Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

யாழ் ஆயரிடம் சில கேள்விகள்...
‘பாதிப்புக்குள்ளானவர்கள் பக்கம் நல்லிணக்கம் பேசப்படுகிறது..மற்றப்பக்கம்??

தீவிரவாத அல்லது மற்றவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்தும் அல்லது மற்ற மதத்தவர்களை நிந்திப்பவர்களை வெளியேற்ற வேண்டும். அவர்களையும் அவர்களுக்கு நலன் தரும் விடயங்களையும் பகிஷ்கரிக்க வேண்டும். இது போன்ற கருத்துக்களை வெளியிடுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அரசு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முன்வராவிட்டால்….

18.08.2019  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

“வெளிப்படையான, புரிந்துணர்வுடனும் , விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனுமான கலந்துரையாடல்களால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. மற்ற மதத்தவரது உணர்வுகளையும், இருப்பினையும் கேள்விக்குறியாக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் , செயற்பாடுகள் ஆகியவை நிறுத்தப்பட வேண்டும். எல்லா மதத்தவர்களதும் நியாயமான உரிமைகளும் , உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். இந்த மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.” என்று கூறுகிறார் யாழ்ப்பாண மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம். அவர் கட்டுமரனுக்கு வழங்கிய செவ்வி.

த கட்டுமரன் : இலங்கையில் 30 வருடங்களாக நீடித்த இனப்போர் ஓய்ந்து 10 வருடங்கள் கடந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு சம்பவம் மீண்டும் மக்களை இருண்ட யுகத்திற்கு அழைத்துச்சென்றள்ளது. உங்கள் கருத்து?

யாழ். ஆயர் : ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கள் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் உள்ளாகியமை உண்மையே. அதனைத் தொடர்ந்து திடீரென முளைத்த சோதனைச் சாவடிகள் மற்றும் கெடுபிடிகள் யுத்த கால நினைவுகளுக்கு மக்களை இட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் 30 வருட கால இனப்போர் அதன் பின்னணிகள் , பாதிப்புகள் என்பவற்றை ஈஸ்டர் குண்டுவெடிப்போடு ஒப்பிடமுடியாது. ஈஸ்டர் குண்டுவெடிப்பு அதன் பின்னணி எல்லாம் வித்தியாசமானது. 30 வருட இனப்போர் ஓய்ந்து 10 வருடம் கடந்த பின்னும் அதன் காரணங்கள், தாக்கங்கள் இன்னும் சீர்செய்யப்படவில்லை. ஆனால் ஈஸ்டர் குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள், நடத்தியவர்கள் இனங் காணப்பட்டுள்ளார்கள். இதுவரை கிடைத்த தகவல்களின்படி உறுதியுடன் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாது செயற்பட்டால், இனிமேல் இத்தகைய தாக்குதல்கள் நடைபெறாமல் செய்ய முடியும்.

த கட்டுமரன் : இந்தத் தாக்குதல்களினூடாக கிறிஸ்தவர்கள் மீதான வன்மம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இது எப்படி ?

யாழ் ஆயர்: 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சிலுவைப்போர்கள் என்று இடம்பெறாவிட்டாலும் உலகின் பல்வேறு இடங்களிலும் ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளுக்கும் இஸ்லாமியர்களு க்குமிடையே முக்கியமாக வியாபாரப் போட்டிகள் காரணமாக மோதல்கள் இடம்பெற்று வந்துள்ளன. நவீனகால வரலாற்றில் கடும்போக்கு இஸ்லாமியர்கள் மத்தியில் ‘ஜிஹாத்’ மனநிலை இருந்து வந்துள்ளது. பெரும்பான்மையான கிறிஸ்தவர்களும் , முஸ்லிம்களும் அமைதியாக வாழ விரும்பினாலும் சிறுபான்மை முஸ்லிம்களின் மனநிலை அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றது. இந்தச் சிறுபான்மை ‘ஜிஹாத்’ மனநிலை வளர்ச்சியடைந்து ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அரசு என்ற பாரிய திட்டத்தின் – வன்முறையினால் நிறைவேற்றும் திட்டத்தின் – ஓர் அங்கம் தான் உயிர்த்த ஞாயிறன்று அரங்கேறியது. அதற்கு ஏன் இலங்கையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதுதான் இன்னும் புதிராக இருக்கின்றது.

த கட்டுமரன் : ஆயுதப்பாதுகாப்போடு இறைவழிபாடு நடைபெறும் இன்றைய நிலை பற்றி?

யாழ் ஆயர் : இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு மற்றும் கடும் சோதனைக்குப் பின் வழிபாட்டிடங்களுக்கும் , யாத்திரைத் தலங்களுக்கும் அனுமதிக்கப்படுவது ஏற்புடையது அல்ல. இதனால் பொது வழிபாட்டிடங்களுக்கும் மற்றும் மக்கள் கூடும் யாத்திரைத் தலங்களுக்கும் மக்கள் வருகை குறைந்துபோனது. குண்டுவெடிப்புகள் நடக்கும் என்று எச்சரிக்கப்பட்ட பின் தடுக்க நடவடிக்கை எடுக்காதிருந்து விட்டு, பின்னர் இது போன்ற கெடுபிடிகளை நடைமுறைப்படுத்துவது குதிரைகள் வெளியே ஓடிப்போன பின் லாயத்தை மூடுவது போலாகும்.


யாழ். முஸ்லிம் தலைவர்களும் கத்தோலிக்க ஆயர் இல்லத்துக்கு வந்து பரஸ்பர புரிந்துணர்வையும், நட்புறவையும் பரிமாறிக்கொண்டனர்.

அடுத்தது, கோயில்களுக்கும், பாடசாலைகளுக்கும் இராணுவப் பாதுகாப்புப் போடப்படும் போதும், கவனிக்கப்பட வேண்டிய சில முக்கிய நடைமுறைகள் கவனிக்கப்படாமை கவலையளிக்கின்றது. உதாரணமாக தென்பகுதியில் ஒரு தந்தை பாடசாலையில் சுகவீனமுற்ற தன் பிள்ளையை அழைத்துச் செல்லும்படி, வந்த தொலைபேசி அழைப்புக்கேற்ப வந்த போது, சுட்டுக்கொல்லப்பட்டமை வேதனையளிக்கின்றது. இதனை நியாயப்படுத்த முடியாதுள்ளது. அவரை அழைத்தவர்கள் பாடசாலை வாயிலில் உள்ள இராணுவ வீரருக்கு இதுவிடயம் பற்றித் தெரிவித்திருக்க வேண்டும். அல்லது பாடசாலை நிர்வாகம் வாசலில் நின்று தந்தையை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். இப்படி எதுவுமே செய்யாது வெறுமனே பெயருக்கு இராணுவத்தையும், பொலிஸையும் பாதுகாப்புக்கு விடுவது தாம் மக்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று காண்பிக்க மட்டுமே உதவும்.

த கட்டுமரன் : ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தையும் குற்றவாளியாக பார்க்கும் இன்றைய நிலை பற்றி?

யாழ் ஆயர்: ஒரு குழுவால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பொறுப்பாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். அத்துடன் முஸ்லிம்களை ஒதுக்கி வைப்பது, அவர்களது வியாபாரத் தலங்களை பகிஷ்கரிக்க அழைப்பு விடுப்பது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள். பெரும்பாலான முஸ்லிம்கள் , உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்டதைப் போன்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு எதிரானவர்கள், அவற்றை வன்மையாகக் கண்டிப்பவர்கள். எனவே அவர்களைக் குற்றவாளிகளாக பார்க்கமுடியாது.

த கட்டுமரன் :தற்போது எழுந்துள்ள இன, மத ரீதியான எதிரெதிர் மனோநிலைகளைக் களைய , உங்கள் தரப்பிலிருந்து( கிறிஸ்தவ மக்களிடமிருந்து) எவ்வாறான முன்னெடுப்புகள் நிகழ்கின்றன?

யாழ் ஆயர் : குண்டுவெடிப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து சிலவேளைகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் எழலாம் என்று எண்ணி உடனடியாக பொறுப்புவாய்ந்த கிறிஸ்தவ தலைமைப்பீடம் தேசிய அளவிலும், மறை மாவட்ட (மாகாண) அளவிலும் உச்சக்கட்டப் பொறுமையைக் கடைப்பிடிக்கும்படி கிறிஸ்தவர்களுக்கும் எல்லா மக்களுக்கும் அறிக்கை விடுத்தமை எல்லோரும் அறிந்த விடயம். தாக்குதல் நடந்து சில நாட்களிலேயே கிறிஸ்தவ அமைப்புக்களின் குருக்கள், துறவிகள் , யாழ்ப்பாணத்தில் முக்கிய பள்ளிவாசல்களுக்குச் சென்று ஒரு கலந்துரையாடலை நடத்தி அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதத்தையும் வழங்கினர். இதுபோன்ற கலந்துரையாடல்கள் தொடர்ந்து இடம்பெறவும் இணக்கம் காணப்பட்டது. யாழ். முஸ்லிம் தலைவர்களும் கத்தோலிக்க ஆயர் இல்லத்துக்கு வந்து பரஸ்பர புரிந்துணர்வையும், நட்புறவையும் பரிமாறிக்கொண்டனர்.
யாழ். ஆயரின் பொறுப்பிலும் , பாதுகாவலிலும் இயங்கும் கியூடெக் – கரித்தாஸ் நிலையம் முஸ்லிம்கள் மத்தியில் முன்னெடுத்து வந்த சமூக நலன்சார் திட்டங்களைத் தொடர்ந்தும் தேக்க நிலையில்லாமல் முன்னெடுத்தேவருகிறது. வெளிப்படையான, புரிந்துணர்வுடனும் , விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனுமான கலந்துரையாடல்களால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. மற்ற மதத்தவரது உணர்வுகளையும், இருப்பினையும் கேள்விக்குறியாக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் , செயற்பாடுகள் ஆகியவை நிறுத்தப்பட வேண்டும். எல்லா மதத்தவர்களதும் நியாயமான உரிமைகளும் , உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். இந்த மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.

த கட்டுமரன் : அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள்தான் இன, மத நல்லிணக்கம் சார்ந்த கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். ஆனால் பௌத்த மதத் தலைவர்களில் சிலர் மதவாதக் கருத்துக்களை பகிரங்கமாக முன்வைப்பதோடு, மதரீதியான ஆதரவோடு தாம் நினைத்ததைச் சாதித்தும் வருகின்றனர். அது பற்றி…?

யாழ் ஆயர் : ஆம் உண்மைதான்…..தீவிரவாத அல்லது மற்றவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்தும் அல்லது மற்ற மதத்தவர்களை நிந்திப்பவர்களை வெளியேற்ற வேண்டும். அவர்களையும் அவர்களுக்கு நலன் தரும் விடயங்களையும் பகிஷ்கரிக்க வேண்டும். இது போன்ற கருத்துக்களை வெளியிடுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அரசு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முன்வராவிட்டால் அவர்களைத் தடுக்கவும் முடியாது அவர்களது கருத்துக்களை உள்வாங்குகின்றவர்கள் பிழையான வழியில் சென்றால், அவர்களையும் கட்டுப்படுத்த முடியாது. வெள்ளம் வருமுன்னே அணைகட்ட வேண்டும். அதன் பின் இராணுவத்தையும், பொலிஸையும் கொண்டு வந்து நிலைமையைக் கட்டுப்படுத்த முயல்வதில் பயனில்லை.