Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

தமிழ்ச் சமூகத்தில்
போருக்குப் பின்னர் விவாகரத்து மேலும் மேலும் அதிகரிக்கிறது

“அப்பா, அப்பா” என்று அழைத்தபடி ஒரு மனிதனின் பின்னே போக எத்தனித்த அந்தச் சிறுவன். அந்த மனிதர் தன்னைத் திரும்பியும் பார்க்காததால் ஏமாற்றமடைந்து தாயிடம் திரும்பி, “அப்பா ஏன் அம்மா அபிக் குட்டியைப் பார்க்காமலேயே போறார்? அப்பா இங்கதான் இப்ப வேலை செய்கிறாரா? பாங்குக்குப் (வங்கி) போறதில்லையா?” என்று கேள்விகளை அடுக்குகிறது. யாழ்ப்பாணம் நீதிவான் மன்றத்தில் கூடியிருந்த பலர் அனுதாபத்துடனும் பரிதாபத்துடனும் அந்தச் சிறுவனைப் பார்க்கிறார்கள். கண்களில் பொங்கி வழியும் கண்ணீரை மறைத்துக் கொள்வதற்காகவே சிறுவனை இழுத்து […]

28.05.2016  |  
வவுனியா மாவட்டம்
Divorce rates are on the rise in Sri Lanka.
Divorce rates are on the rise in Sri Lanka.

“அப்பா, அப்பா” என்று அழைத்தபடி ஒரு மனிதனின் பின்னே போக எத்தனித்த அந்தச் சிறுவன். அந்த மனிதர் தன்னைத் திரும்பியும் பார்க்காததால் ஏமாற்றமடைந்து தாயிடம் திரும்பி, “அப்பா ஏன் அம்மா அபிக் குட்டியைப் பார்க்காமலேயே போறார்? அப்பா இங்கதான் இப்ப வேலை செய்கிறாரா? பாங்குக்குப் (வங்கி) போறதில்லையா?” என்று கேள்விகளை அடுக்குகிறது. யாழ்ப்பாணம் நீதிவான் மன்றத்தில் கூடியிருந்த பலர் அனுதாபத்துடனும் பரிதாபத்துடனும் அந்தச் சிறுவனைப் பார்க்கிறார்கள். கண்களில் பொங்கி வழியும் கண்ணீரை மறைத்துக் கொள்வதற்காகவே சிறுவனை இழுத்து அணைத்துக் கொள்கிறாள் அந்தத் தாய். “அப்பா பிறகு வருவார்” என்று மகனைச் சமாதானப்படுத்த முயற்சிக்கிறாள்.
குடும்பத்தைப் பராமரிப்பதற்கான பணத்தைக் கணவனிடம் இருந்து பெறுவதற்காக அந்தப் பெண் நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறார். மூன்று ஆண் பிள்ளைகள் அவருக்கு. “மூத்த மகனால் நிலமைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்றாலும் கடைசிப் பையனுக்கு இந்த வயசில் எப்படிப் புரிய வைப்பது?” என்கிறார் திருமதி மகேஸ்வரி ரவிராஜ். 22 வயதில் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். விரைவிலேயே மூன்று குழந்தைகளுக்குத் தாயானார். மூத்தவனுக்கு இப்போது 18 வயதாகின்றது. படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு 17 வயதிலேயே வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டான்.
அவர்களின் வீடு தலைநகர் கொழும்பில்தான் இருக்கின்றன. ஆனாலும் மாதா மாதம் பராமரிப்புப் பணத்தைப் பெறுவதற்காக யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு அவர் வரவேண்டியிருக்கிறது. காதல் கணவன் இப்போது வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதால் 3 பிள்ளைகளுடன் மகேஸ்வரி கைவிடப்பட்டிருக்கிறார். அதனால்தான் கணவனிடம் இருந்து பராமரிப்புப் பணம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார்.
“எனக்குக் கடும் நெருக்கடி கொடுக்கிறார்கள். எப்படியாவது நானாக விவாகரத்துக் கேட்கவேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் நான் கொடுக்கமாட்டேன். இப்போதும் சேர்ந்து வாழ்வதற்குத் தயார்” என்கிறபோது மகேஸ்வரிக்கு நா தளுதளுக்கிறது.
வடக்கில் உள்ள அதிகளவான பெண்கள் மகேஸ்வரியைப் போன்றில்லை. அவர்களே நீதிமன்றங்களை நாடி விவாகரத்து வழக்குகளைத் தாக்கல் செய்கிறார்கள். நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையில் விசாரிக்கப்படும் வழக்குகளின் வரிசையில் விவாகரத்துக்களுக்கு முன்னணியில் இடம் இருக்கிறது இப்போது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பாரம்பரியமான திருமணத்திற்கு இன்னமும் மிக முக்கிய இடம் வழங்கப்படுகிறது. கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த தமிழ் சமூகம் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வலுவிழக்க அரம்பித்துள்ளதையே சிதைந்துவரும் குடும்பக் கட்டமைப்பும் அதிகரித்துவரும் விவாகரத்துக்களும் எடுத்துக் காட்டுகின்றன என்கிறார்கள் உளவியலாளர்கள்.
2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வருவதற்கு முன்பாக நிலமை இத்தகையதாக இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். “2009ஆம் ஆண்டுக்கு முன் உயிர்வாழ்தலே சவாலாக இருந்தபோது மக்கள் விவாகரத்துப் பற்றி சிந்திக்கவில்லை” என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் பெண்ணியவாதியுமான நளினி ரட்ணராஜ்.
இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்தபோது நாட்டின் வடக்கு, கிழக்கின் பெரும்பாலான பகுதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தமிழர்களுக்காகத் தனிநாடு கேட்டு விடுதலைப் போராட்டம் நடத்தி வந்தனர் புலிகள். கட்டிறுக்கமான அமைப்புக்குப் பேர் பெற்றவர்கள் புலிகள் என்பதால் மக்கள் மத்தியிலும் குடும்பக் கட்டுக்கோப்பும் பண்பாட்டு கட்டிறுக்கமும் தீவிரமாக இருந்தது.
“இறுக்கமான சூழ்நிலையில் வாழ்ந்த மக்கள் போர் முடிவடைந்த பின் வரன்முறையற்ற வகையில் வாழத் தலைப்பட்டுள்ளனர். சமூக விழுமியங்கள் இழக்கப்படுவது குறித்து அவர்கள் கலைப்படவில்லை” என்கிறார் நளினி. போருக்கு பின்னரான காலப் பகுதியில் வடபகுதிக் கிராமங்களுக்குள் நுழையும் வெளிஇடத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும் அவர்களால் இளம் பெண்கள் பலர் இலகுவாக காதல் வலையில் வீழ்த்தப்படுவதும்கூட குடும்பங்களின் சிதைவுகளுக்கும் விவாகரத்துக்களின் அதிகரிப்புக்கும் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2014 ஆண்டின் புள்ளி விவரங்களின்படி நாளொன்றுக்கு 400 விவாகரத்துக்கள் இலங்கை நீதிமன்றங்களில் இடம்பெறுவதாக சமூக சேவைகள் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்தே செல்கின்றது.
தமிழ்ச் சமூகத்தின் அடையாளமான கூட்டுக்குடும்பங்கள் அரிதாகியமை, கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் இன்மை, இருவரது குடும்பங்களுக்கும் இடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பழக்க வழக்கங்கள் என்பவற்றின் காரணமாக ஏற்படும் முரண்பாடுகள் விவாகரத்தை நோக்கிக் குடும்பங்களைத் தள்ளுகின்றன.
பொருளாதாரத் தேவைகளுக்காகக் கணவன் அல்லது மனைவி வெளிநாடு சென்றுவிடுவதும் விவாகரத்துக்களை ஊக்கப்படுத்தும் காரணியாகவுள்ளது. தனித்துவிடப்படும் கணவன் அல்லது மனைவி உள்ளுரில் வேறு துணையை நாடுவது இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சோரம் போதல் என்ற பதத்தின் கீழ் விவாகரத்துக்கான ஒரு காரணமாக இலங்கையின் சட்டங்களால் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
விவாகரத்துக்களின் அதிகரிப்புக்கு சுமார் 30 வருடங்களாக இடம்பெற்று வந்த விடுதலைப் போராட்டமும் ஒரு காரணம் என்று சொல்வோரும் உண்டு. “விடுதலைப் புலிகள் இயக்கம் பெண்களை ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாகச் செயற்பட ஊக்கமளித்தது. ஆயுதப் போராட்டம் பெண்களுக்குத் தன்னம்பிக்கையையும் துணிவையும் வழங்கியது. போர் முடிவுற்ற பின் வீட்டு வன்முறைகள், முறையற்ற நடத்தைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் விவாகரத்துக் கோருவதற்குமான மன வலிமையைப் போராட்டக் காலத்தின் ஊடாகப் பெண்கள் பெற்றிருக்கிறார்கள்” என்கிறார் சமூகவியலாளரும் சட்டத்தரணியுமான கந்தசாமி தயாபரன்.
“உள்நாட்டுப் போரால் சமூகக் கட்டமைப்பின் அடித்தளம் மாற்றமடைந்துள்ளது. சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர்ந்த மக்கள் வேறு இடங்களில் மீளக்குடியமர்ந்தபோது அயலவர் மற்றும் உறவினர்களினால் கிடைக்கும் சமூகப்பாதுகாப்பு இல்லாமல் போனதும் விவாகரத்துகளை அதிகப்படுத்துகிறது” என்று அவர் மேலும் கூறுகிறார்.
“பருத்தித்துறை தொடக்கம் காலி வரை விவாகரத்து அதிகரித்தவண்ணமே உள்ளது. மக்களுடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டுவரும் மாற்றமும் சமூக மாற்றமும் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பது விவாகரத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும்.”
25 வயது தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகமாக விவாகரத்துப் பெறுகிறார்கள் என்கின்றன நீதிமன்றப் புள்ளிவிவரங்கள். திருமணமாகி 2 – 3 வருடங்களுக்குள் விவாகரத்துக் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கின்றனர் சட்டத்தரணிகள். இலங்கையில் அதிகமான விவாகரத்துக்கள் திருமணமாகி மூன்று வருடத்திற்குளேயே நடக்கின்றன என்று பெண் சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார்.
“ஆயிரம் காலத்துப் பயிர் எனத் தமிழ்ச் சமூகத்தால் போற்றப்பட்ட திருமணங்கள் குடும்பத்தில் ஏற்படும் சிறிய பிணக்குகளால்கூட விவாகரத்துவரை செல்வது கவலையளிக்கின்றது” என்கிறார் மருத்துவ சமூகவியலாளர் சி.சிவகாந்தன். அதிகரித்து வரும் விவாகரத்துக்களின் எண்ணிக்கையானது எதிர்காலத்தில் பெரும் சமூகப் பிரச்சினைகளை உருவாக்கும் என்று எச்சரிக்கவும் செய்கிறார் அவர்.
“பண்பாட்டு ரீதியான மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. குடும்பப் பிணக்குகளுக்கான உடனடித் தீர்வாக விவாகரத்தைப் பார்க்கிறோம். நீண்டகாலத் தீர்வு என்ன என்பதைச் சிந்திக்க மறந்து விடுகின்றோம்” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். “எமது சமூகம் ஆணாதிக்க சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. குடும்பங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளுக்கு அரச மற்றும் சட்ட நிறுவனங்கள் விவாகரத்தையே தீர்வாகக் கூறுகின்றன. குடும்பங்களை இணைப்பதிலும் விவாகரத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் இந்த நிறுவனங்களுக்குப் பங்கோ அக்கறையோ இல்லை.”
கணவன் மனைவி இருவரும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து செல்லும்போது அவர்கள் இடையே சுமூகமான நிலமை காணப்படுவதில்லை. பிரிந்த பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலமையே அதிகம் காணப்படுகின்றது. விவாகரத்துப் பெற்றவர்களை, குறிப்பாகப் பெண்களை தமிழ்ச் சமூகம் ஒதுக்கி வைத்தே கையாள்வதும் இதற்கான ஒரு காரணம். இந்த நிலமையால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.
தங்கள் தாய் தகப்பன் விவாகரத்துப் பெறுவதற்கான சூழ்நிலைகள் பற்றியோ அவர்கள் இடையிலான உறவு முறிவு பற்றியோ புரிந்துகொள்ளும் பருவத்தைப் பெற்றிராத குழந்தைகளின் நிலை பெரிதும் சிக்கலானதாக மாறுகின்றது.
“என்னுடைய மனைவி ஒரு சட்டத்தரணி. எங்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திலே நிலுவையில் உள்ளது. என்னுடைய ஒரேயொரு மகளைப் பிரிந்து என்னால் இருக்கமுடியாது. மாதத்தில் ஒருநாள் எனது மகளைப் பார்ப்பதற்கு நீதிமன்றம் எனக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால் எனது மனைவி அந்த ஒரு நாளைக்கூட நான் எனது மகளுடன் செலவிட அனுமதிக்கிறார் இல்லை. ஏதாவது காரணங்கள் சொல்லி தடையை ஏற்படுத்திவிடுகிறார்” என்கிறார் எம்.பரணிதரன்.
“விவாகரத்தால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவை. விவாகரத்தான பெற்றோரின் பிள்ளைகள் அரோக்கியமற்றவர்களாகவும் வன்முறைகளுக்கு உட்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆரோக்கியமற்ற ஒரு சமூக இனங்காணலை இவர்கள் எதிர்காண நேருகின்றது. உணர்வுகள் மழுங்கடிக்கப்படுதல் மற்றும் ஆளுமை பாதிக்கப்படுதல் என்பனவற்றால் இப்பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள்” என்கிறார் சிவகாந்தன்.
“மேலைத்தேய நாடுகளில் விவாகரத்துப் பெறுகின்றவர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் அக்கறை கொள்கின்றனர். ஆனால் இலங்கையில் விவாகரத்தால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானவை. விவாகரத்தான பெற்றோரின் பிள்ளைகள் ஆரோக்கியமற்றவர்களாகவும் வன்முறைகளுக்கு உட்படுபவர்களாகவும் இருக்கிறார்கள்” என்றார் க.ஆரோக்கியநாதன். விவாகரத்துப் பெற்றுக் கொண்ட அவருக்கு இரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் தாயாருடனேயே வளர்கிறார்கள். ஆரோக்கியநாதன் அவர்களைப் பார்ப்பதே அரிது.
இலங்கையின் மாவட்ட நீதிமன்றங்களில் பயிற்றப்பட்ட உளவளத்துணையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றமையும் அவர்களுக்கு முறையான பயிற்சிகள் மற்றும் பொறிமுறைகள் இல்லாமையும் விவாகரத்துக் கோரும் குடும்பங்களை மீள இணைக்க முடியாமைக்கான காரணம் என்று கூறுகின்றார் நளினி. உளவளத்துணையாளர்களுக்கு தமது கடமையைச் செய்ய போதிய பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டியதும் அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.
தமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவாவது விவாகரத்தை முடிந்தவரை தவிர்த்து ஆரோக்கியமான சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவதில் பெற்றோர்கள் கருத்துடன் செயற்படவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.