Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இடம் மாறிய சோதனைகள்!
“இந்த நாட்டை விட்டு போவதைத்த தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை…”

“நான் பொதுப்போக்குவரத்தின் போது பொட்டுவைத்து, தமிழ் பிள்ளைபோன்று போவதை நிறுத்தினேன். இதேதான் இப்போது இந்த முஸ்லீம் மாணவிக்கும்…எமது இன அடையாளங்களே எங்களுக்கு எதிராக நிற்கும்போது என்னதான் செய்வது?”

18.08.2019  |  
புத்தளம் மாவட்டம்
இணைய கோப்புப் படங்கள்

நான் ஒவ்வொருநாளும் புகையிரதத்தில் வேலைக்கு சென்று வருபவள். எனக்கு நன்றாக தமிழும் சிங்களமும் பேசத் தெரியும். எனக்கு தமிழ், முஸ்லீம் சிங்கள நண்பர்கள் பலர் இருக்கின்றனர். எல்லாம் ரயில் சினேகிதம்தான். ஆனாலும் குடும்ப நண்பர்களாக கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வோம். புகையிரதத்திலும் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் செய்வோம். இந்த உயிர்த்த ஞயிறுக்கு பிறகு எல்லாம் மாறிப்போனது…ஆனாலும் எங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறோம்.

“இந்த நாட்டை விட்டு போவதைத்த தவிர எனக்கு வேறு வழி தொரியவில்லை…” என்று விரக்தி கொள்கிறார் தபாலகம் ஒன்றில் பணியாற்றும் எஸ்.எம். பாத்திமா நஸ்ரியா (வயது 42). ஏன் இவ்வளவு விரக்தி…?

இணைய கோப்புப் படங்கள் . இந்தக்கட்டுரைக்கானதல்ல.

“ நான் தமிழ் மொழி மூலத்தில் கல்வி பயின்றாலும், என்னுடைய ஓ.எல், ஏ.எல் வாழ்க்கையின் பின்னர் நான் அதிகளவில் பயன்படுத்திய மொழி சிங்களம். 23 வருடங்களாக தபாலகத்தில் பணியாற்றி வந்தேன். அந்த அலுவலகப்பிரிவில் இருந்து இன்னொரு பிரிவிற்கு மாற்றமாகி சென்றபோது கிட்டத்தட்ட என்னுடன் வேலைசெய்த அனைவருமே கண்கலங்கி நின்றனர். ஆனால் இன்று அவர்களே நான் அபாயா அணிவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். என்னை அவர்கள் பார்த்த பார்வை மிகவும் அன்னியத்தனமாக இருந்தது. உயிhத்த ஞாயிறு சம்பவம் நடைபெற்ற ஆரம்ப நாட்களில் நான் அலுவலகப் பணிக்குச் செல்வதற்கே பயந்து போயிருந்தேன் என்னுடைய கணவர் தான் என்னை அழைத்துச் சென்று விட்டுவிட்டு வருவார்… சோதனை நடவடிக்கையின் போது பொலிஸார் என்றாலும் சரி அலுவலகத்தில் பணியாற்றுகின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்றாலும் சரி ஏனையவர்களை விட்டுவிட்டு என்னிடம் வந்து யார் நீங்கள்? எங்கிருந்து வருகின்றீர்கள்? எங்கு செல்கின்றீர்கள்? கைப்பையில் என்ன கொண்டு செல்கின்றீர்கள்? எனக் கேட்பார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில் என்னை அவமானப்படுத்துவதாக உணர்கிறேன். அதுமட்டுமல்லாமல், வீதியில் போகும்போது என்னைப்பார்த்து ‘ஓய்… ஓய்… சஹரான் த? சஹரான் த?’ என மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் நடு ரோட்டில் வைத்துச் சத்தமாகக் கத்திக்கொண்டு போகிறார்கள். இதனால் நான் கூனிக்குறுகி நிற்கவேண்டியதாயிற்று. கோபதாபம் என்றால் கதைத்துப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். ஆனால் எம்மீது வன்மம் வைத்திருக்கின்றார்களே… அதை எப்படி மாற்றுவது… நாட்டைவிட்டு போவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.” என்று கூறும் எஸ்.எம். பாத்திமா நஸ்ரியா சிங்கள நண்பர்களுடனேயே அதிகம் பேசி கதைத்து வந்தவர். தற்போது அந்த நட்புகள் எல்லாம் விலகி நிற்பதைப் பார்த்தது அதிர்ந்துபோயுள்ளார்.

“சோதனைச் சாவடியில் எனது அடையாள அட்டையைப்பார்த்த பொலீசார், ஒ…நீங்க தமிழா…போகலாம்..என என்னை விடுவித்துவிட்டு பின்னால் வந்த என் முஸ்லீம் நண்பியை மறித்து துருவிதுருவி ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். பஸ் புறப்படும் நேரமாயிற்று அவரை விடுவதாகத் தெரியவில்லை. பஸ் நடத்துனர் புறுபுறுத்தபடியே பஸ்சை ஸ்ராட் செய்யும்போது எனது நண்பி களைக்க களைக் ஓடிவந்து பஸ்சில் ஏறினாள். பார்க்க பரிதாபமாக இருந்தது. பஸ்சில் இருந்த எல்லோர் கண்களும் அவள்மேல் கோபப் பார்வையை வீசின. என்னதான் செய்வது? 14 வருடத்திற்கு முன் எனக்கு நடந்த அதே அவலம்… கூறத் தொடங்கினார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயிலும் தர்ஷிகா – வயது 27 (பெயர் மாற்றப்பட்டுள்ளது)


கோபதாபம் என்றால் கதைத்துப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். ஆனால் எம்மீது வன்மம் வைத்திருக்கின்றார்களே… அதை எப்படி மாற்றுவது…

“அப்போது எனக்கு 14 வயது. நான் புத்தளம், முந்தலில் இருந்து பிரத்தியேக வகுப்பிற்காக சிலாபம் நகரைநோக்கி பஸ்ஸில் சென்றுவந்தேன். அப்படிச் செல்லும்போது பங்கதெனிய இராணுவச்சாவடியில் வைத்து நான் பயணித்த பஸ்ஸை சோதனைக்குட்படுத்தினர். எனக்கு அடையாள அட்டை இல்லை. ஆள் அடையாள அட்டை எடுப்பதற்கு 16 வயதுவரை காத்திருக்க வேண்டும். இந்நிலையில், என்னை நிறுத்தி வைத்து கேள்விமேல் கேள்விகேட்டனர். நான் தமிழாக இருந்தாலும் என்னால் நன்றாக சிங்களமும் பேச முடியும். நான் யாழ்பாணத்திற்கு அடிக்கடி போய்வாறதும் இல்லை. அப்படி இலகுவில் போய்வரக்கூடிய நிலைமையும் அப்போது இருக்கவில்லை. என்னை மறித்துவைத்த பொலீசார் புலிகள் பற்றி பல்வேறு பெயர்களைச் சொல்லி அவரைத் தெரியுமா? இவரைத் தெரியுமா? என கேட்டுக்கொண்டிருந்தனர். நான் ஒரு பாடசாலை மாணவி என்றுகூட அவர்கள் நினைக்கவில்லை. நான் வந்த பஸ்சும் என்னை விட்டுவிட்டு போய்விட்டது. சுமார் 1மணி நேரம் என்மீதான விசாரணை நடந்தது. ஆள் அடையாளத்தை நிரூபிக்க தபால் அடையாள அட்டையை எடுக்கும் படி நான் வற்புறுத்தப்பட்டேன். பஸ்ஸில் வந்த ஒருவர் அப்பாவுக்குத் தகவல் சொல்ல அப்பா வந்து என்னை மீட்டுக்கொண்டுபோனார். அன்றிலிருந்து நான் பொதுப்போக்குவரத்தின் போது பொட்டுவைத்து, தமிழ் பிள்ளைபோன்று போவதை நிறுத்தினேன். இதேதான் இப்போது இந்த முஸ்லீம் மாணவிக்கும்…எமது இன அடையாளங்களே எங்களுக்கு எதிராக நிற்கும்போது என்னதான் செய்வது?”

இன அடையாளமா….இந்தக் கதையைக் கேளுங்க என்று தொடங்கிறார் சொந்த வியாபாரம் செய்யும் மதுரங்க .(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

“ நானும் எனது முஸ்லீம் நண்பர்கள் சிலரும் பின்னேரத்தில் மோட்டார் சைக்கிளில் சுத்துவது வழமை. அன்றும் நாம் சென்றுகொண்டிருந்தபோது கொழும்பு சோதனைச் சாவடியொன்றில் நிறுத்தப்பட்டோம். எல்லோரிடமும் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த பொலீசார் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டார். எனது அடையாள அட்டையை எனக்கு தரவும் இல்லை.என்னிடம் கேள்விகள் எதுவும் கேட்கவும் இல்லை. கையில் வைத்துக்கொண்டு என்னை மேலும் கீழும் பார்த்தார். தன்னுடன் வரச்சொல்லி அழைத்துச் சென்றார். அங்கு நின்ற அவரைவிட சீனியர் ஒருவரின் முன்னால் நின்று, நீங்கள் சிங்களவர். நீங்கள் இவர்களுடன் ஏன் பழகுகிறீர்கள்? இதனால் உங்களுக்கும் ஆபத்து வரலாம். தாடியும் வைத்து முஸ்லீம் மாதிரி இருக்கிறீர்களே…என்று கூறி எனக்கு அறிவுரை கூறினார். அழகுக்கு தாடி வைச்சிருக்கிறதால இப்பிடி சிக்கல்களும் வருது…என்னத்தை செய்ய…” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சிங்கள நண்பர் மதுரங்க.

“ நான் தமிழன் என்று வெளிக்காட்ட பயந்த நாட்கள் இருந்தன. அப்போதெல்லாம் பல்கலைக்கழக அடையாள அட்டையை நீட்டி சந்தேகத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொண்ட நாட்கள் அவை. இன்று நான் தமிழ் என்றதும் ‘போ… போ.. என்று விரட்டாத குறையாக அனுப்பிவிட்டு முஸ்லீம் நண்பர்களை நிறுத்திவைத்து விசாரிக்கும் நிலை. குறிப்hபாக கிழக்கு முஸ்லிம்கள் மீது ஒரு விதமான சந்தேகமான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற தன்மை அதிகரித்துள்ளது. அண்மையில் நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஆனையிரவு சோதனைச்சாவடியில் வைத்து, இராணுவம் அவவ மட்டும் பஸ்ஸிலிருந்து இறக்கிப் பரிசோதனை செய்தது. இதேதான் முன்பு தமிழருக்கு மட்டும் நடந்தது. அதேநேரம், இனிமேல் இல்லையென்று நண்பர்களாகப் பழகிய முஸ்லிம்களுக்குள்ளே ஒருவரைப் பொலிஸார் விசாரணைக்கென அழைத்துச் சென்றால், அவருடன் வந்த மற்றையவர் கையெழுத்து இட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரை மீட்கத்தயங்குகின்ற பட்சத்தில், அவ்விடத்தில் ஒரு தமிழர், அல்லது சிங்களவர் முன்வந்து கையெழுத்திட்டு மீட்ட ஒரு சூழலையும் நான் சந்தித்தேன்.” என்கிறார் சமூகவியல் ஆய்வாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஜெயராஜா செல்வரூபன் வயது 45. (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

இவ்வாறு காலத்திற்குக்காலம் சந்தேகமும் விசாரணையும் மாறிக்கொண்டிருக்கிறது. மக்கள் என்னவோ நல்லிணக்கமாக வாழ முயற்சித்தாலும் அதிகார தரப்பு பிரித்துவைத்து ஆழத்தான் விரும்புகிறது. இதில் சிக்கித்தவிப்பது என்னவோ மக்கள்தான்.மக்கள் தமது இனம், அடையாளம் தொடர்பில் பெருமிதத்துடன் வாழமுற்பட்டாலும் அதுவே தமதுவாழ்வுக்கு வந்த சோதனையாக மாறும்போது அடையாளங்களை மறைக்கவும் தவிர்க்கவும் நேருடுகிறது.