Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

துயரப்பட்டபோது உதவ வராத சமூகம் இன்று தண்டனை தருகிறது
போரின் வடு: “நடத்தை கெட்டவள்”

அந்தப் பெண் துவண்டு மடிந்து விழுந்து விம்மிக்கொண்டிருக்கிறார். அவரை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் நான் கல்லாய் சமைந்து அமர்ந்து கொண்டிருந்தேன். என் நிலையை நான் உணர்ந்தபோது, அவர் அழட்டும் என்று விட்டுவிட்டேன். பல வருடங்களாக யாரிடமும் பேசாமல் அடக்கியே வைத்திருந்த இருந்த சோகம் அது. எப்போதாவது அதற்கும் வடிகால் வேண்டும்தானே! இந்தச் சமூகம் தன்னை “நடத்தை கெட்டவள்” என்றுகூறி ஒத்துகி வைத்துவிட்டது என்று அவர் இதுவரைக்கும் என்னிடம் தெரிவித்திருந்தார். தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியதே இந்தச் […]

12.07.2016  |  
கிளிநொசசி மாவட்டம்

அந்தப் பெண் துவண்டு மடிந்து விழுந்து விம்மிக்கொண்டிருக்கிறார். அவரை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் நான் கல்லாய் சமைந்து அமர்ந்து கொண்டிருந்தேன். என் நிலையை நான் உணர்ந்தபோது, அவர் அழட்டும் என்று விட்டுவிட்டேன். பல வருடங்களாக யாரிடமும் பேசாமல் அடக்கியே வைத்திருந்த இருந்த சோகம் அது. எப்போதாவது அதற்கும் வடிகால் வேண்டும்தானே!

இந்தச் சமூகம் தன்னை “நடத்தை கெட்டவள்” என்றுகூறி ஒத்துகி வைத்துவிட்டது என்று அவர் இதுவரைக்கும் என்னிடம் தெரிவித்திருந்தார். தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியதே இந்தச் சமூகம்தான் என்பதை அவர் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறார். ஆனால், அதைச்செய்ததற்காக இந்தச் சமூகத்தின் மீது அவர் கோபப்படவில்லை. “என் உடலுக்குக் கடன் சொல்லிக்கூடப் போயிருக்கிறார்கள்” என்று பச்சாதபத்தோடு இந்தச் சமூகத்தை மேரி கனிஸ்டா இலகுவாகவே புறமொதுக்குகிறார்.

போர் தின்று தீர்த்த கணவன்களின் குடும்பங்களின் நிலை பற்றிய ஆய்வுக்காக நான் அந்தக் கிராமத்திற்குப் போயிருந்தேன். போர் முடிந்து 7 ஆண்டுகளாகின்றன. விதவைகள் அல்லது பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்று அதிகாரிகள் வகைப்படுத்தும் இந்தப் பெண்களின் நிலைமை குறித்து அரசியல் தலைமைகள் அதிகம் பேசினாலும் அடிமட்டத்தில் அவர்களின் வாழ்க்கை கையறு நிலையிலேயே இருக்கிறது. வடக்குக் கிழக்கில் கிட்டத்தட்ட 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட “புருசன் இல்லாதவர்கள்” இருக்கிறார்கள் என்கின்றன அரச தரவுகள். இவர்களுக்கான உதவித் திட்டங்கள் குறித்து இன்னமும் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். அரச சார்பற்ற நிறுவனங்கள் சில உதவிகளைச் செய்திருக்கின்றன. ஆனால், அவர்களின் நிலையில் இருந்து முழுமையாக அவர்களை மீட்டெடுக்க அந்த உதவிகளால் முடியவில்லை.

வடக்கு இலங்கையின் மேற்குக் கரையோரம் இருந்த அந்தக் கிராமத்தில் நான் நுழைந்தபோது அங்கு சுமார் 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இருந்தன. மொத்தமாக அந்தக் கிராமத்தில் 300 குடும்பங்கள்தான் வசிக்கின்றன. 10 விழுக்காட்டினர் போரின் நேரடிப் பாதிப்பாளர்கள். மீன்பிடித் தொழில்தான் அவர்களின் முக்கியமான வருவாய் வழி. அதுவேதான் அவர்களின் இறப்புக்கான வழியாகவும் இருந்திருக்கிறது. இந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுமே மீன்பிடித் தொழிலின்போதுதான் குடும்பத் தலைவர்களை இழந்திருக்கின்றன. போர்க் காலத்தில் கடற்றொழிலுக்குச் சென்ற ஆண்கள் திரும்பி வரவில்லை. சிலரது சடலங்கள் சூட்டுக் காயங்களுடன் பல நாள்களுக்குப் பின்னர் கரையயாதுங்கியிருக்கின்றன. ஏனையவர்களின் சடலங்கள்கூடக் கிடைக்கவில்லை. கடற்படையினர் அவர்கள் இருந்த படகை நோக்கித்தான் சுட்டார்கள் என்று கூடச் சென்றவர்கள் சொல்லக் கேட்டதுடன் சரி.

நடத்தை கெட்டவள்

இவர்களைச் சந்திப்பதற்காக நான் கிராமத்திற்குள் சென்றபோது, அனேகமாக எல்லோருமே என்னை ஒரு வீடு நோக்கிச் செல்வதை தவிர்க்கக் கேட்டனர். எனக்கு ஆச்சரியமாகிப் போனது. ஆர்வத்தையும் தூண்டியது. “அது ஏன்?” என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர் “நடத்தை கெட்டவர்” என்ற பதிலைத்தான் இந்தச் சமூகம் எனக்கும் சொல்லியது. அவரைச் சந்தித்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தை அதுதான் என்னிடம் தூண்டியது.
தன்னை “நடத்தை கெட்டவள்” என்றுகூறி இந்தச் சமூகம் ஒதுக்கி ஓரங்கட்டி வைத்திருப்பது பற்றி மேரி கனிஸ்டா கவலைப்படவில்லை. “அதெல்லாம் பழகிப்போய்விட்டது” என்கிறார். “இந்தச் சமூகம் அன்று என் குடும்ப நிலையை மாற்றியிருந்தால் இன்று நான் இப்படி மாறியிருக்க மாட்டேன். என் பிள்ளைகளும் அவப் பெயரைக் கேட்காமல் இருந்திருப்பார்கள்” என்று புறங்கூறுபவர்களை ஒதுக்கித் தள்ளுகிறார். ஆனால், தன்னை இந்தச் சமூகம் இப்படி ஓரங்கட்டி நடப்பதால், தன்னுடைய பிள்ளைகளின் வாழ்வு பாதிக்கப்படுவது குறித்து அவர் அதிகம் கவலைப்படுகிறார்.

“நான் நினைக்காதது எல்லாம் நடந்து முடிஞ்சிற்று. இப்பொழுது வெறும் பிணமாகவே வாழ்கிறேன்” என்ற பெருமூச்சுடன்தான் மேரி தன் கதையை என்னிடம் கூறத் தொடங்கினார். தன்னைப்போன்ற பெண்களும் இந்தச் சமூகத்திற்கும் ஒரு படிப்பினையாக இருக்கட்டும் என்பதற்காகத்தான் தன் கதையை நான் ஊடகங்களில் வெளியிடுவதற்கு அவர் இணக்கம் தெரிவித்திருந்தார்.

விளையாட்டு வீராங்கனை

“நான் சின்ன வயசில நல்லா விளையாடுவன். ஒரு விளையாட்டு வீராங்கனையாத்தான் என்னைப் பாடசாலையில எல்லாருக்கும் தெரியும். படிப்பைவிட விளையாட்டிலதான் எனக்கு விருப்பம் அதிகம். அப்பா சின்ன வயசிலேயே இறந்திட்டார். நான் முதலாம் வகுப்பு படிக்கும்போதே அப்பா இறந்தவர். இலங்கை ‘கிபிர்’ வானூர்திக் குண்டு வீச்சில அப்பா செத்தவர். என்னையும் எனது சகோதரர்களையும் வளர்க்க அம்மா பெரிதும் கஷ்டப்பட்டவர். அண்ணன்கள் வளர்ந்து கடல் தொழிலுக்குப்போகும் வரையில் எங்கட அம்மாவை எல்லாரும் ஒரு கடன்காரியாத்தான் பார்த்தினம். அந்தக் கஷ்டத்துக்கு மத்தியிலயும் எங்கையயல்லாம் விளையாட்டுப்போட்டி நடக்குதோ அங்கயெல்லாம் நான் போயிடுவன். திரும்பி வரேக்க என்ரை கையில வெற்றிக் கிண்ணந்தான் இருக்கும். அம்மா பேசுவா, பொம்பளப்பிள்ளை உனக்கேன் இந்த விளையாட்டெல்லாம் என்று. ஆனால் எனக்கு விளையாட்டிலதான் விரும்பம் இருந்தது. “நல்லாப் படிக்கப்பார் எதிர்காலத்திலேயாவது நல்லாய் இருப்பாய்” என்பா அம்மா.

மேரி நிறுதிக்கொள்கிறார். தலை தானே கவிழ்ந்துகொள்கிறது. அவரது சிறுவயது வாழ்க்கை அவர் மனதைத் தைத்திருக்கும். தலையை நிமிர்த்தியபோது அவர்கள் கண்கள் குளமாகியிருக்கின்றன. அதை மறைக்க என்னைப் பார்த்து புன்னகைக்கின்றார். என்னால் அந்த வலி நிறைந்த புன்னகையை எதிர்கொள்ள முடியவில்லை. கதையைத் தொடரவேண்டி “எப்ப கலியாணம் செய்தனீங்கள்?” என்கிறேன்.
“எங்கட ஊரில வேலைக்கு என வந்திருந்த ஒருத்தரை காதலிச்சுக் கலியாணம் செய்தன். என்னுடைய கணவர் மிகவும் நல்லவர். என்னையும் எனது குழந்தைகளையும் கஷ்டம் தெரியாமல் வளர்த்தவர் அவர்தான். பிள்ளைகளை நல்லாப்படிக்க வைக்கவேணும் என்று ஒவ்வொருநாளும் சொல்லுவார். திருமணம், மனைவி, குடும்பம், வாழ்க்கை என்பனவெல்லாம் ஒழுங்கு முறையாக இருக்கவேண்டும். எமது ஊரில் கணவரை இழந்து பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்தபோது அவரைக் கேவலமாகத் திட்டிக்கூட இருக்கிறார். நல்ல இலக்கணமான மனிதர். ஆனால் இறு என்நிலையைப் பார்த்தால்…..”

இப்போது அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விக்கி விக்கி அழுகிறார். அழுகையை அடக்க முயற்சித்துத் தன் சோகங்களையும் சேர்த்தே விழுங்குகிறார். இந்தத் தடவை நான் எந்தக் கேள்வியும் இன்றி அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். கதவுக்கு வெளியே அனல் கொழுத்தும் வெயிலின் கண்களைக்கூசச் செய்யும் ஒளியை வெறித்தவர் திரும்பி என்னைப் பார்த்துத் தொடர்ந்தார்.

“கடைசிச் சண்டையில புருசன் செத்துப்போனார். ஷெ­ல் விழுந்து அந்த இடத்திலேயே ஆள் சரி. 7 பிள்ளைகளையும் வைச்சு எப்படிக் காப்பாற்றப் போகிறேன் என்று ஒவ்வொருநொடியும் அழுவன். அப்ப யாரும் உதவிக்கு வரேல்ல. சண்டை முடிய பிள்ளையளோட அகதி முகாமில அடைபட்டம் (அரச இந்த முகாம்களை இடைத்தங்கல் முகாம் என்றது). அப்ப மூத்தமகன் ஓ.எல். (ஜீ.சீ.ஈ. சதாரண தரம்) படிச்சுக்கொண்டிருந்தவன். பள்ளிக்கூடம்விட்டு வந்ததும் முகாமில கடலை விக்கப் போவான். கொஞ்சப் பணம் வரும். அதிலதான் முகாம் வாழ்கை கழிஞ்சது.

பிறகு ஊருக்கு வந்தம். பிள்ளையளை வளர்க்க என்ன செய்யப்போறேனோ என்று பயப்பிட்டன். மகன் படிப்பை விட்டிட்டு நண்பர்களோட சேர்ந்து தொழிலுக்குப் போகத் தொடங்கினான். இனிமேல் அவன் காப்பாத்துவான் என்று நினைச்சன். ஆனால் அந்த நினைப்பு நீடிக்கேல்லை. கெதியிலயே அவன் திருமணம் செய்தான். அவனுக்கென்றொரு குடும்பம் வந்ததும் எங்களைக் கவனிக்கிறத விட்டிட்டான். அவன்ர உழைப்பு அவனுக்கே பத்தாது.”

மீண்டும் சின்ன அமைதி. சில விடயங்களை அவர் மென்றே விழுங்கிக்கொள்கிறார் என்பது புரிந்தது.

பிழைப்புக்கு வழி?

“அப்பா இல்லாப் பிள்ளையளுக்காக நான் பட்ட கஷ்டத்தை என்ர பிள்ளை உணரவேயில்லை. அதுதான் கவலை. வவுனியா முகாமில் இருக்கேக்கை பிள்ளையள் பள்ளிக் கூடம் போனாப் பிறகு நான் அப்பம், இடியப்பம் சுட்டு விற்பன் . பிள்ளைகளுக்கு நான்படுற கஷ்டம் தெரிய வேண்டாம் என்று நினைச்சு அவையள் பள்ளிக்கூடம் போனாப் பிறகுதான் அதுகளைச் சுட்டு விற்பன். நெருப்பில் காஞ்சு பிள்ளையளுக்காக என்னையே உருக்கினன். இப்பவும் என்ர பிள்ளைகளுக்காகத்தான்….”
மீண்டும் அமைதியாகிறார். விட்டத்தைப் வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருக்கிறார். 7 வருட வாழ்க்கையின் துயரங்களை சில மணித் துளிகளில் அவரால் மீட்டுச் சொல்லிவிட முடியாதுதான். ஆனாலும் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார் மேரி.

“மூத்தவன் திருமணம் செய்தாப் பிறகு என்னோட கதைக்காமலே விட்டிட்டான். நான் பட்ட துயரத்துக்கு அளவேயில்லை. மற்றதுகள் எல்லாம் பொம்பிளைப் பிள்ளையள். கடைசிக்கு இப்ப 7 வயது, அவர் சாகிறபோது அவன் நாலுமாசம் வயித்தில. என்ர பிள்ளையளுக்காக நான்தான் ஏதாவது செய்யவேணும். வேற வழி….? தொழில் செய்கிதென்றாலும் எதைச் செய்வது என்ற நிலை. கணவனில்லாத வீடு, ஆண் துணையில்லாத வீடுதானே எண்டு நிறைப்பேர் வந்தினம். முதலில் எதிர்த்தேன். மானத்தைக் காப்பாற்ற என் நம்பிக்கை மட்டுமே போதுமென்றிருந்தன். ஆனால் என் கஷ்டம் என்னை அப்பிடிக் கனகாலம் நம்பிக்கையோட இருக்க விடேல்ல. புருசன் இல்லாத பெண்ணுக்கு தான் இன்னொரு பெண்ணின் மனசு புரியும்” என்கிறார் மேரி.
அவரைப் பொறுத்த வரைக்கும் நான் ஒரு சின்னப்பெண். வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாதவள். குடும்பம், பாலியல் பற்றியயல்லாம் அறியாதவள். ஆகவே இதைவிட விரிவாகவெல்லாமல் அவரால் என்னுடன் பேசமுடியாது.

“ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ளாத ஒரு செயலைச் செய்து இன்று அனைவராலும் தெரிந்துகொள்ளக் கூடியவளும் ஆகியிருகிறேன். எனது ஊர் என்னை ஒதுக்கி வைத்துவிட்டது. நடத்தை கெட்டவள் என்று என்னை தம்மிலிருந்து தூரமாக்கி வைச்சிருக்கு. இன்று ஓரங்கட்டி வஞ்சிக்கும் இந்தச் சமூகம் அன்று என் குடும்ப நிலையை மாற்றியிருந்தால் இன்று நான் இப்படி மாறியிருக்கமாட்டேன். என் பிள்ளைகளும் அவப் பெயரைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். மூத்தமகன் அடிக்கடி சொல்லுவான், அம்மா நான் வேலைக்குப் போனபின் உங்களை அப்பம் சுடவிடமாட்டன், நீங்கள் நெருப்பில் இனி நிற்கமாட்டீங்கள் என்று சொல்லுவான். தனக்கென்றொரு வாழ்வு வந்ததும் அம்மாவையே மறந்துவிட்டான். இரு மகள்களும் திருமணம் செய்துவிட்டார்கள். இப்போது அவர்களுக்கும் தங்களுடைய அம்மா நடத்தை கெட்டவள். வழியில் கண்டாலும் யாரோ போல் விலகிச் செல்வார்கள். நான் என்ன செய்வேன். எனக்கேன் இந்த நிலை…? இயேசுவே.”

சமூகம் இனி விடாது

கடைசியாக அவர் தன் மொத்தத் துயரத்தையும் வெளியே கொட்டி வெடித்தழுகிறார். இயேசுநாதர் சொன்ன மாதிரி பாவம் செய்யாத யாராக இருந்தாலும் இந்தப் பெண் மீது கல்லெறியட்டும், என்கிற வாழ்வைத் தான் நான் எனது ஊரில் வாழ்கிறேன் என்றார் மேரி. சமூகம் தன்னை ஏன் அப்படிப் பார்க்கிறார்கள் என்பது எனக்குத் தெரிகிறது என்றும் நான் செய்வது, பிழையானதுதான் என்ற தெரிகிறதென்றும் கூறும் மேரியின் சமூகத்திற்கான ஒரே பதில் “என்னோடு இப்ப இருக்கிற பிள்ளைகள் நால்வரும் படிக்க வேணும் என்கிற ஒரே காரணம்தான். அதற்கு என்னிடம் வேறு வழியில்லை” என்பதுதான்.

தன்னுடைய உடல் மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 500, ஆயிரம் ரூபா கிடைக்கக்கூடும், அதுதான் தனது அதிகூடிய வருமானம் இதற்காகத்தான் இவ்வளவு பழியும் அவச் சொற்களும் கேட்கவேண்டியிருக்கிறது என்று கவலைப்படுகிறார். ஆனால் அந்தச் சிறு தொகையைக்கூட அந்தப் பெண்ணுக்குக் கொடுக்க முன்வராத இந்தச் சமூகம் அவரை இன்னமும் இன்னமும் படுகுழிக்குள் தள்ளிக்கொண்டே இருக்கிறது.

“சிலவேளைகளில் என் உடம்புக்கு கடன் சொல்லியும் சென்றிருக்கிறார்கள். இதெல்லாம் இப்ப எனக்கு பழகிப் போயிற்று. இப்படி நடப்பது என் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதித்துவிடுமோ என நினைத்து விலகி இருந்தாலும். சமூகம் என்னை இனி விடாது. நான் படுகிற கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும்.”