Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

குடும்பம் + அரசு
“பெண்ணாக வராதே ஆணாக வா.. நான் பெற்றது ஆண் குழந்தையை!”

“நான் ஒரு பெண் என்று உணர தொடங்கியதும் தோற்றத்திலும் மாற்றிக் கொள்ள முயன்றேன். அதற்கு தேவைப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை கொழும்பு பெரியாஸ்பத்திரியில் உள்ள 10ம் இலக்க சிகிச்சை அறையில் எடுத்து கொண்டேன்.

14.07.2018  |  
கொழும்பு மாவட்டம்

“எனது 21 வயதில் நான் ஒரு பெண் என்பதனை முதன் முதலாக உணர்ந்தேன். இந்த மாற்றத்தினை மறு ஜென்மம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த உள் உணர்வினையும் புதுவித மாற்றத்தினையும் எதிர்கொள்ள முடியாமல் தவித்தேன். நான் பெண்ணாக என்னை மாற்றிக் கொள்ள முயன்ற போதெல்லாம் என் தாயாரின் மிக மோசமான தாக்குதலுக்குள்ளானேன்”

மாலைப் பொழுதொன்றில் சுற்றும் முற்றும் அடர்ந்த மரங்கள் நிறைந்த பூங்காவில் நீண்டு வளைந்து செல்லும் ஒற்றைப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது பூமி ஹரேந்திரன் இவ்வாறு மௌனத்தைக் கலைத்தார். ஆனால் அந்தப் பூங்காவில் இருந்து பூமியின் கதையை நிதானமாக கேட்க முடியவில்லை. பல கண்கள் எங்களைக் கடந்து சென்றன. அவற்றில் அனுதாபங்களும், கேலியும், வேடிக்கையும் கலந்திருந்தன. ஆனாலும் பூமியின் நிமிர்ந்த நடையும், புன்முறுவலும் அவற்றை பொருட்படுத்தவேயில்லை. நாம் நடந்து நடந்து கதைத்தோம். ஒரு ஒற்றையடிப்பாதைக்கு வந்துவிட்டோம்.

‘என்னை எல்லோரும் பார்க்கும் விதம் வேறு. அணுகும் விதம் வேறு. ஆனால் பரவாயில்லை. எனக்குள் நிகழ்ந்த இந்த மாற்றத்தினை நான் ஏன் மறைத்து வைக்க வேண்டும்? நான் என்னை பெண்ணாக வெளிப்படுத்தினேன்” என்கிறார் பூமி. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த பூமி தன் புதிய பிறப்பு பற்றி இப்படி விபரித்தார்.
‘ நான் ஆணாக பிறந்தேன். வளர்ந்தேன். ஆனால் வாழ்வில் நான் என்னை உணர்ந்த போது என்னால் ஆணாக வாழவே முடியாது என்று தோன்றியது. எனது 21வது வயதில் இந்த மாற்றத்தினை உணர்ந்தேன். சிலர் தமது முதுமைக் காலத்தில் அதாவது 70, 80 வயதுகளில் இந்த மாற்றத்தினை உணர்ந்திருக்கின்றனர். அதன் பின் புதுப் பிறப்பாக அதனை ஏற்று வாழத் தொடங்கியிருக்கின்றனர். அது ஒரு உணர்வு. நீங்கள் உங்களை ஏமாற்றிக் கொள்ளவே முடியாது. எனக்கு தெரிந்த வரையில் இந்த மாற்றத்தினை எதிர்கொள்ள முடியாதவர்கள் சிலர் தற்கொலை செய்திருக்கின்றனர். சிலர் மாற்றத்தினை உணர்ந்தாலும் அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு தம்மை தாமே ஏமாற்றிக் கொண்டு வாழ்கின்றனர். இதனால் மன அழுத்தம் அவர்களை வெகுவாகப் பாதிக்கின்றது. நிம்மதியற்று அவர்கள் வாழ்கின்றனர். அதனை எத்தனைக் காலத்திற்கு தான் மறைத்து வைக்க முடியும். உணர்வுகளை ஒரு போதும் ஏமாற்ற முடியாது.”

ஓவ்வொருவருக்கும் முதலில் பாதுகாப்பு குடும்பம். பூமியின் குடும்ப ஆதரவு பற்றி கேட்டபோது,


காவல் நிலையங்களில் எங்களை நடனமாட சொல்லி துன்புறுத்துவர். பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்வர்…

“’குடும்பத்தினரால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டேன். அதனை எண்ணி அழாத நாட்கள் இல்லை. அரவணைக்க வேண்டியவர்களே பாரபட்சம் காட்டி நிராகரிக்கும் போது அந்த மனநிலை எப்படியிருக்கும்? நாங்கள் அன்பையும், அரவணைப்பினையும் எங்கள் குடும்பத்தாரிடம் எதிர்பார்க்கின்றோம். அது கிடைக்கவில்லை. பெரும்பாலானோருக்கு இப்படித்தான். பெற்றோரை விட்டு பிரிந்தவர்கள், காலப்போக்கில் சமூகத்தில் அநாதரவாக விடப்படுகின்றனர். இன்றும் நான் என் தாயை பார்க்க செல்லும் போது அவர் ‘பெண்ணாக வராதே ஆணாக வா. நான் ஒரு ஆண் குழந்தையை தான் பெற்றேன்’ என்பார்.” நான் மனத்தைரியத்துடன் இந்த வாழ்வை ஏற்று வாழ்ந்துகொண்டிருந்தாலும் பெற்றோர் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளும்நாள் எனக்கு மிகுந்த சந்தோசம் தரும் நாள். எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஓர் நாள் பொரளையில் இருந்து ராஜகிரிய செல்லும் பஸ்ஸில் ஏறி ஒரு பெண் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். சற்று நேரத்தின் பின் அந்த பெண் என்னைப் பெற்ற தாய் என்பதை உணர்ந்ததும் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அம்மாவும் என்னைப் பார்த்து விட்டு கலங்கி தலைகுனிந்து கொண்டிருந்ததை உணர்ந்தேன். ஏனெனில் நான் அன்று சேலை கட்டியிருந்தேன். அவருக்கு என்னால் சங்கடமும் அவமானமும் ஏற்பட்டுள்ளது என்பதனை உணர்ந்து அடுத்த தரிப்பிடத்திலேயே இறங்கி வந்து விட்டேன்”. என தனது குடும்பம் நிராகரித்த நிலையை வேதனையுடன் தெரிவித்தார்.
நீண்ட ஒற்றையடிப் பாதையின் முடிவில் பட்ட மரம் ஒன்று தனித்து நின்றது. அதன் பின்பு பாதைகள் இல்லை. சற்று அமர்ந்தால் நல்லது என்று கூறிய பூமி தனது வேலைப்பாடுகள் மிகுந்த கைப்பையை கீழே போட்டு விட்டு அமர்ந்தார். அவரின் சல்வார் கமீசின் துப்பட்டா சரிய துரித கதியில் அதனை சரி செய்து விட்டு சுற்றும் முற்றும் நோட்டம் விட்டார்.
‘பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் இருக்கின்றார்களா என்று பார்க்கின்றேன். அவர்களுக்கு எங்கள் மீது தனிப்பட்ட பிரியம்” பூமியின் கருத்தில் ஏதோ பொதிந்திருந்தது.
‘ஏன் பூமி ஏனையவர்களைப் போன்று உங்களுக்கும் அவர்கள் தானே பாதுகாவலர்கள்?”
‘அரசியலமைப்பின் 399 சட்டப் பிரிவு பற்றி உங்களுக்கு தெரியுமா? அந்த சட்டத்தின் பிரகாரம் ‘ஆள்மாறாட்டத்தினால் ஏமாற்றப்படல்” என்ற விடயத்தின் அடிப்படையில் தான் நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம். அந்த சட்டத்தின் கீழ் திருநங்கைகள் ஆள்மாறாட்டம் செய்து குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று காரணம் காட்டி கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் தான் இந்த தேடுதல்கள் நடைபெறும். ஏனெனில் வார இறுதி நாட்களில் நீதிமன்றங்கள் இயங்காத நிலையில் எங்கள் பாடு பெரும் திண்டாட்டம் தான். காவல் நிலையங்களில் எங்களை நடனமாட சொல்லி துன்புறுத்துவர். பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்வர். எங்கள் உடமைகளான தொலைபேசி, பணம் போன்றவற்றை அபகரித்து விடுவர். அங்கு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் நரக வேதனைகளை அனுபவிக்க நேரிடும். எங்களை காவல் நிலையங்களில் ஆண் கைதிகளுடன் தடுத்துவைத்து விடுவார்கள். அங்கு எங்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு அளவில்லை. எங்கள் கைப்பையில் ஆணுறைகளை வைத்து விட்டு அதனை அவர்கள் கண்டுபிடித்தனர் என்று கூறி எங்களை அழைத்து செல்வர். இவ்வாறு நாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை அளவிட வார்த்தைகள் இல்லை”.
பூமி தலையை குனிந்து கொண்டு தனது கைப்பையை திறந்து கைக்குட்டையை எடுக்கும் போது வெள்ளை நிற மடிக்கப்பட்ட காகிதம் ஒன்று தற்செயலாக வெளியில் விழுந்தது. அதனை விரித்து மடித்து எடுத்து திருப்பி கைப்பையில் வைக்கும் போது பூமி ‘இது தான் எங்கள் பாதுகாப்பு ஆவணம்” என்றார்.
அந்த வெள்ளைக் காகிதம் திருத்தம் செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் ஆவணம். அதில் பூமியின் முழுப்பெயர் மற்றும் பெண் பாலினம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“பூமி இந்த ஆவணம் உங்களைப் பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற உதவவில்லையா?”

“எங்களை அடையாளப்படுத்திக் கொள்ள இந்த ஆவணம் உதவுகின்றது. சமூகம் இந்த ஆவணத்தினை முழுமையாக அங்கீகரிப்பதில்லை. இதனைக் காட்டினால் எங்களுக்கு தொழில் வாய்ப்புகளை தர மறுக்கின்றார்கள். வங்கி கணக்குகளையும் ஆரம்பிக்க முடியாது. குறிப்பாக இந்த பிறப்புச் சான்றிதழை அங்கீகரித்து ஆட்பதிவுகள் திணைக்களம் எங்களுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.” என்ற பூமியின் கூற்றிலிருந்து அரசு இவர்களை நாட்டின் பிரஜைகளாக ஏற்றுகொள்ளவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

“நான் ஒரு பெண் என்று உணர தொடங்கியதும் தோற்றத்திலும் மாற்றிக் கொள்ள முயன்றேன். அதற்கு தேவைப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை கொழும்பு பெரியாஸ்பத்திரியில் உள்ள 10ம் இலக்க சிகிச்சை அறையில் எடுத்து கொண்டேன். அங்கு சிகிச்சைகளை மேற்கொண்ட ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியின் பின்பு எங்களுக்கு இந்த சான்றிதழை தருகின்றார்கள். ஆனால் திருத்தம் செய்யப்பட்டுள்ள இந்த பிறப்புச் சான்றிதழில் முன்பு இருந்த பாலினத்தினை சுட்டிக் காட்டித்தான் திருத்தம் செய்து தருகின்றார்கள்”. என தம்மை ஒரு வேற்றினக் குழுவாக்க முயலும் அரச அரிகாரத்தை சுட்டிக்காட்டினார்.


ஒற்றையடிப்பாதையில் இருந்து விலகி எல்லோரும் நடக்கும் பாதைக்கு அவரை அழைத்துச் சென்றேன்.

எங்கள் உரையாடல் தொடர்ந்த நிலையில் கடலை விற்கும் ஒரு நபர் எங்கள் அருகில் வந்து ‘நோனா கடல கன்னேனெத்த” என்றான். அவன் பார்வை பூமி மீது திரும்பியதும் ‘ஆ மே நோனா கடல ஓனெத” என்று கூறிக்கொண்டே நின்று கொண்டிருந்தான். பூமியை பார்த்து கொண்டே நின்றவன் ‘அமுத்து நோனா கெனெக் நே” என்று கூறிக் கொண்டே எங்களைக் கடந்து சற்று தொலைவில் நின்று எங்களைப் பார்த்து கொண்டிருந்தான். சதாரண மனிதர்கள்கூட இந்த மூன்றாம் பாலினத்தவர்களை புதிய ஜந்துவைப்பார்ப்பதுபோல்தான் பார்க்கிறார்கள்.

ஒற்றையடிப்பாதையில் இருந்து விலகி எல்லோரும் நடக்கும் பாதைக்கு அவரை அழைத்துச் சென்றேன். ‘நாங்களும் மனிதர்கள் தான். அனைவரையும் போன்று சம உரிமையுடன் பாரபட்சம் இன்றி வாழவே விரும்புகின்றோம். ஆனால் சமூகம் எங்களை வேறு விதமாக பார்க்கின்றது. எங்களுக்கும் உணர்வுகள் உண்டு. என்று எவரும் நினைத்துப் பார்ப்பது கூட இல்லை. “ என்று வருந்தும் இவர்களுக்கு சாதாரண வாழ்வு வாழ முடியாமைக்கு பல காரணங்கள் உள்ளன. பாடசாலையின் படிப்பதற்கு அனுமதி மறுக்கப்படல், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தாமை, சாதாரணமாக போக்குவரத்து செய்யமுடியாமை, தொழில் வாய்ப்புகள் வழங்காமை மொத்தத்தில் அரசும் மக்களும் இவர்களை சாதாரண மக்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. இந்நிலையில் இவர்களது பொருளாதார நிலை மிகவும் பின்தங்கிப்போகும். அதைக் காரணங்காட்டியே இவர்களை நசுக்கும் கூட்டம் நசுக்கிக்கொண்டே இருக்கும்.
“ஆனாலும் நான் இவற்றை எல்லாம் துணிவுடன் எதிர்கொண்டு பல பிரச்சினைகளைக் கடந்து வந்திருக்கின்றேன். என்னைப் போன்று சிலர்தான் இருக்கின்றனர். இந்த சமூகத்திற்கு முகம்கொடுக்க முடியாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களைவிட ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர்களே மிகப்பெரிய பாரபட்சத்தினை எதிர்கொள்கின்றனர். இதனால் தான் என் போன்றவர்களுக்கு உதவ நானும் சிலரும் முன்வந்துள்ளோம். எங்களுக்கு தேவை பாரபட்சம் அற்ற சம உரிமைகள் கொண்ட வாழ்க்கை. இது இயற்கையின் ஒரு இயல்பான செயற்பாடு என்பதனை சமூகம் முதலில் உணர வேண்டும். குற்றவியல் கோவையின் பிரிவுகள் 365 அ மற்றும் 399 என்பவை நீக்கப்பட வேண்டும் அல்லது திருத்தம் செய்ய வேண்டும். இதுவே எங்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் விடயமாக அமையும்.” என்று கூறும் பூமிக்கும் அவரை போன்றவர்களுக்கும் நாம் என்ன சொல்லப்போகிறோம்? என்ன செய்யப்போகிறோம்?