், இப்போது குடும்பமாகி அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டனர். 40, 50 வயதுகளில் வந்து நிற்கின்றனர்.
அப்படியானவர்களில் ஒருவர்தான் திருமதி.வேலாயுதம். இந்தியாவிலிருந்து மருதோடை திரும்பியிருக்கிறார்.

தங்கள் நிலங்களைத் தேடிக்கொண்டிருக்கும் இவர்களிடம் அது பற்றி கதைத்தோம்.

“ இங்க வந்தா எங்கட காணியில தோட்டம் செய்து பிழைக்கலாம் எண்டு நினைச்சம். இப்ப காணியே இல்லை. எங்கள் வீட்டில நாங்க நட்டிருந்த மரம், வெட்டின கிணறு, கட்டின மலசலகூடம் எண்டு அடையாளங்கள தேடினம். அதுவே கஸ்ரமாதான் இருந்துது. பிறகு ஒருமாதிரி கண்டுபிடிச்சிற்றம். ஆனா அது எங்களுக்கு இல்லையாம். அது அரசுக்கு சொந்தமான காடாம்.” என்ற கூறுகிறார் திருமதி வேலாயுதம்.

என் கையாலே வெட்டிய காணி என்று கூறும் ரவி இரத்தினம்.

“35 வருசமா எங்களால இங்க இருக்க முடியேல்ல. அப்ப அது காடா மாறீற்று. அதுக்கு அது எங்கட நிலம் எண்டு இல்லாமல் போகுமே?” 70 வயதைக் கொண்ட ரவி இரத்தினம். மருதோடை கிராமத்தின் மூத்தகுடிமகன். ஆவர் தனது கைகளைக் காட்;டியவாறே,

” நான் தான் இளைஞனா இருக்கேக்க இந்தக் காட்டை என்ரை கையால வெட்டி காணியாக்கினன். இதுக்கு உறுதி கூட தந்திருந்தாங்க. இப்ப எல்லாமே கைவிட்டுப்போச்சி. இப்ப வந்து காணிய துப்பரவாக்கினா வன வள பாதுகாப்பு திணைக்களம் விடுறாங்க இல்ல. இதெல்லாம் பாதுகாக்கப்பட்ட காடாம். 30 வருசத்துக்கு முதல நாங்க பூர்விகமா இருந்து விவசாயம் செய்த காணிகள் இது. பாருங்க கிணறுகள் கூட இடிஞ்சி போய் அப்படியே இருக்கு. மலசல கூடங்கள் இருக்கு. இதெல்லாம் காட்டுக்குள்ள எப்படி வரும்?..நாங்க நட்ட மரங்கள் கூட காடாகி அப்பிடியே நிற்குது…? இது என்ன நியாயம்?” மிகவும் மனவருத்தத்துடன் அந்தப் பெரியவர் தன்நிலையை முன்வைக்கிறார்.

/

பக்கத்தில் ஒரு சிறிய இடத்தில் ஒரு சின்னக்கொட்டகை கட்டி இருக்கும் இந்தப்பெரியவர் பெரிய மழைவந்தால் ஒதுங்;கமுடியாது. ஆவ்வளவு மிகச்சிறிய கொட்டகை ஒன்று அமைக்கதான் பிரதேச செயலகம் உதவியுள்ளது.
“நாங்கள் இந்தியாவில் இருக்கும்போது இலங்கையில் வாழலாம் எல்லாரும் திரும்பி வாங்க எண்டு சொன்னாங்க. இங்க வந்ததும் சொந்தக் காணிக்குள்ள விடுறாங்க இல்ல. இரவில பிள்ளைகளோட நிம்மதியா நித்திரை கொள்ளக்கூட முடியுதில்ல. காடுதானே. ஒரே பாம்பு. இன்றைக்கு கூட ரெண்டு பாம்பு அடிச்சிட்டம்” என்கிறார் ரவி.

அடர்ந்த காட்டுக்கு நடுவில் பாதுகாப்பற்ற கொட்டில்கள், சரியான சுகாதார, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட மீள்குடியேற்ற கட்டுமான வசதிகள் செய்துகொடுக்கப்படாத மீள்குடியேற்றம் என மருதோடை கிராம மக்களின் அவலம் நீடிக்கிறது. இந்த நிலையில் பலருக்கு காணியே பறிபோன நிலை. இந்தியாவில் இருந்து மக்களை மீள வரவழைத்த அரசு அவர்களுக்கான நிரந்தர குடியிருப்புக்கு வழிவகைகளைச் சரியாகச் சொய்யவில்லை.
இந்த விடயம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கருத்துவெளியிட்ட அப்போதைய கூட்டு எதிரணியின் ஊடகப் பேச்சாளர், “450 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாசிகள் வவுனியா வடக்கில் மருதோடை எனும் கிராமத்தில் குடியேறியிருக்கின்றனர். இது சட்டவிரோதமான செயல்” எனக் குறிப்பிட்டார். போர் நிலமைகள் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, மீளவும் அதே இடத்துக்கு அரசின் வாக்கை நம்பி வந்தவர்களை வெளிநாட்டுக் குடியேறிகளின் குடியேற்றமாக பார்க்கும் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது?

“இந்த லட்சணத்தில எப்பிடி நாங்க இந்தியாவில இருக்கும் சகோதரங்கள இங்க வரச்சொல்லி கூப்பிடுறது.? ஏன்று அதங்கப்பட்டார் திருமதி வேலாயுதம்.
இவ்வாறு மீளக்குடியேற வந்தவர்களை திரிசங்கு சொர்க்கத்தில் நிறுத்தியது யார்?
” இந்தக் கிராமத்தில் மீள்குடியேறியிருக்கும் மக்களுக்கு பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் மிகச் சொற்பமான உதவிகளையே செய்திருக்கு. பக்கத்து ஊர் மக்கள் உணவுப் பொருள், குடிநீர் உதவிகளைச் செய்யினம். ஆனால் பலம்பொருந்திய அரச திணைக்களமான வன வளத் திணைக்களம் இந்த மக்களை குடியேறவோ, தங்கட காணிகள துப்பரவாக்கவோ வேண்டாம் எனச் சொல்லியிருக்கு.” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத பிரதேச சபை உறுப்பினர் ஒருவர்.

இதை நம்பி வந்தவர்களை என்னசெய்வது?

“இப்பிடியொரு தடை இருக்கிறபடியால் இதை மீறி எந்த அரச திணைக்களங்களாலும் முழுமையான உதவிகளை இவர்களுக்கு வழங்க முடியாது.” என்கிறார் அந்த பிரதேச சபை உறுப்பினர்.

முக்கள் குடியேறி இருந்த காணிகளை வனவள பாதுகாப்பு திணைக்களம் எப்படி கையகப்படுத்த முடியும்? அவர்களிடமே கேட்டோம்.
“கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியில் இப்போது பிரச்சினைக்குள்ளாகியிருக்கும் மருதோடை கிராமப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம்செய்யப்பட்டள்ளது. அப்போது பாராளுமன்றத்திலோ வெளியிலோ இது பற்றிய யாரும் எதிர்ப்புக் கூறவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் கூட இதைப்பற்றி எதுவும் கதைக்கவில்லை. நாம் சட்டத்தை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறோம். சட்டத்தை மீறி காடழிப்பதை நாம் அனுமதிக்க முடியாது.” என்கிறார் இந்த விடயத்தைக் கையாளும் வனவளத் திணைக்களத்தை சார்ந்த அதிகாரி ஒருவர்.

மக்களுக்காக சட்டமா? சுட்டத்திற்காக மக்களா?

 

https://www.google.com/maps/place/Maruthodai+Kulam/@8.9718267,80.6564994,6165m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3afc048f3820951d:0x93aa269fcff4629!8m2!3d8.9705556!4d80.6708333