Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

போர் தின்ற பூமியில் எஞ்சியிருக்கும் வாழ்வு

“ஆளும் பேருமா எவ்வளவு பேர் வாழ்ந்தனாங்கள். இப்ப ஒருத்தரும் இஞ்ச இல்ல. எல்லாரும் போயிட்டினம். நான் மட்டும்தான் தனியக் கிடக்கிறன்.” மெல்லிய புன்சிரிப்புடன் இராசநாயகம் ஐயாவிடம் இருந்து வார்த்தைகள் பிறக்கின்றன. கழுத்துக்குக் கீழே துருத்தி நிற்கும் எலும்புகளைக் காட்டி நிற்கும் மெலிந்து ஒட்டிய உருவம்இ சுருக்கம் விழுந்துவிட்ட தோல்கள்இ வெண்பஞ்சுத் முடி எல்லாமும் சேர்ந்து அவரது வயதை எக்கச்சக்கத்திற்கு உயர்த்திக் காட்டுகின்றன. சாரத்தின் மீது முழுவதும் மூடப்படாத மேல் சட்டை அணிந்திருக்கும் அந்த மனிதரின கண்களில் வெறுமை […]

23.06.2016  |  
கிளிநொசசி மாவட்டம்

“ஆளும் பேருமா எவ்வளவு பேர் வாழ்ந்தனாங்கள். இப்ப ஒருத்தரும் இஞ்ச இல்ல. எல்லாரும் போயிட்டினம். நான் மட்டும்தான் தனியக் கிடக்கிறன்.” மெல்லிய புன்சிரிப்புடன் இராசநாயகம் ஐயாவிடம் இருந்து வார்த்தைகள் பிறக்கின்றன.
கழுத்துக்குக் கீழே துருத்தி நிற்கும் எலும்புகளைக் காட்டி நிற்கும் மெலிந்து ஒட்டிய உருவம்இ சுருக்கம் விழுந்துவிட்ட தோல்கள்இ வெண்பஞ்சுத் முடி எல்லாமும் சேர்ந்து அவரது வயதை எக்கச்சக்கத்திற்கு உயர்த்திக் காட்டுகின்றன. சாரத்தின் மீது முழுவதும் மூடப்படாத மேல் சட்டை அணிந்திருக்கும் அந்த மனிதரின கண்களில் வெறுமை படிந்திருக்கிறது. பார்வையில் ஏராளம் ஏக்கம் மிதந்து வழிகின்றது.
பொன்னாவெளிக் கிராமத்தின் ஒரேயொரு குடிமகன் இப்போது அவர் மட்டும்தான்.

தனிமரம் தோப்பாகாது
தனிமரம் தோப்பாகாது

போர் கலைத்துப்போட்ட இலங்கையின் வடபகுதியில் மீண்டும் கருக்கட்டாமலேயே போய்விட்ட ஊர் பொன்னாவெளி. பூநகரியின் பூர்வீகக் கிராமங்களில் ஒன்று. ஒரு காலத்தில் அதிகார வர்க்கமான உடையார்களின் கொலுவிடம். ஆனால் இப்போது அந்தக் கிராமத்தில் யாருமில்லை. வரலாற்றுக் காலம் முதல் இந்தக் கராமம் இருந்து வந்துள்ளது என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். கிராமத்தில் உள்ள புளியன்துறை என்கிற படகுகள் அணைக்கும் துறையின் பெயர்இ 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் தென்பகுதியை ஆட்சி செய்த பல்லவர்கள் வந்திறங்கிய துறைமுகம் என்று அதற்கு ஆதாரம் கூறுகிறார்கள். புலியன் என்கிற பல்லவத் தளபதி கப்பலில் வந்திறங்கிய இடம் என்பதால் அந்த இடம் புலியன்துறை என்றாகிப் பின்னர் மருவி புளியன்துறை என மாற்றமடைந்துவிட்டதாம்.
1505ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்தே பொன்னாவெளிக் கிராமம் இருந்தது என்று கிராமத்தின் பெரியவரான பொன்னம்பலம் தருமலிங்கம்இ பூநகரி பிரதேச செயலகத்தின் வெளியீடான பூந்துணர் என்கிற வருடாந்த சஞ்சிகையிலே தெரிவித்திருக்கிறார். கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது திண்ணைப் பள்ளிக்கூடமும் முதன்முதலில் இங்கேதான் ஆரம்பிக்கப்பட்டதாம். இலங்கையின் வடபகுதியில் ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பியபோது அதை எதிர்த்து சைவ மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவரான ஆறுமுகநாவலர்தான் அந்தப் பாடசாலைக்கு சைவப் பிரகாச வித்தியாசாலை என்று பெயர் சூட்டினார். நாவலரின் சீடரான சின்னத்தம்பி உடையார்தான் இங்கு கற்பித்தார்.

ஆறுமுகநாவலரின் உண்மையான படம் இருந்த பாடசாலையும் இப்போது கைவிடப்பட்டுவிட்டது.
ஆறுமுகநாவலரின் உண்மையான படம் இருந்த பாடசாலையும் இப்போது கைவிடப்பட்டுவிட்டது.

இத்தனை பெருமைகளை உடையபோதும் பொன்னாவெளி இப்போது பற்றைக்காடுகள் மண்டிய வெறும் வெளி. சிதிலமடைந்துபோன வீடுகளும்இ பாடசாலைக் கட்டங்களும் இன்மும் பொலிவை இழந்துகொண்டிருக்கும் கோயில்களும் மட்டுமே மனிதர்கள் அங்கு வாழந்தனர் என்பதற்கு இன்றைய சாட்சியம். இராசநாயகம் ஐயா மட்டுமே கிராமத்தின் எஞ்சிய ஒரே மனித எச்சம். போர் முடிந்ததன் பின்னர் கடற்படையினர் இங்கு முகாம் அமைத்திருக்கிறார்கள். எப்போதாவது கடந்து செல்லும்போது இராசநாயகம் ஐயாவைச் சுகம் விசாரிக்கிறார்கள். சிலவேளைகளில் உணவு கொடுக்கிறார்கள். ஆனாலும் அதனை மறுத்துவிடுகிறார் அவர். அவரையும் கடற்படையினரையும் சுற்றி அங்கு மயான அமைதி மட்டுமே சுழல்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இலங்கை அரசுக்கும் இடையில் தீவிரமான இறுதிச் சண்டை 2008ஆம் ஆண்டு பூநகரியை எட்டும் வரைக்கும் பொன்னாவெளியில் மக்கள் குடியிருந்தார்கள். 37 குடும்பங்கள் அங்கு வாழ்ந்துள்ளன என்கிறது பிரதேச செயலகப் புள்ளி விவரங்கள். ஆனால் இப்போது அங்கு எந்தக் குடும்பங்களும் இல்லை. சில கிலோ மீற்றர்கள் தள்ளி உள்ள வேரவில் என்ற கிராமத்தில் பல குடும்பங்கள் இருக்கின்றன. அங்கேதான் பொன்னாவெளி மாதர் சங்கம் இருக்கிறது. ஏனைய குடும்பங்கள் முரசுமோட்டைஇ வட்டக்கச்சிஇ வன்னேரிஇ முழங்காவில்இ பூநகரிஇ தெளிவரை ஆகிய பல கிராமங்களிலும் சிதறுண்டு கிடக்கின்றன.
கிராமங்களில் பெண்களின் மேம்பாட்டை நோக்காகக் கொண்டு மாதர் சங்கங்கள் உள்ளன. அரச உதவிகள் பல இந்தச் சங்கங்கள் ஊடாக பெண்களுக்குக் கிடைப்பது உண்டு. வன்னியில் இந்தச் சங்கங்களுக்குப் முக்கிய இடம் இருக்கின்றது. வேரவிலில் அந்தக் கிராமத்துக்கென்று ஒரு மாதர் சங்கம் ஏற்கனவே உண்டு. பொன்னாவெளி மாதர் சங்கத்திற்கு அந்தக் கிராமத்தில் எந்த உரிமையும் கிடையாது; அது வேறு கிராமத்தினுள் இருப்பதால் அரச உதவிகள்கூட அதற்குக் கிடைப்பதும் இல்லை.

யாருமற்ற வனாந்திரமாக மாறிவருகின்றது பொன்னாவெளி
யாருமற்ற வனாந்திரமாக மாறிவருகின்றது பொன்னாவெளி

அது வெறும் பெயருக்கான அமைப்பு மட்டும்தான். அதில் மட்டும்தான் அவர்களின் கிராமம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறது. “ஊர்ப் பெயர் விட்டுப் போகக்கூடாது என்பதற்காக அவர்கள் இன்னமும் அந்தச் சங்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்இ அரச உதவிகள்இ கொடுப்பனவுகள் எவற்றையும் அதற்கு வழங்க முடியாது” என்கிறார் கிராம மட்ட அரச அதிகாரி. 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோதுஇ ஒட்டுமொத்தமாக சுமார் 3 லட்சம் மக்களும் வவுனியாவில் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். பொன்னாவெளி மக்களும் சேர்த்தேதான் அடைக்கப்பட்டார்கள்.
நலன்புரி நிலையங்கள் என்று இந்த தடுப்பு முகாம்களை அரசு அப்போது அழைத்தது. அந்த முகாமில் இருந்து கட்டம் கட்டமாக மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வந்தபோது 2009ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பொன்னாவெளி மக்களும் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டார்கள். போரில் குடும்பங்களாகவும் உதிரிகளாகவும் பலர் இறந்துபோக எஞ்சிய 20 வரையான குடும்பங்கள் மீளக்குடியமர்ந்தன. ஆனால் 3 மாத காலத்தில் ஒவ்வொரு குடும்பமாக அங்கிருந்து வெளியேற ஆரம்பித்துவிட்டன.
ஏற்கனவே அடிப்படை வசதிகள் ஏதுமற்றிருந்த அந்தக் கிராமத்தைக் கவனிப்பார் யாரும் இருக்கவில்லை. மொத்த வன்னி நிலப் பரப்புமே அவலத்தை எதிர்கொண்டிருந்த நிலையில் அதிகாரிகளுக்கு இந்தச் சிறிய கிராமத்தின் மீது அக்கறை காட்ட நேரமும் இருக்கவில்லை. “குடிதண்ணீர் பிரச்சினையாக இருந்தது. முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பெளசர் மூலமாகத் குடிதண்ணீர் வழங்கி வந்தனர்.
மீளக்குடியமர்ந்தபோது அதற்கான ஏற்பாடுகள் ஏதும் இருக்கவில்லை. பஸ் சேவைகள் ஏதும் இருக்கவில்லை. அதனால் போக்குவரத்தும் பெரிய பிரச்சினையாக இருந்தது. பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல முடியாதிருந்தது. யானைகளின் தொல்லையும் அதிகரித்திருந்தது. அதனால் ஒவ்வொரு குடும்பமாக வெளியேற ஆரம்பித்தன. கடைசியில் எல்லோருமே வெளியேறிவிட்டோம்.” கதிர்காமநாதன் காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார். பேர் பெற்ற தமது கிராமம் இப்படிச் சில மாதங்களிலேயே காணமற்போனமை தொடர்பில் அவருக்குக் கவலை உண்டு.

வற்றா ஊற்றாக ஊருக்கே தண்ணீர் கொடுத்த கிணறு இப்போது தேடுவாரற்று அநாதரவாகக் கிடக்கிறது.
வற்றா ஊற்றாக ஊருக்கே தண்ணீர் கொடுத்த கிணறு இப்போது தேடுவாரற்று அநாதரவாகக் கிடக்கிறது.

எல்லா அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் மேலாகக் கிராமத்தில் அமைக்கப்பட்ட படை முகாமும் அருகே அமைக்கப்பட்ட கடற்படை முகாமும் அவர்களின் வெளியேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியது என்பதை கிராமத்தவர்கள் வெளிப்படையாகச் சொல்லாமல் மென்று விழுங்குகிறார்கள். அது பற்றி வெளிப்படையாகப் பேசுவது ஆபத்தானது என்று இப்போதும் கருதுகிறார்கள். பொன்னாவெளி கிராமத்தில் இருந்து பக்கத்துக் கிராமங்கள் அனைத்தும் பல கிலோ மீற்றர்கள் தூரத்திலேயே அமைந்திருக்கின்றன.
தனித்து நடுவில் இருப்பதால் எந்தவொரு தேவைக்குமாக நகரத்திற்குச் செல்வதாயின் மக்கள் பற்றைக் காடுகளைக் கொண்ட பொட்டல் வெளிகளைப் பல சமயங்களிலும் தனித்தே கடந்து பயணிக்க வேண்டியிருந்தது. ஆண்டு 8 வரையுமே கிராமப் பாடசாலையில் வகுப்புகள் இருந்தன. அதற்கு மேல் படிப்பதற்கு 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வேரவில் கிராமத்திற்குத்தான் செல்லவேண்டும்.

/IMG_20100101_063329வளர்ந்த பெண் பிள்ளைகள் படிப்பதற்காகக் கடற்படை முகாமைத் தாண்டித்தான் செல்லவேண்டியிருந்து. தனித்துப் பயணிக்கும் இத்தகைய சந்தர்ப்பங்கள் பெரும் உயிர் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்துள்ளன. போர் அப்போதுதான் முடிந்திருந்த நிலையில் இராணுவக் கெடுபிடிகள் உச்சமாகவும் தொடர் கைதுகளும் காணாமற்போகச் செய்தல்களும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. அந்தக் காலத்தில் பொன்னாவெளி மக்களின் அச்சம் இயல்பானதே என்கிறார் மனித உரிமைகள் ஆர்வலரான சி.அனுராஜ்.
“வன்னிப் பகுதி முழுவதும் அச்சத்தில் உறைந்திருந்த காலம் அது. திட்டமிட்டே அந்த அச்சம் போருக்குப் பின்னரான உளவியல் போராகக் கையாளப்பட்டு வந்தது” என்றும் அவர் கூறுகிறார். பொன்னாவெளியில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம் இப்போதும் அங்கேயே இருக்கிறது. கிராமத்தின் பொதுநோக்கு மண்டபத்தை அவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். போர் முடிந்து 7 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

மழை, வெயிலுக்கு ஒரு மறைவிடம். அதையே வீடு என்கிறார் இராசநாயகம்.
மழை, வெயிலுக்கு ஒரு மறைவிடம். அதையே வீடு என்கிறார் இராசநாயகம்.

இவர்களுக்கு மத்தியில்இ நான்குபுறமும் தென்னோலைகள் கொண்டு மறைக்கப்பட்ட (இவற்றை உள்ளூரில் செத்தை என்பார்கள்) கூரையாகச் சில தகரங்கள் போடப்பட்ட, மனித வாழ்வுக்கு எந்த வகையிலும் பொருத்தமற்ற ஓர் இருப்பிடத்தில் இராசநாயகம் ஐயா தன்னுடைய நாள்களைக் கடத்துகிறார். கிராமத்தில்தனித்திருக்கும் அவருக்கு இதுவரையில் எந்த ஓர் அரச உதவியும்கூடக் கிடைக்கவில்லை.
“கிட்டடியிலதான் ஒரு சோலர் தந்தார்கள். அது தவிர எந்த உதவியும் கிடைக்கவில்லை. மாடுகள் இருந்தன. பால் எடுத்து விற்றுத்தான் சீவியத்தை ஓட்டி வந்தன். போன மாரியில பெய்த அடை மழையால அதுகளும் செத்துப் போச்சுதுகள்” என்கிறார் இராசநாயகம். கிராமத்தைவிட்டு மக்கள் வெளியேறிவிட்டதில் அவருக்கு கோபம் அதிகம் இருக்கிறது. “இங்க இருக்கிற கோயிலுகளப் வந்து வந்து பராமரிக்கினம். கிராமத்தில வந்திருந்து அதுகளச் செய்யவேண்டியதுதானே! அம்மாளாச்சி (பெண் தெய்வம்)தான் என்னை இங்க இருக்க வைச்சிருக்கிறாஇ ஏதோ ஒரு தேவைக்காகத்தான். நான் கராமத்தை விட்டிட்டு ஒருநாளும் போகமாட்டன்.” அவரிடம் கட்டுறுதியான வீரியம் தெரிகிறது.
கிராமத்தின் மீது அவருக்கு அளவுக்கதிகமான பாசம் இருக்கிறது. “இதுதான் பாடசாலை. இதையாவது பாதுகாத்திருக்கலாம். ஆறுமுகநாவலரின் உண்மையான படம் இங்கதான் இருந்தது. அதுவும் அழிஞ்சு போச்சுது.”
“இது சிவன் கோயிலடி. இந்தப் புளியமரத்துக்கு முன்னாலதான் ஒரு கொலை விழுந்தது. 32 குத்து. நான்தான் அந்த ஆளைத் தூக்கி வைத்தியசாலைக்கு ஏற்றி அனுப்பி வைத்தேன்.”
கிராமத்தின் ஒவ்வொரு அடியைப் பற்றியும் தன்னுடைய நினைவுகளை மீட்டபடியே அவர் நம்பிக்கையோடு நடந்துகொண்டிருக்கிறார்.
“ஒருநாள் எல்லாரும் திரும்பி வருவார்கள்….” இராசநாயகத்தின் பார்வை பல பத்து வருடங்களாகப் புழுதியில் புரண்டிருக்கும் வீதியை வெறிக்கிறது.

Rasanayagam Aiya, the last remaining inhabitant of the Sri Lankan village of Ponnaveli.
Rasanayagam Aiya, the last remaining inhabitant of the Sri Lankan village of Ponnaveli.

“அரசு வீட்டுத் திட்டம் தந்தால் போயிருக்கலாம். போக்குவரத்துஇ குடிதண்ணீர்இ பாடசாலை வசதிகளும் செய்யப்படவேண்டும்” என்கிறார் கதிர்காமநாதன் துஷாயினி. வேரவிலில் இயங்கும் பொன்னாவெளி மாதர் சங்கத்தின் தற்போதைய தலைவி இவர்தான்.
“கிராமத்திற்கு மக்கள் மீளச் சென்று குடியமர்ந்தால் அரச உதவிகளை வழங்கலாம். ஆனால் வீட்டுத் திட்டம் கொடுக்க முடியாது. அது ஏற்கனவே வேரவிலில் அவர்களுக்கும் சேர்த்துக் கொடுக்கப்பட்டு விட்டது. மீண்டும் ஒரு தடவை அவர்களுக்கு வீடுகள் கொடுக்க முடியாது. அவர்களின் பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொல்லுமாறு அவகாசம் கொடுத்தோம். ஆனால் யாரும் வரவில்லை” என்கிறார் பிரதேச செயலரான சி.ச.கிருஷ்நேந்திரன்.
“பிரச்சினைகள் குறித்துச் சொல்லுமாறு பிரதேச செயலர் அறிவித்தது எதுவும் எங்களுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் போய்ச் சொல்லியிருப்போம்” என்கிறார்கள் வேரவிலில் உள்ள பொன்னாவெளி மக்கள். அவர்களுக்கே அது தெரியவில்லை என்றால் ஏனைய கிராமங்களில் இருந்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.
வீடுகள் தந்தால் ஊரில் மீளக்குடியமரலாம் என்று அந்த மக்கள் இப்போது சொன்னாலும் அது மட்டுமே அவர்களின் பிரச்சினை இல்லை என்பது தெளிவாகப் புரிகிறது. கிராமத்தில் பல கல்வீடுகளின் எச்சங்கள் இப்போதும் கிடக்கின்றன. அவற்றின் முன்னைய செழுமையைப் பறைசாற்றும் வகையில் அவை இன்னும் நிமிர்ந்தேதான் நிற்கின்றன. விதம் விதமான வடிவமைப்புகளுடன் அந்தக் காலத்திலேயே வீடுகளை அமைத்து வாழ்ந்த மக்கள் அங்கு மீளக்குடியமர மறுப்பதற்கு அதையும் தாண்டிய வேறு பயம் அவர்களுக்கு இருக்கிறது.