Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சாமானியர்.
நான் முஸ்லிம் அதனால, ஓட்டோல முஸ்லிம்ம மட்டுமா ஏத்துறன்?!

இந்த பஸ்சில எல்லா ஆக்களும் பேறாங்க வாராங்க நான் தினமும் சாப்புடுற சாப்பாட்டில சிங்களவங்க மட்டும் குடுக்குற காசு இல்ல. தமிழ் ஆக்கள், முஸ்லிம் ஏன் சில சமயம் வெள்ளக்காரனும் தார காசு இருக்கு…..

15.08.2018  |  
கொழும்பு மாவட்டம்

அலுவலகத்திற்கு பஸ்சில் சென்றால் குறித்த நேரத்திற்கு போகமுடியாது என்றுணர்ந்து ஆமர் வீதி சந்தியில் (கொழும்பு – 11) ஓட்டோவை நிறுத்தினேன். ஓட்டோவில் ஏறியதும் குறித்த இடத்தைச் சொன்னேன்.அவர் கதைத்ததில் சாரதி ஒரு இஸ்லாமியர் என்பது புரிந்தது. எனினும் ஓட்டோவில் இருந்த பிள்ளையார் சிலை எனக்கு குழப்பத்தைக் கொடுத்தது. சிறிதூரம் போனதும், “ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்காதிங்க நீங்க ஒரு முஸ்லிம் ஆனா ஓட்டோல பிள்ளையார் சிலை… ..?” என்றேன் (மதவாதத்துடன் கேட்ட கேள்வி அல்ல இது )

“அதுவா தம்பி நான் இந்த ஓட்டோக்கு ரெண்டாவது ஓனர் முதல்ல இருந்தவர் வச்ச பிள்ளையார்தான் அது. என்னவா இருந்தா என்ன எல்லாம் கடவுள்தான். நான் அல்லாஹ்னு சொல்லேறன். நீங்க சிவசிவானு சொல்றிங்க. கிறிஸ்தவ ஆக்கள் ஜீசஸ்னு சொல்றாங்க. அவ்ளோதான். நான் முஸ்லிம் என்றதுக்காக என் ஓட்டோல முஸ்லிம்ம மட்டுமா ஏத்துறன். அப்படி செஞ்சா என் பொளப்பு அவ்ளோதான்” எனக் கூறியவர் சத்தமிட்டு சிரித்துக்கொண்டார்.

/
சகிப்புத்தன்மை, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம், மதங்களுக்கு இடையில் ஒற்றுமை என்ற அரசியல் தத்துவங்கள், எண்ணக் கருக்கள், அரசியல் ஆய்வாளர்கள், தலைவர்கள், புத்திஜீவிகளிடம் இருந்துதான் உருவாக வேண்டுமா, என்ன? அவரே தொடாந்தார்
“நம்ம நாடு சின்ன நாடு தம்பி. இருக்க கொஞ்பேர் எப்பபாரு சண்ட போட்டுக்கிட்டு இருக்கம். கண்டில பாத்திங்களா? என்ன நடந்துச்சி கடைசில பாருங்க யாருக்கு நஷ்டம்? ஒத்துமையா இருந்தா நாம நல்லா இருக்கலாம். எல்லாம் மனுசங்க தானே? பாருங்க ஒரு இந்து, இஸ்லாம் ஒருத்தர்ட வண்டில போறிங்க. அப்புறம் கிறிஸ்ரியன் ஒருத்தர் வருவார். நம்ம கையில ஒன்னுமில்ல… எல்லாம் கடவுள்ட கிருப. ஆனா நாம எல்லாரும் மனுசங்க. அப்புறம்தான் முஸ்லிம், சிங்களம், தமிழ் எல்லாம்.” என அவர் முடிக்க நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. இறங்கிக்கொண்டேன். ஆனால் நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் வரவில்லை என்று மட்டும் புரிந்தது. மிகச் சாதாரணமாக இந்த மக்களிடம் மலிந்து கிடக்கும் இந்தமாதிரியான எண்ணங்களை திட்டமிடடே குழப்புகிறார்களா?

இந்த சம்பவத்தை நான் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன். அப்போது எனது நண்பன் இப்படிக் கூறினான். “ஒரு வாரத்துக்கு முன்னதாக கொட்டாஞ்சேனையில் (கொழும்பு – 13) இருந்து வெள்ளவத்தை (கொழும்பு – 06) செல்வதற்காக 155ஆம் இலக்க பேருந்தில் ஏறினேன். பொதுவாக 155ஆம் இலக்க பேருந்து என்றாலே மெதுவாகத்தான் செல்லும் என்பது பயணிகளின் பொதுவான குற்றச்சாட்டு அதில் உண்மையில்லாமலும் இல்லை. வேறுவழியின்றி ஏறினேன். எனினும் என்னுடைய அந்தப் பயணம் வெறுப்பைப்தரவில்லை. காரணம் பேருந்து மெதுவாக சென்றாலும் பேருந்தில் ஒலித்த பாடல்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அவர்கள் ஒரு சிங்களப்பாடல், ஒரு ஹிந்திப் பாடல், ஒரு தமிழ் பாடல் என்ற ஒழுங்குமுறையில் பாடல்கள் மாறிமாறி ஒலித்துக்கொண்டிருந்தன. முன்னர் அப்படியில்லை. சிங்களப்பாடல்கள் மட்டுமே ஒலிக்கும். இது எனக்கு ஒருவித ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதைவிட கொழும்பில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்திலுமே சிங்களப் பாடல்களே ஒலிக்கும். மருதானையை கடந்ததும் நடத்துநரிடம் பேச்சுகொடுத்தேன்.
சிரித்தபடி பதில் கூறினார் நடத்துநர் “இந்த பஸ் எல்லா ஆக்களும் பேறாங்க வாராங்க நான் தினமும் சாப்புடுற சாப்பாட்டில சிங்களவங்க மட்டும் குடுக்குற காசு இல்ல. தமிழ் ஆக்கள், முஸ்லிம் ஏன் சில சமயம் வெள்ளக்காரனும் தார காசு இருக்கு. சோ எல்லாரயும் மதிக்கனும்னு ஒரு சின்ன ஆச அவ்ளோதான். உங்களுக்கு புடிச்சிருக்கு இல்ல அதான் மேட்டர்.” என்றுவிட்டு நகர்ந்தார். பின்னர் பேருந்து பம்பலப்பிட்டியை தாண்டியதும் கூட்டம் குறையவே என்னருகில் வந்து அமர்ந்தார். “ஏன் அப்படி கேட்டிங்க என்றார்” சும்மா என்றேன் “ஒரு மேட்டர் சொல்லட்டா பாஸ்” என்றார் “சரி” என்றேன் “நம்ம நாடு எவ்ளோ அழகு தெரியுமா, நெறய இடத்துக்கு ‘ஹயர்’ போயிருக்கேன். சிங்களம், தமிழ்னு எல்லார்டனும் ஹயரு போயிக்கேன். நம்ம நாடு மாதிரி மக்களும் அழகு பாஸ். நம்ம அரசியல்வாதிகதான் அவங்க பொக்கட்ட நிறக்கிறதுக்காக செல்பிஷ்சா நடக்குறாங்க. அவங்க ஒழுங்கா நடந்தா நாட்டுல ஏன்பாஸ் பிரச்சின வரப்போகுது” என மிகச் சாதாரணமாக நாட்டின் அடிப்படை பிரச்சினையை விளக்கிவிட்டு எழுந்து சென்றார்.

மேடைபோட்டு கூவினாலும், ஊடகங்கள் மூலம் அறிக்கைவிட்டாலும், சமூக வலைத்தளங்களில் தினமும் பதிவுகளை இட்டாலும், பல்லின சமூகத்தை தன்னகத்தேக் கொண்ட இலங்கைப் போன்ற ஒருநாட்டில் சகிப்புத்தன்மையை ஏற்படுத்துதல், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை, மதங்களுக்கு இடையில் முரண்பாடற்ற தன்மையை செயல்வடிவம்பெறச் செய்வது என்பது குதிரைக் கொம்புதான் என்ற இன்னும் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். சாதாரண மக்கள் இப்படித்தான் உள்ளனர். அவர்களை ஆட்டுவிப்பவர்கள்தான் எல்லாவற்றுக்கும் காரணம்?
அப்போதுதான் என் பெண் நண்பியும் எம்முடன் இணைந்துகொண்டு தன் அனுபவத்தைப் பகிர்ந்தார். “ஆமர்வீதி பொலிஸக்கு முன்னால் உள்ள கிராண்ட்பாஸ் செல்லும் வீதியில், நிறைய மருந்தங்களை உள்ளன. ஒருநாள் அந்த மருந்தகத்திற்குச் சென்றேன். காலையில் ஊழியர்கள் சேவைக்கு வரும் முன்பே அந்த முதலாளி வந்திருந்தார். தொழிலில் உள்ள பக்கியளவு அவர் கடவுள்மீதும் வைத்திருந்தது தெரிந்தது. நெற்றியில் விபூதி, பெரிய பொட்டுடன் இருந்தார். கோயிலுக்குப்போயிற்று வந்திருந்தார். அங்குவந்தும் கடவுளுக்கு விள்க்கேற்றி மாலைபோட்டவுடன் நான் மருந்துச் சீட்டை நீட்டினேன். கொஞ்சம் இருங்க இவர்தான் முதல் வந்தார் என்று சொல்லி அங்கிருந்த ஒரு இஸ்லாமிய சகோதரருக்கு தேவையான மருந்துகளைக் கொடுத்துக்கொண்டே ‘அல்லாஹ் உங்களை காக்கட்டும்’என்றார். நானோ எல்லாம் ஓடிய பிஸ்னஸ் டெக்னிக் என்ற நினைத்தபடி அவரிடம்; மருந்துச்சீட்டை கொடுக்தேன். சிரித்தபடி “சொரி என்றார்” “பிஸினஸ்னாலும் ஒரு நியாயம் இருக்கு சிஸ்ரர். என்ன பண்றது ஒருத்தர்கிட்ட நியாயமா நடத்துறத கூட புதினமா பாக்குற அளவுக்கு நாம் போயிட்டம்” என்று எனக்கே முகத்திலடிக்க கூறினார். அதுக்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா? என்று சிரித்த நண்பியிடம், கூறும்படி உற்சாகப்படுத்தினோம்.

“அவர் பேச்சில் ஒரு தெளிவை உணரமுடிந்தது. ‘நீங்க எல்லாம் பொலிடிக்ஸ்ல (அரசியல்) வந்தா சொல்லவே தேவல….அப்பிடி ஒரு சப்போட் கிடைக்கும். எண்டன். அவர் போட்டடிரே ஒரு போடு… “சிஸ்ரர்…அடுத்தவன ஏமாத்த தெரியல, பொய் பேச தெரியல, குறிப்பா சிங்களவன், தமிழனுன இனவாதமா பேச முடியாது…அப்புறம் எப்பிடி பொலிடிக்ஸ்… வாய்ப்பே இல்ல” என்று சொல்லி சிரித்தார். நாம் எல்லோரும் சேர்ந்து சிரித்தம். ஆட அவ்வளவு கன்றாவிய இருக்கா நம்ம அரசியல் களம்? அப்பதான் நண்பன் ஒருவன் இப்பிடிச்ன்னான்;
“நம்ம நாட்டுல 30 முப்பது வருசமா யுத்தம் நடந்துச்சி, யார் நாமலா கேட்டோம்.? அரசியல்வாதிங்க அதவச்சி நல்லா விளையாடினாங்க. இப்ப யுத்தம் முடிஞ்சு 9 வருசம் அந்த பேச்ச இன்னமும்விடல. 40 வருசம் முன்னாடி நாம எல்லாரும் ஸ்ரீலங்கா மக்கள். இப்ப சிங்களம், தமிழ், முஸ்லிம் எண்டு எவ்லாருக்கும் கட்சி. கட்சியை வைச்சு குண்டுசண்டியில குதிரை ஓட்டுமாதிரி சனத்த உசுப்பேத்திக்கெண்டிருக்காங்க. இது எப்ப முடியுமோ…இப்பிடி சாமானிய மக்கள் எல்லாரும் ஒண்டாச் சேந்திற்றா பிரச்சினையே வராது. ஆட்டுவிக்கிற அரசியல்வாதிகளையும் தூர விரட்டிரலாம்.”
நல்லிணக்கம், சமாதானம், சகிப்புத்தன்மை சாதாரண மனிதர்களிடம் சாதாரணமாகவே காணப்படுகிறது. இவை மேல் இருந்து கீழ் வரவேண்டியவை அல்ல.கீழிருந்து மேல் செல்லவேண்டியவை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

குறிஞ்சிப்பார்த்தன்.