Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

தமிழ் பௌத்த பிக்கு!
மொழியைக் கற்பது தமிழ் சிங்கள நல்லுறவை வலுப்படுத்தும்

‘நூற்றுக்கு பத்து சதவீதமான சிங்கள மாணவர்கள் எந்தவிதமான பரீட்சை எதிர்பார்ப்பும் இன்றி தமிழ் மொழியை நேசித்து கற்றுக் கொள்ள வருகின்றனர். அது எனக்கு மகிழ்ச்சியை தரும் விடயமாகும்.

04.09.2018  |  
களுத்துறை மாவட்டம்
ஏனைய மதத் தலைவர்களுடன் சுனித்த தேரர்

‘சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எனக்கு நன்கு பரிச்சயம் உள்ளது. இதனால் சிங்கள மற்றும் தமிழ் மக்களின் மன உணர்வுகளையும், கருத்துக்களையும், அவர்கள் தரப்பு நியாயங்களையும் என்னால் நன்கு விளங்கிக் கொள்ள முடியும். இவ்வாறான ஓர் மொழி ரீதியிலான புரிந்துணர்வு இருக்குமாயின் எமது நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. இதனை உணர்ந்துதான் தமிழ் மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்டு சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கின்றேன்” என்று கூறுகிறார் மாத்தளை சுனித்த தேரர். ஒரு பௌத்த பிக்கு மிகவும் நேர்த்தியாக தமிழ் கற்பிப்பதைக்கண்டு ஆச்சரியம் கொள்கின்றனர் கிராமமக்கள்.

சுனித்த தேரர்

‘ஒரு பௌத்த பிக்கு எப்படி தமிழ் படிப்பிக்கின்றார் என்று என்னை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். ஆனால் நான் பிறப்பால் தமிழர் என்று அவர்களுக்கு தெரியாது. ஆனாலும் சிலர் தெரிந்து கொண்ட பின்பும் அவர்களில் நான் எந்தவிதமான மாற்றங்களையும் உணரவில்லை” என்று குறிப்பிடும் சுனித்த தேரரின் பிறப்பிடம் மாத்தளை உக்குவெலவில் உள்ள வராபிட்டிய என்ற சிறிய கிராமமாகும். அவரின் தந்தையாரான குமாரசுவாமியின் பிறப்பிடமும் இந்த வராப்பிட்டிய கிராமம் தான். தாய் சரஸ்வதி பொலனறுவை தியபெதும பிரதேசத்தினைச் சேர்ந்த கோந்துருவாவ என்ற கிராமத்தினைச் சேர்ந்தவர். இந்த இரண்டு கிராமங்களிலும் இந்த இரண்டு குடும்பம் மட்டுமே தமிழ்க்குடும்பமாக இருந்திருக்கிறது. “எங்களைத் தவிர எங்கள் ஊரில் இருந்த அனைவரும் சிங்களவர்களாக இருந்தனர். நாங்கள் எப்பொழுதும் வீட்டில் இந்து கடவுள்களின் படத்துடன் புத்தபெருமானின் படத்தினையும் வைத்து தான் வணங்குவோம். அப்பகுதிகளில் இருந்த சிங்கள மக்கள் எங்களுக்கு எப்பொழுதும் உற்ற நண்பர்களாகவே இருந்தனர்” என்று சுனித்த தேரர் கூறுகிறார்.

துறவியிடம் கற்ற சிங்கள மாணவர்கள் எழுதிய தமிழ்க் கடிதம்

தமிழராக இவர் பிறந்திருந்தாலும், சிங்கள மொழியிலேயே தனது ஆரம்ப கல்வியினைக் கற்று தேர்ச்சி; பெற்ற பின்னர் தனது உயர் கல்வியினைத் தமிழியே கற்றிருக்கிறார். இதனால் இரண்டு மொழியிலும் சரளமாகப் பேசக்கூடியவராகவும் எழுதக்கூடியவராகவும் இருக்கும் சுனித்த தேரர் பௌத்த மதத்தைத்த தழுவி துறவியானதைப்பற்றி கூறுகிறார்.
‘நான் பௌத்த மதத்தினை தழுவியது பௌத்த மதத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பினாலாகும். எமது வீட்டிற்கு அருகாமையில் ஒரு பௌத்த விகாரை இருந்தது. அங்கு நான் அடிக்கடி சென்றுவருவேன். ஆதனால் பெற்ற ஈர்ப்பினால், எனது பன்னிரெண்டாவது வயதில் பௌத்த மதத்தினை தழுவிக் கொண்டு 2008ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி பௌத்த துறவியானேன். அப்போதுதான் விகாரையின் தலைமை விகாராதிபதி தேரர்; என்னை தமிழ் கற்றுக் கொள்ளுமாறு கூறி அதற்கான பாதைகளையும் வகுத்து தந்தார். அதனால் எனது உயர்கல்வி தமிழிலே அமைந்தது. மொழி ரீதியிலான புரிந்துணர்வு எமது நாட்டிற்கு தேவை. இன வேறுபாடு இன்றி நாங்கள் மொழியை பரஸ்பரம் கற்றுக்கொண்டால் இனங்களைப் புரிந்து கொள்ளும் திறன் வளரும். சக இன மக்களுடன் ஒரு நட்புணர்வினை பேணிக் கொள்ளவும், கருத்துக்களை உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளவும் இது உதவும். அந்த வகையில் இரு இனங்களுக்கம் ஒரு பாலமாக இருக்கவிரும்பினேன்.” என்கிறார்.
மாத்தளை சுனித்த தேரர் கடந்த 5 ஆண்டுகளாக களுத்துறையில் தமிழ் மொழியைக் கற்பித்து வருகின்றார். சிங்கள மொழி மூலம் கற்ற அரச அதிகாரிகள், நீதிமன்றங்களில் பணியாற்றுவோர், அரச ஊழியர்கள், 2ம் தரம் முதல் 9ம் தரம் வரையிலான பாடசாலை மாணவ மாணவியர், புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் உட்பட பலருக்கும் தமிழ் மொழியைக் கற்பித்து வரும் இவர் இந்த பணியினை மிகவும் விருப்பத்துடன் செய்து வருவதாகக் கூறுகிறார்.

/
களுத்துறை நகரில் இவருக்குரிய விகாரையிலேயே கற்பித்தல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார். மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மாத்தளையிலும் கற்பித்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார். சிங்கள மொழிமூலம் கற்றவர்கள் தமிழைக்கற்பதில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக கூறுகிறார்.
‘நூற்றுக்கு பத்து சதவீதமான சிங்கள மாணவர்கள் எந்தவிதமான பரீட்சை எதிர்பார்ப்பும் இன்றி தமிழ் மொழியை நேசித்து கற்றுக் கொள்ள வருகின்றனர். அது எனக்கு மகிழ்ச்சியை தரும் விடயமாகும். மேலும் வடக்கு கிழக்கில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும், அப்பகுதிகளில் வியாபாரங்களில் ஈடுபட எண்ணியுள்ளவர்களும் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள வருகின்றனர். இவர்கள் 50 வயது முதல் 60 வயதானவர்களாக உள்ளனர்.” என்றும் சுனித்த தேரர் குறிப்பிட்டார்.
இன வேறுபாடு இன்றி நாங்கள் மொழியை பரஸ்பரம் கற்றுக்கொண்டால் இனங்களைப் புரிந்து கொள்ளும் திறன் வளரும். என்ற திடமாக நம்பும் சுனித்ததேரர்,
“எமது நாட்டை நிர்வகித்த ஆட்சியாளர்கள் அதனை உணரவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழை இரண்டாம் மொழியாக கட்டாயமாக்கவேண்டும் இதற்கான சட்டத்தினை உருவாக்க வேண்டும். பாடசாலைகளில் தற்போது 2ம் தரம் முதல் 9ம் தரம் வரை மட்டுமே இரண்டாம் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு விரும்பினால் கற்றுக் கொள்ள முடியும் என்றுள்ளது. அதைமாற்றி அனைவருக்கும் தமிழும் சிங்களமும் கட்டாயம் என்பதை சட்டமாக்க வேண்டும்” என்று சுட்டிக் காட்டுகிறார். அதே நேரம் பௌத்த துறவிகளின் அரசியல் நடவடிக்கைகள் பற்றி விசனம் கொள்ளும் சுனித்த தேரர் தான் இதுவரை எவருக்கும் வாக்களிக்காததையும் சுட்டிக்காட்டினார்.


பௌத்த மதம் மற்றும் பௌத்த பிக்குகள் குறித்து தமிழர்கள் மத்தியில் அரசியல் ரீதியிலான அதிருப்தி நிலையே நிலவி வருகின்றது.

“இனியும் நான் ஒருபோதும் வாக்களிக்கப் போவதில்லை. 30 வருட கால யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும், நல்லுறவையும் ஏற்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த பணியில் பௌத்த பிக்குகளும் பிரதான இடத்தினை வகிக்க முடியும். ஆனால் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று பிக்குகளிலும் இரு தரப்பினர் உள்ளனர். இலங்கையில் பௌத்த மதம் மற்றும் பௌத்த பிக்குகள் குறித்து தமிழர்கள் மத்தியில் அரசியல் ரீதியிலான அதிருப்தி நிலையே நிலவி வருகின்றது. ஞானசார தேரரின் பொது பல சேனா மற்றும் இராவணா பலய போன்ற பௌத்த பிக்குகளை பிரதானமாகக் கொண்ட அமைப்புகள் என்றுமே இனவாத கண்ணோட்டத்தில் தமிழர்களின் பிரச்சினைகளை அணுகி வருவது இதற்கு காரணமாகும். தமிழர் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்கள் என்று வரும் போது அதனை முதலில் எதிர்க்கும் தரப்பாக உள்ள பௌத்த பிக்குகளை தமிழ் மக்கள் என்றுமே ஓர் சந்தேகக் கண்டு கொண்டு தான் பார்க்கின்றனர். இந்தியாவிலிருந்து வந்த இந்து மத பின்னணி கொண்ட பௌத்த மதம் சிறந்த தத்துவங்களைக் கொண்ட மதமாக விளங்குகின்ற போதிலும் ஒரு சில பௌத்த பிக்குகளின் அரசியல் செயற்பாடுகள் காரணமாக தமிழர்கள் பௌத்த மதத்தினை பொருட்படுத்தாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சிங்கள மொழியினையும் வெறுக்கும் மனோபாவத்தினை ஒரு சிலர் கொண்டிருப்பது தவிர்க்க முடியாததாகவுள்ளது” என்று மனம்திறந்த சுனித்த தேரர் அண்மையில் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டார்.
“வடபகுதியில் காங்கேசன்துறையில் 1945ல் நிர்மாணிக்கப்பட்ட விகாரை ஒன்று தொடர்பாக சிங்களவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை ஏற்பட்டது. யுத்தத்தில் முற்றாக தரைமட்டமாக்கப்பட்ட இந்த விகாரை அமைந்திருந்த காணியில் 5 தமிழ்க் குடும்பங்கள் தற்காலிகமாக குடியிருந்த நிலையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு வேறு இடத்தில் சட்டபூர்வமான காணிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க உதவினேன். இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எனது மொழியாற்றலைப் பயன்படுத்தி இரண்டு தரப்புகளுக்கும் இடையில் சமரசத்தினை ஏற்படுத்தி எவருக்கும் பாதிப்பின்றி நியாயமான தீர்வை வழங்க முடிந்தது.” என்கிறார்.
பௌத்த மதத்தில் கற்றுக் கொண்ட பொறுமை, அமைதி, பிரச்சினைகளைக் கையாளும் விதம் என்பன இன மத வேறுபாடற்ற கற்பித்தல் என்ற பொதுச் சேவைக்கு உதவி புரிவதாக சுனித்த தேரர் குறிப்பிடுகிறார். ‘எனது எதிர்கால திட்டம் பௌத்த மத போதனைகளை தமிழில் எடுத்துரைப்பதாகும். அதன் ஒரு கட்டமாக கடந்த வெசக் தினத்தில் களுத்துறை பயாகல இந்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கு வெசாக் பற்றி தமிழில் உரையாற்றினேன்.”என்று அவர் கூறினார். ‘ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது என்பது ஒரு இனத்தின் அடையாளம், கலாசாரம், பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்வதற்கு ஒப்பானதாகும். ஒரு இனத்தை பற்றி அறிந்து கொள்வதற்கு நீங்கள் அவர்களுடன் தொடர்பாடக் கூடிய மொழியைக் கற்றுக் கொள்வது தான் சிறந்தது. இதனை நான் நன்கு உணர்ந்திருக்கின்றேன். அதனை மற்றவர்களுக்கும் உணர செய்வதே எனது பணியாக உள்ளது.” என்கிறார்.