Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கல்வியியல் விரிவுரையாளரின் கருத்தில்…
மக்களைத்தவறாக வழிநடத்துபவர்களை ஓரங்கட்டுவது எப்படி?

ஓன்றில் மக்கள் கல்விமூலம் ஒரு இனத்தவர் மற்ற இனத்தவரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது மனிதாபிமான ரீதியில், ஒரு இனத்தின் உரிமைகள் மறுக்கப்படும் போது மற்ற இனத்தவர்கள் அவர்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் நிலை இருக்கவேண்டும்…

15.09.2019  |  
அம்பாறை மாவட்டம்
சிரேஷ்ட விரிவுரையாளர் அன்சார் பழில் மௌலானா

“இலங்கையில் இன ரீதியான பாடசாலைகள் உருவாக்கப்பட்டதன் பின்பு இன ரீதியான வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்பாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளிலுள்ள விழுமியக் கல்வி (Ethics education) முறை எமது நாட்டிலும் செயற்படுத்தப்பட வேண்டும். அதாவது அனைத்து இன மாணவர்களும் அனைத்து மதங்களிலுமுள்ள நல்ல விடயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.” என்கிறார் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை சிரேஷ்டவிரிவுரையாளரும், கிழக்கு முஸ்லிம் கல்விப் ரேவையின் ஊடக இணைப்பாளருமான அம்பாறை மருதமுனையைச் சேர்ந்த அன்சார் பழில் மௌலானா(53)

த கட்டுமரனுக்காக அவர்களுடனான நேர்காணல்….

தகட்டமரன்:தொழில் ரீதியாக விரிவுரையாளராக இருக்கும் நீங்கள் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பிரச்சார உறுப்பினராகவும் உள்ளீர்கள். மதம் சார்ந்து பொது தளத்தில் எவ்வாறு இயங்குகிறீர்கள்?

பதில்: எனது சமூக சேவையின் ஒரு அங்கமாகத்தான் நான் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பிரச்சார உறுப்பினராக இருக்கிறேன். அதனூடாகப் பல இன நல்லுறவு செயற்பாடுகளையும் மேற்கொண்டுவருகின்றேன். குறிப்பாக மத போதகர்களுக்கு போதகர்களுக்கு (மௌலவிமார்) மக்களிடையே பிரச்சாரங்கள் செய்யும் நுட்பத்தையும் தெளிவையும் அறிவூட்டுவதுடன் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், மதம் கூறியதை சரியாக விளங்கித் தெளிவாக கூறும் படியும் பயிற்றுவிக்கிறேன். அத்துடன் இனவாத மதவாத சிந்தனைகளை இல்லாமல் செய்யும் நோக்குடன் மக்களிடையேயும் மௌலவிமார்களிடையேயும் அறிவூட்டல் கருத்தரங்குகளையும் இதனூடாகச் செய்து வருகின்றேன். இவைமட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்காக கல்வியியல்க் கல்லூரி, ஆசிரியர் கலாசாலையிலும் இன நல்லுறவு சக வாழ்வு எனும் எண்ணக் கருவை ஊக்கப்படுத்தி வருகிறேன். அவர்கள் மூலம் ஒரு நல்லிணக்க மாணவ சமூகத்தை உருவாக்குவதே எனது எண்ணம்.

த கட்டுமரன்: இன நல்லுறவு, சக வாழ்வு என்பது பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் எவ்வாறுள்ளது.?

பதில்: முஸ்லிம் என்பவன் சாந்தி சமாதானம் இன நல்லுறவு உள்ளவராக காணப்பட வேண்டும் மாறாக குழப்பவாதியாக இனவாதியாக, தீவிரவாதியாக இருக்க கூடாது என்பதே இஸ்லாத்தின் கோட்பாடாகும் ஆனால் சிலர் இதனை புரிந்து கொள்வதில்லை.


ஒரு இனத்தின் மத, கலாச்சார அறிவுகள் மற்றைய இன மாணவர்களுக்கு தெரிவதில்லை..

இஸ்லாத்தின் போதகர் முஹம்மது (ஸல்) கூறும் போது “மனிதர்களுக்கு பிரயோசனமானவரே உங்களில் சிறந்தவர்”இங்கு மனிதன் எனும் பொதுப் பெயர் பாவிக்கப்பட்டுள்ளது. எனவே இன மதம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் ஒரு மனிதன் உதவ வேண்டும். அதுதான் இஸ்லாமியக் கண்ணோட்டம்.

த கட்டுமரன்: மாணவர்களிடையே இன ரீதியான நல் உறவுகள் குறைவாகவுள்ளன என்ற குற்றச்சாட்டு உண்டு. இதனை எவ்வாறு களையலாம்?

பதில் :சுதந்திரத்துக்கு பின் பாடசாலைகள் இன ரீதியாக உருவாக்கப்படதனால் ஒரே இனத்தைச் சேர்ந்த அல்லது ஒரே மதத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் ஒரு பாடசாலையில் கல்வி கற்கத்தொடங்கினர். இதனால் ஒரு இனத்தின் மத, கலாச்சார அறிவுகள் மற்றைய இன மாணவர்களுக்கு தெரிவதில்லை. இது இனரீதியான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு தடையாவே உள்ளது. பாடசாலையில்தான் அப்படியென்றால், பல்லின மாணவர்கள் பயிலும் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு வந்த மாணவர்களும் தனித்தனி குழுவாகவே இயங்குகின்றனர். அவர்களின் பாடசாலைப் பழக்கத்துக்கு அமைய ஒரே இனத்தை அல்லது ஒரே மதத்தை சேர்ந்தவர்களுடனே அதிகம் கூட்டுக் சேர்கின்றனர். இதனால் இன உறவை மேலோங்கச் செய்வது தொடர்ந்தும் கஷ்டமாகவேயுள்ளது. எனவே பல்லின மக்கள் வாழும் நாடுகளில் பாடசாலை, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விழுமியக் கல்வி உருவாக்கப்படவேண்டும். இதனால் அனைத்து இன மாணவர்களும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையையும் மறியாதையையும் கட்டியெழுப்புவர். இதனால் இன நல்லிணக்கம் ஏற்படும். மற்றவர்களின் மதரீதியான பொய்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அதனால் இனவிரிசல் ஏற்படமாட்டாது.

த கட்டுமரன்: ‘விழுமியக்கல்வி’ என்று நீங்கள் கூறுவதன் விளக்கம் என்ன?

பதில்: மதக் கல்விக்கு ஈடாக கொண்டுவரப்பட்ட கல்வி முறையே விழுமியக்கல்வியாகும். அதாவது அனைத்து மதங்களிலுமுள்ள நல்ல பொதுப்படையான விடயங்களை தொகுத்து இக் கல்வித்திட்டம் ஆக்கப்பட்டுள்ளது. உதாரணமாக அன்பு செலுத்துதல், நீதியாக நடத்தல், நேர்மை போன்ற அறம் பொருந்திய விடயங்கள் குறித்து அனைத்து மதங்களிலும் கூறப்பட்டவைகளை உள்ளடக்கிய கல்வித்திட்டமாகும். இதை அனைத்து மதத்தவர்களும் விரும்புவர். ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இக் கல்வித்திட்டம் பாடசாலை மட்டத்திலிருந்து உயர் கல்வி நிறுவனங்களிலும் கற்பிக்கப்பட்டுவதுடன் விசேடமாக பல்கலைக்கழகங்களில் இதற்கென பீடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனை மனிதப் பெறுமான கல்விக்கான பீடம் என அழைக்கின்றனர். அதே போல் ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ்,மாலைதீவு போன்ற நாடுகளிலும் விழுமியக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விசேடமாக சார்க் நாடுகளின் சார்க் பிரகடனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பியநாடுகளின் விழுமியக்கல்வித்திட்டத்தில் சமயங்களில் கூறப்பட்ட விடயங்களைக் குறிப்பிட்டு அவை எந்த மத நூலில் கூறியது என சுட்டிக்காட்டப்படுவதில்லை. ஆனாலும் ஆசியா நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஸ்,மாலைதீவு போன்றவற்றில் அவை எந்த மத நூலில் (அல்குர்ஆன், பைபிள், பகவத்கீதை, மகாவம்சம்)குறிப்பிடப்பட்டது என்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

த கட்டுமரன்: கட்டமரன்: இலங்கையில் அறிமுகப்படுத்தவேண்டும் என்றீர்கள்.இதற்கான சாத்தியப்பாடுகள் எந்தளவில் உள்ளன?

பதில்: இலங்கையில் கல்வி மாணி, கல்வி முதுமாணி பாடநெறிகளுள் இது சேர்க்கப்பட்டுள்ளது. எமது பாடசாலைகளில் விசேட செயற்திட்டத்தின் மூலம் இதனை மேற்கொள்ள முடியும். இதற்காக முதலில் ஆசிரியர்களுக்கு விழுமியக்கல்வி பற்றிய அறிவை வழங்கவேண்டும். பல்கலைக்கழகங்களில் தற்போது ஒப்படைகள், ஆய்வுக்கட்டுரைகள் விழுமியக்கல்வி சம்மந்தமாக மேற்கொள்ளப்பட்டாலும் அதனை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும். விழுமியக்கல்வியை பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கு மதக் கல்வியியலாளர்கள், மதத் தலைவர்கள் இணைந்து பங்களிப்பு செய்யலாம்.

த கட்டுமரன்: இனங்களிடையே ஒரு இக்கட்டான சூழல் உருவாகும்போது அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் போவதற்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?

பதில்: அனேகமாக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தில் இருக்கும் இனவாதிகள் போலிச் செய்திகளை உருவாக்குகிறார்கள். வெறுப்பூட்டும் பேச்சுக்களை வெளிப்படுத்துகிறார்கள். இவற்றை ஊடகங்கள் உடனடியாக பரவலாக்கம் செய்துவிடுகிறது. இதனால் ஓர் இன மக்கள் மற்ற இன மக்களில் நம்பிக்கை இழக்கின்றனர் இது சாதாரண மக்களிடையே சந்தேகத்தையும் வெறுப்பையும் உருவாக்குகிறது. இந் நிலையில் ஒருவருடன் ஒருவர் மனம் விட்டு பேச முடியாத நிலை ஏற்படுகிறது. இதனைத்தான் நாம் ஏப்ரல் 21 ஆம் திகதிய தாக்குதலின் பின் அவதானிக்க முடிந்தது.


பொய்ச் செய்திகள் , வெறுப்புப் பேச்சுக்கள் உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளன.

கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஒரு இனத்துக்காக வேறு இனங்களிலிருந்து உண்மையை கதைக்கும் நபர்கள் கூட இக்கால கட்டத்தில் அமைதிகாத்தனர். காரணம் அவர்களில் கூட இந்த ஊடகங்களின் பொய் செய்திகள் தாக்கம் செலுத்தியுள்ளன. இலங்கையில் பரப்பப்படும் பொய்ச் செய்திகள் , வெறுப்புப் பேச்சுக்கள் உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளன. இதனால்தான் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த மதத் சுதந்திரத்திக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட அறிக்கையாளர் அஹமட் சஹீப் இலங்கை அரசுக்கு தேசிய நல்லிணத்துக்கான பல முன் மொழிவுகளை முன்வைத்ததுடன் வெறுப்புப் பேச்சுக்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துச் சென்றிருக்கிறார்.

த கட்டுமரன்: ஊடகங்கள்மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்திருக்கிறீர்கள். ஆனால் இதில் மக்கள்தானே செயற்பாட்டாளர்கள்.?

பதில்: ஆம். ஆனால், ஓன்றில் மக்கள் கல்விமூலம் ஒரு இனத்தவர் மற்ற இனத்தவரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது மனிதாபிமான ரீதியில், ஒரு இனத்தின் உரிமைகள் மறுக்கப்படும் போது மற்ற இனத்தவர்கள் அவர்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் நிலை இருக்கவேண்டும். அவ்வாறு இருக்கின்றபோது, மக்களிடையே பொய்ச் செய்திகள் வெறுப்புப்பேச்சுக்கள் எடுபடாது. அது மன்டுமின்றி இதனால் மக்களைத்தவறாக வழிநடத்தும் அரசியல்வாதிகள், இனவாதிகள், ஊடகங்கள் எல்லாம் ஓரம் கட்டப்படும். மக்கள் தங்கள் அதிகாரத்தை அரசியல்வாதிகள் கையில் கொடுக்கும்போது சரியான தேர்வுகளைச் செய்யவேண்டும். நாம் யாருக்கு எதற்கு வாக்களிக்கப்போகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். இங்கே மக்களிடையே செல்வாக்கு செலுத்துவதில் ஊடகங்கள் மட்டுமல்ல மதபோதகர்களும் முக்கியமானவர்கள்.