Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

தேர்தல் வருகிறது...
காணியுரிமையை மக்கள் கோருகிறார்கள்!

மக்கள் தங்களின் உரிமை, உடமைகளைக் காத்துக்கொள்ள ஒருபுறமாக அலைகின்றனர், மக்களின் பிரதிநிதிகள் இன்னுமொரு புறமாக எதற்கோ அலைகின்றனர்…..

03.09.2019  |  
அம்பாறை மாவட்டம்
நில அபகரிப்பு சம்பந்தமான கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கான சுவரொட்டியை ஒட்டும் மக்கள்

“அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 14127 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தினாலும் தனி நபர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையானது மாவட்டத்தினதும் நாட்டினதும் இன நல்லிணக்க முயற்சிகளுக்கு பாரிய தடையாக இருக்கிறது” என்று கூறும் கைறுதீன் நிஹால் அஹமட், காணிகளை மீட்பதற்கான போராட்டங்களை தலைமையேற்று நடாத்தி வரும் ‘மனித எழுச்சி நிறுவனத்தின்’ நிறைவேற்றுப் பணிப்பாளர். “பல தசாப்தங்களாகியும் இன்னும் தீர்க்கப்படாத இந்த காணிப்பிரச்சினைகள் இனங்களிடையே மேலும் மேலும் இனக்குரோதங்களையும், பிரிவினைகளையுமே வளர்த்து வருகின்றது” என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
இது தொடர்பில் கட்டுமரனுக்கு அவர் வழங்கிய செவ்வி:

கைறுதீன் நிஹால் அஹமட்
த கட்டுமரன் : அம்பாறை மாவட்டத்தில் நிலவுவது எத்தகை 
காணிப்பிரச்சினைகள்?

பதில்: காணி உரித்து என்பது ஒரு சமூக இருப்பின் அடையாளமாகும். காணிப்பயன்பாட்டுப் பாதுகாப்பு மற்றும் நியாயமான காணிப்பகிர்வின் ஊடாகவே நாட்டில் நம்பகமான நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும், தேசிய பொருளாதார வளர்ச்சியையும் உறுதிப்படுத்திக் கொள்வது சாத்தியமாகும். இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து சிறுபான்மையினர் செறிவாக வாழும் மாவட்டங்களைக் குறிவைத்து அபிவிருத்தி எனும் பெயரில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் ஊடாகவும், தொழிற்சாலைகள் நிர்மாணம், வனப் பாதுகாப்பு, வனவிலங்குப் பாதுகாப்பு, தொல்பொருள் பிரதேசங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு எனும் போர்வைகளிலும் திட்டமிட்ட குடியேற்றங்கள் ஊடாகவும் நலிவுற்ற மக்களின் விவசாய, மேய்ச்சல் மற்றும் குடியிருப்பு நிலங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறாக நிலப்பறிப்பு நடைபெறும் ஒரு மாவட்டமாகவே அம்பாறை மாவட்டம் காணப்படுகின்றது. முஸ்லிம்களும், தமிழர்களும் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இத்திட்டமிட்ட குடியேற்றத்தால் அதிகரிக்கப்பட்ட மக்கள் தொகையால், அம்பாறை மாவட்டத்தின் பூர்வீக குடிமக்களின் உரிமை மீறல்கள், சிறுபான்மை மக்களினுடைய இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அத்துடன் இது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக முரண்பாடுகளையே தோற்றுவிக்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக தங்களுடைய பொருளாதாரம் மற்றும் பாரிய உடல் உழைப்புக்களையும் பயன்படுத்தி கட்டாந்தரைகளாக இருந்த நிலங்களை செழிப்பான வயல்களாக்கி பல நூறு வருடங்கள் விவசாயம் செய்து வந்த பூர்வீகக் குடிகள் தமது நிலங்களை இழந்து வருகின்றனர். இதுவரை 14127 ஏக்கர் காணிகள் அவ்வாறு இழக்கப்பட்டுள்ளதாக மக்களின் முறைப்பாடுகளூடாக ஆதாரங்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.

த கட்டுமரன்: இக்காணிகளை மீட்பதற்கு உங்கள் அமைப்பு 
எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது?

பதில் : பாதிக்கப்பட்ட காணிக்காரர்களை ஒன்றிணைத்து ‘காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி’ (யுனுயுடுசு) எனும் அமைப்பை வலுப்படுத்தி வழிநடாத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளோம். எமது அமைப்புக்கு தற்போதுவரை கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் 18608 காணிப் பாவனையாளர்களது 14127 ஏக்கர் பரப்புள்ள காணிகள் இழப்பு தொடர்பான ஆய்வு அறிக்கையினை உருவாக்கியுள்ளோம். இவ் அறிக்கையானது அதிகாரபூர்வமான ஆவணங்களுடாக எமது அமைப்பின் சட்ட ஆலோசகரின் பகுப்பாய்வு உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களையும் இழந்த காணிகளையும் பரிந்துரைக்கும் வகையில் அவற்றை ஆவணப்படமாக்கியுள்ளோம்.
இக்காணிப் பிரச்சினைகள் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, லாகுகலை, தமணை, சம்மாந்துறை, நிந்தவூர், இறக்காமம் மற்றும் அம்பாறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்டவைகளாகும். இப்பிரச்சினைகளை தீர்த்து மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரும் கோரிக்கைகளை பொறுப்புவாய்ந்த அரச அதிகாரிகளுக்கும் வகைப்பொறுப்புள்ள அரசியல்வாதிகளுக்கும் மற்றும் சர்வதேச மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கும் முன்வைத்து வருகின்றோம். அத்துடன் அவ்வப்போது தேவையின் நிமித்தம் பலதடவைகள் மக்கள் பேரணிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றோம். இவை அனைத்தினையும் மேற்கொள்ளத் தேவையான வளங்களையும் ஏனைய சிவில் அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களினதும் பங்களிப்புக்களையும் அணிதிரட்டி வருகின்றோம்.

த கட்டுமரன் : காணி உரிமை மக்களின் அடிப்படை உரிமை என்ற 
வகையில் இந்த ஆக்கிரமிப்பை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடியாதா?

பதில்: எம்மிடம் முறைப்பாடாகக் கிடைக்கப்பெற்ற பல பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சட்ட நடவடிக்கைகளை நாடியுள்ளனர். காணித்தகராறில் அடிபட்டு காயப்பட்டவர்களாக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். எந்த பலனும் இல்லை. அதேநேரம் தங்களுடைய சொந்த வயலுக்குள் சென்ற விவசாயிகளை வனத் திணைக்கள அதிகாரிகளும் வனவிலங்குபாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் கைது செய்து நீதிமன்றங்களில் நிறுத்தி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஆனாலும்; முறையான ஆதாரங்களை வன, வனவிலங்கு திணைக்களம் சமர்ப்பிக்காததன் காரணமாக அவ் வழக்குகள் தள்ளுபடியாகியும் உள்ளன. இருந்த போதிலும் அக்காணிகளுக்குள் செல்ல தொடர்ந்தும் பூர்வீக மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் கைது செய்யும் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றது. நலிவுற்ற விவசாயிகளால் தொடந்தும் இவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாதுள்ளது.

பொத்துவில் பிரதேசத்து பள்ளியடிவட்டை காணி தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்று விவசாயிகளுக்கு நியாயமாக தீர்க்கப்பட்டது. பின்னர் அந்த தீர்ப்பினை வழங்கிய நீதவான் பதவி நீக்கப்பட்டார். ஆனால் இந்த காரணத்திற்காகத்தான் அவர் பதவிவிலக்கப்பட்டார் என விவசாயிகள் நம்புகின்றனர். அதன் விளைவாக வன, வனவிலங்கு திணைக்களங்களால் பிடிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க நீதி தேடி விவசாயிகள் நீதிமன்றத்தினை நாடுவதனைக் குறைத்து வருகின்றனர். வழக்கு தாக்கல் செய்ய சட்டத்தரணிகளை நாடும்போது பல சட்டத்தரணிகள் இவ்வாறான வழக்குகளைத் தாக்கல் செய்வதில் பின்வாங்குகின்றனர்.

த கட்டுமரன் : அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 
பாராளுமன்ற உறுப்பினர்கள் கணிசமாக உள்ளார்கள். அவர்கள் இந்த 
விடயத்தில் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லையா? 
இதில் அரசியல்வாதிகளது ஒத்துழைப்பு எவ்வாறுள்ளது?

பதில் : இக்காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதில் பெரும்பங்கு அரசியல் வாதிகளுக்குரியதாகும். இப்பிரச்சினைகள் அரசியல்வாதிகளால் அறியப்படாதவைகளும் அல்ல. இருந்த போதும் பராமுகமாக இருக்கும் இவர்களது போக்கானது பெரும் சந்தேகத்தினை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. இக்காணிகளின் இழப்புக்களானது அம்பாறை மாவட்டத்தில் கல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் திட்டமிட்ட குடியேற்றத்தில் ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது. யுத்த சூழ்நிலைகளை வாய்ப்பாக்கிக்கொண்ட காணி அபகரிப்பாளர்கள் யுத்த முடிவின் பின்னராவது இவற்றுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் அக்காலத்து அரசியலால் ஏமாற்றப்பட்டனர். அதன் பின்னர் இம்மக்கள் நல்லாட்சிக்கு வாக்களித்து அதில் காணிகள் விடுவிக்கப்பட்டு தீர்வு கிடைக்குமென்று காத்திருந்தனர் அதிலும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

மக்கள் தங்களின் உரிமை, உடமைகளைக் காத்துக்கொள்ள ஒருபுறமாக அலைகின்றனர், மக்களின் பிரதிநிதிகள் இன்னுமொரு புறமாக எதற்கோ அலைகின்றனர். இவர்கள் இரு துருவங்களாகிப் போன நிலை காணப்படுகின்றது. மக்களின் பிரதிநிதிகளான அரசியல் பிரதிநிதிகள் முதலில் தாங்கள் செல்லும் பாதையை மாற்றி மக்கள் பிரச்சினைகளை உணர்ந்து ஆதாரங்களைத் திரட்டி தாங்கள் ஆதரவளிக்கும் தேசிய அரசியலுடன் பேரம்பேசி தீர்த்துவைக்கும் நிலைக்கு விரைந்து மாறவேண்டும் என்பது மக்களின் ஆவலாகும். இந்தத் தேர்தலில் மக்கள் தமது தலைமைகளைத் தேர்ந்தெடுக்கும்போது இந்தக் கோரிக்கையும் வலுப்பெற்ற ஒன்றாக இருக்கும்.

த கட்டுமரன் : இக்காணிப் பிரச்சினை மாவட்டத்தின் இன நல்லிணக்கத்தில் 
எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்று எண்ணுகிறீர்கள்?

1965 ஆம் ஆண்டுகளில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்ஓய அபிவிருத்தியின் கீழ் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்புக்காணிகள் சீனிக் கூட்டுத்தாபனத்திற்காக கைப்பற்றப்பட்டதுடன், அதுவரை அரசாங்க அங்கீகாரத்தோடு விவசாயம் செய்துவந்த காணிகளைவிட்டும் குறிப்பாக முஸ்லிம்கள் பலவந்தமாக அடித்துவிரட்டி வெளியேற்றப்பட்டார்கள். சிறப்பாக நெற் செய்கை செய்துவரப்பட்ட காணிகளில் கரும்புச் செய்கை செய்வதற்காக தென்னிலங்கையிலிருந்து சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றினர். அக்காணிகளின் உரித்துக்களும் அவர்களுக்கே வழங்கப்பட்டது. அதில் நுரைச்சோலை, அம்பலத்தாறு, ஓமரங்காய், சேனைக்கண்டம், சோலவட்டை, வேலமரத்து வெளி, சியாத்தரவட்டை, பொன்னன்வெளி, போன்ற இன்னும் பல வயல் பிரதேசங்களும் அடங்கும். அதே நேரம் ஒருபகுதி விவசாயிகளை இலாபமற்ற கரும்பு செய்கையினை செய்யுமாறு சீனி கூட்டுத்தாபனத்தினால் வற்புறுத்தப்படுவது அடிப்படை உரிமையினை மீறும் செயலாக உள்ளது.

சிறுபான்மை முஸ்லிம், தமிழ் மக்களினது காணிகள் அரச அனுசரணையுடன் அபகரிக்கப்படுவதும், பெரும்பான்மையினரை அங்கு குடியேற்றம் செய்வதும் எவ்வாறான நல்லிணக்கத்தை ஏற்பதும்? இவ்hவறு செய்வது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய உரிமை மீறலும் அநீதியுமாகும். உதாரணமாக அம்பலத்தாறு வட்டை (750 ஏக்கர்), கீத்துப்பத்து பாவாபுரம்(96 ஏக்கர்), ஓமரங்காய் வட்டை (650 ஏக்கர்), பொன்னென் வெளி வட்டை (600 ஏக்கர்) காணிகள் சிறுபான்மை மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டவையாக உள்ளன. நாட்டில் சிறுபான்மைச் சமூகமாக இருந்த மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசத்தில் திட்டமிட்டு பெரும்பான்மை சமூக்தைக் கொண்டுவந்து குடியமார்த்தி சிறுபான்மையினரை இங்கும் சிறுபான்மையாக்கி அவர்களை அடக்குவது ஒருபோதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. அடுத்து அரசு மக்களின் காணிகளை அரச காணிகளாக உரிமப்படுத்தி மக்களை விரட்டுவதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.

த கட்டுமரன் : ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில் 
நீங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் பற்றி?

பதில் : அம்பாறை மாவட்டத்தில் இதுவரைக்கும் காணிகளை இழந்த 18000 இற்கும் அதிகமானவர்கள் தங்களது உரிமைகளை வென்றுதரும் அரசியல் வாதிகளுக்கே எதிர்வரும் தேர்தல்களில் ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளனர். காணிகளை இழந்தவர்கள் தங்களது நெருங்கிய உறவுகளிடம் தங்களின் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு விழிப்புணர்வூட்டி வருகின்றனர். அதன் ஆரம்ப கட்டமாக ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை காணி மீட்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளோம். மாவட்ட மட்டத்தில் சுவரொட்டி (போஸ்டர்) பிரசாரம், ஆர்ப்பாட்டம் மற்றும் பொது மக்கள் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். இந் நடவடிக்கையானது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வாரமாக தொடரும்.
காணிகளை இழந்த மக்கள் தங்களுடைய பிரதேசங்களில் ஒவ்வொரு வீடுவீடாக சென்று தங்களது காணிகளை மீட்க ஆதரவு வழங்கி ஒத்துழைக்குமாறு வேண்டுவதற்கு ஆரம்பித்துள்ளதுடன் இனியும் காணிகள் பறிபோகாது இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் வேண்டி வருகின்றனர்.

த கட்டுமரன் : இந்தப் பிரச்சினையை வெளிக் கொண்டு வருவதில் 
தேசிய ரீதியாக மும்மொழி ஊடகங்களும் 
எந்தளவுக்குப் பங்களிப்புச் செய்கின்றன?

பதில் : அதிகமாக தமிழ் ஊடகங்களில் மாத்திரம் இவை முன்கொண்டுவரப்படுகின்றன.
சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டு பெரும்பான்மை சமூகத்தவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படல் வேண்டும். சிறுபான்மை மக்கள் வனப் பிரதேசத்தை காணிகளாக்க முயற்சிக்கின்றனர் என போலிப் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருவதும், பெரும்பான்மை மக்களின் மனங்களில் சிறுபான்மை இனத்தவர்கள் தொடர்பாக நம்பிக்கை இழக்கச் செய்யப்படுவதும் தொடர்கின்றது. உண்மை அதுவல்ல என்பதனையும், ஒரு ஏக்கர் அல்லது இரண்டு ஏக்கர் காணிகளை வைத்துக்கொண்டு விவசாயம் செய்து கொண்டிருந்த ஏழை விவசாயிகளின் காணிகளே திட்டமிட்டு ஆக்கிரமிக்கப் பட்டிருக்கின்றது என்னும் உண்மையும், இம் மக்களினுடைய வறுமையும் வாழ வழியின்றித் தவிக்கும் தவிப்புக்களும் எடுத்துக்காட்டப்படல் வேண்டும்.