Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கைதுக்கு காரணமான ஆடை:
“நான் ஒரு வருடமாக இதை அணிகிறேன்!”

குறித்த ஆடையில் இருந்தது தர்மச்சக்கரம் அல்ல. இது கப்பலுடைய ‘சுக்கான்’ என்ற விடயத்தையே நாங்கள் வாதிட்டோம். இது போன்று கோல் மார்க் எனும் பிரித்தானிய பெண்ணுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் முடிவுகளை நாங்கள் முற்படுத்தினோம். இது தர்மச்சக்கரமா இல்லையா என்பது தொடர்பாக ஆராய பௌத்த ஆணைக்குழுவுக்கும் தரநிர்ணய சபைக்கும் இந்த ஆடையை அனுப்பி வைக்க பொலிஸார் அனுமதி கேட்டார்கள். நீதவான் அதற்கு அனுமதி வழங்கினார்…

18.07.2019  |  
பதுளை மாவட்டம்
கைது செய்யப்படும்போது மஸாஹிமா அணிந்திருந்த ஆடை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஆயிரக் கணக்கானோர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்தான் மஹியங்கனையின் ஹஸலக்க பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான எம்.ஆர். மஸாஹிமா என்ற பெண். அவர் கைது செய்யப்பட்டது பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபட்டிருந்தார் என்பதற்காகவல்ல. மாறாக பௌத்த மதச் சின்னங்களில் ஒன்றான தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து 17 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு தற்போது 1இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருடனான நேர்கணல்.

த கட்டுமரன் : அன்று என்ன நடந்தது? நீங்கள் எவ்வாறு கைதுசெய்யப்பட்டீர்கள்?

அன்று மே மாதம் 17 ஆம் திகதி, புனித ரமழான் மாதத்தின் 12 ஆவது நாள். நான் நோன்பு நோற்றிருந்தேன். நோன்பு செலவுகளுக்காக எனது கணவர் கொழும்பிலிருந்து 6500 ரூபா பணத்தை எனது வங்கிக் கணக்குக்கு அனுப்பியிருந்தார். அதனை மீளப் பெறுவதற்காக காலையில் வங்கிக்குச் சென்று பின்னர் கடைகளுக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்கு வந்து சரியாக 10 நிமிடங்களில் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரி ஒருவர் என்னைத் தேடி வந்தார். “பிரதான வீதியில் தர்மச்சக்கர ஆடையுடன் நடமாடியது நீங்கள்தானா” எனக் கேட்டார். அப்போதும் நான் அந்த ஆடையையே அணிந்திருந்தேன். “தர்மச்சக்கரமா? அப்படி என்றால்?” அவர் நான் போட்டிருந்த ஆடையைக்காட்டி இதுதான் என்றார். இந்த ஆடையை நான் ஒன்றரை வருடங்களாக இங்கு அணிகிறேன் என்று அவரிடம் கூறினேன்.

மஸாஹிமா வசிக்கும் வீட்டின் (சிறிய கடை அறை) முன்பாக கணவர் முனாப்.

‘தர்மச்சக்கரம் பொறித்த ஆடையை அணிந்து கொண்டு நீங்கள் ஊரெல்லாம் நடமாடுவதாக எமக்கு முறைப்பாடு வந்துள்ளது. அதனால்தான் உங்களைப் பார்க்க வந்தேன்’ என்று கூறிய அவர், எமது வீட்டிலிருந்தவாறே ஹஸலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு, ‘சேர்…இது தர்மச்சக்கரம் மாதிரி தெரியவில்லை…. என்று கூறினார். பின்னர் நான் அந்த ஆடையை அணிந்தவாறே இருப்பதை புகைப்படம் எடுத்து விட்டுச் சென்றுவிட்டார்.

ஆனால், அவர் சென்று 20 நிமிடங்கள் இருக்கும் திடீரென எனது வீட்டின் முன்பாக பொலிஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. சில பொலிஸ் அதிகாரிகள் வீட்டினுள் வந்தார்கள். நீங்கள் தெரிந்து கொண்டுதான் தர்மச்சக்கரம் பொறித்த ஆடையை அணிந்திருக்கிறீர்கள். இந்த ஆடையைக் கழற்றி எடுத்து, வேறு ஆடையை அணிந்து கொண்டு ஜீப்பில் ஏறுங்கள் என்று கூறினார்கள்.

ஆரம்பத்தில் வாக்குமூலம் எடுத்துவிட்டு உங்களை விட்டுவிடுவோம் என்றவர்கள் பின்னர் என்னை சிறையில் அடைத்தார்கள். விடயமறிந்து எனது கணவர் அன்றிரவு 1 மணியளவில் கொழும்பிலிருந்து ஹஸலக்க பொலிஸ் நிலையத்துக்கு வந்து என்னைப் பார்வையிட்டார்.

த கட்டுமமரன் : உங்கள் கணவர் எங்கு இருக்கிறார்? என்ன செய்கிறார்?

எனது கணவர் கொழும்பில் மேசனாக கூலியாக வேலை செய்கிறார். நானும் வீட்டில் உடுப்புகள் தைத்து கொடுத்து சிறு வருவாயைப் பெறுபவர். திருமணம் முடித்த மகள் ஒருவர் இருக்கிறார். நாம் இருந்த வீட்டை மகளுக்க கொடுத்துவிட்டு அதே காணியில் உள்ள சிறிய கடை அறை ஒன்றில்தான் நானும் கணவரும் வசித்து வருகிறோம்.

த கட்டுமரன் : குறித்த இந்த ஆடையை எங்கிருந்து கொள்வனவு செய்தீர்கள்?

நான் 10 வருடங்களாக வெளிநாட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணியாற்றியுள்ளேன். இறுதியாக நான் பணியாற்றிய வீட்டிலிருந்து எனக்கு அன்பளிப்பு பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை அனுப்பியிருந்தார்கள். அதில்தான் இந்த துணி இருந்தது. அதனை நான் தான் கவுன் ஆக தைத்து அணிந்தேன். இந்த ஆடையை நான் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அணிந்துவருகிறேன்.

த கட்டுமரன் : பொலிஸ் நிலையத்தில் பின்னர் என்ன நடந்தது?

என்னை விசாரித்து வாக்குமூலம் பெற்றார்கள். சிங்களத்தில்தான் வாக்குமூலத்தை எழுதினார்கள். எனக்கு சிங்களம் வாசிக்கத் தெரியாது. அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது தெரியாமலேயே நான் அதில் கையொப்பம் இட்டேன்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்னை கடுமையாக எச்சரித்தார். நீ தெரிந்து கொண்டுதானே தர்மச்சக்கர ஆடையை உடுத்திருக்கிறாய். உன்னை நன்றாக (சட்டத்தில்) இறுக்கித்தான் வைத்திருக்கிறேன். உன்னை இலகுவாக வெளியில் எடுக்க முடியாது என்று அவர் சொன்னார்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து மீண்டும் அந்த கவுனை அணியுமாறு கூறினார்கள். நான் ஏற்கனவே அணிந்திருந்த கவுனுக்கு மேலால் அதை உடுத்தினேன். பின்னர் என்னை புகைப்படம் எடுத்தார்கள். நான் போட்டிருந்த ஷோல்லை அகற்றச்சொல்லி என்னைப் படம் எடுத்தார்கள். அந்தப் படங்கள் எல்லாம் நான் உள்ளுக்குள் இருக்கும் போதே பேஸ் புக்கில் பகிரப்பட்டிருக்கிறது. அதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். கைது செய்யப்பட்டது மே 16 ஆம் திகதி வியாழக் கிழமை. ஒரு நாள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்திருந்து மறுநாள் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மஹியங்கனை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

முதலில் என்னை மே 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். எனினும் 27 ஆம் திகதியும் எனக்கு பிணை கிடைக்கவில்லை. மீண்டும் வழக்கு ஜூன் 3 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. நான் கடுமையான மன உழைச்சலுக்கு உள்ளானேன். என்னைப் பெரும் குற்றவாளி போல் ஆளையாள் வந்து விசாரித்தார்கள். அப்போது நான் நோன்பு பிடித்திருந்தேன். அதையெல்லாம் அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை. நான் இரத்த அழுத்த நோயாளியாகவும் இருந்தேன். அதற்காக மாத்திரைகள் எடுப்பவள். அன்று அதையும் எடுக்கமுடியவில்லை. உடல் உள ரீதியாக மிகவும் களைத்திருந்தேன். ஆனால் என்னை ஒரு பெரும் குற்றம் செய்தவள்போல் நடத்தினர்.

த கட்டுமரன் : உங்கள் கைதின்போதும் பின்னரும் உங்களுடன் பெண் பொலீசார் இருந்தனரா?

வீட்டுக்கு வரும்போது பெண் பொலீசார் எவரும் வரவில்லை. பொலிஸ் நிலையத்திலிருந்து நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும்போது பெண் பொலிசார் எவரும் வரவில்லை. என்னை நடுவில் அமர்த்தி முன்னும் பின்னுமாக ஆண் பொலிசாரே இருந்தனர்.
மஹியங்கனை நீதிமன்றத்திலிருந்து என்னை பதுளை சிறைக்கு சிறைச்சாலை பஸ்ஸில் கொண்டு சென்றார்கள். அப்போது கூட இரு ஆண் பொலிசாரும் ட்ரைவருமே பஸ்ஸில் இருந்தார்கள். பதுளை சிறையை நெருங்கும் இடத்தில்தான் ஒரு பெண் பொலிஸ் அதிகாரி பஸ்ஸில் ஏறிக் கொண்டார்.

த கட்டுமரன் : உங்களுக்கு சட்ட உதவிகள் கிடைத்தனவா?

எமக்கு பொலிஸ் நிலையம் சென்றோ சட்டத்தரணிகளை அணுகியோ முன் அனுபவங்கள் எதுவும் இல்லை. எனது கணவர் 2000 ரூபா கொடுத்து ஒரு சட்டத்தரணியை அழைத்து வந்தார். ஆனாலும் எனக்கு விடுதலை கிடைக்கவில்லை.

நான் கைது செய்யப்பட்ட தகவல் ஊடகங்களில் வந்தபின்னர் கொழும்பிலிருந்து பல முஸ்லிம் சட்டத்தரணிகள் எனது வழக்கில் ஆஜராகி என்னை வெளியில் எடுக்க உதவுவதாக எனது கணவரைத் தொடர்பு கொண்டு உறுதியளித்தனர். எனினும் இறுதியில் கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணிகளாக முஹமட் சரூக் மற்றும் அவரது மனைவியான சட்டத்தரணி நுஸ்ரா சரூக் ஆகிய இருவருமே எனக்கு உதவ முன்வந்தனர். எம்மிடமிருந்து ஒரு சதம் கூட எதிர்பார்க்காமல் கொழும்பிலிருந்து மஹியங்கனைக்கு வந்து இலவசமாகவே அவர்கள் எனக்காக ஆஜராகினர்.கைதுக்கு காரணமான ஆடை:
நான் ஒரு வருடமாக இதை அணிகிறேன்

எனினும் 27 ஆம் திகதியும் எனக்கு பிணை கிடைக்கவில்லை. மீண்டும் வழக்கு ஜூன் 3 ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது சரூக் மற்றும் நுஸ்ரா சரூக் ஆகிய சட்டத்தரணிகள் மஹியங்கனைக்கு வந்து வாதாடி என்னை பிணையில் வெளியில் எடுத்தார்கள். அவர்கள் எனக்குச் செய்த இந்த உதவியை வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாது.

சட்டத்தரணி முஹமட் சரூக் கூறியது :

மே 27 ஆம் திகதி நாங்கள் இருவரும் மஹியங்கனைக்குச் சென்று அந்த வழக்கில் ஆஜராகினோம். பொலிஸார் ஐ.சி.சி.பி.ஆர் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் மஸாஹிமாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

குறித்த ஆடையில் இருந்தது தர்மச்சக்கரம் அல்ல. இது கப்பலுடைய ‘சுக்கான்’ என்ற விடயத்தையே நாங்கள் வாதிட்டோம். இது போன்று கோல் மார்க் எனும் பிரித்தானிய பெண்ணுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் முடிவுகளை நாங்கள் முற்படுத்தினோம். இது தர்மச்சக்கரமா இல்லையா என்பது தொடர்பாக ஆராய பௌத்த ஆணைக்குழுவுக்கும் தரநிர்ணய சபைக்கும் இந்த ஆடையை அனுப்பி வைக்க பொலிஸார் அனுமதி கேட்டார்கள். நீதவான் அதற்கு அனுமதி வழங்கினார். இந்த அறிக்கை வரும்வரை (14 நாட்கள்) மீண்டும் மஸாஹிமாவை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டது. நாங்கள் நீதிமன்றத்தில் வாதாடி அதை 7 நாட்களாகக் குறைத்தோம்.

மீண்டும் ஜூன் 3 இல் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தர்மச்சக்கரத்தின் வடிவம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் காணப்படுவதாக புத்தசாசன அமைப்பின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. தர்மச்சக்கரத்தின் வடிவத்தை இனங்காணும் திறம் கூட எதிர்த்தரப்பில் இல்லை என்ற விடயத்தை நாம் சுட்டிக்காட்டினோம். வழக்கை சட்டமா அதிபருக்கு மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்தோம்.

அதனைத் தொடர்ந்தே மஸாஹிமாவை 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்தார்கள். இந்த வழக்கை நவம்பர் 4 ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளோம். நவம்பர் 4 ஆம் திகதியில் அந்தப் பெண்ணுக்கான நஷ்டஈட்டையும் எடுத்துக் கொடுக்கவிருக்கின்றோம்.