Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சட்டவிரோத மது!
சனம் அநியாயமா வறுமை நோய் எண்டு செத்து போகுதுகள்…..

ஒருநாள் கூலி 1000 ரூபா. அதில், 600 ரூபாவை மதுவிற்கு செலவழித்துவிட்டு 400ரூபாவை வீட்டுக்குக் கொடுத்தால் நாலு அல்லது ஐந்து பிள்ளைகளைப் பராமரிக்கும் மனைவிபாடு திண்டாட்டம் தான்.

05.03.2017  |  
மட்டக்களப்பு மாவட்டம்
பொலீஸில் பிடிபட்ட சட்டவிரோத மது(கசிப்பு)
வயிரமுத்து துசாந்தன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரை, படுவான்கரை என இரண்டு பகுதிகள். எழுவான் கரை என்பது சூரியன் உதிக்கும் இடம், படுவான் கரை என்பது சூரியன் மறையும் இடம். இரண்டும் பக்கத்தில் பக்கத்தில். மட்டக்களப்பு வாவி இந்த ஊர்களைப் பிரித்து நிற்கிறது. போர் நடந்த காலங்களில் எல்லாம் படுவான்கரை என்றால் மதிப்பும் கௌரவமும் சற்று அதிகமாகத்தான் இருந்ததாம். அதையெல்லாம் இந்த சாராயக் கடைக்கள் குலைத்துவிட்டன என்ற ஆதங்கம் அங்குள்ள மக்களுக்கு உண்டு. படுவான் கரையில் கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் என்று சொல்லப்படுவது பெரும்பாலும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவைத்தான். இவ்வளவு வருடகாலத்திலும் முதன்முதல் 2008 இன் ஆரம்ப பகுதியில்தான் அரசினால் அனுமதி பெற்ற இரண்டு சாராயக் கடைகள் அங்கு திறக்கப்பட்டுள்ளன.
“முன்னர் வெளியிடங்களில் இருந்து அரை, கால்போத்தல் என வாங்கி, மற்றவர்களுக்கு தெரியாமல் குடித்து வந்தவர்கள் இப்போது எல்லோரும் பார்க்கும் படியாக நேரடியாக  ஒன்று இரண்டு போத்தல் என கடையில்வாங்கத் தொடங்கிவிட்டனர். புதுப்புது குடிகாரர்களும் உருவாகிவிட்டனர். இதற்கு போட்டியாக சட்டவிரோத கசிப்பு வியாபாரமும் கொடிகட்டி பறக்குது இங்க..” என்கிறார் அந்த ஊரைச்சேர்ந்த ச.பத்மநாதன்.

அதிலும் குறிப்பாக இங்குள்ள சில கிராமங்களில், மிக மோசமாக கசிப்பு வியாபாரமும் அதற்கு அடிமையாகும் மக்கள் தொகையும் அதிகரித்துவருவதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் அ.அருள்ராஜசிங்கம் கூறுகையில், “குஞ்சிலிருந்து கூரான்வரை குடிக்குதுகள், கண்டவன் எல்லாம் வடிக்கிறான்.(சாட்ட ரீதியற்ற சாராயம் ‘வடி’ என்றும் கூறப்படுகிறது.)


“வேளாண்மை வெட்டப்போற இடத்தில கொண்டுபோய் ‘வடி’ விற்கிறானுகள். களைச்சு போய் இருக்கிறவங்களுக்கு கொண்டுபோய் கையில குடுக்கதிறமாதிரி இதை செய்து பழங்கிறாங்கள். “

இது ஒரு ‘சொப்பின் வேக்’ (shopping bag) வியாவாரம்.(போத்தலைவிட இதை சொப்பிங் பாக்கில் கட்டி விற்பதுதான் அதிகம்) வேளாண்மை வெட்டப்போற இடத்தில கொண்டுபோய் ‘வடி’ விற்கிறானுகள். களைச்சு போய் இருக்கிறவங்களுக்கு கொண்டுபோய் கையில குடுக்கதிறமாதிரி இதை செய்து பழங்கிறாங்கள். இந்த ‘வடி’ சாராயத்திற்கு பாடசாலை பிள்ளையளையும் இலக்கு வைக்கிறாங்கள். அதுதான் மோசமான செயலா இருக்கு.” என்கிறார், கவலையும் கோபமும் பொங்க. அதேநேரம், “போர் முடிஞ்சாப்பிறகு தான் இந்தப்பிரச்சினை. முன்னம் 1981ம் ஆண்டிலையும் சீல் சாரயத்தை வீடுகளில் வைச்சு தெரியாம வித்தினம். ஆனால் ‘பெடியள்’  விடேல்ல. இளைஞர்கள் கொஞ்சப்பேர் பொலிஸ்சோட இணைந்து செயற்பட்டு அனைத்தையும் இல்லாமல் செய்தாங்கள்.” என்கிறார் பெருமிதத்துடன்.

ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் அ.அருள்ராஜசிங்கம்.
ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் அ.அருள்ராஜசிங்கம்.

கடந்த வருடம் ஜனாதிபதியின் நேரடி ஆலோசனையின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நாடு பூராவம் ‘மதுவிற்கு முற்றுப்புள்ளி’ என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சட்டரீதியற்ற மதுபாவனை விற்பனை செய்ததற்காக 2016இல் இந்த  படுவான்கரைப் பிரதேசத்தில் 130பேர் பிடிபட்டுள்ளனர். அதில் 13 பேருக்கு எதிராக இன்னும் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. மிகுதியானோர் தமக்கான தண்டப்பணத்தைக் கட்டிவிட்டு விடுதலையாகியுள்ளனர் என்பதை அப்பிரதேச பொலீஸ் அறிக்கை கூறுகிறது. இதேநேரம், “பிடிச்சால் தண்டனைக்கான தண்டப்பணத்தை கட்டிவிட்டு திரும்பபோய் செய்யத் தொடங்கிறாங்கள்” என்று பெயர் குறிப்பிடவிரும்பாத பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

சட்டவிரோத மது தயாரிப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் .பொலீசாரால் பிடிக்கப்பட்டவை.
சட்டவிரோத மது தயாரிப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் .பொலீசாரால் பிடிக்கப்பட்டவை.

“வடிக்கிறவனுக்கு பணம் சேருது குடிக்கிறவனுக்கு குடும்பம் சீரழியுது. சீமெந்து, கறல்கம்பி, அழுகிய பழங்கள், சீனி, ஈஸ்ற் என்று உடம்புக்கு கேடு விளைவிக்கிற பொருள்கள் எல்லாம் போட்டுதான் இந்த கசிப்பு வடிக்கிறதாம் என்று கதைக்கிறானுகள் அதுட உண்மை, பொய் தெரியாது. அதுமட்டுமா சாவும் நடக்குது. போன வருசம் இதால இரண்டு பேர் செத்து இருக்கானுகள். இதை எப்பபிடியாவது நிப்பாட்டவேணும். இல்லையெண்டால் இந்த சனம் அநியாயமா வறுமையில சிக்குதுகள், கெதியா நோய் வருத்தம் எண்டு செத்தும்போகுதுகள்” என்கிறார் ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் அ.அருள்ராஜசிங்கம்.
உடலுக்கு கேடுவிளைவிக்கும் இதை ஏன் செய்யிறாங்கள்? சட்டவிரோத செயலில் ஈடுபடும் ஒருவரை கட்டுமரன் சார்பில், கண்டுபிடித்து அவரிடமிருந்து தகவல் பெற்றோம். “இதுக்கு மூவாயிரம் செலவழித்தால் எங்களுக்கு முப்பதாயிரம் கிடைக்குது, இது பிழையென்றும் தெரியும், ஆனா, வாங்கிறவங்க நிறையப்பேர் இருக்கிறாங்க அதால விற்கிறம். அவங்க வாங்காமவிட்டா நாங்களும் விற்கமாட்டம்.”  இந்த விதண்டாவாதத்தை நாம் என்ன செய்வது? “சரி நீங்கள் இதைத் தயாரிப்பதற்கு என்ன என்ன பொருட்களைப் பயன்படுத்துகிறீர்கள்?” சற்று தயங்கிய அவர், “ ஈஸ்ற்றும் சீனியும் மட்டும்தான்” என்றார். இவ்வளவு கொள்ளை லாபம் தரும் உடலுக்கு கேடு விளைவிக்கும் இந்த சட்டவிரோத மதுவிற்கு அடிமையாகும் அப்பாவிகள் யாரென்று பார்த்தால், அன்றாடம் கூலிலேலைசெய்து பிழைப்பு நடத்தும் வறியவர்களே.
“நான் வயலில தொழில் செய்யிறனான். இந்த வெய்யிலில தொழில் செய்யேக்க சரியான களைப்பா இருக்கும். அப்பிடி உடம்பு முடியாம இருக்கேக்க, என்ர சினேகிதன் ஒருவன் இதை பழக்கினான். இதை குடிச்சால் களைப்பில்லாம வேலை செய்யலாம். சாராயம் வாங்கிறதெண்டால் ஒரு போத்தல் 1200 ரூபா. இந்த கசிப்பு, 600 ரூபாதான். இது நிறைய வெறிக்கும். அதனாலதான் குடிக்கிறன். குடிக்கிறதால நோய்யெல்லாம்வரும் என்றதும் தெரியும். ஆனாலும் இப்பெல்லாம் குடிக்காட்டி உடம்பெல்லாம் படபடவெண்டு இருக்குது. குடிச்சாதான் அதுகுறையும். குடிச்சா என்ன நடக்குதோ தெரியா…. இன்னும் இன்னும் குடிக்கணும் போலதான் இருக்கு.” என்று தனது அனுபவத்தை கூறும் 40வயது  த. சீனித்தம்பியைப்பார்த்தால் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 65 வயது மதிக்கத்தக்க நபராக காட்சியளிக்கிறார். மதுவிற்கு அடிமையாகியுள்ளார்.
இவ்வாறு மதுவிற்கு அடிமையாகியுள்ள கூலிவேலை செய்யும் நபர்களின் ஒருநாள் கூலி 1000 ரூபா. அதில், 600 ரூபாவை மதுவிற்கு செலவழித்துவிட்டு 400ரூபாவை வீட்டுக்குக் கொடுத்தால் நாலு அல்லது ஐந்து பிள்ளைகளைப் பராமரிக்கும் மனைவிபாடு திண்டாட்டம் தான். அதிலும் சில நேரங்களில் “நண்பர்கள் சேர்ந்தால் அந்த 400 ரூபாவும் வீட்டுக்கு வராது.” என்று கூறும் 5பிள்ளைகளுக்கு அம்மாவான 45வயது எஸ். சரஸ்வதி தொடர்கிறார். “இவர் குடிக்கு அடிமையாயிற்றார். சரியான கவலையும் கஸ்ரமுமா இருக்கு. வேலை குடுக்கிற ஆக்கள் குடிச்சிற்று வேலைக்கு வரவேணாம் எண்டு சொன்னா அண்டைக்கு காசில்ல. வீட்டுக்கு காசு தராத நேரம் கடனகிடன வாங்கி பிள்ளையளுக்கு சாப்பாடு குடுப்பன். சிலநேரம், நானும் சின்ன சின்ன வேலை செய்து 100 அல்லது 200 வைச்சிருப்பன். அதையும் ,என்னோட சண்டைபோட்டு பறிச்சு குடிக்க கொண்டுபோவார். அப்பெல்லாம் பிள்ளையளோட செத்திரலாம் போல இருக்கும்.” வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் அந்த தாயின் குரல் அது.
இப்படி இடியப்பச்சிக்கலாகி நிற்கும் இந்த மதுவிற்பனையும் மதுப்பழக்கமும் வறியவர்களின் வாழ்வில் தீராத வேதனையாக உள்ளது. இந்த மதுப்பழக்கத்தை முற்றாகத் தடுப்பதற்கு எங்கிருந்து ஆரம்பிப்பது? யாரிடமிருந்து யார் ஆரம்பிப்பது?