Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பண்டமாற்று!
“மீனைக்கொடுத்து பலாக்காய் வாங்கினேன், இப்ப எல்லாம் நாசமாய் போச்சு…”

பண்டமாற்று செய்து இன்றும் சீவியம் நடத்தும் எம்மைப்போன்றவர்களுக்கு சமூகங்கள் இணைந்து வாழ்வது என்றும் தேவைதான். ஒருவரில் இருந்து ஒருவரைப் பிரித்துவைத்து வாழ்ந்துவிடமுடியாது. எம்மைப்போல் இதை எல்லோரும் உணரவேண்டும்.

07.08.2019  |  
அம்பாறை மாவட்டம்
அகமட் லெப்பை யாக்கூப்

இந்தக்காலத்திலும் நான் ஒரு பண்டமாற்றுமுறையில் எம்மிடம் இருக்கும் சில பொருள்களை 30 ,35 கிலோமீற்றர் தூரத்தில் வசிக்கும் சிங்களமக்களுக்குக் கொடுத்து, அவர்களிடம் இருந்து சிலபொருட்களை வாங்கி தமிழ் ,முஸ்லீம் மக்களுக்கு விற்கிறேன். இப்ப எல்லாம் நாசமாய் பேச்சு….’’ இவ்வாறு கூறுகிறார் சுமார் 20 வருடங்களாக மூன்று இன மக்களுக்கிடையேயும் தனது வியாபாரத்தை செய்து வரும் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருதை சேர்ந்த அகமட் லெப்பை யாக்கூப்(57) என்பவர்.

த கட்டுமரன்: பண்டமாற்று முறையில் என்ன என்ன பொருட்களை வியாபாரம் செய்கிறீர்கள்?

பதில்: சுமார் 05 வருடங்களாக அம்பாறை, உகண போன்ற பிரதேசங்களில் வசிக்கும் சிங்கள மக்களிடையே தேங்காய், பலாக்காய் போன்ற பொருட்களை வாங்கி வந்து அதனை முஸ்லிம் தமிழ் மக்;களிடம் விற்பனை செய்து வந்தேன். பின்பு கடந்த 15 வருடங்களாக எனது வியாபாரத்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினேன். அதாவது தேங்காய் பலாக்காய் வாங்குவதற்காக செல்லும்போது சாய்ந்தமருது பிரதேசத்தில் மீன்பிடிக்கும் முஸ்லிம்மக்களிடம் இருந்து மீன்களை வாங்கிச் சென்று அதனைக்கொடுத்தே தேங்காய், பலாக்காய் மற்றும் கொய்யாக்காய், தேசிக்காய் தோடம்பழம் என தமிழ் முஸ்லீம் மக்களுக்குத்தேவைப்படும் பொருட்களை வாங்கி வந்து விற்கத்தொடங்கினேன். வியாபாரமும் நல்லா போய்கொண்டிருதுது..ஆனால் இப்ப எல்லாம் நாசமாய் போச்சுது…

த கட்டுமரன்: எவ்வளவு காலமாக உங்கள் வியாபாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது?

பதில்: இந்த உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நடந்த காலத்தில் இருந்து இக்க சுமார் 03 மாதமாக வியாபாரத்துக்கே போக முடியாத நிலை ஏற்பட்டது. சிங்கள மக்களிடையே போய் வியாபாரம் செய்வதற்கு பயமாகவும், மனக்கஷ்டமாகவும் இருக்குது. தமிழப் பகுதிகளிலும் அவ்வாறே இருந்தது. பின்னர் ஓரளவ்ககு தமிழ் முஸ்லிம் மக்களிடம் சிறுகச்சிறுக வியாபாரத்தைத் தொடங்கியுள்ளேன். சிங்கள மக்களிடம் சென்று வியாபாரம்செய்யும் நிலை வரவேண்டும் என்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றேன்.

த கட்டுமரன்: குறிப்பிட்ட சில மாதங்களாக தாங்கள் தொழிலுக்கு செல்லவில்லை எனக் குறிப்பீட்டீர்கள் அக்காலப்பகுதியில் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தை எவ்வாறு பெற்றீர்கள்?

பதில்: அன்றாடம் உழைத்து கிடைப்பதில் இருந்துதான் வாழ்ந்துவந்தோம். அதனால் அக் காலப்பகுதியில் கூலி வேலைக்கு சென்றேன். பிரதானமாக மேசன்வேலைக்குக் சென்றேன் அதனால் கிடைக்கும் நாட்கூலி மூலம் வாழ்வை ஓட்டினேன். அது போதியதாக இருக்கவில்லை. அதனால் கடன்பெறவேண்டிய நிலையும் வந்தது. உறவினர் தெரிந்தவர்கள் என பலரிடமும் கடன் பெற்று வாழவேண்டியதாயிற்று.

த கட்டுமரன்: மூன்று மாதங்கள் கடந்த நிலையில் தற்போது எவ்வாறான நிலைமை காணப்படுகிறது?

பதில்: முன்னர் ஒரு நாள் நான் வியாபரத்திற்கு போகாவிட்டாலும் ‘ஏன் மச்சான் நேற்று வரல்ல’ (மச்சான் அய் ஈயே ஆவ னா?) என்று கேட்குமளவு இருந்த சிங்கள மக்கள் இன்று இல்லை. முஸ்லிம் மக்கள் தொடர்பில் அவர்களுக்கு இருக்கும் ஐயம் அச்சம் என்னிடம் இருந்து அவர்களைத் தூரமாக்கியுள்ளது. அவர்களுக்க நேரடியான அனுபவங்கள் இல்லாதபோதும் அப்ப இந்த ஊடகங்களில் வரும் இனவாதக் கருத்துக்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் கதைக்கும் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் போலியான செய்திகள் மூலம் சிங்கள் மக்கள் சந்தேகத்துடனேயே எம்மைப் பார்க்கின்றனர். அதுமட்டுமன்றி முன்பு மனம் விட்டு பேசியவர்கள் தற்போது அதிகம் பேசுவதில்லை என்பதும் மனரீதியான கவலையை எனக்கு ஏற்படுத்துகிறது. மொத்தத்தில் இன்னும் எம்மீது முழுமையான நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. தமிழர்களைப் பொறுத்தவரை முன்புபோல் கதைப்பதில்லை. என்னிடம் மீனை வாங்கிக்கொண்டு பேசாமல் போவார்கள். இதனால் அவர்கள் மனங்களில் எம்மைப்பற்றிய என்ன உணர்வு உள்ளது என்பதை அறிய முடியாதுள்ளது. கவலையான விடயம் என்னவென்றால் யாரே ஒரு சிறு குழு எம் மதத்தின் பெயரை வைத்துக்கொண்டு செய்த வேலையால் நாட்டு மக்களின் நிம்மதி ஒற்றுமை, நட்பு, தொழில் என்பன பாதிக்கப்பட்டுள்ளன.

த கட்டுமரன்: இந்த சவால்களை எப்படி எதிர்கொண்டு இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எண்ணகிறீர்கள்?

பதில்: விடுதலைப்புலிகள் காலத்தில் கூட நான் வியாபாரம் செய்தவன். அப்போது இரானுவமும் விடுதலைப்புலிகளும் ஆயுத ரீதியாக மட்டும் மோதினர் இன்று மனரீதியாக மோதல் ஏற்பட்டுள்ளது எனவே மனங்கள் வெல்லப்பட வேண்டும் நம்பிக்கை கட்டி எழுப்பப்பட வேண்டும் சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்கள் நல்லவர்கள். ஒரு சிலரின் வெறுப்புப்பேச்சு, உண்மைக்கு புறம்பான செய்திகள் என்பவற்றால்தான் வெறுப்புணர்வைக்காட்டுகிறார்கள். முதலில் இந்தமாதிரியான செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கவேண்டும். சமூக ஊடகங்களின் கதைகள் மிக வேகமாக பரவுகிறது. சுமூக ஊடகங்களைப்பாவிக்கும் ஓவ்வொருவரும் உணர்ந்து செயற்படவேண்டும். பொதுவாக சொன்னால், ஊடகங்களின் போலிக்கதைகளைக் கட்டுப்படுத்தினாலே நல்லிணக்கதை கொண்டுவந்துவிடமுடியும். அடுத்தது இந்த அரசியல்வாதிகளும் மதத்த தலைவர்களும் தங்கள் தங்கள் சமூகங்களை மட்டுமே கருத்தில்கொண்டு செயற்படுகிறார்கள். ஏனைய சமூகங்கள் பற்றி, ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழ்வது பற்றி யோசிக்கிறார்கள் இல்லை.

த கட்டுமரன்: யாக்கூப் என்ற மனிதனால் உங்களால் நல்லிணக்கத்திற்கு என்ன செய்ய முடியும் என எண்ணுகிறீர்கள்?

பதில்: தொழில் தேவையுடன் மட்டுமல்ல நட்புப் பாராட்டும் விதத்தில் நான் நடந்துகொள்கிறேன். நட்புடனேயே நம்பிக்கையுடன் எல்லோரையும் அணுகுகிறேன். என்னால் செய்யமுடிந்தது அதுதான். இப்போதுள்ள நிலை மாறும் என்ற பெரு நம்பிக்கையுடன் ஒவ்வொரு காலையும் விழிக்கிறன். பண்டமாற்று செய்து இன்றும் சீவியம் நடத்தும் எம்மைப்போன்றவர்களுக்கு சமூகங்கள் இணைந்து வாழ்வது என்றும் தேவைதான். ஒருவரில் இருந்து ஒருவரைப் பிரித்துவைத்து வாழ்ந்துவிடமுடியாது. எம்மைப்போல் இதை எல்லோரும் உணரவேண்டும்.