Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:
எனது சகோதரனையும் நான் இழந்துள்ளேன்! இழப்பின் வலிக்கு இனமத பேதம் இல்லை!

இந்த இழப்பிலிருந்து மீண்டு வரவே எனக்கு பல நாட்களாயிற்று. இழப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. அந்த உணர்வுக்கு இனம் மதம் மொழி வேறுபாடு என்பதில்லை. இதற்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தைப் பழிவாங்குவது நியாயமே இல்லை.

28.07.2019  |  
கொழும்பு மாவட்டம்
சகோதரனின் மொத்த வியாபாரக் கடையில் பொறுப்பாக இருக்கும் எம். எவ். பர்ஹான்

ஓர் இனத்தை பழிவாங்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் இறுதியில் ஏனைய இனங்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றன என்பதனை அனைத்து சமூகங்களும் உணர வேண்டும். அவ்வாறனதொரு புரிதலானது இனப் பகைமை உணர்வுக்கு ஓர் முற்றுப்புள்ளியாக அமையும் என்று புறக்கோட்டை வியாபாரியான எம். எவ். பர்ஹான் (23) கூறுகிறார். ‘முஸ்லிம் மக்களுடைய கடைகளுக்கு செல்ல வேண்டாம்’ என்று இனவாதிகள் கூறினாலும் சிந்தித்து செயற்படும் சிங்கள தமிழ் வாடிக்கையாளர்கள் நல்லுறவை மேலும் பலப்படுத்தும் வகையில் எமக்கு ஆதரவு அளித்துக் கொண்டுதானிருகின்றனர். இது தான் இலங்கைக்கு தற்போது அவசியம் என்றும் அவர் கூறுகிறார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்பு முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களைப் புறக்கணிக்குமாறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கொழும்பு புறக்கோட்டையில் தனது சகோதரனின் மொத்த வியாபாரக் கடையில் பொறுப்பாக இருக்கும் எம். எவ். பர்ஹான் கட்டுமரனுக்கு அளித்த செவ்வி.

த கட்டுமரன்:ஈஸ்டர் தாக்குதலின் பின்பு ஸ்தம்பித்திருந்த உங்களது வியாபார நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என்ன?

பதில்: இப்பொழுது ஓரளவுக்கு எம்மால் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. முன்பு ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கு மேல் பொருட்களை விற்பனை செய்த நாம் இன்று 50 ஆயிரத்திற்கே பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது. ஆனாலும் தாக்குதலின் பின்னர் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது நிலைமைகள் ஓரளவுக்கு பரவாயில்லை. அண்மையில் நாங்கள் ஓர் புதுக் கடையை ஆரம்பித்திருந்தோம். அங்கும் ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரத்திற்கு வியாபாரம் நடைபெற்றது. ஆனால் இப்பொழுது அங்கு ரூ. 1500க்கு தான் வியாபாரம் நடக்கின்றது. அந்த கடைக்கான கூலியை மட்டுமே எங்களால் இப்பொழுது செலுத்தக் கூடியதாக உள்ளது. இது பொருளாதார ரீதியாக எமக்கு பெரும் தாக்கம்தான். ஆயினும் முற்றுமுழுதாக எமது வியாபாரம் நின்றுவிடவில்லை என்பதில் மனதைத் தேற்கிக்கொள்ளலாம். இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறும் என்ற எதிர்பார்புடன்தான் இருக்கிறோம்.

த கட்டுமரன்: முஸ்லிம் வர்த்தக நிலையங்களை புறக்கணிக்குமாறு மக்கள் தூண்டப்பட்ட அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?

பதில்: புறக்கோட்டைப் பகுதியில் குறிப்பாக இந்த இடத்தில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களும், தமிழ், சிங்கள வர்த்தக நிலையங்களும் உள்ளன. அதனால் எங்களுக்குள் எப்பொழுதும் ஒற்றுமையும் அன்னியோன்யமும் நிலவியே வந்திருக்கின்றது. அந்த ஒற்றுமைக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. முஸ்லிம் கடைகளைப் புறக்கணிக்குமாறு கூறப்பட்ட போதிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் அவற்றை கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஒரு ஸ்திரமற்ற சூழல் நிலவியதால் மொத்தமாக பொருள் கொள்வனவு குறைந்தது.

 

கொழும்பு புறக்கோட்டை மொத்த வியாபாரக் கடை

அதே நேரம் இந்தமாதிரியான புறக்கணிப்பு பிரசாரம் அர்த்தமற்றது. ஏனெனில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான கடைகளில் முஸ்லிம் இனத்தவர் மட்டும் வேலைசெய்யவில்லை. ஏனைய இனத்தவர்களும் வேலை செய்கின்றனர். அது அவர்களையும் பாதிக்கும். நான் அறிந்த பிரபல நிறுவனங்கள் சில இந்த பிரச்சினையினால் போதிய வருமானம் இன்றி தமது வர்த்தக செயற்பாடுகளை மட்டுப்படுத்தி விட்டதனால் அங்கு பணியாற்றிய பலர் வேலையை இழந்தனர். அவர்கள் முஸ்லீம்கள் அல்ல. எனவே ஒரு இனத்தை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயல்கள் மற்றைய இனத்தவரையும் பாதிக்கும். இன மத மொழி வேறுபாடுகளைக் கடந்து பார்த்தால் நாம் அனைவரும் இலங்கை மக்கள். எங்கள் தொடர்புகள், செயற்பாடுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது பிரச்சினைகள் குறைவடையும்.

த கட்டுமரன்: ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், உங்களது இன அடையாளம் காரணமாக தனிப்பட்ட ரீதியில் நீங்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள்?

பதில்:நான் முஸ்லீம் என்பதால் சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவது வழமையாகிவிட்டது. ஒரு நாள் நானும் எனது நண்பர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தோம். வழியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் எங்களை நிறுத்தி அடையாள அட்டைகளை பரிசோதித்துப் பார்த்து விட்டு எங்கள் மூவரையும் அனுப்பி விட்டு எங்களுடன் வந்த எங்களது சிங்கள நண்பரை நிறுத்தி வைத்தார். நாங்களும் அரை மனதுடன் அவரை விட்டு விட்டு வந்தோம். பிறகு நாம் அவரிடம் விசாரித்தபோது, ‘எங்களுடன் பழகுவதை நிறுத்திவிடுமாறும், நாங்கள் மோசமானவர்கள்’ என்றும் பொலீசார் கூறியதாக சிரித்துக்கொண்டே எம்மிடம் கூறினார். இது எமக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்தது.

த கட்டுமரன்: ஈஸ்டர் தாக்குதலினால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையே பயங்கரவாதிகளாகப் பார்க்கும்; தன்மை பற்றிய உங்கள் அபிப்பிராயம்?

பதில்: நடத்தப்பட்ட இந்த ஈஸ்டர் தாக்குதல் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரானது. நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எனது சகோதரன் ஒருவரும் கொல்லப்பட்டார். குறிக்கோள் அற்ற ஒரு சிறு குழு செய்த இந்த கொடூரமான செயல் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரமான எண்ணம் கொண்ட குழுவில் எவராவது ஒருவர் என்னிடம் அகப்பட்டால் நான் அவரை கல்லால் அடித்து கொல்வேன். அந்த அளவுக்கு எனக்கு ஆத்திரம் வருகின்றது. இத்தாக்குதலினால் பலியானவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? சினமன் கிரான்ட் ஹோட்டலில் இருந்த எனது 22 வயது சகோதரர் இத்தாக்குதலில் பலியானதால் நாம் அதிர்ந்துபோயுள்ளோம். அந்த இழப்பின் வலியும் தாங்க முடியாத துயரும் அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். இவ்வாறு எத்தனையோ அப்பாவி உயிர்கள் பலியாகி விட்டன. அவர்களை எங்களால் மீட்டு வரவே முடியாது. மீண்டும் அவர்களை பார்க்கவே முடியாது என்று நினைக்கும் போது பெருந்துயரம் தான் ஏற்படுகின்றது. இந்த இழப்பிலிருந்து மீண்டு வரவே எனக்கு பல நாட்களாயிற்று. இழப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. அந்த உணர்வுக்கு இனம் மதம் மொழி வேறுபாடு என்பதில்லை. இதற்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தைப் பழிவாங்குவது நியாயமே இல்லை.

த கட்டுமரன்: இனங்களுக்கிடையே சகவாழ்வினை ஏற்படுத்த என்ன செய்யலாம் என்று நினைக்கின்றீர்கள்?

பதில்:என்னைப் பொறுத்தவரையில் இந்த நாடு இங்கு வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்கும் உரியது. நாங்கள் ஒன்றுபட்டு வாழ்ந்தால் தான் நாடு முன்னேறும். ஏனையவர்களின் இன மத கலாசார உரிமைகளை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அதில் தான் நாட்டின் அபிவிருத்தியும் தங்கியுள்ளது. நான் மனித உரிமைகளை மதிப்பவன். ஒவ்வொரு இன மக்களையும் நான் மதிக்கின்றேன். இரத்த வங்கியில் உறுப்பினராகவும் இருக்கின்றேன். ஆனால் தாக்குதல் நடைபெற்ற அன்று எனது சகோதரனின் இழப்பு காரணமாக என்னால் இரத்த தானம் வழங்க முடியாது போய் விட்டது. இல்லாதிருந்தால் இனமத வேற்றுமைகளைக் கடந்து பல உயிர்களுக்கு உதவியிருக்க முடியும். எனவே இன நல்லுறவை குலைக்கும் எந்தவொரு செயலையும் யார் செய்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் சற்று பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.