Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நுண்கடன்
பொருளாதார வலுவா? வலியா?

“கணவன் மரணித்து விட்டதால் குடும்ப வருமானம் பிரச்சினையாக இருந்தது. அதனால் ஆடு வளர்ப்பதற்கு நிறுவனமொன்றிலிருந்து கடன் தந்தார்கள். அதற்கு நான்கு ஆடுகளை வாங்கி வளர்த்து வந்தேன். குளிரினால் இரண்டு ஆடுகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போயிட்டு. ஆனால் கடனில் எனக்கு எந்த தள்ளுபடியும் செய்யவில்லை. முழுக்கடனையுமே கட்டச் சொன்னார்கள்.

26.09.2018  |  
அம்பாறை மாவட்டம்
வாணி சைமன்

“கோழிவளர்ப்பதற்கு 50 ஆயிரம் ரூபா கடன் எடுத்தேன், நானும் என்ரை 3 பிள்ளைகளும் வாழ்வதற்கு இந்த வருமானம் போதாது. இந்தக் கடனைவேற கட்டவேணும்.கிழமைக்கு 1350 ரூபா கட்டவேணும். ஆதனால நான் கடன் கட்ட வேறு இடத்தில் கடன் வேண்டவேண்டியேற்பட்டது.இப்ப கடனுக்குமேல் கடனாக கடனும் வட்டியும் கழுத்தை நெரிக்குது.” என்று கூறுகிறார் ஆலையடிவேம்பைச் சேர்ந்த பி. நிரோஜினி. இவாரது கணவர் குடும்பத் தகராறு காரணமாக இவர்களைவிட்டு பிரிந்து சென்றதால் பிள்ளைகளைப் பார்ப்பதற்காகவே தான் கடன் எடுத்ததாக கூறுகிறார் இவர்.

நுண்கடன் என்பது சிறிய தொகையை கடனாக வழங்குவதிலிருந்து உருவாகி வந்த ஒரு பொருளாதார தத்துவம். கிரமமாக வேலையில்லாத, ஆனால் ஒரு சில காலங்களுக்கு மட்டுமே வேலை உள்ள ஏழை மக்களை சுயதொழில் முனைவோராக உருவாக்குவது இதன் நோக்கம். இவ்வாறான வலுவிழந்த மக்களுக்கு வழமையான நிதிநிறுவனங்களான அரச மற்றும் தனியார் வங்கிகள், நிதிநிறுவனங்களில் கடன் பெறுவதற்கு போதுமான கல்வி அறிவோ அடமானமாக வைக்க அசையும் அல்லது அசையா சொத்துக்களோ இருப்பதில்லை. அவ்வாறான மக்களுக்கும் இந்த நிதிச்சேவையை கொண்டு செல்லும் ஒன்றாக இந்த நுண் கடன் திட்டம் உள்ளது.
நிதித் துறையில் தோன்றிய ஒரு முக்கிய கண்டுபிடிப்பினை நுண்கடன் பங்களாதேஷின் கிராமின் வங்கியின் மூலமே முதன் முதலில் வெளிக்கொணரப்பட்டதாக கருதப்படுகிறது. பங்களாதேஷில் கிராமின் வங்கியானது நுண்கடன் வழங்குவதில் சிறப்பான வெற்றியைப் பெற்று அந்நாட்டில் ஏழைகளை சுயதொழிலில் ஈடுபடச் செய்து வருமானத்துக்கு வழிசெய்திருக்கிறது.

வாணி சைமன்

இந்த நுண்கடன் திட்டத்தை உயிர்பிக்கச் செய்தவர்தான் பேராசிரியர் முகமது யூனுஸ். இவர் சிறந்த வங்கி முகாமையாளரும் பொருளியலாளருமாவார். பங்களாதேஷில் ஏழைமக்களின் பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு இவருக்கும், இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து வழங்கப்பட்டடுள்ளது.
ஆனால் இவ்வாறான நுண்கடன் திட்டம் இன்று வடகிழக்கில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. போர் தின்று தீர்த்த மக்களை நுண்கடன் தூக்கிநிறுத்தும் என்று நினைத்தால் அது தவறு. மக்களை தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு கடனாளியாக்கியுள்ளது. இன்று வடகிழக்கில் மக்கள் முகம்கொடுக்கும் பாரிய சமூகப் பிரச்சினையொன்றாகவே இது மாறிவிட்டிருக்கிறது.

“நான் என்னுடைய கஷ்டநிலைக்காக கடனனெடுக்கபோய், அதைக்கட்ட முடியாத நிலையில் அதைக்கட்டுவதற்காக வேறு ஒரு நிறுவனத்தில் கடனெடுத்தேன். இப்படி பல நிறுவனங்களில் கடன் எடுத்திருக்கிறேன். கடன் கட்டுவதற்காக மீளவட்டிக்கு கடன் எடுத்தன். இப்ப மாதம் ஒன்றுக்கு வட்டியுடன் சேர்த்து 60 ஆயிரம் ரூபா கடன் கட்டுகிறேன். வருமானமும் தொழில்வாய்ப்பும் இல்லாததால் சரியான கஷ்ரமா இருக்கு. வாழ்வா சவா என்ற நிலைதான்.” அழுதுகொண்டே தெரிவிக்கிறார் அக்கரைப்பற்றைச் சேர்ந்த என். கலைவாணி(41). யுத்தம், சுனாமி என அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இவர் இன்று பாரிய அனர்த்தமான நுண்கடன் திட்டத்திற்கு முகம்கொடுக்க முடியாது தவிக்கிறார்.
நுண்கடன் திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் கோழிவளர்ப்பு, மிருகவளர்ப்பு, சில்லறை வியாபாரம் என பயனாளிகள் முன்வைக்கும் முன்மொழிவுகளுக்கு ஏற்ப சுயதொழில் நுண்கடன்களை கொடுத்து வருகின்றன. இந்நிதிகளுக்கு வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கடனுடன் வட்டியும் மீளப் பெறப்படுகிறது. இந்த அறவிடும் காலப்பகுதியும், வட்டி வீதமும் நிறுவனங்களுக்கு நிறுவனம் வித்தியாசப்படுகிறது.
நுண்நிதிக் கடன் வட்டி வீதமானது நிறுவனங்களுக்கு நிறுவனம் வேறுபடுகிறது.100க்கு 12 வீதம் தொடக்கம் 30 வீதம் வரை காணப்படுகிறது. வங்கிகளில் வட்டி வீதமானது 7 வீதத்திலிருந்து ஆரம்பாகிறது. அது பெறும் கடனுக்கு ஏற்ப அறவிடும் வட்டி வீதமும் வித்தியாசப்படுகிறது. அரச சமுர்த்தி வங்கிகளில் சுயதொழில் நுண்கடனுக்கு 100க்கு 12 வீதமே அறவிடுகிறார்கள். ஆனால் இந்நிறுவனங்களின் வட்டிவீதம் பன்மடங்கு அதிகரித்திருப்பதை காணமுடிகிறது.
“கணவன் மரணித்து விட்டதால் குடும்ப வருமானம் பிரச்சினையாக இருந்தது. அதனால் ஆடு வளர்ப்பதற்கு நிறுவனமொன்றிலிருந்து கடன் தந்தார்கள். அதற்கு நான்கு ஆடுகளை வாங்கி வளர்த்து வந்தேன். குளிரினால் இரண்டு ஆடுகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போயிட்டு. ஆனால் கடனில் எனக்கு எந்த தள்ளுபடியும் செய்யவில்லை. முழுக்கடனையுமே கட்டச் சொன்னார்கள். கூலிவேலை செய்துதான் இந்தக் கடனையும் கட்டிக் கொண்டு வருகிறேன்.” என்கிறார் சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.லதீபா.
நுண்கடன் பொதுவான நிதி-கடன் கொள்கையிலிருந்து மாறுபட்டு தனிப்பட்ட கொள்கை அல்லது தத்துவங்களின் அடிப்படையில் செயல்படுவதாகும். சுயதொழில் செய்பவரின் தொழில் விரிவாக்கம், வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், நம்பிக்கை ஏற்படுத்துதல் மேலும் சிறுகைத்தொழில் தொடங்க ஆரம்ப மூலதனம் வழங்கல், பிரச்சினைகளின் போது உதவுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கும் கொள்கையுடையதாக நுண்கடன் திட்டம் காணப்படுகிறது.

/
ஆனால் இன்று அதன் எதிர்பார்ப்புக்கள் தழைகீழாக மாறியள்ளது. ஏழை மக்களின் வறுமையை விலக்க வந்த நுண்கடன் திட்டம் அவர்களை மென்மேலும் கடனாளியாகவும் கஷ்டத்திலும் தள்ளியுள்ளது. இலாப நோக்கை மட்டும் கொண்டு செயற்படுவதுதான் இந்த நிலைமைகளுக்கு காரணமாகவுள்ளது.
இதன் விளைவு இன்று பெண்களைத் தற்கொலைக்குத் தள்ளுகிறது. குடும்பங்களில் பிளவு மற்றும் மன உழசை;சலுக்கு தள்ளியள்ளது. இதனால் பல பெண்கள் தமது உயிரை மாய்த்திருக்கிறார்கள். இதற்கு நிறுவனங்களினதும் நிறுவன ஊழியர்களினதும் அணுகுமுறையும் தவறானதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பாக இந்த நுண்கடன் திட்டத்திற்கு உள்ளுர் அமைப்புகளின் உதவிகளையும் சில நிறுவனங்கள் நாடுகின்றன. பெண்களைக் குழுக்களாக்கி அவர்களை மையமாக வைத்து கடன்வழங்குதல்.
“1994 இன் ஆரம்ப காலகட்டத்தில் எமது அமைப்பின் பிரதான வேலைத்திட்டங்களில் ஒன்றாக நுண்கடன் திட்டம் இருந்தது. கடந்த 5 வருட காலப்பகுதியில் இந்த கடன் திட்டத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டு வருவதன் காரணமாக அக்கடன் திட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம். உண்மையில் நாங்கள் பெண்களின் சுயதொழிலை, வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கவே முயற்சித்தோம். ஆனால் சில நிறுவனங்கள் அவர்களை இன்னும் இன்னும் கடனாளிகளாக்கவே முயற்சிக்கின்றது. பயனாளிகளிடம் தகாதமுறையில் நடந்துகொள்வது, அவர்களிடம் முன்னேற்றங்களை பார்வையிடாது கடன் அறவிடுவது, தகாத வார்த்தைகளைப் பிரயோகிப்பது போன்றவற்றை நுண்கடன் திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களோ, ஊழியர்களோ செய்யக் கூடாதவைகளாகும்.” என்று பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கம்(AWF) அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சுமதி தெரிவிக்கிறார்.

ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் குறைவான நுண்கடன் பெற்ற பெண்களின் வட்டியை செலுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கிறது

நுண்கடன் நிறுவனங்கள் பெண்களை இலக்காகக் கொண்டே இயங்குகின்றன. அவர்களது பயனாளிகளில் பெண்களே அதிகமாக இருக்கின்றனர். குடும்பத்தின் பொருhளாதாரத்தை முறைப்படுத்தி செயற்படுத்துபவர்களாக பெண்கள் இருக்கின்றனர். அவர்களை இலக்குவைத்து கடன்களை இந்த நிறுவனங்கள் வாரிவழங்குகின்றன. அவ்வாறு வழங்கிவிட்டு கட்டுவதில் பிரச்சனைகள் எழுகின்றபோது இந்த நிறுவனங்களின் ஊழியர்களின் அனுகுமுறையால் பெண் பயனாளிகள் உளரீதியாக பாதிப்படைகின்றனர். தற்கொலைக்கும் முயல்கின்றனர்.
முறைப்படுத்தப்படாத இந்த நிறுவனங்களின் செயற்பாட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பெண்தலைமைத்துவ குடும்பங்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் கிட்டத்தட்ட 71 பேர் இதுவரை தற்கொலை செய்துள்ளதாக மாவட்டப் பதிவுகள் கூறுகின்றன. இத்தகவலை யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனும் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் மத்திய வங்கியின் அனுமதிபெற்ற 70 நிதிநிறுவனங்கள் களத்தில் செயற்படுவதாகவும் இன்னும் சில அனுமதி பெறாத நிதிநிறுவனங்களும் செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மேலும் கூறியுள்ளார்.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் இடம்பெற்ற 52 தற்கொலைகளில் கடன் சுமையாலே அதிக தற்கொலைகள் இடம்பெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். நசீர் தெரிவிக்கிறார்.
இந்நிலையில் நுண்கடன் திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கூறி  மக்கள் ஆர்பாட்டங்களைச்செய்துவந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கத்தின்(AWF) ஒருங்கிணைப்பாளர் வாணி சைமன் கருத்துத் தெரிவிக்கையில் “சரியான ஒரு பொறிமுறையின் அடிப்படையில் நுண்கடன் திட்டம் மேற்கொள்ளப்படாததால் மக்கள் கடனாளியாக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் குடும்ப வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம், மனஅழுத்தம், தற்கொலை, பெண்களால் சுயமாக இயங்க முடியாமை என பல பிரச்சினைக்கு மக்கள் முகம்கொடுக்கின்றனர். குறிப்பாக பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலையில் சமூகமட்டத்தில் மேற்கொள்ளப்படும் நுண்கடன் திட்டங்களில் கூடுதலான வட்டி அறவிடப்படுகிறது. இதனால் வட்டியுடன் மக்களுடைய உழைப்பும் சுரண்டப்படுகிறது. அதேநேரம் ஒருவருக்கு எல்லா நிறுவனங்களும் கடனை வழங்காமல் மதிப்பீடு செய்து கடனை வழங்க வேண்டும் என்பதுடன் இவ்வாறான விடயங்களில் நிறுவனங்கள் ஒருங்கிணைப்புடன் இயங்குவது கட்டாயமாகும்.” என்று கூறினார்
யுத்தகாலத்தில் பணப்புழக்கம் குறைவாக இருந்த காரணத்தினால் குழுரீதியான சேமிப்பு, கடன் வழங்குதல் போன்ற செயற்பாடுகளை பெண்கள் ஒன்றிணைந்த அமைப்புகள் செய்து வந்தன. முன்பெல்லாம் வங்கிகள் ஆண்கள் தான் உழைப்பாளி என்பதால் அவர்களுக்குத்தான் கடன் வழங்கியது. அதாவது குழுரீதியான சேமிப்பு, சுழற்சிமுறைக் கடன் போன்றவற்றை அவர்களிடையே மேற்கொண்டது.
பிற்பாடு இத்திட்டங்கள் வெற்றியளித்ததனால் வங்கிகளும் பெண்களுக்கு கடன் கொடுக்கத்தொடங்கினார்கள். ஏனென்றால் பெண்கள் பொறுப்பானவர்கள், கடனை திரும்பக் கட்டக்கூடியவர்கள் என்பதனாலாகும். ஆனால் இன்று அது தலைகீழாக மாறியுள்ளது. பெண்களை வலுவூட்ட என்று வந்த இந்த நுண்கடன் திட்டத்திலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்காக இன்னுமொரு திட்டத்தை மேற்கொள்ளவேண்டிய நிலைமை.
இந்நிலையில் இந் நுண்கடன் திட்டத்தின் விளைவு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளும் குரல்கொடுத்தமையால் அரசாங்கத்தின் கவனத்துக்கு அது தென்பட்டிருக்கின்றது. இதனால் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் குறைவான நுண்கடன் பெற்ற பெண்களின் வட்டியை செலுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கிறது என்று அண்மையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவிப்பொன்றை விடுத்திருக்கின்றார்.
ஆனால் வெறுமனே பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்கு சலுகைகள் மாத்திரம் வழங்குவதால் இப்பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. இந் நிதி நிறுவனங்களின் நடைமுறை, கடன் வழங்கும் திட்டம் என்பவற்றை முறைப்படுத்தாதவரை இப்பாதிப்புக்களை நிறுத்த முடியாது.

ஏ.முஹம்மத் பாயிஸ்
இஸட்.ஏ. றஹ்மான்