Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சிலாபத்தில் சில அம்மாமார்........
“மீன் புடிக்க போறதுக்கு மெத்தப்படிக்கோணுமா என்ன?”

கரைக்கு வந்த படகுகளில், தன் நண்பர்களுடன் வலையிலிருந்து மீன் தெரிகின்ற வேலை, கருவாடு காயப்போடும் வேலை என ஈடுபடும் செவான் இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் கடலுக்குச் செல்ல தயாராவான். இதில் படிப்பு என்பது அவனுக்குத் தேவையில்லாத ஒன்றாகவே உள்ளது.

16.09.2016  |  
புத்தளம் மாவட்டம்
Fishermen on the beach near Chillaw: How long did they stay at school?
Chilaw 7
செவானும் நண்பனும் விளையாட்டில்…..

“எனக்கு வயசி பதினொண்டு. மீன் பொறக்க போனன்டாக்கா எனக்கு போட்டில இருக்கிய மாமாமார்கள் ஒரு நாளைக்கு ஐநூறு ரூபா சல்லிதார. நானும் ஏண்ட கூட்டாளிமார் பொடியன்களும் போய் மீன் பொறக்கி கிடச்ச சல்லீல பலூடா குடிச்சிய, பொடியன்களோட பெட்புடிச்சி கிரிக்கெட் அடிச்சிய. விடியசெல்ல ஸ்கூல் போக மாச்சலா இருச்சிய.” என்கின்றான் தரம் ஆறில் கல்வி கற்கும் செவான் என்னும் சிறுவன். தழிழ் குடும்பத்தைச் சேர்ந்த செவான் படிப்பதோ சிங்கள மொழிமூல பாடசாலையில்தான். இவனைப் போல் பல செவான்கள் இவன் வாழுகின்ற அதே மீனவ கிராமத்தல் உள்ளனர். இவனது தந்தை படகில் கடலுக்குச் செல்லுகின்ற அதேவேளை அவனது தாய் படகுமுதலாளிமாரிடம் மீனைப் பணம்கொடுத்து வாங்கி அதனை கருவாடாக்குகிறார்.
கரைக்கு வந்த படகுகளில், தன் நண்பர்களுடன் வலையிலிருந்து மீன் தெரிகின்ற வேலை, கருவாடு காயப்போடும் வேலை என ஈடுபடும் செவான் இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் கடலுக்குச் செல்ல தயாராவான். இதில் படிப்பு என்பது அவனுக்குத் தேவையில்லாத ஒன்றாகவே உள்ளது.
சிலாபம், இலங்கையின் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோர நகரமாகும். இந்நகரின் பிரதான பொருளாதாரம் மீன், மீன்சார்ந்த உற்பத்திகள், தெங்கு தெங்குசார் உற்பத்திகள், மற்றும் ஓட்டுக்கைத்தொழில் என்பவற்றை கொண்டதாக உள்ளது. ஆனாலும் இலங்கையின் மொத்த மீன்பிடி மற்றும் மீன்உற்பத்திப் பொருட்களில்; சிலபாத்திற்கு கணிசமானளவு பங்கு உண்டு. 2014ஆம் ஆண்டு மீன்பிடி அமைச்சின் (www.fisheries.gov.lk)கணிப்பின்படி இலங்கையின் மீன்பிடி மாவட்டங்களில், நீர்கொழும்பில் 50,070 மீனவக் குடும்பங்கள் இருந்தாலும் தொழில் செய்பவர்கள் 10,020 பேர் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலாபத்தில் 45,650 குடும்பங்கள் இருக்கும் நிலையில் 12,330 பேர் தொழில்புரிகிறார்கள். எனவே நீர்கொழும்பை விட மீன்பிடித்தொழிலில் அதிகமாக ஈடுபடுபவர்கள் சிலாபத்தைச் சோந்தவர்களே. மீன் உற்பத்திகளும் பெரியளவில் இடம்பெறும் ஒரு இடமாக இது உள்ளது. கருவாட்டு வயல்களை காவல் காப்பதிலும் வயதான பெண்கள் ஈடுபடுவதையும் காணமுடிகிறது. இந்நிலையில் சிலாப நகரை அண்மித்த பகுதியில் கரையோரக் கிராமான சுதுவெல்லையைச் சேர்ந்தவனே இந்த செவான் என்னும் சிறுவன்.

கருவாடு காய்வதை காவல் காக்கும் வயதனா பெண்கள்
கருவாடு காய்வதை காவல் காக்கும் வயதன பெண்கள்

“என்ட புள்ளைக்கு கொஞ்சம் விளையாட்டுபுத்தியிருச்சிய. மத்துபடி அவன் மீன் பொறக்கியத்துக்போனாக்கா ஒரு நாளைக்கு ஐநூறுவா சம்பாதிச்சிட்டு வார. ஸ்கூலுக்கும் போயி. மெத்தப்படிக்கத் தேவல்ல. அவன்ட தாத்திட்ட போட்டிருச்சிய. அவன் வளர்ந்து போட்டில மீன் புடிக்க போவான். மீன்புடிக்க மெத்தப்படிக்கோனுமா என்ன?!” என செவானின் தாய் குமுதினி, செவானின் படிப்பு பற்றி கேட்ட போது கூறுகிறார். இந்த மக்களுக்கு தமது வாழ்வாதாரதிற்கான பொருளாதாரத்தை ஈட்டும் வழியான மீன்பிடிக்கு பிள்ளையைத் தயார்படுத்தினால் போதும் என்பதே எண்ணமாக உள்ளது. இதற்காக கல்வி உதவுது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை. 11 வயதில் இடையிடை பாடசாலையை எட்டிப்பார்கும் இவர்கள்  தரம் எட்டில் 13 வயதுக்குப்பின் பாடசாலைக்கு முழுக்குப்போட்டுவிடுகின்றனர். சிறுமிகளைப் பொறுத்தளவில், பெற்றோர் தொழிலுக்குப் போய்விட தமது இளைய சகோதரர்களை பார்பதற்காக தமது கல்வியை இடைநிறுத்திவிட்டு நிற்கின்ற பலர் இக்கிராமத்தில் உள்ளனர்.

Chilaw 3
வாங்கிய   மீன்களை  கருவாட்டுக்காக தயார்படுத்தும் பெண்கள்.

“எமது மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள். விளையாட்டிலும் அழகியல்சார்பான செயற்பாடுகளிலும் இவர்கள் தங்களது திறமைகளை அகில இலங்கை மட்டம் வரையில் எடுத்துத் சென்றுள்ளனர். ஆனாலும் பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகல் இன்னமும் நின்றபாடில்லை. சிறுவயதில் வரவு ஒழுங்கின்மையும் பின்னர் இடைவிலகல்களும் தொடர்கின்றன. தரம் 8, 9, 10 ஆம் வகுப்புக்களிலேயே இடைவிலகல் நடைபெறுகிறது. கடந்த நான்கு வருடத்துள் மாத்திரம் 60 மாணவர்களும், 30 மாணவிகளும் பாடசாலைக்கல்வியை விட்டு இடைவிலகியுள்ளனர்.” என்கிறார் சுதுவெல்லை செபஸ்ரியன் பாடசாலை அதிபர்.
“கூட நாள்ல பள்ளிக்குபோகாம நின்னா பொலீசீ பயம். ஆதால இடையிடைய போவம்” என்று செவானின் நண்பன் கபில் கூறுகிறான். அதென்ன பொலீஸ்பிடிக்கும் என்று ஆராய்ந்தால்,
“மாணவர்களின் வரவின்மையை, இடைவிலகலைத் தவிர்ப்பதற்கு பாடசாலை நிர்வாகமும், பிரதேச செயலகமும், பொலிஸாரும் அறிவுறுத்தற் செயற்றிட்டங்கள், ஆலோசனைகள் என செயற்பட்டவண்ணமே உள்ளனர். ஆனாலும் இடைவிலகலை நிறுத்த முடியவில்லை. நூற்றுக்கு பத்து சதவீதமானவர்களே இங்க கற்க வேண்டும் என்பதற்காக வருகின்றார்கள் மிகுதி அத்தனை பேரும் பொலிஸ், பாடசாலையின் வற்புறுத்தல் காரணமாக வருகின்றனர்.” என்கிறார் அதிபர்.
பாடசாலைக்கு சமூகமளிக்காதவர்களின் பெயர்பட்டியலை எடுத்துக்கொண்ட பிரதேச செயலகம் பொலீசுடன் இணைந்து மாணவர்களைத் தேடிப் புறப்படுகிறது. நாளை கட்டாயம் பாடசாலைக்கு போக வேண்டும் என அறிவுறுத்திவிட்டு வருகிறது. ஆறுமாதக்களுக்கு ஒருமுறை இது நடந்துவருகிறது.

Chilaw 2
விற்பனையிலும் பெண்கள்.

அதேநேரம் இப்பகுதியினர் கடவுள் பக்தி மிக்கவர்களாக உள்ளனர். கல்விப் பொதுத்தராதர பரீட்சை யன்று அவர்களது தேவாலயத்தில் கொடியேறினாலும் பரீட்சையை விட்டுவிட்டு தேவாலயத்தில் பூஜைக்குச் சென்றுவிடுவார்கள். அத்துடன் ஆறுமாதங்களுக்கு மீன் அதிகமாக பிடிக்கக்கூடிய இடங்களுக்கு குடும்பத்துடன் நகர்ந்து செல்லும் முறைகளையும் இவர்களில் சிலர் கடைப்பிடிக்கின்றனர். இதனால் ஆறுமாதம் பாடசாலைசெல்லும் பிள்ளை மிகுதி ஆறுமாதம் இலங்கையின் வேறு கடலோரப்பகுதிக்கு பெற்றோருடன் சென்றுவிடுகிறது. இதனாலும் படிப்பு பாதிக்கப்படுகிறது.
பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை ‘ஒரு மீனவனுக்கு வாழ்க்கைப்படும் பெண்ணுக்கு கருவாடு காயப்போடச்சொன்னால் எனக்கு கருவாடு காயப்பபோடத் தெரியாது. பேனை பிடித்து எழுதத்தான் தெரியும் என்று சொன்னால் அங்கு பிரச்சினைதான் வரும்.’ என்று கூறும் பெற்றோர் பெரும்பாலும் எழுத வாசிக்க கற்றுக்கொள்ளும் 6 அல்லது 7 வயதுக்குப்பின் , இளைய சகோதரங்களைப்பார்பது, மற்றும் கருவாடு போடும் முறைகளைக் கற்றுக்கொடுத்துவிட்டு 18 வயதில் திருமணம் முடித்துக்கொடுத்துவிடுகின்றனர். கருவாடு போடும் செயல்முறையும் பல படிமுறைகளைக்கொண்டுள்ளது.அதில் பெண்களே ஈடுபடுகின்றனர். அதுமட்டுமல்லாமல், கருவாடு விற்பனையிலும் பெண்கள் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
நாம் படிப்பு படிப்பு என்ற அவர்களிடன் கேள்விகேட்க செவானின் அம்மா குமுதினி
“மெத்தப்படிச்ச டிச்சர்மாரு மாசத்துக்கு இருபதாயிரம் எடிச்சியா. என்ட புருசன் ஒருநாளைக்கு முப்பாயிரத்துக்கும் மேல உழச்சிய. இதவிட என்னத்த வேணும். என்ட புள்ளைக்கு எழுத படிக்கத் தெரிந்தாக்காப் போதும்,” என்று கூறி எம்மை அந்த இடத்தில் இருந்து நகரவைத்தார்.