Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பாடசாலை நடவடிக்கைகள்:
முஸ்லிம் ஆசிரியர்களது உரிமைகளுக்காக போராடும் சிங்களவர்கள்!

தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பக் கூடிய மிகவும் முக்கியமான இடமாக பாடசாலை இருந்து வருகின்றது. ஆசிரியர்களானவர்கள் மாணவர்களுக்கு தூதுவர்கள் போன்றவர்களாவர். குறிப்பாக பெண்கள் பாடசாலையானது இந்த விடயத்தில் மிகவும் முக்கியமான பாத்திரத்தை கொண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும்.

25.01.2020  |  
கண்டி மாவட்டம்

கண்டியில் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் ‘இன்டர் பெய்த்’ அமைப்பின் செயலாளர் ரேனுகா மலியகொட உடனான உரையாடல்

நாட்டின் வளமாக அமைவது எதிர்கால சந்ததியினராவர். அந்த சந்ததியினருக்கு கல்வியை போதிக்கும் அறிவை வழங்கும் ஆசிரியர்களை பாதுகாப்பது எங்களது பொறுப்பாகின்றது. ஆசிரியர்களது உரிமைகளுக்காக போராடும் ரேனுகா மலிய கொட ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியராவார். அவர் கண்டியில் செயற்படும் ‘இன்டர் பெய்த்’ என்ற அமைப்பின் செயலாளராவார். முஸ்லிம் பெண் ஆசிரியைகளது உரிமைகள் தொடர்பாக அவர் குரல் கொடுக்கின்றார்.

கட்டுமரம் : உங்களை நீங்கள் எவ்வாறு அறிமுகம் செய்கின்றீர்கள்?

நான் தொழில் அடிப்படையில் ஒரு ஆசிரியை ஆவேன். 28 வருடகால சேவையின் பின்னர் ஓய்வு பெற்றேன். எனக்கு இன்னும் 12 வருடங்கள் சேவையாற்ற முடியும். ஆனால் முன்னதாகவே நான் ஓய்வு பெற்றுவிட்டேன். சிவில் சமூகத்திற்காக பாடுபடுகின்றேன். நான் முன்னர் கண்டி மாவட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளராக இருந்தேன். ஆசிரிய சேவையின் ஒரு உரிமையான ஓய்வு பெற வேண்டிய காலத்திற்கு முன்னர் நான் ஓய்வு பெற்றேன்.

கட்டுமரம் : நீங்கள் இப்போது முஸ்லிம் பெண்களது கலாச்சார உரிமைகளுக்காக போராடுகின்றீர்கள். அதற்கான காரணம் என்ன?

கண்டி பல்லின பல் கலாச்சாரங்களை கொண்ட ஒரு நகரமாகும். ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இனங்களுக்கிடையிலான சமாதானம் மற்றும் ஒற்றுமை என்பது சற்று நெருக்கடியானதாக மாறி இருக்கின்றது. முஸ்லிம் பெண்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கும் பின்னடைவுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. எங்களது சமூக முறை இதற்கு ஒரு காரணமாகின்றது. அதனாலே அவர்கள் வெளிச் சூழலில் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. அவர்கள்  முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. அவர்கள் அவர்களது கலாச்சார மரபுகளை பாதுகாத்தவாறே மாற்றம் ஒன்றை விரும்புகின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களது சமூகத்தில் இருந்து அல்லது பரந்தளவில் அவர்களுக்கு எந்த உதவிகளும் கிடைப்பதில்லை. அது தொடர்பாக கருத்தொருமைப்பாடும் இல்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. கண்டியில் ஒரு பாடசாலையில் அவர்களது ஆடை கலாச்சாரம் காரணமாக 07 ஆசிரியைகள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். பாடசாலை நிர்வாகம் கல்வி தொடர்பாக இருக்கின்ற எல்லா சட்டதிட்டங்களையும் மீறியதாக இந்த 07 ஆசிரியர்களையும் பழிவாங்கும் வகையில் நடந்துகொண்டது. நான் அவர்களுக்காக போராட தீர்மானித்தேன்.

/

பிரச்சினைக்கு காரணமாக அமைந்தது அபாயாவும் ஹிஜாபுமாகும். நான் 2005 ஆம் ஆண்டு முதல் இந்த ஆசிரியர்களுடன் ஒன்றாக வேலை செய்வதோடு அவர்கள் அப்போதில் இருந்தே ஹிஜாப் மற்றும் அபாயா அணிபவர்களாக இருக்கின்றனர். எவ்வாறானாலும் அவர்கள் கறுப்பு ஆடைகளை அணிவதில்லை. அவர்கள் மெல்லிய நிறங்களில் அணிவதோடு மிகவும் நேர்த்தியான முறையில் பாடசாலை செல்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாடசாலை நிர்வாகமும் ஒரு சில பெற்றோர்களும் இணைந்து அவர்களது ஆடை தொடர்பான பிரச்சினையை உருவாக்கினர். பெண்களின் ஆடை பற்றிய சுற்று நிருபங்கள், சட்டங்கள், ஒழுங்கு விதிகள் அனைத்தையும் மீறும் வகையில் அந்த ஆசிரியைகளை சாரி அணியுமாறு வற்புறுத்தினர். அதே நேரம் அவசர கால சட்டத்தின் அடிப்படையில் புர்கா தடை செய்யப்பட்டது. ஆசிரியைகள் ஒருபோதும் பாடசாலைக்கு புர்கா அணிவதில்லை. ஆனாலும் அவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த காரணத்தை மையமாக வைத்து அவர்கள் பாடசாலையில் இருந்து முற்றாக தடுக்கப்பட்டனர். அவர்களது அங்கீகாரம் இல்லாமலே அதிகாரிகள் அவர்களை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்து விட்டனர்.

கட்டுமரம் : – இன ஐக்கியம் என்ற அடிப்படையில் ஆசிரிய தொழிலின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றி நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பக் கூடிய மிகவும் முக்கியமான இடமாக பாடசாலை இருந்து வருகின்றது. ஆசிரியர்களானவர்கள் மாணவர்களுக்கு தூதுவர்கள் போன்றவர்களாவர். குறிப்பாக பெண்கள் பாடசாலையானது இந்த விடயத்தில் மிகவும் முக்கியமான பாத்திரத்தை கொண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும். எல்லா இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாகவே பழகுகின்றனர். அவர்களுக்கு இனவாதம் என்றால் என்ன என்று தெரியாது. பாடசாலைச் சூழலானது அப்படிப்பட்டதாகும். எவ்வாறாயினும் விஷமிகள் பாடசாலைக்குள்ளும் இனவாத்ததை புகுத்திவிட்டனர். ஆசிரியர்களுக்கான மரியாதையை சிதைத்து விட்டனர். மிகவும் மோசமான நடத்தைகளை வெளிப்படுத்திய சில இடங்களுக்கு உதாரணமாக பாடசாலைகள் மாறின.

கட்டுமரம் : – இந்த பிரச்சினையில் தீர்வுக்காக குரல் எழுப்பும்படி நீங்கள் வலியுறுத்துகிறீர்களா?

ஆம். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளர் என்ற வகையில் நான் எப்போதும் ஆசிரியர்களது பிரச்சினைகள் தொடர்பாக செயற்படுகின்றேன். எமது யூனியனானது மதம் அல்லது இனம் என்ற அடிப்படையில் ஒருபோதும் செயற்படுவதில்லை. அது ஒட்டுமொத்தமான ஆசிரியர் சமூகத்தினதும் உரிமைகளுக்காக போராடுவதை இலட்சியமாகக் கொண்டதாகும். முஸ்லிம் தலைவர்கள் ஆசிரியர்களது உரிமைகளுக்காக எவ்வாறு போரடினார்கள் என்பதை வரலாறு எடுத்துக் கூறுகின்றது. எவ்வாறாக இருந்தாலும் இன்று அத்தகைய தலைவர்களும் மௌனமாகிவிட்டனர். மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தமும் அதற்கு ஒரு காரணமாகும்.

கட்டுமரம் : – தற்போதைய சூழ்நிலையில் அநீதிக்கு உள்ளான அந்த ஏழு ஆசிரியைகளினதும் நிலை பற்றி கூறவிரும்புவது?

கல்வி நிர்வாகம் குறித்த ஏழு ஆசிரியர்களையும் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்திருக்கின்றது. இவர்கள் குறித்த கலவன் பாடசாலை ஒன்றில் ஆசிரியைகளாக கற்பித்துக் கொண்டிருந்த நிலையில் இவ்வாறான இடமாற்றம் இன அடிப்படையிலான பாகுபாட்டின் காரணமாக மேற்கொள்ளப்பட்டது என கருதுகின்றோம். இதை இனரீதியான முரண்பாடான செயற்பாடாகவே காண்கின்றோம்.

கட்டுமரம் : – கண்டி ‘இன்டர் பெய்த்’ அமைப்பு இந்த ஆசிரியைகளுக்கு நீதியை நிலைநாட்ட என்ன நடவடிக்கைகளை எடுத்தது?

முதலில் இந்த அநீதி தொடர்பாக கல்வித்துறை, அரசியல்வாதிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் அறிவூட்டல் செய்து விளக்கமளித்தோம். அதற்கு எந்தவிதமான பதிலும் கிடைக்காததால் நாங்கள் சட்ட உதவியை நாடினோம். பாடசாலை நிர்வாகம் மற்றும் மாகாண கல்வி அமைச்சு ஆகியவற்றிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தோம். சட்டம் எங்களுக்கு நீதியை நிலைநாட்டும் என்று நாம் நம்புகின்றோம். இப்போது மாகாண கல்வி அமைச்சின் பிரதம செயலாளர் குறித்த ஏழு ஆசிரியர்களுக்கும் கடிதங்களை அனுப்பி முன்னைய பாடசாலைகளில் கடமைகளுக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அதிகாரிகளது உத்தரவுக்கு பாடசாலை நிர்வாகங்கள் அடிபணிய மறுக்கின்றது. அதனால் நாங்கள் சட்டம் உரிய நீதியை நிலைநாட்டும் வரையில் காத்திருக்கின்றோம். இது ஒரு சம்பவமாக இருக்கலாம். சிறுபான்மையினரது உணர்வுகளை பெரும்பான்மை இனம் புரிந்துகொள்ளாத வரையில் இவ்வாறான பிரச்சினைகளை நாம் அடிக்கடி காண வேண்டியிருக்கும். அவ்வாறான குறுகிய அடிப்படையிலான செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.