Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பூமாலை!
நான்கு தலைமுறை வர்த்தகம்!

“இப்ப சிங்கள ஆக்களில கண்டியன் ஆக்கள் மாப்பிள்ளை மாலையும், மணப்பெண்ணுக்கு தலைக்கு வைக்க பூ மாலை வைக்கிறதும் பழக்கமாகியுள்ளது. முந்தி எல்லாம் அப்பிடி செய்யிறதில்லை. அதனால அவர்களும் (சிங்கள ஆக்களும்) தேடி வந்து ஓடர் தந்துட்டுப் போறாங்க.

22.06.2018  |  
வடமேல் மாகாணம்
கந்தையா பரமேஸ்வரன்.

“அதிகாலை 4 மணிக்கு பூ ஆயப் போவன். மாலை 4 மணிக்கு பூமாலை கட்டிக்கொண்டு டவுனுக்குப் போய் 30 கடைகளுக்கு பூமாலை வித்து காசெடுப்பன். நானறிய நாலு பரம்பரையா இந்த வேலையை செய்துதான் வாழ்கையோட்டுறோம்.” என்கிறார் 58 வயதான கந்தையா பரமேஸ்வரன். சிலாபத்தில் பிரசித்திபெற்ற முன்னேஸ்வர கோயிலுக்கு அருகில் வசிப்பவர்.

/
இந்துக்களினுடைய கலாசார ஒழுங்கு முறையில், கோயில்களைச் சுற்றி பல்வேறு தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கோயில்கள் கட்டப்பட்டதும் பல்வேறு சமூகத்த தேவைகளுக்காகவே. முக்கியமாக கலைகளை வளர்க்கும் ஒரு இடமாக கோயில்கள் திகழ்ந்தன. அந்த வகையில், இலங்கையில் சிலாபம் முன்னேஸ்வரம் கோவில் வரலாற்று பிரசித்தம் பெற்ற ஒரு கோயில். அங்கே கோவிலைச் சுற்றி தவில், நாதஸ்வரம், பூமாலை கட்டல் என பல்வேறு தேவைகளையும் நிறைவேற்ற மக்கள் குடியமர்ந்தனர். தற்போதுள்ள நிலையில் கோயில்களில் இருந்து போதிய வருமானத்தை சரிவர பெற முடியாத நிலையியல் அதைச்சுற்றியிருந்த மக்கள் பல்வேறு வேலைகளையும் செய்யத் தொடங்கிவிட்டனர்.

“’நான் 07 வயதாக இருக்கும் போது நான் பூமாலை கட்டத்துவங்கினேன். எனக்கு 4 சகோதரர்கள் உள்ளனர். அதில நானும் இன்னும் ஒருத்தரும் பூமாலை கட்டுகின்றோம், ஒருவர் தவில்(மேளம்) அடிக்கிற தொழிலைச் செய்கிறார், மற்றவர் வெளிநாட்டில இருக்கிறார், என்னோட தங்கச்சி யாழ்ப்பாணத்தில நாதஸ்வரம் வாசிப்பவரக் கட்டியிருக்கா…ஆனா எனக்கு பிறகு யாராவது இதை செய்வினமோ என்றது கேள்விக்குறிதான். ஏனெண்டா.. எனக்கு நான்கு பெண் பிள்ளைகள் அவர்களில் ஒருவர் டிச்சராக இருக்கிறா மற்றவ ‘சலூன்’ ( அழகு நிலையம்) ஒன்று வச்சிருக்கிறா… மற்றவையள் படிக்கிறார்கள்.”

என்று கூறும் கந்தையா பரமேஸ்வரன் நான்கு தலைமுறையாக பூமாலை கட்டி விற்கும் வருமானத்தில் மட்டும் வாழ்கை நடத்தியுள்ளனர். இன்று அந்த வருமானம் மட்டும் போதுமானதாக இல்லை. “ ஒரு முழம் பூச்சரத்தை நான் 25 சதத்திற்கு விற்க ஆரம்பித்தேன். பின்னர் 50சதம், 1 ரூபாய், 2 ரூபாய், 5ரூபாய், 10ரூபாய், 15 ரூபாய், எனக் கொடுத்து இன்று ஒரு மாலைச்சரம் 20 ரூபாய்க்கு விற்கிறன். ஓவ்வொரு கடைகளிலும் உள்ள சாமிப்படத்திற்கு போடுவதற்காக 4அல்லது 5 முழம் பூச்சரத்தை வாங்குவார்கள். அப்படி 30 கடைகளுக்கு கொடுப்பேன்.” என்று கூறுகிறார் பரமேஸ்வரன்.

மனைவியும் இணைந்து பூக்கட்டுகிறார்

கோயிலுக்கு அருகில் உள்ள கடைகளில் பூமாலை கட்டி அதை ஒருவர் வாங்கும் வரை காத்திருந்து விற்பதும் நடைபெற்றுவருகிறது. அதுபற்றி அவரிடம் கேட்டபோது, “முன்னேஸ்வர ஆலயத்து கடைகளுக்கு நான் கொடுப்பதில்லை. ஆலயத்தில் இருந்து வரும் ஓடர்களைச் செய்வதுடன் விசேடமாக அம்பாளுக்கும் மாலை கட்டுவேன். அம்பாளுக்குச் செய்யும் சேவகத்துக்கு நான் கூலி வாங்குவதில்லை.” என்றும் கூறுகிறார்.
இந்த வர்த்தகத்திற்கு எந்தவித முதலும் தேவையில்லையா? இவர்கள் பூக்களை எங்கிருந்து பெறுகிறார்கள்?

“காலையில நாலுமணிக்கே அப்பா பூ தேடப் போயிடுவார். வீடு வீடா திரிந்து பூக்களைப் பிடுங்கி சேர்ப்பார். நாங்களும் கொஞ்ச பூங்கன்றுகளை வளர்த்து வருகிறோம். அதிலிருந்தும் பூக்களை எடுப்போம். நித்தியகல்யாணி, எக்சோரா, முல்லை, மல்லிகை செவ்வந்தி, வாடாமல்லிகை போன்றவற்றை வளர்த்து வருகிறோம். இவை தவிர அப்பப்ப திருமணம் புதுமனைப் புகுவிழா போன்ற விசேடங்களுக்கும் மாலைகள் கட்டுவோம்.” இவ்வாறு கூறுகிறார் மகளான சஜித்திரி பரமேஸ்வரன்.

“நாட்டில பிரச்சினை நடந்த காலத்தில நான் மட்டும் தான் இந்த சுற்று வட்டாரத்திலயே மாலை கட்டினன் இப்ப என்னன்டா மூலைக்கு மூலை பூக்கட்டி கடைகளுக்கு 30 ரூபாய்,50 ரூபாய் என்று விக்கிறாங்க. இந்தப் போட்டியியால கல்யாண ஓடர்களாக இருந்தால், வெளியில் இருந்து பூக்களை விலைக்கு வாங்கியும் செய்து குடுக்கிறன்.” என்ற கூறும் பரமேஸ்வரன், இந்த நாட்டுப் பிரச்சினை தீர்ந்ததால தன் வியாபாரத்தை விரிவாக்க முடிந்ததையும் குறிப்பிட்டார்.
“இப்ப சிங்கள ஆக்களில கண்டியன் ஆக்கள் மாப்பிள்ளை மாலையும், மணப்பெண்ணுக்கு தலைக்கு வைக்க பூ மாலை வைக்கிறதும் பழக்கமாகியுள்ளது. முந்தி எல்லாம் அப்பிடி செய்யிறதில்லை. அதனால அவர்களும் (சிங்கள ஆக்களும்) தேடி வந்து ஓடர் தந்துட்டுப் போறாங்க. அதற்கு ஏற்றாற் போல் நானும் புத்தளத்தில இருந்து பூக்களை ஓடர் பண்ணி எடுப்பன். ஒரு ‘சேறு’ (கொத்து) 150 ரூபாய். எனக்கு 15 இலிருந்து 20 வரையான சேறு தேவைப்படும். தியதலாவ பகுதியில்(இலங்கையின் தென்பகுதி) இருந்து எனக்கு செவ்வந்தி, ரோஜப்பூ எடுப்பன். இந்தியாவில சபரி மலைக்குப் போனாக்கா மரிக்கொழுந்து, மரு, சம்மங்கி,ரோஜா போன்ற பூக்களை கொண்டுவருவன். இந்த வியாபாரத்தால ஒரு நாளைக்கு 500 ரூபாய் தேடினாக்கா 200 மிச்சம்பிடிப்பன். அந்த பணத்தில ஒருகிழமைக்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்கிப் போடுவேன். இந்த தொழிலைவச்சுத்தான் என்ர நாலு பிள்ளையளையும் வளர்த்து படிக்க வைச்சனான்” என்று பெருமிதம் கொள்கிறார்.


“காலையில நாலுமணிக்கே அப்பா பூ தேடப் போயிடுவார். வீடு வீடா திரிந்து பூக்களைப் பிடுங்கி சேர்ப்பார்.

அப்பாவின் இந்த மாலைகட்டும் தொழிலுக்காக தாமும் உதவுவதில் பெருமையடைகிறார். சுஜித்திரி.

“நாங்கள் வாழைநாரை வெட்டி வெய்யிலில் காயப்போட்டு பூக்கட்டும் நூலைத் தயார் படுத்துவோம். காய்ந்த நாரை தண்ணியில ஊற வைப்போம். முதல் நாள் பூக்கள் இருந்தால், மாலை கட்டுவோம். இப்பிடி எல்லாம் செய்து கொடுத்துட்டுத்தான் காலையில பள்ளிக்கூடத்துக்கே நாங்க போவோம். ஏங்கள் வீட்டில் எல்லோருக்கும் நன்கு மாலைகட்டத் தெரியும். குலியாண வீடுகளில் பெண்ணின் தலையில் வைக்கும் ‘சடைநாகம்’ செய்வதில் எங்கள் அம்மா வல்லவர். அதை செய்யிறதில இந்த ஏரியால அம்மா கொஞ்சம் பேமஸ். முந்தி எல்லாம் சடநாகத்தை பூவாலயே ஜோடிச்சுச் செய்வோம். இண்டைக்கு இன்ர நெட்ல பார்த்துட்டு வந்து அந்த டிசைன்லயே கேக்கிறாங்க. அதற்கேற்றாப் போல செய்கின்றோம். இப்பத்தைய சடநாகத்துக்கு பூமட்டும் போதாது, முத்து, ரிபன், அதிலும் தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தி அளவோடு செய்வோம்.” என்கிறார், மகள். அப்பாவில் இருந்து நவீன சமூகத்திற்கு ஏற்றாற்போல் பூக்கட்டத் தொடங்கிவி;ட்டனர் இவர்கள். ஆனாலும் தனக்கு ஒரு மகன் இல்லையே என்ற கவலை அப்பாவுக்கு எப்பவும் இருந்துகொண்டுதானிருக்கிறது.

“எனக்கு பிறகு இந்த வேலையைச் செய்வதற்கு என் பரம்பரையில் வந்த ஆண் வாரிசொன்று இதுவரையில் இல்லை. என் தொழிலுக்கான வாரிசை அம்பாள்தான் எனக்கு தரவேண்டும். என் வீட்டுக்கு வரும் மருமகன்மாரு அம்பாளுக்குச் பூக்கட்டி சேவை செய்கிற பாக்கியத்தை ஏற்பார்களா? பாப்பம்!” என அங்கலாய்கிறார் பரமேஸ்வரன்.