Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

அப்பம் சுடும் கலாச்சாரம்:
சிங்கள அப்பம்!? தமிழ் அப்பம்!?

“ஓடைக்கரை அப்பம்” என்னுடைய காலத்தோடு முடிந்து விடும். இப்பொழுது அப்பம் சுடுவது நான் மட்டும் தான் முன்பு 13 பேர் சுட்டோம். எனது சகோதரிகளும் சுட்டார்கள் இப்பொழுது அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள். நான் தான் இங்கிருக்கிறேன். ஏனையவர்கள் பிரதேச சபைக்காரர்களின் வரி நெருக்கடியால் சுடுவதை நிறுத்தி விட்டார்கள். வயது வந்தவர்களும் இயலாமை காரணமாக சுடாமல் இருக்கிறார்கள்…

26.09.2019  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
அப்பம் சுடும் பெண்ணொருவர்

உணவுகள் வாய்க்கு ருசியாக சமைப்பது ஒரு கலை. அதிலும் சில உணவுகள் அந்த அந்த கலாசாரத்திற்குரியனவாக அடையாளப்படுத்தப்படுவதும் தேசிய உணவாக நாடுகள் பிரகடனப்படுத்துவதும் அனைவரும் அறிந்ததே. சில உணவுகள் எல்லோரும் செய்வார்கள். ஆனால் வேறுபட்ட வகைகளில் விதங்களில் தயாரிக்கப்படும். அந்த வகையில் இலங்கையில் அப்பம் என்ற பெயருடன் ஒரே சாப்பாடாக இருந்தாலும் அது தாயரிக்கப்டும் முறைகள் வேறுபட்டனவாக உள்ளன. அதிலும் தமிழ் அப்பம்,சிங்கள அப்பம் என்பதுதான் சுவாரஸ்யமான விடயம். யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பரம்பரை பரம்பரையாக அப்பம் சுட்டுவிற்கும் குடும்பங்கள் அதிகமாக இருந்த வீதி

விதவிதமான அப்பம்

‘ஓடைக்கரை’ வீதியாகும். இன்றும் அந்த ஓடைக்கரை வீதியில் ‘ஒடைக்கரை அப்பம்’ பிரபல்யமாக பேசப்படுகிறது. இதேபோல் அப்பம் சுட்டு விற்பவர்களை மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் அதிகமாகக் காணலாம். இந்த அப்பங்கள் மரபுரீதியாக பின்பற்றப்பட்ட வழிகளில்தான் இன்றும் சுடப்படுகின்றன. அதாவது எந்த வித இரசாயண பதார்த்தங்களும்(அப்பச்சோடா,வெளிற்றப்பட்ட கோதுமைமா என…) சேர்க்கப்படாமல் சிவப்பு அரிசிமாவில், தேங்காய் மட்டை விறகு அடுப்பில் வைத்து செய்யப்படுகிறது. அதிகமாக பெண்கள்தான் இந்த தொழிலைச் செய்கின்றனர். மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் பால் அப்பம்தான் பிரபல்யமானது. இந்த மரபார்ந்த தொழிலை பரம்பரையாக செய்துவரும் பெண் ஒருவரை வடபகுதியின் பருத்தித்துறையில் கட்டுமரனுக்காகச் சந்தித்தோம். இன்று அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விபரித்தார்.

த கட்டுமரன் : நீங்கள் எப்போதிருந்து இந்த அப்பம் சுட்டுவிற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளீர்கள்?

நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலைச் செய்துவருகிறோம். யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறையில் அமைந்துள்ள ஓடைக்கரை தான் இந்த

ஓடைக்கரை வீதி

ஊரின்பெயர். ஓடைக்கரை, அப்பத்திற்கு பெயர்போனது. ‘ஓடைக்கரை அப்பம்’ என்றே அழைப்பார்கள். இத் தொழிலை பரம்பரை பரம்பரையாக பல பெண்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதில் எங்கள் குடும்பமும் ஒன்று. நாங்கள் ஐந்து சகோதரிகள். ஐந்து பேரும் முன்னைய வருடங்களில் அப்பம் சுடும் தொழிலைத்தான் செய்துவந்தோம். இப்பொழுது நான் மட்டும்தான் செய்கிறேன்.

த கட்டுமரன் : ‘ஒடைக்கரை அப்பம்’ எனப் பெயர் சொல்லி அழைப்பதற்கு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா?

ஆம் காரணம் இருக்கின்றது. இலகுவாக சொல்லுவது என்றால் ‘ஓடைக்கரை’ என்பது எமது ஊரின் பெயர் அதுவே நாம் சுடும் ‘அப்பம்’ என்ற உணவுப்பொருளுடன் இணைந்து ‘ஓடைக்கரை அப்பம்’ ஆனது.
பருத்தித்துறை பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாரைக்கேட்டாலும் கைகாட்டி வழிகூறுவார்கள் ஓடைக்கரை வீதிக்கு, மிகப்பழைமையானது எமது இந்த வீதி. வீதிக்கு குறுக்காக அல்லது வீதியை ஊடறுத்து சிறு சிறு வாய்க்கால்கள் போன்ற வடிவத்திலான ஓடை காணப்படுகின்றது. இருசக்கர வாகனங்களில் இவ்வீதி வழியாகச் சென்றால் ஒருமுறையில்லை பலமுறை ஏற்ற இறக்கத்துடன் செல்ல வேண்டும். இங்கு பிரபல்யம் மிக்கது நாம் சுடும் அப்பம் தான்.

//
வீதியின் இருமருங்கும் ஓடைகள் இருக்கும். அந்த ஓடைகளை அண்டி நமது வீட்டு மதில்கள்(சீமெந்து வேலி) இருக்கும். மதில்களில் நடுவில் சதுர வடிவில் ஓட்டைகள் விட்டு கட்டியிருப்போம். அதுதான் ஓடைக்கரை அப்பம் சுடுவதற்குரிய இடம். மதிலுக்கு உள்ளுக்குள் இருந்து நாம் அப்பம் சுடும்போது வெளியில் இருந்து யாரும் பார்க்கமுடியாது. காசு கொடுத்து அப்பத்தை மட்டும் வாங்கிச் செல்லலாம். இவ்வாறு அப்பம் சுடுவதற்காக ஒதுக்கப்பட்ட இவ்வகையான இடம் இங்கே கிட்டத்தட்ட 13 வீடுகளில் இருக்கின்றது.

த கட்டுமரன் : ‘ஓடைக்கரை அப்பம்’ மிக சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பார்கள் அதன் இரகசியம் என்ன?

இரகசியம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எமது கைப்பக்குவம் என் தான் கூறமுடியும்.
புதிதாக இடிச்சு எடுக்கிற சிவப்பு அரிசிமாவில்தான் அப்பம் சுடுவம். அப்பம் சுடுவதற்கு பனைக்கள்ளு மிக முக்கியமான ஒன்று, முன்பெல்லாம் பனைக்கள்ளு எங்கயாவது தேடித்திரிஞ்சாவது ‘வாங்கிடுவோம் இப்போ தேடியும் எங்கட ஊருக்குள்ள நல்ல பனைக்கள்ளு கிடைக்காது.காலையில இளநீர் எடுத்து வைச்சா பின்னேரத்துக்கு அது புளிச்சிடும் அதைத்தான் நான் அப்பத்து மாவுக்கு சேர்க்கிறனான் என்ன தான் இருந்தாலும் கள்ளுப்போல வராது, அந்தச் சுவை தனிச்சுவை, மருத்துவ குணமும் கொண்டது. இப்பொழுது யார் தான் சுவையை நாடுகினம்?

வெளிநாடுகளில இருந்து வாறவர்கள் கூட இங்க வருவினம் அப்பம் சாப்பிடுவதற்கு ஓடக்கரை அப்பம் அவ்வளவு சுவையானது என்பார்கள்.நாங்கள் அப்பம் சுடும் மாவில் வேறெந்த கலவையும் சேர்ப்பது இல்லை. அதுவும் ஒரு காரணம் தான். நாங்கள் இதைச் சுடும் முறையும் வித்தியாசமானது. அப்பச் சட்டிக்கு கீழும் நெருப்பு இருக்கும். சட்டிக்கு மேலும் இன்னொரு சட்டியை வைச்சு தேங்காய் மட்டை நெருப்பு இருக்கும்.

த கட்டுமரன் : என்னென்ன வகையான அப்பம் சுடுகிறீர்கள்?

பொதுவாக தேங்காய்ப்பால் சீனி போட்டு சுடும் பால் அப்பம்தான். அத்துடன், வெள்யைப்பம் (பால் சேர்க்காதது) தேங்காய், நெல்லிக்காய் போட்டு செய்யும் சம்பலுடன் அல்லது கத்தரிக்காய் கறியுடன் சாப்பிடுவது. ஆனா கடைகளில சிங்கள அப்பங்கள் வந்திற்று. அதையும் நாங்க செய்யிறம்.

த கட்டுமரன் : அதென்ன சிங்கள அப்பம்?

நாங்கள் அப்பம் என்றால் அது தேங்காய் பால் போட்டு சுடும் அப்பம்தான் பிரதானமானது. அல்லது தேங்காய் சம்பலுடன் சாப்பிடுவது. சிங்கள மக்கள் முட்டை, கட்ட சம்பல் என்று வித்தியாசமாக செய்வார்கள்.

த கட்டுமரன் : ஆம் சிறு சிறு ஹோட்டல்களிலெல்லாம் அப்பம் விற்கிறார்கள் இது உங்களது தொழிலில் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகின்றது?

நாங்கள் ஒரு சோடி அப்பம் 30ரூபாய்க்கு தான் விக்கிறனாங்கள், கடைகளில 50ரூபாய்க்கு விக்கினம். இப்பெல்லாம் வியாபாரம் போறது குறைவாத்தான் இருக்கு. வியாபாரம் போகுதில்ல என்றதுக்காக அப்பம் சுடாமலும் இருந்திருக்கிறேன் அந்தநேரம் வருத்தக்காரரும், குழந்தைப்பிள்ளைக்காரரும் அப்பம் வாங்க ஓடித்திரிவினம் அதைப்பார்க்கும் போது மனசு கனக்கும், தொழில் தெரிஞ்சும் அதைச் செய்து குடுக்காம இருக்கிறமே என்று, ஆனால் குழந்தைப்பிள்ளைக்காரர், வருத்தக்காரர் எல்லாரும் என்னட்ட முன்கூட்டியே சொல்லுவினம். நான் சுட்டுக்குடுப்பேன். எங்கட கைப்பக்குவம் போல யாரும் அப்பம் சுட மாட்டினம்தானே…

த கட்டுமரன் :இந்த வியாபாரத்தில் வேறு ஏதாவது பிரச்சினைகளை எதிர்நோக்குகிறீர்களா?

இது பெரிய வியாபாரம் எண்டு சொல்லமாட்டன்.ஏதோ குடும்பச் செலவுக்கு உதவியா இருக்கு. அதோட விருப்பமானவர்கள், சமையல் செய்ய முடியாதவர்களுக்கு உதவியாகத்தான் இதைச் செய்கிறேன். இப்பொழுது பிரச்சினை என்ன என்றால் பிரதேச சபைக் காரர்தான். இந்தச் சுகாதாரப் பரிசோதகர்களின்ர பிரச்சினைக்கு பயந்து பயந்து அப்பம் சுட வேண்டியிருக்கு. எனது பூட்டி காலத்தில் இல்லாத வரி அறவீடுகள் எல்லாம் இப்ப தான் நான் காணுகிறேன். இவர்களின் வரிக்கு வேறு பணம் குடுக்கோணும் எண்டால் நான் என்ன தான் செய்வது.? நாங்கள் சுதந்திரமாகத் தான் இவ்வளவு காலமும் அப்பம் சுட்டு விக்கிறனாங்கள். இப்ப அந்தச் சுதந்திரம் கிடையாது. ஏதோ போதைப் பொருளை விக்கிறது மாதிரிப் பயந்து பயந்து தான் அப்பம் சுடுறம். காரணம் கேட்டால் சுகாதார முறைப்படி அப்பம் சுட வேண்டும் என்கிறார்கள். இந்த சதுர வடிவ அமைப்பு போதாது இதைப் பெரிதாக்குங்கள் என்கிறார்கள்.
இதைப் பெரிதாக்கினால் ஓடைக்கரை என்கிற தொன்மை உடைந்து போய்விடும் இதை அவர்கள் அறிந்தும் முரண்டு பிடிக்கிறார்கள்.

த கட்டுமரன் : அவர்கள் உங்கள் நலனுக்காகத்தான் அப்படிச் சொல்கிறார்கள்…?

அவர்கள் கூறிய படி சுகாதாரப் பரிசோதனைகள் எல்லாம் செய்தேன். ஊசி போட்டேன். இன்னும் பல பரிசோதனைகள் அவர்கள் கூறிய படியே செய்தேன். ஆனா வரிப்பிரச்சினைதான் பெரிய பிரச்சினை.நாங்கள் இந்த அப்பம் சுடுவதற்காக ஒதுக்கும் நேரம் வெறும் இரண்டு மணித்தியாலயங்கள்தான். மாலை 4மணிக்கு ஆரம்பித்து 6மணிக்கெல்லாம் சுட்டு முடித்து விடுவோம். இதுதான் எமது வழமை. ஆனால் நாள் முழுவதும் இவ்வேலையைச் செய்வது போல இவர்களது வரிப்பிரச்சினை எமது சுதந்திரத்தை இல்லாமல் செய்து விட்டது. இதனாலும் இந்த தொழிலை விட்டுவிடலாமா என்று தோன்றும்.

த கட்டுமரன் :இப்போது உங்களது குடும்பத்தினர் இந்த தொழிலுக்கு ஒத்துழைப்பு தருகிறார்களா?

உண்மையைக் கூறினால் இங்கு அப்பம் சுடும் கடைசிப் பெண் நான்தான். “ஓடைக்கரை அப்பம்” என்னுடைய காலத்தோடு முடிந்து விடும். இப்பொழுது அப்பம் சுடுவது நான் மட்டும் தான் முன்பு 13 பேர் சுட்டோம். எனது சகோதரிகளும் சுட்டார்கள் இப்பொழுது அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள். நான் தான் இங்கிருக்கிறேன். ஏனையவர்கள் பிரதேச சபைக்காரர்களின் வரி நெருக்கடியால் சுடுவதை நிறுத்தி விட்டார்கள். வயது வந்தவர்களும் இயலாமை காரணமாக சுடாமல் இருக்கிறார்கள்.
என்ர பிள்ளைகளும் நான் அப்பம் சுடுவதை இப்போது கௌரவக் குறைச்சலாக பார்கினம் நாங்கள் வளந்திற்றம் ஏன் நீங்கள் இப்பவும் அப்பம் சுடுறீங்கள் என்று கேட்பினம் ஆனா நானும் உழைக்கிறன் எண்டு என்ர தொழில விட்டுக்கொடுக்க மாட்டேன்.முன்பு அப்பம் சுட்டு தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களுக்கு புதிய ஆடைகள் எடுத்திருக்கிறேன், என் பிள்ளைகளுக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த வருசம் 20 ரூபாய்க்கு கூட அப்பம் விற்றிருக்கிறேன். என்ன செய்கிறது அம்மா கூடவே இருந்து பழகின தொழில் எனக்கு சந்தோசத்த தாற தொழில், ஒரு நாள் அப்பம் சுடயில்லை என்றால் கூட அந்த ஒரு நாள் பயனற்று போனதாக இருக்கும். உண்மையைச் சொன்னால் அப்பம் சுடாமல் விட்டால் அலுப்பாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த தொழில். இந்தத் தொழில் அழிஞ்சு போகக் கூடாது ஓடைக்கரை அப்பம் அழிந்து போகக் கூடாது அதுதான் என்ர விருப்பம், இந்த வீதி முன்பெல்லாம் மாலைநேரம் வந்தால் எவ்வளவு கலகலப்பா இயங்கும் தெரியுமா 13 பேர்அப்பம் சுடுவம் அப்பவும் வியாபாரம் போகும் இப்பெல்லாம் அது இல்ல.