Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

திண்மக்கழிவகற்றல் - சிலாபம்
அசௌகரியங்களுக்குள்ளாகும் பொதுமக்கள்.

“வர்வங்க நினைச்சிய எங்கட ஊட்டுக்குள்ள என்னமோ மணக்கியதப் போல. வந்தவங்க நிண்டு தண்ணீ கூட குடிச்சியல்ல ஓடப் பாக்கிற. பேசியத்துக்குத் தயங்கிய. ..”

11.12.2016  |  
புத்தளம் மாவட்டம்
இம்மானுவேல் பிர்னாந்து யெராட்எ

“குப்பை இருக்கு, எங்க வீட்டு முன்னாடி, வெளிய போகச்ச முளிச்சியதே குப்பை மேட்டில தான். இங்க பகலான கொசுத்தொல்ல, இராவான நொளம்புத்தொல்ல. நாங்களும் எங்கட புள்ள குட்டியளும் வீட்டில இருச்சியல்லியா…? அது பத்தாத்துக்கு புள்ளுகளுக்கு , ஒரே இருமல், நெஞ்சில சளி, சம்பாதித்த சல்லியெல்லாம் ஆசுபத்திரிக்கே செலவளிச்சிய… இங்க இருக்கிற பொலித்தீன் எல்லாம் காத்தில அடிச்சிகிட்டு வந்து ஆத்தில கலக்கிய நாங்கள் ஆத்தால போட்டு உட்டு கடலுக்குச் செல்லச்செல்ல பொலித்தீன் போட் பானில சிக்கிதிண்டா அத களட்டி சேர்விஸ் பண்ணோனும் சிலசமயம் உள்ள இருக்கிய இஞ்சின் உடஞ்சி போற. மறுக்கா அதை செஞ்சி எடுக்கியத்துக்கு 45 ஆயிரம் செலவாகிய எங்கள்ட்ட அவ்வளவு சல்லியிருச்சா…? எத்தனையோ முறை நகரசபைக்குப் போய் கம்ளைன் கொடுத்திருச்சிய, ஒண்ணும் பிரயோசனம் இல்ல.”என்கிறார்அந்தோனிமுத்து சூசைகுமார் என்ற மீனவர்.

“துருநாற்றம் வீசிய, வீட்டுக்கு ஒரு ஆட்கள் சரி வருயதில்லையா…? வர்வங்க  நினைச்சிய எங்கட ஊட்டுக்குள்ள என்னமோ மணக்கியதப் போல. வந்தவங்க நிண்டு தண்ணீ கூட குடிச்சியல்ல ஓடப் பாக்கிற. பேசியத்துக்குத் தயங்கிய. நாங்களும் நிறைய தடவை நகரசபைக்குத் தனியவும் எங்கட காண்டைகளோடையும் போய் கம்பிளைன் கொடுத்திருச்சியத்துக்குப் பயனில்ல”. என்கிறார் இம்மானுவேல் பிர்னாந்து கனிசியஸ்.

“எங்களுக்கு போட்(boat) விடுறதுக்கு வேற இடமும் இல்ல. நாங்க பரம்பரை பரம்பரையாக இந்த ஆத்தாலதாலதான் போட்டு உட்டோம். எங்களுக்கு கடலுக்குப் போறததைத் தவிர வேற தொழிலும் தெரியாது. குப்பை போடுற பிரச்சினை பெரியதொரு பிரச்சினை. தொழிலைவிட்டு வந்தா நிம்மதியா வீட்டிலையும் இருக்க ஏலாது. தொழிலுக்குப் போறத்துக்கு ஆத்தையும் பயன்படுத்த ஏலாது. மத்த இடங்களுக்கு போய் நாங்க எப்படி போட்டு உடுறது. அங்க இருக்கிறவங்க விடுவாங்களா…” இம்மானுவேல் பிர்னாந்து யெராட்என்ற மீனவரின் பிரச்சினை இது.


தொழிலைவிட்டு வந்தா நிம்மதியா வீட்டிலையும் இருக்க ஏலாது. தொழிலுக்குப் போறத்துக்கு ஆத்தையும் பயன்படுத்த ஏலாது.

இலங்கையில் வடமேல் மாகாணத்திலுள்ள சிலாபத்தில் வட்டக்களி, ஜம்பவத்தைப் பகுதியில்   தனியாருக்குச் சொந்தமான ஒரு காணியுண்டு. அந்தக்காணியில்தான் நகரக் குப்பைகளைக் கொட்டுவதற்கு அரசு இடம் ஒதுக்கியுள்ளது. இந்தக் காணியின் பின்னால் உள்ள தெதுரு ஓயா என்ற ஆற்றினூடாக   இப்பகுதி மீனவ மக்களில் பலர் கடலுக்குச் செல்கிறார்கள். இக்காணியைச் சுற்றி அவர்களது வாழ்விடங்கள் அமைந்துள்ளன. இவர்கள் தங்களது பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து குறித்த இடத்தில் வாழ்பவர்கள். கடந்த 5வருடங்களாக நகரத்தில் சேகரிக்கப்படும் குப்பை இங்கு கொட்டப்பட்டுவருகிறது.அந்தக் குப்பைகள் சரியாக முகாமைத்துவம் செய்யாததால் அது தற்போது மக்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

குப்பை கொட்டப்பட்ட இடமும் நீர்நிலையும்.
குப்பை கொட்டப்பட்ட இடமும் நீர்நிலையும்.

இலங்கையில் கழிவகற்றும் முகாமைத்துவம் சரியான முறையில் செயற்படுத்தப்படாததன் விளைவுகளே இவை. இலங்கையெங்கும் இந்த குப்பையகற்றல் பெரும் பிரச்சினையாக்தான் உள்ளன. கொழும்பிலும் , புத்தளத்திலும் ,கிழக்கிலும் அண்மைக்காலத்தில் பெரும் பிரச்சினையாக அப்பப்ப மக்களின் எதிர்ப்பு ஆர்பாட்டங்களினூடக இது பூதாகாரமாக வெளிக்கெண்டுவரப்பட்டது. அரசும் குப்பைகளை உக்கவைத்து உரமாக்கும் திட்டம் அது இது என்று பல்வகை திட்டங்களை அறிமுகப்படுத்தினூலும் அதை செயற்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில் மக்கள் வாழும் பகுதியில், நீர்நிலையுள்ள பகுதியில் எவ்வாறு குப்பை கொட்டுவதற்கான இடத்தை அரசு தெரிவு செய்தது என்பதே பலரதும் கேள்வி.
“இது சமர நாயக்க என்பவரின் காணி. பள்ளமான காணி. அவங்க பள்ளமான காணிய மேடாக்கிறதுக்காக குப்பை போட விட்டிருக்காங்க. காணி மேடாகிது. யுசிக்கும் குப்ப போடுயத்துக்கு இடங்கிடச்சிருச்சிய ஆனா பாதிக்கப்படுயது சுத்தியிருக்கிய நாங்களெல்லா. யூசிக்குச் சொந்தமான காணியொன்று மானுவங்கமையில இருக்கு. அங்க இந்தமாதிரி நெருசலா வீடும் இல்ல அங்க கொண்டுபோய் கொட்டலாம் தானே.” என தனது ஆதங்கத்தை விரிவான தகவலுடன் முன்வைத்தார், அந்தப்பகுதியில் கடிதங்களை வினியோகம் செய்யும் ஊழியர் ஒருவர்.
பள்ளக்காணியை குப்பைகளால் நிரப்புவதற்காக இந்த காணியின் உரிமையாளர் இடம்கொடுத்துள்ளதாக சுற்றியிருந்தவர்களும் தெரிவித்தனர். இந்தக்காணியின் உரிமையாளர் நகரசபையின் முன்னைநாள் உறுப்பினர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
வேறு இடம் இருக்கத்தக்கதாக, இந்தக் காணியை மேடாக்குவதற்காக இங்கு குப்பை கொட்டும் விடயம் பற்றி சிலாபம் நகரசபை செயலாளர் ஏ.ஏ.ஜயசிறி யிடம் கேட்டபோது, “இதற்கு முன்னர் முன்னேஸ்வரம் கோயிலுக்குச் சொந்தமான காணியொன்றில் குறித்த கழிவகற்றும் பணியை தனியார் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டு வந்தோம்.அந்த குறித்த நிறுவனம் கழிவுகளை சேதன உரத்தயாரிப்புக்கெனப் பயன்படுத்தியது. பின்னர் குறித்த நிறுவனத்தின் ஒப்பந்தக்காலம் நிறைவடைந்ததனால், முன்னேஸ்வரம் பெரிய கோயில் நிர்வாகத்திடம் நாம் கேட்டோம். கோயில் உரிமையாளர்கள் அனுமதி வழங்கிய போதும் கோயில் நிர்வாகம் அதற்கு இடமளிக்கவில்லை. இதனால் நாங்கள் தெதுறுவ, ஜெயபிம, பங்கதெனிய, ஆகிய பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் பகுதி பகுதியாக கழிவகற்றும் பணியினை மேற்கொண்டோம். பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்ததைத் தொடர்ந்து அங்கு குப்பை கொட்டுவதை நிறுத்திவிட்டோம். அதனைத் தொடர்ந்து சமரநாயக்க என்ற முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தமக்குச் சொந்தமான காணியொன்றில் குப்பையினை அகற்றுவதற்கான அனுமதியினை எமக்குத் தந்தார். ஆதன்படி அங்கு குப்பைகள் கொட்டப்படுகின்றன.” ஏன்றார் அவர்.
இதனால் அங்குள்ள மக்கள் மற்றும் சூழல் பெருமளவில் மாசடைவது பற்றி அவரிடம் கேட்டபோது,
“‘கழிவகற்றல் என்பது நகர முகமைத்துவத்தில் மிகப் பெரியதும் பாரியதுமான ஒரு பிரச்சினை. அதை உரிய முறையில் தான் கையாள வேண்டும். இதற்கு நகரத்து வாழ் மக்களின் ஒத்துழைப்பும் தேவை. நகர மக்கள் குப்பை போடுகின்ற அளவினைக் குறைத்துக் கொள்ள வேண்டும. அதேவேளை நாங்கள் நகரக் கழிவினை வைத்து சேதனப் பசளைதயாரிப்புக்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம். அதற்குச் சுற்றுச்சூழல் அமைச்சு தம்மால் இயன்ற நிதிஉதவியை வழங்குவதாகவும், அதற்குப் பொருத்தமான இடமொன்றினை தெரிவு செய்யுமாறும் எங்களிடம் கேட்டுக்கொண்டது.அதற்கிணங்க நரியகொல்ல பகுதியில் காணியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளோம்”. என்று நாம் கிளப்பிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அது எப்போது நடைபெறும் என்ற திட்டம் தெரியவில்லை.
இதனால் பல அசௌகரியங்களை எதிர்கொள்ளும் மக்கள், குப்பை போடுவதை நிறுத்துவதற்கு முறைப்பாடுகளுக்கு அப்பால், குப்பை மேட்டுக்கு நெருப்பும் வைத்துப் பார்த்துள்ளனர். அதுபற்றி பெயர் குறிப்பிடவிரும்பாத ஒருவர் குறிப்பிடுகையில்,


“ நாலு மாதங்களுக்கு முன்னால குப்பை மேட்டுக்கு நாங்க தீவச்சிய..”

“ நாலு மாதங்களுக்கு முன்னால குப்பை மேட்டுக்கு நாங்க தீவச்சிய, எல்லாம் சாம்பலாகிய ஊரே திரண்டு வந்த… ரிப்போட்டர் எல்லாம் வந்த இந்த விசயம் பொரிசாகும் பிரச்சினைக்கு தீர்வுவரும் எண்டு பாத்தா, அது சிகரட் குடிச்சியாரோ போட்டுப் போனதுண்டுதான்  தீ புடிச்சியத்துக்கு காரணம் என எல்ல விசயத்தையும் சடஞ்சிய.” என்றார்.
சேதனப்பசளை தயாரிக்கும் நடவடிக்கை ஏதாவது இங்கு நடைபெறுகிறதா என மக்களிடம் கேட்டபோது,
“இங்க குப்பையைக் கொட்டிட்டு, ஒரு கிழமைக்குப் பொறகு பெரிய பெக்கோ எல்லாம் போட்டு கிளறி மட்டமாக்குவாங்க, அப்பிடி செய்யேக்க நுளம்பு கொசு எல்லாம் மேல கிளம்பிவாரத்தோட நாற்றம்…சகிக்கமுடியாது. அதைத் தவிர வேறு எதுவும் செய்யிறதில்ல.” எனத் தெரிவித்தார்.
தற்போது உடனடியாக இந்தப்பிரச்சினையில் இருந்து மக்கள் மீள்வதற்கு மக்கள் குறிப்பிடும் அரச காணியொன்றில் குப்பை கொட்டும் ஏற்பாட்டைச் செய்யலாமே என சிலாபம் நகரசபை செயலாளர் ஏ.ஏ.ஜயசிறியிடம் வினாவியபோது,
“மானுவங்கமையில் உள்ள காணியானது எமக்குச் சொந்தமான ஒரு காணி அல்ல. அது மானுவங்கம பிரதேச சபைக்குச் சொந்தமான காணி.  அந்தக் காணியில நாங்க எப்படி குப்பை கொட்டுறது. நகரத்துக் குப்பையை நகரத்தில இருக்கிற காணித்துண்டில கொட்டுறதுக்கே நகர மக்கள் எதிர்கிறாங்க. நகரக் குப்பையை கிராமத்தில கொண்டுபோய் கொட்டினா அங்க இருக்கிற மக்கள் விடுவாங்களா? “என எம்மிடம் கேள்வியெழுப்பினார்.

உண்மையில் இலங்கையில் திண்ம கழிவகற்றும் திட்டத்தில் கழிவை மீள் சுழற்சிசெய்வதற்கு அரசு முயன்றாலும் கழிவுகளைப்பிரித்தெடுக்கும் செயலை நடைமுறைப்படுத் முடியாது திண்டாடுகிறது. பொதுமக்கள் கழிவகளை அகற்றும் போதே பிரித்து அகற்றவேண்டும் என பிரதேச சபைகளினூடக நகர சபைகளினூடாக கோரிக்கை முன்வைத்தபோதும் அதை பொதுமக்கள் செய்யத்தவறுவதனால் அரசின் திட்டம் நடைமுறைப்படுத்தமுடியவில்லை என்பது உண்மையாகும். ஆதனால் பள்ள நிலங்களை நிரப்பும் செயல்முறையில் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ப்பட்டுவருகின்றன. அதிலும் குறுகிய காலத்தில் உக்கக்கூடிய கழிவுகளைவிட நீண்டகாலத்தில் உக்கக் கூடிய பொலித்தீன் பிளாஸ்ரிக் என்பன பெரிய பிரச்சினையாக உருவேடுத்துள்ள நிலையை இங்கும் காணலாம்.கழிவகற்றல் முகாமைத்துவம் தனியே அரசில் மட்டும் தங்கியுள்ள பிரச்சினையல்ல.பொதுமக்களிலும் இது தங்கியுள்ளது.மக்களின் பழக்கவழக்கம் கழிவகற்றும் முறைகள் என்பனவும் இதில் தாக்கம் செலுத்துகிறது.