Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கல்முனை மாநகரசபையில்..
 பெண் உறுப்பினர்களுக்கு சம வாய்ப்பு வேண்டும்!?

புதிய உள்ளுராட்சி சீர்திருத்தம் மூலம் பெண்களின் அங்கத்துவத்தை உறுதிப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோன்று பெண்கள் உள்வாங்கப்பட்டிருப்பது மாத்திரமில்லாமல் அவர்களது சுதந்திரமான அரசியல் செயற்பாட்டுக்கும் வழிகோலப்பட வேண்டியது தேவையாகும். மேலும் இந்த உள்ளுராட்சி சீர்திருத்தத்தின் மூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது என்பது மனவருத்தமான விடயமாகும்.

23.08.2018  |  
அம்பாறை மாவட்டம்
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஆரிகா காரியப்பர்.

“கல்முனை மாநகர சபையில் 41 அங்கத்தவர்களில் 12 பெண்கள் இருக்கிறார்கள். இச் சபையில் 3 குழுக்கள் இருக்கிறது. ஒவ்வொரு குழுவிலும் 6 அங்கத்தவர் வீதம் இருக்க வேண்டும். ஆகக் குறைந்தது இரண்டு குழுக்களிலாவது பெண்கள் உள்வாங்கப்பட்டிருக்குமானால் பெண்களின் பிரதிநிதிகளால் அவர்களுடைய பிரச்சினைகளை முன்வைத்து தேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் எந்தவொரு குழுவிலும் பெண் பிரதிநிதித்துவம் அங்கு இல்லை.” என்கிறார் சிரேஷ்ட சட்டத்தரணியும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஆரிகா காரியப்பர். கட்டுமரத்திற்காக அவருடன் உரையாடினோம். நேர்காணல் வருமாறு:

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஆரிகா காரியப்பர்.
த கட்டுமரன்: நீங்கள் அரசியல் பின்னணியுடன் இருந்து அரசியலுக்கு 
வந்தவர் அவ்வாறல்லாத பெண்களிடம் இருந்து நீங்கள் 
எவ்வாறு வேறுபட்டுள்ளீர்கள்?

ஆரிகா காரியப்பர்: என்னுடைய தந்தையும் கடந்த காலங்களில் ஓர் அரசியல் செயற்பாட்டாளராக இருந்தார். அத்தோடு என்னுடைய கணவரும் எனக்கு ஆர்வத்தை ஊட்டினார் பக்கபலமாகவும் இருந்தார். இவ்வாறு நான் நீண்டகாலம் பின்னணி அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். அரசியலில் முழுமையாக களமிறங்கியதில்லை. தற்போது கல்முனை மாநாகர சபைக்கு முதற் தடவையாக நியமன உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு செயற்பட்டு வருகின்றேன். நானும் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் இவ் அரசியலில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதே நேரம் நான் சட்டக் கல்லூரியில் இருந்த காலத்தில் அங்கிருந்த அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறேன். அங்குள்ள மாணவர் மன்றம், தமிழ் மன்றம், சட்டக் கல்லூரி மாணவர் இயக்கங்களிலெல்லாம் அப்போது இணைந்து செயற்பட்டிருக்கின்றேன். இருந்தும் தேர்தல், அரசியல் என்று வருகின்ற போது மற்றவர்களைப் போல் நானும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றேன்.
ஆனாலும் புதிதாக அரசியலுக்கு வந்திருப்பவர்கள் அதிக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படுகிறது. இன்னும் அவர்களுக்கு தயக்கம் போகவில்லை. கல்முனை மாநாகர சபையைப் பொறுத்தவரை 12 பெண் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் ஓரிரண்டு பேர்தான் தயக்கமின்றி முன்வருபவர்களாக இருக்கின்றார்கள். அவர்களும் அரசியலில் ஓரளவு முன் அனுபவம் கொண்டவர்களாக இருந்ததால்தான் முடிகிறது. தவிர புதிதாக வந்தவர்கள் இன்றைக்கும் அரசியல் விடயங்களை சுதாகரித்துக் கொள்ளும் நிலை, அவர்களுக்கு இன்னும் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

த கட்டுமரன்: இவ்வாறு உள்ளுராட்சி சபைகளில் பெண்களின் 
பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டிருப்பதனால் எவ்வாறான 
அனுகூலங்கள் ஏற்பட்டுள்ளன என கருதுகிறீர்கள்?

ஆரிகா காரியப்பர்: கடந்த காலங்களில் தமது பிரச்சினைகளை, தேவைகளை பெண்கள் முன்வைப்பதற்கு மாநகர சபை உறுப்பினர்களை அணுகமுடியாமல் இருந்தது. ஆண் உறுப்பினர்களோடு வெளிப்படையாக தயக்கமின்றி பெண்கள் தமது பிரச்சினைகளை சொல்லி தீர்வுகளைப் பெறுவது கஷ்டமாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலையில் எனது வட்டாரத்தில் கூட பெண்கள் அவர்களது பிரச்சினைகளை தயக்கமின்றி என்னோடு வந்து முறையிடுகிறார்கள். அவர்களது ஆலோசனைகளை, மகஜர்களை என்னிடம் கையளிக்கிறார்கள். இவ்வறான நன்மைகளை மக்களே தமது பிரச்சினைகளை பெண் உறுப்பினர் வந்ததால் இலகுவாக முன்வைக்கக் கூடியதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
கடந்த காலங்களில் பெண்கள் மறைமுகமாக அரசியலில் பங்களிப்புச் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது நேரடி அரசியலில் பெண்கள் ஈடுபடுகிறார்கள். இது பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளுராட்சி சபைகளில் உறுதிப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பிரதான அனுகூலமாகும். அத்தோடு பெண்களின் பிரத்தியேக பிரச்சினைகள் சபைகளில் பேசப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது. இவ்வாறு பல அனுகூலங்கள் இதன்மூலம் ஏற்பட்டுள்ளது.

த கட்டுமரன்: புதிய உள்ளுராட்சி சீர்திருத்தம் எந்தளவு இலக்கை 
நோக்கியதாக உள்ளது?

ஆரிகா காரியப்பர்: இந்த உள்ளுராட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டது குறைவு என்றாலும் நிறையப் பெண்கள் நியமன உறுப்பினர்களாக சபைக்கு உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.புதிய உள்ளுராட்சி சீர்திருத்தம் இதன் மூலம் பெண்களின் அங்கத்துவத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது வரவேற்கத்தக்கது. அதேபோன்று பெண்கள் உள்வாங்கப்பட்டிருப்பது மாத்திரமில்லாமல் அவர்களது சுதந்திரமான அரசியல் செயற்பாட்டுக்கும் வழிகோலப்பட வேண்டியது தேவையாகும். மேலும் இந்த உள்ளுராட்சி சீர்திருத்தத்தின் மூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது என்பது மனவருத்தமான விடயமாகும். ஆனால் ஏற்கனவே இருந்த அங்கத்தவர்களுள் பெண்களுக்கும் விகிதாசார அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்குமாக இருந்தால் இன்னும் வரவேற்கக் கூடியதமாக இருந்திருக்கும்.
ஆனால் உள்ளுராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டது போன்று மாகாண சபை மற்றும் பாராளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் மாகாண சபை மற்றும் பாராளுமன்றத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இருக்கிறார்கள். அவர்கள் கூட பாரம்பரிய குடும்ப அரசியல் பின்னணியினால் வந்தவர்களாகத்தான் இருக்கிறார்களே ஒழிய அவர்கள் சுயமாக அரசியலுக்கு வந்தவர்களில்லை.
எனவே எந்தவித பின்னணியும் இல்லாமல் பெண்கள் சுதந்திரமாக அரசியலுக்கு வரவேண்டும். அதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மாகாண சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் காணப்பட்டாலும் எதிர்வரும் தேர்தல் எந்த முறையில் மேற்கொள்ளப்படப் போகிறது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. அதேபோன்று பாராளுமன்றத் தேர்தலிலும் பெண்களின் அங்கத்துவம் உறுதிப்படுத்தப் பட வேண்டியது அவசியமாகும்.

த கட்டுமரன்: கல்முனை மாநகர சபையில் அரசியல் தீர்மானங்களை 
நிறைவேற்றுவதில் அங்குள்ள பெண்களுக்கான அங்கீகாரம் 
எவ்வாறுள்ளது?

ஆரிகா காரியப்பர்: எமது சமூகத்தில் ஆண்கள் தான் அரசியலில் ஈடுபடுபவர்கள் என்ற மனோநிலை இன்னும் அப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறது. இதற்கான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் இன்னும் எங்களுக்கும் கிடைக்கவில்லை. எங்களுடைய மாநாகர சபையில் அண்மையில் பொதுச்சேவைக்குழு, சுகாதாரக் குழு, நிதிக்குழு என்று மூன்று குழுக்களுக்கு அங்கத்தவர்கள் தெரிவுகள் இடம்பெற்றன.
அதில் எங்களுடைய கட்சி சார்பாக நிதிக்குழுவுக்கு ஒரு பெண்ணை நாங்கள் பிரேரித்திருந்தோம். ஆனால் மற்றைய கட்சிகளுக்கு அந்த மனோநிலை வரவில்லை. அவர்கள் எந்தவொரு பெண்ணையும் பிரேரிக்கவில்லை. அப்போது தான் இவர்களது நிலைப்பாடுகளுக்கு எதிராகப் பேசினேன். நாங்கள் இங்கு கதிரைகளை சூடாக்க வரவில்லை. யார் எந்தக் கட்சியாக இருந்தாலும் எங்களுடைய பெண்களுக்கும் அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை வழியுறுத்திக் கூறியிருந்தேன்.
இன்னும் எமது சமூக அரசியலில் ஆணாதிக்க மனோநிலை மாறவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்த நிலையில் எங்களால் அரசியலில் பூரணமான பங்களிப்பை வழங்க முடியாதுள்ளது. எங்களுடைய பெண்களுக்கு அவர்களுடைய தேவையைப் பெற்றுக் கொடுக்க பெரும் பிரயத்தனங்களை எமது சபையில் மேற்கொள்ள வேண்டியேற்படுகிறது. பெண்கள் அரசியல் பணியை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் அரசியலில் பங்களிப்புச் செய்ய முடியும்.
கல்முனை மாநகர சபையில் 41 அங்கத்தவர்களில் 12 பெண்கள் இருக்கிறார்கள். இச் சபையில் 3 குழுக்கள் இருக்கிறது. ஒவ்வொரு குழுவிலும் 6 அங்கத்தவர் வீதம் இருக்க வேண்டும். ஆகக் குறைந்தது இரண்டு குழுக்களிலாவது உள்வாங்கப்பட்டிருக்குமானால் பெண்களின் பிரதிநிதிகளால் அவர்களுடைய பிரச்சினைகளை முன்வைத்து தேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் எந்தவொரு குழுவிலும் பெண் பிரதிநிதித்துவம் அங்கு இல்லை. எங்களுடைய பெண்கள் சார்பாக சுமித்ரா ஜெயசிங்க என்பவரை களமிறக்கினோம். ஆனால் அவர் அங்கு அங்கீகரிக்கப்பட்டு உள்வாங்கப்படவில்லை. கல்முனை மாநகர சபையில் பெண்களுக்கு சம அந்தஸ்த்து வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அண்மைக்காலமாக போதைவஸ்த்துப் பாவனையால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்த்தில் பாரிய சமூகப் பிரச்சினையாக குடும்பப் பிரச்சினை மாறிவிட்டது. இதனால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் போதைவஸ்த்து விற்பனையை தடைசெய்ய வேண்டும் என்ற போதை வஸ்த்துக்கெதிரான தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறேன். இதனை கல்முனை மாநகர சபை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. பெண் பிரதிநிதி ஒருவர் இவ்வாறு பிரேரணையொன்றை சமர்ப்பிப்பது கல்முனை மாநகர சபையில் முதற் தடவையாகும். இதனையொட்டி எமது ஏனைய பெண் பிரதிநிதிகளும் தமது பிரேரணைகளை சமர்ப்பித்து சமூகத்துக்கான தேவைகளைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

த கட்டுமரன்: இவ்வாறு நிலையியற் குழுக்களில் பெண்கள் இல்லாததால் 
எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என்று கருதுகின்றீர்கள்?

ஆரிகா காரியப்பர்: கல்முனை மாநகர சபையில் உள்ள நிலையியல் குழக்களில் பெண்கள் கட்டாயம் அங்கம் வகிக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக சுகாதார குழுக்கள் போன்ற குழுக்களில் பெண்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் சுகாதாரக் குழு என்பது வீட்டுச் சூழலோடு தொடர்பு பட்ட ஒன்றாக இருக்கின்றது. குப்பை அகற்றுதல் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக வீட்டினுடைய விடயங்களைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள். கழிவு முகாமை செய்வதில் அவர்களுடைய கருத்து கட்டாயம் உள்வாங்கப் பட வேண்டும். பெண்களுக்கென பல்வேறு பிரத்தியேக தேவைகள் இருக்கின்றன. அவைகள் கவனத்திலெடுக்க வேண்டியிருக்கிறது. அவற்றை பெண் பிரதிநிதி சார்பாக முன்வைக்கப்பட வேண்டியுள்ளது. எனவே பெண்களுக்கு கல்முனை மாநகர சபையில் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.

த கட்டுமரன்: உள்ளுராட்சி சபையில் தேர்தலில் போட்டியிட்டு 
தெரிவான பெண்கள் மிகக் குறைவவானவர்களே இருக்கிறார்கள். 
நியமன உறுப்பினர்களே அதிகம் இருக்கிறார்கள். பெண்கள் 
போட்டியிட்டு அரசியலில் தெரிவாவதில் என்ன தடையிருக்கிறது?

ஆரிகா காரியப்பர்: இலங்கையினுடைய அரசியல் கலாசார முறை வன்முறை கலந்ததாக காணப்படுகின்றது. இதில் தங்களை ஈடுபடுத்துவதற்கு பெண்கள் தயங்குகிறார்கள். அதேபோன்று போட்டியிட்டாலும் பெண்களை தெரிவு செய்வதில் மக்களும் போதுமான முனைப்புக் காட்டுவதில்லை. ஆனால் நான் இனியொரு உள்ளுராட்சி தேர்தல் வருகின்ற போது சந்தர்ப்பம்


நான் கல்முனை மாநகர சபையில் எனக்குத் தரும் கொடுப்பனவைக் கூட எனது சொந்த தேவைக்காக எடுக்கவில்லை. அவற்றை ஏழை எளிய மக்களுக்கே வழங்கி வருகிறேன்.

கிடைக்குமாக இருந்தால், போட்டியிட விரும்புகிறேன். அதற்கான தைரியமும் பக்கபலமும் எனக்கிருக்கிறது. பெண்களை தேர்தலில் தெரிவு செய்வதற்கு சமூகத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டம். கட்சிகள் பெண்களை களமிறக்கப் பயப்படுகிறார்கள். பெண்களை நம்பி கட்சிகள் அவர்களை களமிறக்க முன்வர வேண்டும். பொதுவாக ஒட்டுமொத்த அரசியல் ரீதியான ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

த கட்டுமரன்: உங்களுடைய அரசியல் பிரவேசத்தின் மூலம் எவ்வாறான 
மாற்றத்தை, சேவைகளை செய்ய விரும்புகின்றீர்கள்?

ஆரிகா காரியப்பர்: நான் கல்முனை மாநகர சபையில் எனக்குத் தரும் கொடுப்பனவைக் கூட எனது சொந்த தேவைக்காக எடுக்கவில்லை. அவற்றை ஏழை எளிய மக்களுக்கே வழங்கி வருகிறேன். நான் அறிந்த வரைக்கும் நிறைய கஷ்டத்திலுள்ள பெண்கள் இருக்கிறார்கள். தனது கஷ்ட நிலையை வெளியில் சொல்லி கேட்க வெட்கத்தோடு வாழும் பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதற்கு பழக்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் போய்ச் சேர்வதில்லை. ஒரு சாராருக்கே மேலும் மேலும் உதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இப்படிக் கஷ்டப்படுபவர்களுக்கு நாம் தேடி உதவி செய்ய வேண்டும்.
கஷ்டப்படும் பெண்களை முன்னேற்ற வேண்டும். பெண்களின் பிரச்சினைகளை முன்னுக்குக் கொண்டுவந்து தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பவர்கள் எமது சமூகத்தில் உருவாக்க வேண்டும். சமூக அபிவிருத்தி போன்றவற்றில் பெண்களின் பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்காக பெண்களை வலுவூட்டும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறேன்.