Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வாங்க…! வாங்கலையோ…! அன்னாசி…!
தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை ‘எப்படி சுகம்’?

கம்பகா வெலிவேரிய பகுதியில் இருந்து மன்னார் 286 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. சாதாரணமாக பொதுப் போக்குவரத்து அல்லாத சொந்த வாகனங்களில் பயணிக்கின்றபோது 5 மணித்தியாலமும் 30 நிமிடமும் ஆகும். ஏனெனில் எங்கள் வீதிகள் அப்படியானவை. இந்த நிலையில் அன்னாசி விற்பனைக்கான இவர்களது வருகையானது கிரமத்தவர்களுக்கு பொருளாதார தேட்டம் அவ்வளவு ஒன்றும் இலகுவானதல்ல என்பதையே உணர்த்துகிறது.

12.03.2019  |  
மன்னார் மாவட்டம்

“வாங்க….! சின்ன அன்னாசி அம்போருவா வாங்கலையோ… அன்னாசி அச்சாரு அம்போருவா…. வாங்கலையோ…!”

எனத் தமிழில் கூவிக் கூவிக் விற்கின்றார் அஸ்லின் நவரத்ன என்ற அந்த சிங்களப் பெண்மணி. மன்னார் நகரின் மத்தியில் பஸ்தரிப்புக் கட்டத்திற்கு முன்னால் ஒரு குடைக்கடியில் நிற்கும் அவருக்கு ஐம்பது வயது எனச் சொல்லாம். கம்பஹா வெலிவெரிய பகுதியைச் சொந்த ஊராகக் கொண்ட அஸ்லின் நவரத்ன அன்னாசி விற்பனைக்காக தமிழர்கள் அதிகமாக வாழும் மன்னார் நகரிற்கு அடிக்கடிவந்து செல்லும் ஒரு சிறு வியாபாரி.
“என்னுடைய மகன் மார்கள் முதல் முதலில் இங்கே அன்னாசி வியாபாரம் செய்துவந்தார்கள். நான் பிறகுதான் வந்து சேர்ந்தன். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் எனது மகன்மார் இங்கு வந்து காடுகள் மேடுகள், ஏறி கிராமங்களுக்குச் சென்று அன்னாசி வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் மக்கள் அதிகமாக வந்து போகும் பாலத்தடியில் வந்து வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். வியாபாரம் சூடுபிடிக்கவே என்னையும் உதவிக்கென அழைத்து வந்தார்கள். எனக்கும் இந்த வியாபாரம் பிடித்துப் போய்விட்டது. இந்த பஸ் ஸ்டான்ட்கிட்ட இருந்து விற்பனை செய்வது இலேசாக இருந்ததால் இங்கு வியாபாரத்தில் இறங்கினேன்.” என்று தான் மான்னாருக்கு வந்து சேர்ந்த கதையைக் கூறுகிறார் அஸ்லின் நவரத்ன.

அஸ்லின் நவரத்ன அன்னாசி விற்பனைக்காக தமிழர்கள் அதிகமாக வாழும் மன்னார் நகரிற்கு அடிக்கடிவந்து செல்லும் ஒரு சிறு வியாபாரி.

கம்பகா வெலிவேரிய பகுதியில் இருந்து மன்னார் 286 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. சாதாரணமாக பொதுப் போக்குவரத்து அல்லாத சொந்த வாகனங்களில் பயணிக்கின்றபோது 5 மணித்தியாலமும் 30 நிமிடமும் ஆகும். ஏனெனில் எங்கள் வீதிகள் அப்படியானவை. இந்த நிலையில் அன்னாசி விற்பனைக்கான இவர்களது வருகையானது கிரமத்தவர்களுக்கு பொருளாதார தேட்டம் அவ்வளவு ஒன்றும் இலகுவானதல்ல என்பதையே உணர்த்துகிறது. அதிலும் நாட்டின் பிரச்சினைகள் ஓய்;ந்து இருந்த காலப்பகுதியில் தமிழ் மொழியும் தெரியாது இவர்கள் தமிழ் பிரதேசத்தை தமது பொருளாதார தேட்டத்திற்கான பகுதியாக தெரிவுசெய்தமை அவர்களது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.
“என்னுடைய மகன்மார்கள் இங்கு வந்து நான்கு வருடங்கள் என்பதால் அவர்கள் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். எனக்கு சுத்தமா தமிழ் தெரியாது. நான் போன வருசம் இங்க வரும்போது கொஞ்சம் பயத்துடனேயே வந்தேன். எனக்கு பாசையும் தெரியாது, வேற்று இன, மத, மொழியை சேர்ந்தவள் எவ்வாறு சாமாளிப்பதென்று மனதுள் பயம் இருந்தது. ஆனால் எனது மகன்மாரும், இங்குள்ள சிலரும் எனக்கு பக்க பலமக இருந்தனர். இங்குள்ளவர்கள் வேற்றுமையின்றி என்னுடன் பழகுகின்றார்கள். இங்கு இருக்கும் சக சிறுவியாபாரிகளும் அவர்களுக்கு வேலைப்பழுவாக இல்லாத பொழுதுகளில் எனக்கு உதவி செய்வதற்கு வருவார்கள். நானும் அவ்வாறே அவர்களுக்கு உதவி செய்யப் போவேன். தமிழில் தெரியாத சொற்கள் சிலவற்றை அவர்களும் சொல்லித்தருவார்கள். இங்கு வருபவர்களும் எனக்குச் சிலவிடயங்களை தமிழில் சொல்லித்தருவார்கள்.” என்று பெருமிதத்துடனும் மகிழ்வுடனும் கூறுகிறார் அஸ்லின் நவரத்தின. தமிழ் தொரியாத அவர் தமிழ் பிரதேசத்தில் எப்படிச் சாமாளித்தார்?


 நான் போன வருசம் இங்க வரும்போது கொஞ்சம் பயத்துடனேயே வந்தேன். பாசையும் தெரியாது, வேற்று இன, மத, மொழியை சேர்ந்தவள் எவ்வாறு சாமாளிப்பது… ஆனால்,

“நான் இங்கு வந்தவுடன் முதல் முதலில் கற்ற தமிழ் சொல், ‘வணக்கம்’ எனக்கு தமிழில் பிடித்த சொல், ஒருவரைக் கண்டவுடன் கேட்கும் ‘ எப்படி சுகம்…?’ என்ற வார்த்தை. ஆனாலும் கொடுக்கல் வாங்கலின் போது, நூற்றி ஐம்பது ரூபாய்… நூற்றி இருபது ரூபாய்… ஆகிய இரண்டு சொற்களும் என்னைக் குழப்பிவிட்டுவிடும். நான் சொல்லும்போது இரண்டுக்கும் அதிக வேறுபாடு தெரிவதில்லை. அதனால் அன்னாசி வாங்குபவர்கள் நான் ஒரு விலையைச் சொல்லி வேறு ஒரு விலைக்கு விக்கிறன் என கோபப்படும் தருணங்களும் உண்டு.” என்று கூறி கவலையும் கொள்கிறார் இவர்.
‘தற்போது என்னால் அதிகம் தமிழ் பேசத் தெரியாவிட்டாலும் தமிழில் என்ன பேசுகின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளேன்’ என்றும் கூறும் இவர் அதற்கு காரணம் தாங்கள் மன்னாரிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பதாக கூறுகிறார். ஆனாலும் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ கம்பகாவிற்கு சென்றுவருகிறார்.
“பத்து நாட்களுக்கு ஒரு முறை, ஊருக்குச் சென்று லொறியில் அன்னாசி ஏற்றி வருவேன். சிலவேளைகளில் ஒருகிழமைக்கு ஒரு முறை சென்று வருகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு” என்ற கூறும் இவரிடம் ஒரு நாளைக்குரிய வியாபாரம் பற்றிக் கேட்டோம்.
“காலையில் ஒரு 8.30 மணிக்கு இங்கு வந்தேன் என்றால், மாலை 5.30, 6.00 மணிவரைக்கும் வியாபாரம் செய்வேன். நான் எனக்கென ஒரு இலக்கை வைத்துள்ளேன். எப்படியேனும் ஐம்பது, நூறு அன்னாசியை ஒரு நாளைக்கு விக்க முயற்சி செய்வேன். அதிலிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாய் வரையில் கிடைக்கும். அதுவும் நான் மலிவாக அன்னாசியைக் கொள்வனவு செய்தால் மட்டுமே சிறந்த முறையில் விற்பனை செய்ய முடியும். கம்பகாவில் அன்னாசி விலை ஏறிய காலங்களில் விற்பனையில் ஈடுபடமுடிவதில்லை. அவ்வாறு கிடைக்காத காலங்களில் நான் எனது வீட்டிற்குச் சென்றுவிடுவேன். ஆனாலும் மாதத்தில் இரு முறையேனும் அன்னாசி விற்பனை செய்ய முயற்சி செய்வேன்.
சீசன் என்றால் பெரும்பாலும் அது டிசெம்பர்தான். இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்குவர்கள். அதுதவிர, இப்பகுதியில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் வசிப்பதனால் டிசெம்பர் மாதங்களில் இங்கு இருக்கின்ற பல தேவாலயங்களில் கொடியேறி திருவிழாக்கள் நடைபெறும், நத்தார், புதுவருசம் என மக்கள் கிராமப்புறங்களில் இருந்து மன்னார் நகருக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள். அப்படியே எனக்கு கொஞ்சம் வியாபாரம் அமோகமாக இருக்கும்.” என்று தனது வியாபார நிலைமைகளைக் கூறி முடித்தார்.
இப்படி சுறுசுறுப்பாகவே இருக்கும் அஸ்லின் 50வயதுபோல் தோற்றமளித்தாலும் அவரின் உண்மையான வயது 68! நம்ப முடியவில்லை. அதற்கு காரணம் அவரது உழைப்பும் வாழ்க்கை முறையும்தான்.
“என்னுடைய பிள்ளைகள் எனக்கு எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. ஆனாலும் எனக்கு உடலில் வலு உள்ள காலங்களில் நான் உழைத்து உண்ண வேண்டும் என விரும்புகிறேன். அவர்களுக்கு சுமையாக இருக்கமுடியாது. அவர்களுக்கும் குடும்பம், கடன் எனச் சுமைகள் இருக்கும். அதனால் நான் என் பிள்ளைகளிடம் கையேந்துவதில்லை. என்று வைராக்கியமாக வாழ்ந்து வரும் இவர் தனது உழைப்பை எப்படி செலளிக்கிறார் என்றும் கூறினார்.
“நான் சம்பாதிக்கின்ற பணத்தில் இங்கிருந்து ஊருக்குச் செல்லும் போது பேரன், பேத்திகளுக்கு ஏதேனும் வாங்கிச் செல்வேன். அவர்களின் வீட்டுச் செலவிற்கு என சிறுதொகைப் பணம் கொடுப்பேன், எனது ஆன்மீக யாத்திரை, மற்றும் உறவினர் வீடுகளுக்குச் செல்வதற்கான செலவு, மருத்துவச் செலவு என எனது உழைப்பில் செலவு செய்வேன். என்கிறார் சந்தோசத்துடன்.
அஸ்லின் நவரத்ன என்ற இந்தப் பெண்மணி தனது ஊரில் விளையும் பொருளை வேற்றூருக்கு கொண்டுசெல்வது மட்டுமல்லாமல், மொழி தெரியாத ஊரில் மக்களிடம் அன்னியோன்னியமாக பழகி விற்பனையில் ஈடுபடுவதும், அதற்காக இந்த 68 வயதிலும் தனித்து பிரயாணம்செய்து தன்தேவைகளை மட்டுமல்லாது தன்பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அவரை ஒரு சிறந்த பிரஜையாக முன்னிறுத்துகிறது.